சுயமரியாதை திருமணம் சட்டப்படிச் செல்லும் – கட்டுரை – தொடர்ச்சி

வாசகர் கடிதங்கள்

0
1 full

திராவிட இயக்கச் சிந்தனைக் கொண்ட பொதுவுடமையாளர் ப.ஜீவானந்தம் மகள் திருமணம். பேரறிஞர் அண்ணா அறிவித்த சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லும் என்ற அறிவிப்பு போன்ற முழுவிவரங்களும் காதில் விழுந்த திருச்சி வரலாற்றில் அருமையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற அரிய வரலாற்றைத் திருச்சி மக்களுக்கு வழங்கி வரும் என்திருச்சி மின்இதழுக்கும் கட்டுரையாளர் ஆசைத்தம்பிக்கும் நன்றி.

-மிசா. தி.சாக்ரடீஸ், அண்ணா தெரு, பாலாஜி நகர், காட்டூர், திருச்சி -19.

என்னுடைய திருமணம் என்பது வாழ்க்கைத் துணைநலம் ஏற்பு விழா என்ற முறையில் முழுமையான தாலி இல்லாத சுயமரியாதை திருமணம் ஆகும். இதற்கு பேரறிஞர் அண்ணா 1967இல் சட்டவடிவம் கொடுத்தார் என்பதும் அதற்கு முன்பு சட்டப்பூர்வமாக இல்லாத செய்தியை திருச்சி வரலாற்றின் மூலம் அறிந்தேன். இளைய தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில் திருச்சியின் வரலாறு அமைந்திருப்பது பயனுள்ள வகையில் இருக்கின்றது. என்திருச்சிக்கு வாழ்த்துகள்.

2 full

-தி.சு.வேலாம்பிகை, ஜே.எம்.நகர், குண்டூர், திருச்சி -7.

நாங்கள் நடத்திய இணைய வழியிலான உரையில், தோழர் இந்திரஜித் அவர்கள் ஜீவா மகள் திருமணம் பற்றிய செய்திகளைக் கலந்துரையாடல் மூலம் தெரிவித்தார். உடனே கட்டுரையாளர் அந்த ஒளிப்படத்தைத் தேடிக் கண்டுபிடித்து, சுயமரியாதை திருமணம் சட்டத்தின் வரலாற்றையும் முழுமையாகத் தந்துள்ளமை பாராட்டுக்குரியது. கட்டுரையாளர் ஆதாரங்களைத் தேடியலைந்த முயற்சி பாராட்டுக்குரியது.

-பேராசிரியர் சதீஷ்குமார், தமிழ்த்துறை, காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சி -1.

என்திருச்சி மின்இதழில் வெளிவந்த சுயமரியாதைத் திருமணம் சட்டம் குறித்த வரலாற்றுச் செய்தியினைப் படித்தேன். அனைவரும் அறிந்துகொள்ள அரிய பல செய்திகள் இருந்தன. கட்டுரை சிறப்பாக இருந்தது என்றாலும் ஒரு தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணச் சட்ட முன்வரைவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் தலைமைச் செயலாளர் சொக்கலிங்கம் மூலம் தந்தை பெரியாருக்கு அனுப்பி வைத்தார். சட்டமுன்வரைவு ஆங்கிலத்தில் இருந்தது. ஆசிரியர் வீரமணி பெரியாருக்குப் படித்துக் காட்டினார். அதில் exchange of Garland and tying Thali இருந்ததை பெரியார் and என்பதை or என்று மாற்றச் சொன்னார். பின்பு exchange of Garland or tying Thali மாற்றத்தைச் சட்டமுன்வரைவில் அண்ணா ஏற்றுக் கொண்டார். சுயமரியாதை திருமணம் என்பது மாலை மாற்றிக் கொள்வது மற்றும் தாலி அணிவது என்பதை மாற்றி மாலை மாற்றிக் கொள்வது அல்லது தாலி அணிவது என்று நுணுக்கமாக மாற்றிய தந்தை பெரியாரின் அறிவுக்கூர்மையை அண்ணா வியந்து பாராட்டினார் என்ற செய்தி கட்டுரைக்கு வலிமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.அன்பழகன், எச்.சி.377, அண்ணா நகர், திருச்சி -26.

சுயமரியாதை திருமணத்தின் வரலாற்றில் வைதீக திருமணத்தின் வரலாற்றையும் இணைத்து சுயமரியாதை திருமணத்தின் பெருமையைப் பறைசாற்றிய கட்டுரைக்கு நல்வாழ்த்துகள்.

-இ.செல்வா, அம்பேத்கர் தெரு, கீழக் கல்கண்டார்கோட்டை, திருச்சி -11.

பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த வைதீக திருமணத்திற்கு எதிராக பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையில் பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை திருமணம் குறித்த சட்டம் அதன் வரலாற்றைத் திருச்சி வரலாற்றோடு இணைத்து கட்டுரையாளர் சொன்னவிதம் அருமை. இளைஞர்கள் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை. என்திருச்சிக்கு நல்வாழ்த்துகள்.

-முனைவர் உ.பிரபாகரன், முன்னாள் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.