சுயமரியாதைத் திருமணம் – சட்டமாகும் : திருச்சி மணவிழாவில் அண்ணா

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0
full

”இந்து திருமணச் சட்டத்தில் வைதீகத் திருமண முறைப்படி செய்யும் திருமணங்கள் மட்டுமே செல்லதாக்கத்தாகும். இதை மீறித் திருமணம் செய்வோருக்குக் குடும்பச் சொத்தில் உரிமைகோரா முடியாது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர்களின் பிள்ளைகள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் உரிமையை இழப்பர்” என்று இந்து திருமணச் சட்டத்தின் 7 பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தின் தேவையைப் பற்றி பேசி, திருமணங்களை நடத்தி வைக்கின்றார். இந்தத் திருமணங்களுக்கு 1967-இல் ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா சட்ட அங்கீகாரத்தைத் தந்தார். இதைத் திருச்சியில் நடைபெற்ற பொதுவுடமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் மகள் திருமணத்தில் அறிவித்தார். திருச்சியில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு இந்தியாவையே ஒரு குலுக்குகுலுக்கியது. இந்து திருமணச் சட்டத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் கைவைக்க எண்ணம் இல்லாத வேளையில் தமிழ்நாட்டில் நடந்தது. இந்தியாவே தமிழகத்தை உற்றுநோக்கியது. அனைவரின் பார்வையிலும் தந்தை பெரியார் வெற்றிப் புன்னகையோடு காட்சி தந்து கொண்டிருந்தார்.

நாத்திகர் ப.ஜீவானந்தம்

நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் (கிராமத் தெய்வத்தின் பெயர்). தன் பெயரைப் பின்னர் ஜீவானந்தம் என்று மாற்றிக் கொண்டார். ப.ஜீவானந்தம் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுத் தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழப் பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகப் படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.

poster

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றிப் பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளைப் பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தந்தை பெரியார் – ப.ஜீவானந்தம்

ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்குத் தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17. மகாத்மா காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார். 1926இல் காரைக்குடி சிரா வயலில் தந்தை பெரியாரைச் சந்தித்தார்.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியாரோடு ஜீவா பங்கு ஏற்றார். 1930 ஆம் ஆண்டு, விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ஜீவா பங்கு ஏற்றார். 1934 ஆம் ஆண்டு, தூக்குமேடைக்குப் போகின்ற நேரத்திலும், ‘இன்குலா ஜிந்தாபாத்-புரட்சி ஓங்குக’ என்று முழங்கி, இந்த நாட்டின் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றானே பகத்சிங், அவன் எழுதிய, ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார் ஜீவா. தந்தை பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக, அவர் மீது வழக்கு போடப்பட்டது. இந்த நூலுக்கு இந்திய அரசு தடை விதித்தது. நூலை மொழிபெயர்த்து வெளியிட்டமைக்காக ஜீவா கைது செய்யப்பட்டு, கை-கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்கச் முழுக்க சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். தந்தை பெரியாரோடு கருத்து முரண் கொண்டார்.

சுயமரியாதை இயக்கத்தில் இருந்த அ.ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. சுயமரியாதை மற்றும் பொதுவுடமை இயக்கத்தில் ஜீவா ஆற்றிய உரைகளைக் கேட்டுப் பேரறிஞர் அண்ணா ஜீவா மீது பேரன்பு கொண்டுள்ளார். ஜீவா கருத்து முரண்பாடு கொண்டு பிரிந்த நிலையிலும் பெரியார் ஜீவா மீது கொண்ட அன்பை மரியாதையைக் குறைத்துக்கொள்ளவில்லை.

ப.ஜீவா – கலப்பு திருமணம்

வ.வே.சு. ஐயர் நடத்திய தேசியக் குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். கடலூர் சட்டமன்றத் தொகுதி தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர். பின்னர் 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் ஜீவா இயற்கை எய்தினார்.

ஜீவா மகள் திருமணம்

ஜீவாவின் துணைவியார் பத்மாவதி தன் மூத்த பெண் உஷாவிற்கு திருமணம் செய்து வேண்டும் என்று விரும்பி, மாப்பிள்ளை பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளைத் தந்தை பெரியாரிடம் வைத்தார். தந்தை பெரியார் அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று, திராவிடர் கழகக் குடும்பத்தைச் சார்ந்த திருச்சி இலால்குடி பெருவளப்பூரைச் சார்ந்த இரா. அருணாசலத்தை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்தார். மாப்பிள்ளை குறித்த செய்திகளைத் தோழர் இரா.நல்லகண்ணு, தோழர் மணலி கந்தசாமியிடம் சொல்லி, பத்மாவதிக்குச் செய்தி தந்தார். மேலும் இந்தத் திருமணம் சாதி மறுப்பு திருமணமாகவும், சுயமரியாதை திருமணமாகவும் நடக்கவேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார். இதைப் பத்மாவதி அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

இரா.அருணாசலம்-உஷா திருமணம் திருச்சி பெரியார் மாளிகையில் 07.06.1967ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. சிக்கனத்திற்குப் பெயர்போன தந்தை பெரியார், ஜீவா மகளின் திருமணத்தை ஒரு மாநாடு போல நடத்தினார். ப.இராமமூர்த்தி, கே.டி.இராஜு, கல்யாணசுந்தரம், அனந்தநம்பியார் போன்ற பொதுவுடமை இயக்கத் தலைவர்களும் குன்றக்குடி அடிகளாரும் கலந்துகொண்டனர். இந்தத் திருமணவிழாவில் விரும்பிக் கலந்துகொண்டவர் அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் பேரறிஞர் அண்ணா. “திருமணவிழாவிற்கு மாநாடு போலத் தந்தை பெரியார் வரவேற்புக் குழு, நிதிக் குழு, உபசரிப்புக் குழு என்று பல குழுக்களை அமைத்திருந்தார். திருமணவிழா முடிந்ததும் பெரியார் மாளிகையில் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் தடபுடலான நாவிற்குச் சுவையான விருந்து பரிமாறப்பட்டது. “இந்தத் திருமணவிழாவின் நிதிக்குழுத் தலைவராக என் தந்தையார் இருந்தார். அப்போது எனக்கு 7 வயது நான் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டேன். ஜீவா மகள் திருமணத்தை நடத்திய விதத்தைக் கண்டு, பெரியார் ஜீவா மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இருந்தது” என்று சி.பி.ஐ. கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் தோழர் இந்திரஜித் என்திருச்சி மின்இதழுக்காக நம்மிடையே உரையாடினார்.

திருமணவிழாவிற்குத் தலைமை தாங்கிய தந்தை பெரியார்,“ நான் மணமகன் வீட்டுக்காரன். இன்றைய தினம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சிக்குச் சொந்தக்காரனாகவும் உரிமைக்காரனாகவும் இருந்து உங்களை வரவேற்கிறேன். இந்நிகழ்ச்சிக்கு நானே தலைமை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன்.’’ என்று கூறினார்.

திருமணவிழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய பேரறிஞர் அண்ணா,“ தந்தை பெரியாருக்கு ஒரு கனியைக் கொண்டுவந்து இருக்கிறேன். மணமக்களுக்குத் திருமணப் பரிசும் கொண்டுவந்திருக்கிறேன். அது என்னவெனில், ‘தந்தை பெரியார் அவர்களால் நடத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்’ என்ற சட்ட முன்வரைவில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் இந்த மணவிழாவிற்கு வந்தேன். சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்ற சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு இந்தியாவை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்றே சொல்லலாம். விடுதலைக்குப் பின் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவர எந்த மாநில அரசும் முன்வராத நிலையில், தமிழ்நாடு முன்னெடுத்தது. தந்தை பெரியாரின் சிந்தையில் உதித்த சுயமரியாதை திருமணம் வைதீக எதிர்ப்பு திருமணங்களுக்கு எதிர்நிலையில் இருந்தது. பிராமணர்கள் இந்துக்களின் உரிமைகள் பறிபோவதாகப் பதறினார்கள். செய்தித்தாள்கள் அண்ணாவின் அறிவிப்பை ஆதரித்து எழுதவில்லை. என்றாலும் அண்ணா பெரியாரின் கனவைச் சட்டமாக நிறைவேற்றுவதில் முழுமுனைப்பாகச் செயல்பட்டார்.

சட்டத் திருத்தத்திற்குத் திருத்தம்

இந்திய அரசியல் சாசனத்தின் இந்து திருமணச் சட்டத்தின் 7ஆவது பிரிவின் 1ஆவது உட்பிரிவில் திருத்தம் செய்து, சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்ற சட்டம் செய்வதற்கான சட்ட வரைவை (Draft) தந்தை பெரியாரின் பார்வைக்கு, முதலமைச்சர்  அண்ணா அனுப்பி வைத்தார். “மாலை மாற்றுவதையும் மோதிரம் அணிவதையும் மற்றும் தாலி கட்டுவதையும் செய்து, திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு” என்று அரசின் சட்ட வாசகம் இருந்தது. அதில் திருத்தம் செய்த தந்தை பெரியார், “மாலை மாற்றிக் கொள்ளுவது மோதிரம் அணிந்து கொள்ளுவது (அல்லது) தாலி கட்டுவதைச் செய்து” என்று இருந்தால் போதும் என்று கூறி, எளிமைப்படுத்தினார். பின்னர் ஒரு ஆதாரத் தடையை, வழக்கம் என்கிற வடிவில் இந்திய அரசின் சார்பில் எழுப்பப்பட்டது. உடனே, “தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்தச் சுயமரியாதைத் திருமணமுறை ஒரு வழக்கமாக இருக்கிறது” என்று இந்திய அரசுக்கு எழுதும்படி, ஆலோசனை கூறினார் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணாவும் பெரியார் கூறிய கருத்துகளை எழுத்து வடிவத்தில் இந்திய அரசுக்குத் தெரிவித்தார். “சுயமரியாதைத் திருமணச் செல்லுபடியாகும் சட்டத்தை” நிறைவேற்றியது. மேலும், “1926 முதல் 1967 வரை செய்யப்பட்ட சுயமரியாதை முறைத் திருமணங்களும், 1967க்குப் பிறகு நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி செல்லும்” என்பதே அச்சட்டத்தில் உள்ள  பெரிய பாதுகாப்பு. இது தி.மு.க. ஆட்சியின் மாபெரும் துணிச்சல் மிக்க செயல் என்று தந்தை பெரியார் பாராட்டினார். சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்  28-11-1967.

ukr

சுயமரியாதை திருமணம்

இந்தியாவில் இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் மணமக்களில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே மணமக்களின் பெற்றோர்களால் மட்டும் முடிவு செய்யப்பட்டுத் திருமணம் நடைபெற்று வந்தது. இத்திருமணம் புரோகிதர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது. இப்படிச் செய்யப்படும் திருமணத்தில் பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவராகவும், கணவனுக்கு உடலில், மனத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கடைசி வரை கணவனைக் காப்பாற்றும் விதமாக மனைவி கணவனுடனேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் தகர்த்துப் புதிய சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டின் பகுத்தறிவுத் தந்தையாகப் போற்றப்பட்ட தந்தை பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது

சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் அருப்புகோட்டையில் உள்ள சுக்கிலாநத்தம் என்ற ஊரில் சண்முகம் மற்றும் மஞ்சுளா என்ற இணையர்களுக்கு, 1928-ம் ஆண்டு முதல் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் நடத்தி வைத்தார். அதில் முக்கியமான விஷயம், மணமகள் மஞ்சுளா ஒரு விதவை. அப்போது நடைபெற்ற சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி அங்கீகாரம் பெறாதவையாகவே இருந்தன. இதனால் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வோர் பல இன்னல்களுக்கு உள்ளாகினர். ‘கலப்பு திருமணம்’ செய்வது ‘தெய்வக்குத்தம்’ என்று ‘குய்யோ முய்யோ’வென கத்தியவர்களுக்கு, ‘மனித ஜாதியில் பிறந்த ஆணுக்கும், மனித ஜாதியில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது எப்படிக் கலப்பு திருமணம் ஆகும்? நான் என்ன மனிதனுக்கும், மாட்டுக்குமா திருமணம் செய்து வைத்தேன்’ என்று ‘தடியால்’ அடித்தது போல் ஒரு போடு போட்டார் பெரியார்.

1954-ஆம் ஆண்டில் ஸ்பெஷல் திருமணச் சட்டம் ஏற்கப்பட்டு, வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் சட்டம், ஜனவரி 1,1955-ஆண்டில் நடைமுறைப்படுத்தத் தொடங்கி இருந்தாலும், 1947 தொடங்கி, இந்து மதத்தில் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும், இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தை ஜவஹர்லால் நேருவால் 1955-ம் ஆண்டு தான் நிறைவேற்ற முடிந்தது. 1947-ல் அம்பேத்கர் இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தின் முன் வரைவை வாசிக்கையில், பலரும் முகம் சுழித்தனர். அதில் ஒன்று தான் திருமணச் சட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1951-இல் பல எதிர்ப்புகளுடன் நாடாளுமன்ற விவாதத்திற்கு வர, சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அம்பேத்கர் தன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஒரு வழியாக 1955-இல் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்து மதத் திருமணச் சட்டத்தில், என்னதான் எந்த ஜாதியைச் சேர்ந்தவரானாலும் (இந்து மதத்திற்குள்) அவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தாலும், அதில் சாஸ்திரங்கள் இருத்தல் வேண்டும். ஆனால், சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஜாதியின் அடிப்படையான எல்லாவற்றையும் உடைக்கவேண்டும் என்பது தான் பெரியாரின் லட்சியம். அதற்கான செயல் வடிவமே சுயமரியாதைத் திருமணச் சட்டம். புரோகிதர் வேண்டாம், தாலி வேண்டாம், இருமனம் இணையும் திருமணத்தை அங்கீகரிப்பதே சுயமரியாதை திருமணச் சட்டம். 1967-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணச் சட்டம், அண்ணாவால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அன்று நடந்த குறிப்பிட வேண்டிய நிகழ்வு, மசோதா சட்டமாகும் முன், அதன் வரைவு நகலைத் தந்தை பெரியாருக்கு அனுப்பி வைத்தார் அண்ணா. அதில், ‘மாலை மற்றும் தாலி’ என்று குறிப்பிட்டுத் தாலி என்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்ததைக் கவனித்த பெரியார், தாலியைக் கட்டாயமாக்க வேண்டாம், ‘மாலை அல்லது மாலையும் தாலியும்’ என்பதாக ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பின்னே, அதில் திருத்தம் மேற்கொண்டு அதனைச் சட்டமாக்கினார் அண்ணா. (நன்றி-ஆனந்தவிகடன்)

இந்து மதத் திருமணச் சடங்குகள்

பந்தல்கால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும் .மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்துக் கட்டவேண்டும். பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம், பூ, நவதானியம் இவற்றைப் போட்டுப் பந்தல்கால் நடவேண்டும். சாம்பிராணி காண்பித்துத் தேங்காய் உடைக்க வேண்டும். பந்தல்கால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கித் தடவவேண்டும். மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீயசக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சப் பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.

திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும், போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது ஆகும். நல்ல நாளில், தீர்க்கச் சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் (பொற்கொல்லர்) புதிய பொன் கொடுத்துத் திருமாங்கல்யம் செய்யவேண்டும்.

மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள உருவாய்ந்த மஞ்சள் கயிற்றைக் காப்பாகக் கட்டுவது . திருஷ்டி மற்றும் அசுரச் சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு. காப்புக் கட்டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமா அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றிச் செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் டையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது காப்பு கட்டுதல் ஆகும்.

திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்த பின்புதான் மணமகன் மண மகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான். “என் மகளைத் தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாகக் கொடுக்கின்றேன்” என மணமகளின் பெற்றோர், தாரைவார்த்துக் கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக் கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை, மணமகனின் கை, மணப்பெண்ணின் கை, மணப்பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை. இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அடையாளமாகச் செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல்.

தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாளச் சின்னமாகும். தலைநிமிர்ந்து நடந்துவரும் ஆடவர், ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியைப் பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கிப் போய்விடுவார்.

வேதங்களில் சொல்லிய வண்ணம் அக்னி சாட்சியாகத் திருமணம் நடைபெற வேண்டும். ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்திப்படுத்தவேண்டும். ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்துகிறது. ஹோமப் புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால்தான் சாஸ்திரப்படி சரியாகும்.

அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செய்வதற்குப் பயன்படும், பொருட்களை அரைப்பதற்குப் பயன்படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். திருமணப் பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும், மனஉறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது.

அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும்,நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாகத் தெரிகிறது. அதேபோல் மணமக்கள் இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். மணமகளும் அருந்ததியைப்போல் கண்ணியமாகவும், கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்கச் சொல்கிறார்கள்.

ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி . சிறப்பான இல்லறவாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களைப் பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது. ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டுச் சபையில் கொடுப்பது வழக்கம்.

நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன், இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

-ஆசைத்தம்பி

half 1

Leave A Reply

Your email address will not be published.