”திருச்சியின் புரட்சி தலைவி பாப்பா உமாநாத்” -வாசகர் கடிதங்கள்

0

என்திருச்சி மின்இதழில் வெளிவந்த என் அம்மா பாப்பா உமாநாத் வாழ்க்கை வரலாறு படித்தேன். மிக சிறப்பு. படிக்கும்போது, பெருமிதம், மகிழ்ச்சி, சோகம், உத்வேகம் என பல உணர்வுகளின் கலவையானேன். நன்றி, என்திருச்சி மின்இதழுக்கு என் வாழ்த்துகள்.
-உ.வாசுகி,
தலைவர், ஜனநாயக மாதர் சங்கம்.

வணக்கம். என் அம்மாவின் வரலாறு படித்தேன். கட்டுரை மிக சிறப்பு. என்றுமே நினைவில் நிற்கும். என்திருச்சி மின் இதழுக்கும் கட்டுரையாளர் ஆசைத்தம்பிக்கும் என் வாழ்த்துகள். நன்றிகள்.
உ.நிர்மலாராணி,
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை.

ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மறைந்த பாப்பா உமாநாத் வாழ்க்கை வரலாற்று எழுத்துரை படித்தேன். அரிய செய்திகளைத் தொகுத்து வழங்கிய ஆசைத்தம்பிக்கும் திருச்சி மறந்துபோன ஆளுமைகளை வரலாற்றில் பதிவு செய்யும் என் திருச்சிக்கு என் நன்றி. கட்டுரையில் பாப்பா-உமாநாத் திருமணம் குறித்த வருட குழப்பம் அறிந்தேன். 1949 திருச்சி சதி வழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் உமாநாத் 1952 ஆகஸ்ட்டு 15ஆம் நாள் விடுதலை செய்யப்படுகின்றார். அக்டோபர் 9ஆம் நாள் பாப்பாவைத் திருமணம் செய்துகொள்கிறார். இதுதான் உண்மையான செய்தி. 1954-இல் விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவல் பிழையானது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திரஜித்,
சிபிஐ புறநகர் மாவட்டச் செயலர், திருச்சி மாவட்டம்.

‌சந்தா 1

எங்கள் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பாப்பாஉமாநாத் குறித்த வரலாற்று செய்தியைப் படித்தேன். பாப்பா அவர்கள் பொன்மலை சங்கத்திடலில் தன் வாழ்வைத் தொடங்கினார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவராக உயர்ந்தார் என் வரலாற்று செய்திகள் எனக்குள் பெரிய பிரமிப்பை உண்டாக்கின. கட்டுரையாளர் ஆசைத்தம்பிக்கும் என்திருச்சிக்கும் நன்றி.
-மருதீஸ்வரன்,
சிங்கை வாழ் தமிழர், சிங்கப்பூர்.

பாப்பா மற்றும் உமாநாத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் சாதி மறுப்பு திருமணமாக, சுயமரியாதை திருமணமாக நடைபெற்ற செய்தி அறிந்து மகிழ்ச்சி கொண்டேன். ஒரு பெண் போராளியின் வரலாற்றில் இதுபோன்ற அரிய செய்திகள் அவருக்குப் பெருமை தரும். ஒவ்வொரு வரலாற்றுக் கட்டுரையும் செதுக்கி எழுதும் ஆசைத்தம்பிக்கு வாழ்த்துகள்.
-முனைவர் உ.பிரபாகரன்,
முன்னாள் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

திருவெறும்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாப்பா உமாநாத் கட்டுரை எல்லா வகையிலும் சிறப்புடன் அமைந்திருந்தது. நல்வாழ்த்துகள். மேலும், பாப்பா உமாநாத் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருடைய மருமகன் தேவேந்திர இனத்தைச் சார்ந்தவர் என்றாலும் நாங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் எடுத்தாரோ அதைப்போல அம்மையார் பாப்பா அவர்கள் தாழ்த்தப்பட்ட இனம் சார்ந்த ஒருவருக்குப் பெண் கொடுத்துள்ளார் என்று அனைத்து பட்டியலின மக்களிடமும் சொல்லி வாக்கு கேட்டு வெற்றிபெற செய்தோம். தேவேந்திரர் என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்தவில்லை. கலைஞரும் பாப்பாவும் சாதி பேதம் பார்க்கிறவர்கள் இல்லை என்பதுதான் இந்த பரப்புரையில் நாங்கள் முன்வைத்த செய்தி. சாதி குறித்து நாங்கள் பரப்புரையில் செய்திகளைச் சொல்லவில்லை. நான் தேவேந்திரர் என்ற வார்த்தையை அப்போதும் சரி, இப்போதும் சரி, என்றும் பயன்படுத்த மாட்டேன்.
மிசா தி.சாக்ரடீஸ்,
மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், பாலாஜி நகர், காட்டூர், திருச்சி -19.

சந்தா 2

பாப்பா உமாநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு கட்டுரைப் படித்தேன். வரலாற்றுக் கட்டுரை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருந்தது. கட்டுரையாளர் ஆசைத்தம்பிக்குப் பாராட்டுகள்.
-பேராசிரியர் அ.சதீஷ்,
தமிழ்த்துறை, காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சி -1.

ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் பாப்பா உமாநாத் பற்றிய வாழ்க்கை வரலாற்று கட்டுரை படித்தேன். அருமை. சுவைத்தேன். வரலாற்று ஆவணங்களையும் இப்படி விறுவிறுப்பாய் தரமுடியும் என்பதை ஆசைத்தம்பி உறுதி செய்துள்ளார். நன்றி.
முனைவர் சு.மாதவன்,
தமிழ்ப் பேராசிரியர், மா.ம.அரசுக் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை.

பெண்குலத்திற்குப் பெருமை சேர்க்கும் கட்டுரையான பாப்பா உமாநாத் கட்டுரை அமைந்திருந்தது. வாழ்த்துகள்.
முனைவர் கே.சுமதி,
முதல்வர், கதீஜா பெண்கள் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் உ.வாசுகி அவர்களின் உரையை நான் மயிலாடுதுறையில் கேட்டிருக்கிறேன். வாசுகியின் அம்மாதான் பாப்பா என்பதை இக் கட்டுரை மூலம் அறிந்து வியந்தேன். பாப்பாவின் நெஞ்சுறுதி, தலைமறைவு வாழ்க்கை பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய வரலாற்றுக் கட்டுரை பெண்ணினத்தின் பெருமையைப் பேசியது. நன்று.
-தி.சு.வேலாம்பிகை,
ஜே.எம்.நகர், குண்டூர்,
திருச்சிராப்பள்ளி -7.

இடதுசாரி சிந்தனைக் கொண்ட பாப்பா – உமாநாத் இருவரும் கட்சியில் போராளியாகவே வாழ்ந்தார்கள் என்றாலும் கருத்தொருமித்தவர்கள் காதலர்களாக மாறினார் என்ற தகவல், கடினமான பாறைக்குள்ளும் நீர் இருக்கும் என்பதுபோல இருந்தது. இருவரின் காதல் அவர்களின் போராளி வாழ்க்கைக்கு உந்து சக்தியாக இருந்தது என்பதை கட்டுரை துல்லியமாக பதிவு செய்துள்ளது.
-இ.செல்வா,
அம்பேத்கர் தெரு, கீழக் கல்கண்டார்கோட்டை, திருச்சி -11.

உ.நிர்மலாராணி அவர்களிடம் நான் ஜூனியர் வழக்குரைஞராக திருச்சியில் பணியாற்றினேன். நிர்மலாராணி அவர்கள் மிகவும் திறமையானவர் என்பதை நான் நன்கு அறிவேன். அவரிடம் அஞ்சாமையைக் கண்டு வியந்திருக்கிறேன். நிர்மலாராணியின் அனைத்து திறமைகளும் அவரின் அம்மா பாப்பா அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டவை என்பதை பாப்பாஉமாநாத் வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறிந்ததேன். புலி பெற்றெடுத்தது பூனையாகுமா? என்பது எடுத்துக்காட்டாய் நிர்மலாராணி திகழ்கிறார் என்பது பெருமையான செய்தியாகும். கட்டுரை வெளியிட்ட என் திருச்சிக்கு என் பாராட்டுகள்.
வழக்குரைஞர் இ.தென்றலரசி,
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

Leave A Reply

Your email address will not be published.