திருச்சியின் புரட்சி தலைவி பாப்பா உமாநாத்

“காதில் விழுந்த (திருச்சி) வரலாறு”

0
1 full
  • தன் நோக்கத்திலிருந்து மாறி, தனலெட்சுமி என்ற பெயரையும் மாற்றிக் கொண்டு, செல்வங்கள் பலவற்றைச் சேர்க்காமல் போராட்டத்தையே தன் வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவர்.

  • சமூக முன்னேற்றத்தையே, குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தையே தன் வாழ்வின் குறிக்கோளாக வைத்துக் கொண்டவர்.

  • கொண்ட இலக்கிலிருந்து கொஞ்சமும் வழுவாமலும், சமரசம் கொள்ளாமலும் வாழ்ந்து புகழ்பெற்றவர்.

 

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் 1942-ஆம் ஆண்டுக்கென்று ஒரு சிறப்பு உண்டு. இந்த ஆண்டில்தான் ஒத்துழையாமை இயக்கம் என்னும் அறவழியிலான போராட்டம் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியா முழுமையும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் பலர் கைது செய்யப்பட்டனர். திருச்சியிலும் நடைபெற்ற போராட்டத்தில் பங்குபெற்றவர்களை ஆங்கிலேய அரசாங்கம் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர் (ஆஜர்) நிறுத்தியது. கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை நீதிபதி படிக்கிறார்.

படிக்கப்பட்ட பெயருக்குரிய வர்கள் கூட்டத்திலிருந்து விலகி நீதிபதி முன் நிற்கிறார்கள். தனலெட்சுமி என்ற பெயரை நீதிபதி படித்தவுடன் ஒரு சிறுமி வந்து நிற்கிறார். நீதிபதி திகைத்து, “உன் பெயர் தனலெட்சுமியா” என்று கேட்டவுடன், சிறுமி ”ஆம்” என்று கூறித் தலையை அசைக்கிறார். நீதிபதி பெயர் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் சிறுமியின் வயது எவ்வளவு என்று பார்க்கிறார். 12 என்று பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டு மேலும் திகைக்கின்றார்.

2 full

நீதிபதி,“அனைவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல்” என்று உத்தரவிடுகின்றார். நீதிபதி தொடர்ந்து,“தனலெட்சுமி என்ற சிறுமிக்கு 12 வயது மட்டுமே நிறைவடைந்திருப்பதால், அவரை நீதிமன்றக் காவலுக்காகச் சிறைக்கு அனுப்பமுடியாது. அதற்குச் சட்டம் இடம் தரவில்லை. கைது செய்யப்பட்ட சிறுமி தனலெட்சுமியை விடுதலை செய்கிறார். சிறுமியின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக ஏமாற்றமே தெரிந்தது.

விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற அந்தச் சிறுமிதான் பிற்காலத்தில் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்றும் பெண்ணுரிமைக்கான அமைப்பைக் கட்டமைத்து, அரசியல் களத்தில் திருச்சியின் “புரட்சித்தலைவி”யாக உச்சம் தொட்ட பெருமைக்குரிய பாப்பாஉமாநாத் ஆவார். பெண் குலத்தின் பேராளுமைக்கு எடுத்துக்காட்டாய் பாப்பாஉமாநாத் திகழ்ந்தவர். திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.

ஜெயலலிதா சொன்னது உண்மையில்லை –

உண்மையைப்

போட்டுடைத்த

“திருச்சியின் புரட்சித்தலைவி” 

பாப்பா உமாநாத்

 

தனலெட்சுமி –பாப்பா ஆனார்

காரைக்காலை அடுத்துள்ள கோவில்பத்து என்னும் ஊரில் 1931 ஆகஸ்ட் 5ஆம் நாள் அலமேலு – பக்கிரிசாமி இணையருக்கு மூன்றாவது குழந்தையாக, பிறந்த பெண் குழந்தைக்குத் தனலெட்சுமி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். தனம் என்றால் செல்வம், லெட்சுமி என்றால் திருமகள் என்று தமிழில் பொருள். இந்தக் குழந்தை செல்வங்கள் பலவற்றைப் பெற்றுத் திருமகளாய் வாழவேண்டும் என்னும் தொலைநோக்கு பார்வையில் தனலெட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் நோக்கத்திலிருந்து மாறி, தனலெட்சுமி என்ற பெயரையும் மாற்றிக் கொண்டு, செல்வங்கள் பலவற்றைச் சேர்க்காமல் போராட்டத்தையே தன் வாழ்க்கையாக அமைத்துக் கொண்டார். சமூக முன்னேற்றத்தையே, குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தையே தன் வாழ்வின் குறிக்கோளாக வைத்துக் கொண்டார். கொண்ட இலக்கிலிருந்து கொஞ்சமும் வழுவாமலும், சமரசம் கொள்ளாமலும் வாழ்ந்து புகழ்பெற்றார்.

தனலெட்சுமி சிறுவயதில் தன் அப்பாவை இழந்தார்.  இதனால் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள  மூன்று குழந்தைகளுடன்  தனலெட்சுமியின் தாய் அலமேலு தன் சகோதரர் வேலை செய்யும் பொன்மலைக்கு வந்தார். அங்கே தொழிலாளர்கள் சாப்பிடுவதற்காக உணவகம் (மெஸ்) ஒன்றை ஆரம்பித்தார்.

பள்ளி சென்ற நேரம்  தவிர, மற்ற நேரங்களில் அம்மாவுக்கு உதவியாக வேலை செய்துகொண்டிருப்பார் சிறுமி தனலெட்சுமி. உணவகத்திற்கு வரும் தொழிலாளர்கள் தனலெட்சுமி என்னும் அந்தச் சிறுமியை ‘பாப்பா’ என்று.  அன்புடன் அழைக்கத் தொடங்கினார்கள். தனலெட்சுமி என்னும் அந்தச் சிறுமியின் பெயர் மெல்ல மெல்ல மறைந்து பாப்பா என்று தொழிலாளர்கள் அழைத்த பெயரே  நிலைத்துவிட்டது.

சிறுமிக்கும் தன் பெயர் மறந்துபோய்த் தொழிலாளர்கள் அழைத்த பாப்பா என்ற பெயரும் பிடித்துப்போக ‘பாப்பா’ என்ற பெயருடனே தன் வாழ்வின் இறுதிவரை பயணம் செய்தார். பொதுவுடமை இயக்க வரலாற்றில் பாப்பா என்ற பெயர் குருதியின் நிறத்தில் எழுதிப் பதிவு செய்யப்பட்டது என்பதும் யாருக்கும் கிடைக்காத அரிய பெரும்பேறாகும்.

அரசியல் களம் கண்டார் சிறு வயதிலேயே பாப்பா 

ரயில்வே தொழிலாளர்களுக்கு உணவகத்தில் உணவு பரிமாறித் தொழிலாளர்களோடு இணைந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றார். பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்ற போராட்டங்களுக்கு வழிகாட்டிடவும் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கவும் பொன்மலைக்கு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சாற்றல் மற்றும் தலைவர்களின் எளிமையான வாழ்க்கை, தலைவர்களின் அயராது பணியாற்றும் பண்புகள் பாப்பாவைப் பெரிதும் ஈர்த்தன.

தொடர்ந்து பாப்பா மார்க்சியக் கொள்கைகளின்பால் தமது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார். குடும்பச்சூழல் காரணமாக, 8-ம் வகுப்பு வரையில் மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. உலகப்போர், இந்திய விடுதலைப் போராட்டம் குறித்துத் தலைவர்கள் ஆற்றும் உரைகளை உன்னிப்பாகக் கேட்டு உலகச் செய்திகளை, நாட்டு நடப்புகளை அறிந்துகொண்டார். இடைவிடாத நூல் வாசிப்பு மூலம் தன்னைத்தானே பட்டை தீட்டிக் கொண்டு அரசியல் வானில் ஒளிவிட்டார்.

ரயில்வே தொழிலாளர் போராட்டங்களின்போது சிறுவயதிலேயே செங்கொடி ஏந்திப் போராட்டக் களங்களில் முழக்கங்களில் இட்டவாறு சென்றது, வெள்ளை அரசாங்கம், விடுதலைக்குப் பிந்திய இந்திய அரசின் பொதுவுடமை இயக்கத்தின் மீது ஏவிவிடப்பட்ட அடக்குமுறை காலங்களில் பொதுவுடமை இயக்கத் தலைவர்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் எனத் தமது தாயார் அலமேலுவுடன் இணைந்து உதவிகள் பல செய்தார்.

பொதுவுடமை இயக்கக் கூட்டங்களில் கலந்து கொண்டு தலைவர்களின் பேச்சுகளைக் கேட்டது அவரது அரசியல் பங்கேற்பை உறுதி செய்தது. 1948இல் தலைமறைவாக இருந்த தலைவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களைக் கேட்டு, காவல்துறை பாப்பாவின் வீட்டுக்கு வந்தது. “உங்கள் வீட்டை நாங்கள் சோதனையிட வந்துள்ளோம்” என்று காவல்துறை அதிகாரத் தோரணையில் மிடுக்காகச் சொன்னவுடன், பாப்பா பயந்துவிடுவார் என்று எண்ணினார்கள்.

அவர்களின் எண்ணத்திற்கு மாறாகப் பாப்பா,“எங்கள் வீட்டைச் சோதனையிட வந்துள்ள நீங்கள் காவல்துறையினரா? என்று நான் சோதனையிட வேண்டும். நீங்கள் காவலர்கள்தான் என்பதற்கான அத்தாட்சியைக் கொடுங்கள். சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு உள்ளதா? காட்டுங்கள். இவையெல்லாம் இல்லையென்றால் எங்கள் வீட்டை நீங்கள் சோதனையிட முடியாது” என்று அழுத்தமாகவும் திருத்தமாகவும் சொன்னவுடன் காவல்துறையின் அதிகாரமும் மிடுக்கும் காணாமல் போனது.

அதிகாரங்களைக் கண்டு அஞ்சும் பொதுப்புத்தியிலிருந்து முற்றிலும் விலகி, பெண் என்றால் கிள்ளுக்கீரைகள் என்ற சமூக எண்ணத்தைப் பாப்பா மாற்றியமைத்தார். சமூகத்தில் பெண்கள் குறித்து ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தினார். இதனால் பாப்பாவைத் தொடர்ந்து பெண்கள் பலரும் அரசியல் களத்திற்கு வரத் தொடங்கியமை பாப்பாவின் நெஞ்சுறுதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

பாப்பா அவர்கள் இளம்வயதிலேயே சிறப்பான அரசியல் கட்டுரைகளை நிறைய எழுதியுள்ளார். ரயில்வே யூனியனின் ‘தொழிலரசு’ இதழின் துணையாசிரியராகவும் ‘மகளிர் சிந்தனை’ இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டார். அரசியல் களத்தில் இதழியல் பணியையும் செய்துவந்தார்.

உமாநாத் அறிமுகம்

இந்திய விடுதலைக்குப் பின் 1948ஆம் ஆண்டில் இரயில்வே தொழிலாளர்கள் பிரச்சனைகளைக் கவனித்துக் கொள்ள 28 வயது ஆற்றல்மிகு இளைஞர் ஒருவர் பொன்மலைக்கு வருகை தந்தார். அந்த இளைஞரின் பெயர் ஆர். உமாநாத் என்று பரவலாக அறியப்படும் இராம்நாத் உமாநாத் செனாய் என்பதாகும்.

1921ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்குக் கடைசி மகனாகப் பிறந்த இவர் தமது மாணவப் பருவத்தில் தமிழகத்துக்கு குடி பெயர்ந்தார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பல்கலைக்கழகத்தில் இருந்த பொதுவுடைமை இயக்கக் குழுவில் சேர்ந்தார். இயக்கம் கேட்டுக் கொண்டதன்பேரில், கல்லூரிப் படிப்பைத் துறந்து, சென்னையில் உள்ள தலைமறைவு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் ரகசியமாகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் கூரியர் பணியை ஏற்றுக் கொண்டு, முழுநேர ஊழியராகக் கட்சிப்பணியில் ஈடுபட்டார். 1940ல் சென்னை சதி வழக்கில் அவர் மூன்று ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். தனது அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார்.

1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு, பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதனால், பாப்பாவையும் அவரது அம்மாவையும்  (லஷ்மியம்மா என்ற பெயரில்) சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்னையில் தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினர். அப்போது பாப்பாவிற்கு உமாநாத் அறிமுகம் கிடைத்தது.

அம்மா, பாப்பா, உமாநாத் உள்படப் பல தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காவலர்கள் எவ்வளவோ துன்புறுத்தியபோதும் பாப்பாவிடமிருந்து ஒரு தகவலும் பெறமுடியவில்லை. லஷ்மியம்மா, பாப்பா உள்பட ஏராளமான தோழர்கள் சிறைக்குள்ளேயே உண்ணாவிரதம் இருந்தனர். 22வது நாள்  லஷ்மியம்மாவின் உயிர் பிரிந்தது. 

உயிர் பிரிந்த அம்மாவின் உடலை இறுதியாகப் பார்க்கவேண்டும் என்ற இயல்பான துடிப்பு பாப்பாவிடம் இருந்தது. “கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக இருந்தால் மட்டுமே அம்மாவின் உடலைப் பார்க்க அனுமதி கிடைக்கும்” என்று பாப்பாவிடம் காவல்துறை கோரிக்கை வைத்தது. கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தாயின் முகம் காண்பதைவிட, இயக்கம் பெரிது, ஏற்றுக் கொண்டிருக்கும் கொள்கை பெரிது என்று  கோரிக்கையையே நிராகரித்தார் பாப்பா.

பாப்பாவின் அரசியல் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் கல்யாணசுந்தரம் என்பதைச் சிபிஐ கட்சியின் தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் இந்திரஜித் என்திருச்சியிடம் தெரிவித்தார்.

மேலும், அவர் “1964இல் பொதுவுடமை இயக்கம் வலது, இடது என்று பிரிந்தபோது, வலது பக்கம் இணைந்த தோழர் கல்யாணசுந்தரம் பாப்பா அவர்களை வலது பக்கம் இணையவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் பாப்பா இணைய மறுத்து, இடது பக்கம் இணைந்து அரசியல் பணிகளைத் தொடர்ந்தார்” என்றும் நம்மிடம் இந்திரஜித் தகவல் தெரிவித்தார்.

இரு இதயங்களிலும் மணம் வீசின

1949ஆம் ஆண்டு பொன்மலை இரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை இளைஞர் உமாநாத் தலைமையேற்று நடத்தினார். இளைஞனின் ஆற்றல்மிகு உரை, கொள்கைப் பிடிப்பு, நெஞ்சுறுதி போன்ற பண்புகள் பாப்பாவின் எண்ணத்தைக் கவர்ந்தது.

 பாப்பா அவர்கள் இயக்கத்திற்கு ஆற்றிவரும் ஓய்வறியா உழைப்பு, பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் அளப்பரிய பண்பு இளைஞன் உமாநாத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை. கருத்தொருமித்தவர்கள் காதல் கொண்டனர். போராட்டக் களம் என்னும் கற்களும் முற்களும், மேடும் பள்ளமும் நிறைந்த இவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் இருவர் இதயங்களிலும் காதல் அரும்பத் தொடங்கி, மொட்டவிழ்ந்து, மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.

பொன்மலை இரயில்வே போராட்டத்தில் தலைமை தாங்கிய உமாநாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சதி வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 1951ஆம் ஆண்டு பொதுவுடமைக் கட்சியின் மீதிருந்த தடை நீக்கப்பட்டபோதும், திருச்சி சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்ததால் உமாநாத் 1954, ஆகஸ்ட் 15 ஆம் நாள்தான் அவர் விடுவிக்கப்பட்டார் என்ற தகவல் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுள்ளது.

பாப்பா –உமாநாத் திருமணம்

சிறையிலிருந்து வெளியே வந்த இளம் போராளி உமாநாத் 1954 அக்டோபர் மாதம் 9ஆம் தேதி பாப்பாவைத் திருமணம் செய்து கொள்கிறார். இந்தத் திருமணம் சாதி மறுத்த, தாலி அணியாத சுயமரியாதை திருமணமாக மட்டுமல்லாமல் புரட்சிகரத் திருமணமாகவும் பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்றது. திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் தந்தை பெரியார் என்ற தகவல் ‘சுரன்’ என்னும் வலைப்பூ பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் இந்தத் திருமணம் குறித்து மாறுபட்ட தகவலும் உள்ளது. அதுவென்னவெனில், பாப்பா-உமாநாத் திருமணம் 1952, அக்டோபர் மாதம் 9ஆம் தேதி நடைபெற்றது என்றும் அந்தத் திருமணத்தைத் தந்தை பெரியார் நடத்தி வைத்தார் என்று விக்கிப்பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முரண்களைப் பாப்பாஉமாநாத் அவர்களின் மகள் வழக்குரைஞர் நிர்மலாராணியிடம் கேட்டபோது, 1952, அக்டோபர் 9ஆம் நாள் என்பதை உறுதி செய்தார்.

இன்னொரு மகளான வாசுகி அவர்களிடம் கேட்டபோது “திருமணத் தகவல்களில் ஆண்டு மட்டும்தான் மாறியிருக்கிறது, திண்டுக்கல் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி எழுதியுள்ள அம்மாவின் வாழ்க்கை வரலாற்று நூலில் திருமணம் நடந்த ஆண்டு 1952 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

என்திருச்சி மின்இதழ் சார்பில்,“அப்படியானால் 1949இல் கைது செய்யப்பட்ட உமாநாத் அவர்கள் 1952இல் சிறையில் விடுப்பு (பரோல்) எடுத்துக்கொண்டு பாப்பாவைத் திருமணம் செய்து கொண்டாரா” என்ற ஐயத்தை வாசுகியிடம் முன்வைத்தோம்.

சிறையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு திருமணம் நடைபெறவில்லை’ என்பதை உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, பாப்பா-உமாநாத் திருமணம் 1952இல் நடைபெற்றதாகவே எண்ணிட வேண்டியுள்ளது என்பதைப் பதிவு செய்கிறோம். (இந்த வரலாற்றைப் படிக்கும் வாசகர்கள் இதனைத் தெளிவுபடுத்தினால் வரலாறு இன்னும் தெளிவடையும்)

பிற்சேர்க்கை (வாசகர் கடிதங்களிலிருந்து)

ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மறைந்த பாப்பா உமாநாத் வாழ்க்கை வரலாற்று எழுத்துரை படித்தேன். அரிய செய்திகளைத் தொகுத்து வழங்கிய ஆசைத்தம்பிக்கும் திருச்சி மறந்துபோன ஆளுமைகளை வரலாற்றில் பதிவு செய்யும் என் திருச்சிக்கு என் நன்றி. கட்டுரையில் பாப்பா-உமாநாத் திருமணம் குறித்த வருட குழப்பம் அறிந்தேன். 1949 திருச்சி சதி வழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் உமாநாத் 1952 ஆகஸ்ட்டு 15ஆம் நாள் விடுதலை செய்யப்படுகின்றார். அக்டோபர் 9ஆம் நாள் பாப்பாவைத் திருமணம் செய்துகொள்கிறார். இதுதான் உண்மையான செய்தி. 1954-இல் விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவல் பிழையானது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திரஜித்,
சிபிஐ புறநகர் மாவட்டச் செயலர், திருச்சி மாவட்டம்.

இல்லற வாழ்வு

பாப்பா –உமாநாத் இணையரின் இல்லறவாழ்வு இயல்பான அமைதியான இல்லற வாழ்வாக அமைந்திருக்கவில்லை. அரசியல் களத்தில், பணியில், கருத்துகளில், செயல்பாடுகளில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தனர். பாப்பா அவர்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) திருச்சி மாவட்டச் செயற்குழு, மாநிலக்குழு, மாநிலச் செயற்குழு, மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார்.

1970களில் தோழர் கே. பி. ஜானகி அம்மாள் அவர்களுடன் இணைந்து தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் நிறுவனத் தலைவராக, அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராக, புரவலராகத் தமது இறுதிக்காலம் வரை இயக்கத்திற்கான வளர்ச்சியில் அவரது பங்களிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்திற்குத் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

உமாநாத் அவர்கள் தொடர்ந்து கட்சிப் பணியிலும், தொழிலாளர்கள் பிரச்சனைகளை முன்வைத்துப் போராட்ட நிகழ்வுகளிலும் தொடர்ந்து செயல்பட்டார். 1970ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அகில இந்திய நிர்வாகியாகவும், முதல் மாநாட்டிலிருந்து தமிழ்நாட்டின் இயக்கப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்.

ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்டச் சலுகைகள் மற்றும் உரிமைகளுக்காகவும் கே.ரமணி இவர்களோடு இணைந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்களை நடத்தினார்.

 டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின்போது உமாநாத் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அன்றைய முதல்வர் பொறுப்பிலிருந்த அண்ணா நேரடியாகத் தலையிட்டுப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

உமாநாத் புதுக்கோட்டை தொகுதியிலிருந்து 1962, 1967 என இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977,1980 ஆகிய ஆண்டுகளில் நாகப்பட்டினம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினராகவும் உமாநாத் இருந்தார்.

இணையரின் முத்தான மூன்று பிள்ளைகள்

பாப்பா-உமாநாத் இணையருக்கு மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தன. முதல் பெண் பெயர் லட்சுமி நேத்ராவதி. இவர் ஒரு மருத்துவராகப் பணிசெய்தார். 2ஆம் பெண் பெயர் வாசுகி. இவர் படித்துப் பட்டம் பெற்று வங்கியில் ஒன்றில் பணியாற்றி வந்தார். பின்னர் வங்கிப் பணியிலிருந்து விலகி, இடது கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முழுநேரம் பணியாற்றி வந்தார். தாயின் மறைவுக்குப் பின் ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

இவர் சிதம்பரம் பத்மினி பிரச்சனைக்காகப் போராட்டங்களை நடத்தி முக்கியப் பங்காற்றியவர். கோகோ கோலாவை எதிர்த்துச் சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர். சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, விடுதி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்தவர். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மத்தியக்குழு உறுப்பினராக உள்ளார். மகளிர் சிற்றிதழின் ஆசிரியராகவும் உள்ளார்.

3ஆம் பெண் பெயர் நிர்மலாராணி. இவர் வழக்குரைஞர் பட்டப் படிப்பு படித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் மாணவர் பருவத்தில் ஆனந்தவிகடன் இதழில் மாணவ நிருபராகப் பணியாற்றினார். இவர்தான் பிரேமானந்தா என்னும் சாமியார் திருச்சி விராலிமலை அருகில் தான் நடத்திவந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியர்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.  இவரின் இதழியல் செய்திகளின் அடிப்படையில் சாமியார் பிரேமானந்தா மீது வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கில் பிரேமானந்தா இரட்டை ஆயுள்தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

 பாப்பா-உமாநாத் இணையருக்குப் பிறந்த பிள்ளைகள் மூவரும் பெற்றோர்களைப் போலவே சமூக அக்கறை கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதில் மூத்த மகள் லட்சுமி நேத்ராவதி அவர்கள் மட்டும் காலமாகிவிட்டார். தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை என்னும் முதுமொழிக்கு எடுத்துக்காட்டாய் இந்த இணையரின் பிள்ளைகள் சமூக முன்னேற்றத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அரசியல் குடும்பங்களின் அரிதான செய்தியாகும்.

பாப்பா சட்டமன்ற உறுப்பினர்

1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவோடு தேர்தல் உறவு கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக் கட்சியின் சார்பில் பாப்பாஉமாநாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.  பாப்பாவை எதிர்த்து இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவெறும்பூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வை.சாமிநாதன்.

தேர்தல் களத்தில் பொதுவுடமை இயக்கத்தினர் சூறாவளியாய்ச் சுழன்று பரப்புரை செய்தனர். காங்கிரஸ் சார்பில் சாமிநாதன் பிரச்சாரமும் கடுமையாக இருந்தது. இந்நிலையில் பாப்பா உமாநாத்தின் மூத்த மருமகன் திண்டுக்கல் சேர்ந்தவர், பாப்பாவின் மூத்த மகள் டாக்டர் லெட்சுமியின் கணவர் மாமியாருக்காகப் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.  அப்போது அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயம் தேவேந்திரக் குலம் என்பதைப் பாப்பாவுக்காகத் திமுகவில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த கீழக் கல்கண்டார்கோட்டை சாக்ரடீஸ் அறிந்து, பாப்பாவின் மருமகனுடன் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.  தேர்தல் பிரச்சாரத்தில் பாப்பா தேவேந்திரகுலம் பள்ளர் இனச் சம்மந்தி என்று பள்ளர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் பரப்புரை செய்யப்பட்டது.

இதனை அறிந்த வேட்பாளர் பாப்பா அவர்கள் திமுகவைச் சேர்ந்த சாக்ரடீஸ் அவர்களிடம் “இதுபோன்ற சாதி பிரச்சாரத்தை எங்கள் இயக்கமும் நானும் ஏற்கமாட்டோம். இப்படிப்பட்ட ஒரு வெற்றி தேவையுமில்லை” என்று கடுமையாகப் பேசினார். மேலும் தன் மருமகனைப் பிரச்சாரம் செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டது. பாப்பாஉமாநாத் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வை.சாமிநாதனை வெற்றி கொண்டார். சட்டமன்ற உறுப்பினராக ஆனபின் அவரை எளிமையாகத் தொடர்புகொள்ளமுடியும் என்ற நிலையை ஏற்படுத்தினார். மக்கள் பிரச்சனைகளுக்கு அதிகாரிகளை உடனே அழைத்துப் பணிகளை மேற்கொள்ளச் செய்வார்.

திமுகவின் எதிர்ப்பு

இவர் முயற்சியால் பொன்மலைப்பட்டிக்கு காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடிக்குளத்தின் ஆக்கிரமிப்பை நீக்கி, குளத்தைத் தூர்வரும் பணியை மக்கள் ஆதரவுடன் மேற்கொண்டார். ஆக்கிரமிப்புகளை எடுக்கப் பொன்மலை, பொன்மலைப்பட்டி திமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்கள் ஆதரவு இருந்தும், ஆளுங்கட்சியின் ஆதரவு இல்லாமல் மாவடிக்குளம் தூர்வரும் பணிகள் முடங்கிப்போயின. இந்தப் பிரச்சனை பாப்பா அவர்கள் முதல்வர் பொறுப்பிலிருந்த கலைஞரின் பார்வைக்குக் கொண்டு சென்றார். கலைஞர் சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாளர்களைக் கடுமையாகக் கடிந்துகொண்டார். மக்கள் பணிக்கு யார் எதிராக இருந்தாலும் அவர்களை எதிர்க்கும் துணிச்சலைப் பாப்பா உமாநாத் பெற்றிருந்தார் என்பதற்கு மேற்சொன்ன நிகழ்வு சாட்சியாக அமைந்திருந்தது.

சட்டமன்றத்தில் மானபங்கம்

1989ஆம் ஆண்டில் கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஜெயலலிதா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தனர். 26.3.1989ஆம் நாள் முதல்வர் கலைஞர் நிதி நிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, கலைஞரின் கையிலிருந்த தாள்களைப் பிடுங்கி, அவற்றைக் கிழித்து எறிந்தார்.  இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிமுக – திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே மோதல், கைகலப்பு, மைக்கைப் பிடுங்கி மண்டையை உடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தேறின.

இதற்கிடையே ஜெயலலிதா தலைவிரிகோலமாக,“துரைமுருகன் என் சேலையைப் பிடித்து இழுத்து என்னை மானபங்கம் செய்ய முயற்சித்தார்” என்று சட்டமன்றத்தில் கூறினார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நேரடியாக ஆளுநர் மாளிகை சென்று ஆளுநரிடம் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்துப் புகார் செய்தார்.

ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போதும் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் துரை முருகனால் தான் மானபங்கம் படுத்தப்பட்டதாகக் கூறி, ஆளுநரிடம் கொடுத்த புகாரை உறுதி செய்தார். துரை முருகனுக்குச் செய்தி ஊடகங்கள் “துச்சாதனன்” என்னும் பட்டத்தை வழங்கி, தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. கலைஞர், பேராசிரியர், துரை முருகன் ஆகியோர் சட்டமன்றத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை எடுத்துச் சொல்லியும், அவை மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை.

ஓங்கி ஒலித்த உண்மையின் குரல்

இந்நிலையில், அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த பாப்பா உமாநாத் செய்தியாளர்களைச் சந்தித்து, ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? என்னும் நிகழ்வு குறித்துப் பேசினார். அப்போது,“ கருணாநிதியின் கையில் இருந்த பட்ஜெட் பேப்பர்களில் சில பக்கங்களைப் பிடுங்கிக் கிழித்து எறிந்தார். அதோடு ‘குத்துடா அவனை’ என்ற கட்டளையும் ஜெயலலிதாவிடம் இருந்து பிறந்தது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கருணாநிதியும் ஆவேசம் அடைந்தார்.

ஜெயலலிதாவைப் பார்த்து “வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்” என்று எச்சரித்தார். அதைக் கருணாநிதி சொல்லி முடிப்பதற்குள், அ.தி.மு.எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் கருணாநிதியைப் பிடித்துப் பலமாகக் கீழே தள்ளினார்.  சுதாரித்துக் கொண்ட கருணாநிதி, கீழே விழுந்துவிடாமல் இலேசான தள்ளாட்டத்துடன் சமாளித்துக் கொண்டார். ஆனால், அவருடைய மூக்குக் கண்ணாடி கழன்று விழுந்தது.

உடனே, பின்வரிசையில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் கருணாநிதியைச் சூழ்ந்து நின்று அ.தி.மு.க-வினரை எச்சரித்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஓடிப்போய் நிலக்கோட்டை காங்கிரஸ் எம்.எல்.பொன்னாம்மாளின் மேஜையில் இருந்த மைக்கைக் கழற்றி வீரபாண்டி ஆறுமுகம் மண்டையைப் பிளந்தார். வீரபாண்டி ஆறுமுகம் அடிபட்டதும் அவரைத் தாங்கிப்பிடிக்கத் துரைமுருகன் ஓடிவந்தார். சட்டமன்றம் கூச்சல்களால் அதிர்ந்தது.

ஆனால், உண்மையில் அன்று ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் கூடத் துரைமுருகன் வரவில்லை. அவர் மண்டை உடைந்த வீரபாண்டி ஆறுமுகத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் நின்றிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டால் தமிழக அரசியல் வரலாற்றில் துரைமுருகனுக்கு துச்சாதனன் பட்டம் கிடைத்தது.

எதிர்க்கட்சித் தலைவர், துரை முருகனால் மானபங்கம் செய்யப்பட்டேன் என்று கூறியது உண்மையில்லை என்று பாப்பாஉமாநாத் நடந்த உண்மைகளை உடைத்துப்போட்டார்.

செய்தியாளர்கள் பாப்பாஉமாநாத்தை விடுவதாக இல்லை. கிடுக்குப்பிடி கேள்விகளால் துளைத்து எடுத்தனர். “நீங்கள் திமுக கூட்டணியில் உள்ளதால் நடந்த உண்மைகளை மறைத்து, திமுகவுக்கு ஆதரவாகப் பேசுகின்றீர்கள்” என்று செய்தியாளர் விடுத்த கேள்விக்கு,

நான் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவள். திமுகவுக்கு ஆதரவு என்பது கூட்டணியோடு முடிந்துவிட்டது. நாங்கள் திமுகவை ஆதரிக்கவேண்டிய தேவையில்லை. மேலும், சட்டமன்றத்தில் ஒரு பெண்ணுக்கு மானபங்கம் நடைபெற்றிருந்தால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து கொண்டிருக்கும் நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?  அப்படி நடந்திருந்தால் அதைத் தட்டி கேட்கும் முதல் ஆளாக நானாக இருந்திருப்பேன்” என்று கூறி முடித்தார்.  இதனைத் தொடர்ந்தே, ஜெயலலிதா கூறியது உண்மைக்கு மாறான தகவல் என்று ஊடகங்கள் பாப்பா உமாநாத் வழியாக உண்மையை உணர்ந்துகொண்டன.

தமிழகத்தில் அமைதி சீர்குலைந்திருந்த நிலையில் பாப்பா உமாநாத் எடுத்துரைத்த உண்மையால் தமிழகத்தில் அமைதி திரும்பியது. பாப்பாஉமாநாத் அவர்களின் இந்தச் செய்தியாளர் சந்திப்பின் செய்திகள் இந்தியாவின் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. பாப்பா உமாநாத் அவர்களின் இந்தத் துணிச்சல் எந்த அரசியல் தலைவருக்கும் வராது என்பதில்தான் பாப்பா உமாநாத் அவர்களுக்குப் பெருமை என்றால் மிகையில்லை.

அதிகம் படிக்காத பெண் ஊழியர்களிடம் தலைமைப் பண்புகளை வளர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர். இறுதிவரை பெண்களின் உரிமை, சுதந்திரம், கல்விக்காக அயராது பாடுபட்ட, அரசியல் போராளி, திருச்சியின் “புரட்சித்தலைவி” என்று போற்றப்பட்ட பாப்பா உமாநாத், 2010-ம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் தமது 79-வது வயதில் மறைந்தார்.

செங்கொடி போர்த்தப்பட்ட அவரின் உடல் திருச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மக்கள் மடைதிறந்த வெள்ளமாகத் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அந்தக் காட்சிகள் மக்கள் மனதில் பாப்பா உமாநாத் இடம்பெற்றிருந்த உயர்ந்த இடம் தெளிவாகப் புலப்பட்டது.

3 half

Leave A Reply

Your email address will not be published.