நோய்தொற்று காலத்திலும் நூறு பன்னாட்டு விமானங்களை கையாண்ட நாட்டின் முதல் 2ம்நிலை விமானநிலையம்!!!
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையமே

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. –திருவள்ளுவர். இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் என்பது திருவள்ளுவர் வாக்கு. இதற்கு முற்றிலும் பொருத்தமானது சமீப காலத்திய திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் தன்னலமற்ற சேவை. எப்படி என்று காண்போமா?
உலகளாவிய கொரொனா தாக்குதலால் உலகம் முழுவதும் விமானப்போக்குவரத்து முடங்கிய சூழலையும் உலகம் முழுவதும் பன்னாட்டு விமானபயணிகள் ஆங்காங்கே தவித்ததையும் அறிவோம்.
இந்நிலையில் உலகம் முழுவதும் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பொருட்டு மத்தியஅரசானது வந்தேபாரத் என்ற மீட்பு நடவடிக்கையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றது. மேலும் தேவையுடைய மக்கள் விமானங்களை குத்தகைக்கு எடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகின்றனர்.

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையமானது இந்த சூழலில் எவ்வாறு மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றது என்பதைக் காண்போம்.
மத்தியஅரசின் வந்தேபாரத் மீட்பு விமானசேவைகள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் இருந்து வரும் தனியார் குத்தகை விமானங்களையும் கையாண்டு வருகின்றது.
மேலும் திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் தவித்த மலேசிய குடிமக்களையும் சிங்கப்பூர் குடிமக்களையும் பத்திரமாக அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறது.
இது தவிர மலேசியா மற்றும் சிங்கப்பூர் நிரந்தர குடி அனுமதி பெற்றவர்கள், வேலை வாய்ப்பு விசாவில் உள்ளவர்கள் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் செல்ல உதவுகிறது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, துபய் மற்றும் ஷார்ஜாவிற்கு சிறப்பு விமானசேவைகளை கையாண்டு வருகிறது. இவ்வகையில் கடந்த 17ம் தேதி அன்று வெற்றிகரமாக 100 பன்னாட்டு விமானசேவைகளை திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் கையாண்டுள்ளது.
இதில்,
தமிழர்கள் மட்டுமன்றி பிற மாநிலத்தவர்கள் உட்பட வெளிநாடுகளில் தவித்தவர்களை அழைத்து வந்த விமானசேவைகளின் எண்ணிக்கை 73 ஆகும். இந்த 73 விமானங்களில் திருச்சிராப்பள்ளிக்கு வந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை11,866 ஆகும்.
மலேசியாவைச் சேர்ந்த குடிமக்களை மலேசியாவைச் சேர்ந்த மலிண்டோ மற்றும் ஏர் ஏசியா விமானநிறுவனங்களில் பத்திரமாக கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானசேவைகளின் எண்ணிக்கை 8 ஆகும். இதில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்ட மலேசிய குடிமக்களின் எண்ணிக்கை 1,220 ஆகும்.
மலேசிய குடிமக்கள் தவிர, மலேசிய நிரந்தர குடியுரிமை (றிஸி) பெற்றவர்கள், மற்றும் மலேசியா வேலை வாய்ப்பு விசா வைத்திருந்து மலேசியா செல்ல முடியாமல் தவித்தவர்களுக்காக திருச்சிராப்பள்ளியில் இருந்து கோலாலம்பூருக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 8, மற்றும் இதில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 523 ஆகும்.
சிங்கப்பூர் குடிமக்கள், சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை (றிஸி) பெற்றவர்கள், மற்றும் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு விசா வைத்திருந்து சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்காக திருச்சிராப்பள்ளியில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 11, மற்றும் இதில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 1155 ஆகும்.
மஸ்கத் மற்றும் அபுதாபிக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஷார்ஜா மற்றும் துபய்க்கு சிறப்பு விமானசேவைகள் இயக்கப்படவுள்ளன.
350 டன்னுக்கு மேல் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றன சிங்கப்பூர், குவைத் மற்றும் கோலாலம்பூருக்கு பயணிகள் விமானத்திலும் பிரத்தியோக சரக்கு விமானத்திலும் அனுப்பி வைக்கப்பட்டன.

சரக்கு விமானங்கள் தவிர்த்து கையாளப்பட்ட பயணிகள் விமானங்கள் எண்ணிக்கையானது கடந்து 17ம் தேதி 100-ஐ தாண்டி 101 ஆகியது.
இவ்விமானங்களில் கையாளப்பட்ட பயணிகள் எண்ணிக்கை 14,242 ஆகும்.
மிகவும் இக்கட்டான நெருக்கடியான காலகட்டத்தில், பயணிகளைக் கையாளுதல், பயண உடைமைகளைக் கையாளுதல், விமானங்களை கையாளுதல், பயணிகள் முனைய கட்டித்தில் குடிநீர், கழிவுநீர் அகற்றம், சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்தல், சரக்கு முனையத்திலும் குடிநீர், கழிவுநீர் அகற்றம், சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்தல், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை செய்தலுக்கு ஒத்துழைத்தல்.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களை குறிப்பாக மலேசிய, சிங்கப்பூர் குடிமக்களை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தல் என பல்வேறு நெருக்கடியான சூழல்களில் நூற்றிற்கும் மேற்பட்ட பன்னாட்டு விமானங்களை கையாண்டு இன்னும் அதிகப்படியான விமானங்களை கையாண்டு வருவது இந்திய அளவில் மாபெரும் சாதனைதான் என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை.
இந்தியாவின் ஆறு பெரு நகரங்களான (Metro) பம்பாய், டெல்லி, மெட்ராஸ், கல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கேரளா விமானநிலையங்களான கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் திருவனந்தபுரம் தவிர்த்து நூறு பன்னாட்டு விமானங்களை இந்தக்காலகட்டத்தில் கையாண்ட முதல் இரண்டாம்நிலை விமானநிலையம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையமே.
மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் உட்பட பிற மாநிலத்தவர்களை மீட்டெடுத்தலில் வழக்கமான பயணிகள் விமானசேவை இல்லாத குவைத்தில் இருந்து அதிக பயணிகளைக் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விமானநிலையங்கள் படி கையாண்ட பயணிகள் எண்ணிக்கை வருமாறு.
- குவைத்தில் இருந்து 19 விமானசேவைகளில் 2,769 பயணிகள்.
- மஸ்கத்தில் இருந்து 9 விமானசேவைகளில் 1,607 பயணிகள்.
- சிங்கப்பூரில் இருந்து 7 விமானசேவைகளில் 1,433 பயணிகள்.
- தம்மாமில் இருந்து 6 விமானசேவைகளில் 1,018 பயணிகள்.
- ஷார்ஜாவில் இருந்து 5 விமானசேவைகளில் 857 பயணிகள்.
- துபயில் இருந்து 4 விமானசேவைகளில் 753 பயணிகள்.
- கோலாலம்பூரில் இருந்து 5 விமானசேவைகளில் 725 பயணிகள்.
- ராஸ்-அல்-ஹைமாஹ்வில் இருந்து 3 விமானசேவைகளில் 547 பயணிகள்.
- ரியாத்தில் இருந்து 3 விமானசேவைகளில் 535 பயணிகள்.
- தோஹாவில் இருந்து 3 விமானசேவைகளில் 523 பயணிகள்.
- அபுதாபியில் இருந்து 2 விமானசேவைகளில் 345 பயணிகள்.
- மாலேவில் இருந்து 2 விமானசேவைகளில் 340 பயணிகள்.
- ஜித்தாவில் இருந்து ஒரு சேவையில் 170 பயணிகள்.
- இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் மேதான்-ல் இருந்து ஒரு விமானசேவையில் 169 பயணிகள்.
- டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆப் காங்கோவின் கின்ஸாஸா, லுபும்பாஷி மற்றும் எத்தியோப்பியாவின் அதிஸ் அபாபா-வில் இருந்து ஒரு சேவையில் 75 பயணிகள் என மொத்தம், 11 நாடுகளின், 18 விமானநிலையங்களில் இருந்து 73 சேவைகளின் வாயிலாக,
- 11,866 பயணிகளை திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் கையாண்டுள்ளது.
இதில்
- இந்தியாவின் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ் ஜட், கோ ஏர்,
- மலேசியாவின் மலிண்டோ மற்றும் ஏர் ஏசியா,
- குவைத்தின் குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஜீரா ஏர்வேஸ்,
- ஓமன் நாட்டின் ஸலாம் ஏர் மற்றும் ஓமன் ஏர்,
- யுனைட்டட் அராப் எமிரேட்ஸின் ப்ளை துபய்,
- எத்தியோப்பியாவின் எத்தியோப்பியன் ஏர் மற்றும்
- இந்தோனேஷியாவின் ஏர் ஏசியா இந்தோனேஷியா
ஆகிய விமானநிறுவனங்கள் பன்னாட்டு விமானபயணிகளை கையாண்டுள்ளன. இந்திய அளவில் அதிகமான மலேசியா மற்றும் சிங்கப்பூர் குடிமக்களை அவரவர் நாடுகளுக்கு அதிகம் அனுப்பி வைத்தது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் என்பது மிகப்பெரும் வெகுமதியாகும்.
இதன் மூலம் “இந்தியா- மலேசியா” மற்றும் “இந்தியா –சிங்கப்பூர்” நாடுகளுக்கிடையேயான நல்லுறவு வலுப்படுவதற்கு, குறிப்பாக, இந்தியாவின் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கிடையேயான வெளிவிவகாரக்கொள்கை வலுப்பெறுவதற்கு திருச்சி ராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் அடிகோ லுகிறது என்பதில் எவ்வளவு பெருமிதம்!
ஒரு பேரிடர் காலத்தில் எதைப்பற்றியும் கவலைப் படாது, வெளிநாடுகளில் தவிக்கும் தம் மக்களை மீட்டெடுப்பதில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம், திருச்சி ராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், திருச்சிராப்பள்ளி அண்ணல் காந்தி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் காட்டிய அக்கறையும் முனைப்பும் போற்றுதலுக்குரியது.
இது நம்மை விட, வெளிநாடுகளில் தவித்து கடுமையான சிரமங்களுக்கு இடையில் பயணித்து திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் கால் பதிக்கும்போது உணர்வுப்பூர்வமாக உணரும் பயணிகளுக்கு நன்றாகவே புரியும்.
இந்தப் பயணிகளுக்கு திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் செய்த உதவிதான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் திருவள்ளுவர் வாக்காக உள்ளது. பேரிடர் காலத்திலும் சடைவடையாது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
-உபயத்துல்லா
