வளனார் கல்லூரியின் புகழ்முடியில் ஒளிவீசும் நல்லமுத்து

0

கல்வியெனும் பெரும் வானில் 175 ஆண்டுகளைக் கடந்து சிறகடித்துக் கொண்டிருக்கும் வண்ணப்பறவை என்னும் பெருமைபடைத்தது தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி. மாணவர்களின் நலன் ஒன்றையே மூலதனமாகக் கொண்டு, கல்வி வணிகத்தின் சிறுநிழல்கூட படியாவண்ணம் தன்னைக் காத்துக் கொண்டு, தன்னிடம் பயிலும் மாணவர்களைக் குடியரசுத்தலைவராகவும், தேர்தல் ஆணையராகவும், பல்வேறு தொழில்துறை அதிபர்களையும், ஆட்சியியல் துறையில் அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் திரைத்துறையில் நடிகர்களையும், எழுத்துத்துறையில் சுஜாதா போன்ற நிகரில்லா பல்துறை ஆளுமைகளையும் உருவாக்கிய நந்தவனம்தான் வளனார் கல்லூரி என்றால் மிகையில்லா உண்மையாகும்.

வளனாரின் புகழ்முடியில் ஒரு முத்து

வளனார் கல்லூரியின் புகழ்முடியில் வைரம், மரகதம், நீலம்,கோமேதகம், பவளம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம் எனப் பல மண்ணில் கிடைக்கக்கூடிய மணிகள் பல ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. ஆழ் கடல்களில் மட்டுமே விளையக்கூடிய முத்து ஒன்றும் வளனாரின் புகழ்முடியில் தன்னை இணைத்துக் கொண்டு அண்மைக் காலங்களில் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது. வளனார் புகழ்முடியில் நவரத்தினங்களும் இணைந்து ஒளிவீசி இந்தத் திருச்சி மண்ணை ஒளிரச் செய்துகொண்டிருக்கின்றது.

இந்த முத்துவின் வரலாற்றைத்தான் ஆம் வளனார் கல்லூரியின் பணிமுறை-யில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும், சித்தமருத்துவம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) திட்ட முதன்மையராக இருந்த (2016-18) முனைவர் ரெ.நல்லமுத்துவின் ஆய்வுலக வரலாறுதான் இந்த இதழில் பதிவு செய்யப்படுகின்றது. இது வாழ்ந்த வரலாறல்ல.. வாழ்ந்துகொண்டிருக்கும் சாதனை இளைஞனின் வரலாறு. திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் வரலாறு என்னும் பெருமையும் இந்தப் பதிவுக்கு உண்டு.

பிறப்பும் பெற்ற கல்வியும்

முனைவர் ரெ. நல்லமுத்து, திருச்சி&கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முத்தரசநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட முருங்கப்பேட்டையில் ரெங்கராஜ்&முத்துக்கண்ணு இணையருக்கு 3 மகள்களையடுத்து 1977இல் மகனாகப் பிறந்தார். உழைக்கும் மக்களின் உடல் வண்ணமாகக் கருப்பு நிறத்தில் மகன் பிறந்த மகிழ்ச்சியில் பெற்றோர் பொருத்தமாக நல்லமுத்து என்று பெயர்சூட்டி இன்புற்றனர். நல்லமுத்து என்பது ஆங்கிலத்தில் நிஷீஷீபீ என்ற பொருளில் வழங்குவதில்லை. தமிழில் நல்லம் என்றால் கருப்பு என்ற பொருள் உண்டு. கருப்பு என்று சிறுதெய்வமும் உள்ளது. கருப்புதான் தமிழர்கள் போற்றும் வண்ணமாக இருந்திருக்கிறது. நல்லமுத்துவிற்கு இயல்பாகக் கிடைக்கும் வெண்ணிற முத்தைவிட விலை உயர்வானது கருப்பு முத்து என்ற அடிப்படையில்தான் இவர் பெயர் அமைந்துள்ளதோ என்று எண்ணிடத் தோன்றுகின்றது.

இவர், தன் தொடக்கக் கல்வியை முருங்கப்பேட்டையில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் படித்தார். உயர்நிலை கல்வியை (6-8) முத்தரசநல்லூரில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்தார். 9 மற்றும் 10ஆம் வகுப்புகளைத் திருச்செந்துறையில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் படித்தார். மேநிலைக் கல்வியை உறையூர் எஸ்.எம். பள்ளியில் படித்துத் தன் பள்ளி வாழ்க்கை நிறைவு செய்தார்.

கல்லூரி வாழ்வும், -பணியும்

தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் 1998ஆம் ஆண்டில் இளங்கலை தமிழ்ப் பட்டம் பெற்றார். 2000ஆம் ஆண்டில் முதுகலை தமிழ்ப் பட்டம் பெற்றார். 2002ஆம் ஆண்டில் இளம் முனைவர் பட்டம் பெற்றார். 2004ஆம் ஆண்டு முதல் தான் படித்த, பட்டம் பெற்ற கல்லூரியிலேயே உதவிப் பேராசிரியராகத் தமிழ்த்துறையில் இணைந்தார்.

பின்னர்ப் பகுதிநேர முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்து மறைந்த பேராசிரியர் உ.இராசு அவர்களின் வழிகாட்டலில் “புதிய கோடாங்கி சிற்றிதழில் அம்பேத்கரியத் தாக்கம் என்னும் ஆய்வை நிறைவு செய்து. 2014ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

நட்டார் வழக்காற்றியல், சித்தமருத்துவம், இதழியல், சங்க இலக்கியம், ஒப்பிலக்கியம், இலக்கணம் போன்ற தமிழின் பல்துறைகளிலும் சிறந்து விளங்கிப் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். வளனார் தமிழ்த்துறை வெளியிடும் ஆண்டு ஆய்விதழான வளன் ஆயத்திலும், ஆண்டு தோறும் நிகழ்த்தும் தேசியக் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு தரமான ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழுலகத்திற்கு வழங்கிவரும் ஆற்றல்மிகு இளைஞர்களில் முன்னோடியாக விளங்கி வருகிறார்.

மலேசியாவில் விருது

2014ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இயங்கிவரும் சி.பா.ஆதித்தனார் இதழியல் ஆய்வுக் கழகமும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்திய “பன்னாட்டு இதழியல் கலந்துகொண்டு கட்டுரை வழங்கினார். இதழியல் தொடர்பான அரிய செய்திகளைத் தாங்கிய கட்டுரை என்று கருத்தரங்க அமைப்பாளர்களால் பாராட்டப் பெற்று, அதன் தொடர்ச்சியாக, மலேசியக் கல்வி அமைச்சர் “சி.பா.ஆதித்தனார் இதழியல் விருது வழங்கிச் சிறப்பித்தார்.

 “இளைஞர் ஒருவர் கடல் கடந்து மலேசிய மண்ணுக்கு வந்து, கருத்தரங்கில் கலந்து கொண்டு, அரிய செய்திகளைத் தாங்கிய கட்டுரை வழங்கி, தமிழ்நாட்டிற்கும் மலேசிய வாழ் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த ஒரே இளைஞரான முனைவர் நல்லமுத்துவை நான் மனதாரப் பாராட்டுகிறேன். மலேசிய இளைஞர்கள் முனைவர் நல்லமுத்துவை “ரோல் மாடலாகக் கொண்டு, தமிழில் தரமான ஆய்வுக் கட்டுரைகளை வழங்க முன்வரவேண்டும் என்று மலேசிய நாட்டின் கல்வி அமைச்சரால் விருது வழங்கி, நல்லமுத்துவைப் பாராட்டினார்.

பாராட்டுக்குப் பதில் அளித்துப் பேசிய நல்லமுத்து,“எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்து, தமிழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுத என்னைப் பயிற்றுவித்தது நான் படித்த, பணியாற்றுகின்ற தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரிதான். இந்தப் பாராட்டும், பெருமையும் எனக்குரியது அல்ல. என்னை நன்றாய்ப் படைத்த எம் வளனார் கல்லூரிக்கே இப் பெருமை உரியதாகும் என்று கூறினார்.

மலேசிய வாழ் தமிழர்களிடம் வளனார் கல்லூரி உருவாக்கிய பல முத்துகளில் இவர் நல்லமுத்தே என்பதை உறுதி செய்தார். மலேசிய மண்ணில் தன் கல்லூரியின் புகழை விண்தொடும் அளவிற்கு உயர்த்தி, அதன் நிழலில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கல்லூரி திரும்பியவுடன் மலேசிய நாட்டில் அளிக்கப்பட்ட விருதினைப் பார்த்தும், கருத்தரங்க ஒளிப்படங்களைப் பார்த்தும் அப்போதைய செயலர், முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோர் பொன்னாடைகள் போர்த்திச் சிறப்பு செய்தனர். பணிமுறை-யில் உள்ள ஆசிரியர்கள்தான் பன்னாட்டு கருத்தரங்கம் என்று அயல்நாடுகள் செல்வார்கள். பணிமுறையில் பன்னாட்டு கருத்தரங்கிற்காக அயல்நாடு சென்ற பெருமையும் புதிய வரலாறும் நல்லமுத்துவால் எழுதப்பட்டது என்பதில் வியப்பில்லை.

பெருந்திட்ட ஆய்வில் .

2014இல் முனைவர் பட்டம் பெற்றபின், நல்லமுத்து, ‘அப்பாடா.. ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டன.. முனைவர் பட்டம் பெற்றுவிட்டோம்..‘ எனச் சராசரி மனநிலையோடு இல்லாமல், ஆய்வுப் பணியில் நாம் பயணிக்கவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்பதை உணர்ந்து ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.

இந்திய அரசின் UGC (University Grants Commission) ஆய்வுத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை அறிந்து, ”சித்தர் பாடல்களில் உள்ள சித்தமருத்துவ மூலிகைகளின் இலக்கிய மேற்கோள்களின் அடிப்படையில் மருந்தியல் தரவுகளை அட்டவணைப்படுத்தும் திட்டத்தை வளனார் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய உதவிப்பேராசிரியர் கார்த்திகேயன் உதவியோடு நல்லமுத்து ஆய்வுத் திட்டத்தைத் தயார் செய்து, கல்லூரி முதல்வர் வழியாகத் தில்லியில் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் 8,00,000 நிதி கேட்டு முன்மொழிவை அனுப்பி வைத்தார்.  பழமையை ஆய்வு செய்வதற்கு எப்போதும் யுஜிசி நிதி உதவி அளிக்கும்.

இந்திய வரலாற்றில் தேசியத் தரநிர்ணயக் குழுவின் 4ஆவது சுற்றிலும் முதலிடம் பெற்ற பெருமைக்குரிய கல்லூரி வளனார் கல்லூரிக்கு மட்டுமே உண்டு. பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து ‘ஆற்றல்சார் கல்லூரி என்றும் மரபுசார் கல்லூரி என்ற பெருமையையும் அதற்குரிய நிதியாகப் பல கோடிகளையும் வளனார் கல்லூரி மட்டுமே பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்தக் கல்லூரியிலிருந்து பழமையான சித்தமருத்துவத்தையும் மூலிகை களையும் ஆய்வு செய்யும் முன்மொழிவு வந்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அது ஏற்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு நேர் காணலுக்கு அழைக்கப்பட்டார். பின்னர் Major Research Project (MRP) என்னும் பெருந்திட்ட ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்போர் பட்டியல் பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் நல்லமுத்துவின் பெயர் இருந்தது என்பதை விட அதில் வழங்கப்பட்ட நிதி 10,70,000/– என்றிருப்பதைக் கண்டு நல்லமுத்துவின் மனம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

காரணம் நல்லமுத்து முன்மொழிவில் கேட்ட நிதி 8 இலட்சம், கொடுக்கப்பட்ட நிதி 10 இலட்சத்திற்கு மேல் என்பதுதான். வளனார் கல்லூரி வரலாற்றில் பணிமுறை-யில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாரும் இதுபோன்று பெருந்திட்ட ஆய்வுகளுக்கு விண்ணப்பம் செய்யாத நிலையில், விண்ணப்பம் செய்து 10 இலட்சத்திற்கு மேல் பெற்றதை அன்றைய முதல்வர் அருட்திரு. அண்ட்ரூ வெகுவாகப் பாராட்டினார். நல்லமுத்துவைப் போன்று நீங்களும் முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித் தாருங்கள் என்று ஆசிரியர்கள் கூடியிருந்த கூட்டத்தில் வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு நல்லமுத்துவின் சாதனை கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

ஆய்வு அனுபவங்கள்

பெருந்திட்ட ஆய்வுத் தொடர்பான அனுபவங்களை முனைவர் ரெ. நல்லமுத்து என் திருச்சி மின்-இதழிடம் பகிர்ந்துகொண்டார். “பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி நல்கை வேண்டி நான் அனுப்பிய முன்மொழிவு ஏற்கப்பட்டு, அதற்கான நேர்காணல் தில்லியில் நடைபெறுகின்றது என்ற கடிதம் கிடைத்தவுடன் என் மனதில் மகிழ்ச்சியும், நேர்காணலை நம்மால் திறம்படச் செய்யமுடியுமா? என்ற அச்சம் என் மனதில் எழுந்தது.

பல்வேறு நிறுவனங்களிலும் பல்கலைக்கழக மானியக் குழுவிலும் குறுகிய கால ஆய்வுத்திட்டம் மற்றும் பெருந்திட்ட ஆய்வுகளுக்கு நிதி பெற்று ஆய்வுகளை நிறைவு செய்த எங்கள் துறைப் பேராசிரியர் ஐயா நெடுஞ்செழியன் அவர்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றேன். அப்போது சொல்லவேண்டிய செய்திகளைக் கணினி வழி பவர்பாயிண்ட பிரசண்டேசன் மூலம்தான் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கூறினார். உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.

அனுப்பிய முன்மொழிவை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்தேன். தில்லிப் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போதுதான் என்னோடு தில்லிக்குப் பணிமுறை-யில் பணியாற்றிக் கொண்டிருந்த (தற்போதைய தமிழ்த்துறைத் தலைவர் பொறுப்பிலிருக்கும்) அண்ணன் ஞா.

பெஸ்கியும் வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். விமானப் பயணத்திலும், தில்லியின் ஜனவரி மாத நடுங்கும் குளிரிலும் என்னுடைய நேர்காணல் தொடர்பான அச்சத்தைப் போக்கினார்.

நேர்காணலை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதைக் கூறி என்னை நெறிப்படுத்தினார். நேர்காணல் முடிந்து விமானத்தில் திருச்சி திரும்பும்போதும் எனக்கு அச்சம் தீரவில்லை. ஒருவாரம் கழித்துப் பல்கலைக்கழக மானியக் குழு இணையதளத்தில் பெருந்திட்ட ஆய்வுக்கு நான் தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ந்தேன். தொகை 10,70,000/-& என்பதைப் பார்த்தவுடன் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

ஆய்வில் மனநிறைவு

பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து நிதி கிடைத்தவுடன் 2016இல் பெருந்திட்ட ஆய்வைத் தொடங்கினேன். என்னுடைய திட்டத்தின் உதவியாளராகத் தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மனோகரன் இணைந்தார். என்னுடைய ஆசிரியர் பணிக்கு இடையூறுகள் இல்லாமல் ஆய்வுத் திட்டம் நிறைவேற என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு நல்கினார்.

அதோடு மட்டுமல்லாமல் திருச்சியைத் தாண்டிப் பிற மாவட்டங்களில் உள்ள மூலிகைத் தோட்டங்களுக்குச் சென்று, விவரங்களைச் சேகரித்துக் கணினியில் அட்டவணைப்படுத்துவார். நான் அந்தத் தரவுகள் சரியாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்வேன். ஆய்வுத் திட்டம் தொடர்பான வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெறும்போது பேராசிரியர் நெடுஞ்செழியன் எனக்குத் திட்டம் எப்படி நகரவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவார்.

இதுபோன்ற உதவிகளால் என் ஆய்வுத் திட்டத்தைக் குறித்த காலத்தில் முடிக்கமுடிந்தது. ஆய்வுத் திட்டத்திற்காக நான் வாங்கிய 1.50 இலட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்கள் ரூ.60,000/&- மதிப்புள்ள மேசை, நாற்காலி, பீரோ போன்றவற்றைத் தமிழ்த்துறையிடம் ஒப்படைத்தேன். பெருந்திட்ட ஆய்வு செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் என் துறைக்குச் சுமார் 2 இலட்சம் மதிப்புள்ள பொருள்களை ஒப்படைத்துத் துறைக்கு வளம் சேர்த்ததிலும் எனக்கு மகிழ்ச்சி.

எதிர்காலத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள், நாட்டுப்புற மக்களின் வாழ்வியல், பண்பாடுகள், மாறிவரும் பண்பாடுகள், நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அந்தப் பணிகளையும் நிறைவேற்றும் உடல் நலத்தையும் மன பலத்தையும் இயற்கை எனக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் என முடித்துக் கொண்டார்.

கல்விப் பணியோடு நிர்வாகப் பணிகளும்

முனைவர் நல்லமுத்து கல்லூரி ஆசிரியர் பணியோடு, 2006&-10ஆம் ஆண்டு வரை கிளைவ் விடுதியின் உதவி இயக்குநராக இருந்துள்ளார். 2010&-11ஆண்டுகளில் வளனார் தமிழ்ப் பேரவையின் தலைவராக விளங்கியுள்ளார். 2012-&16ஆம் ஆண்டுகளில் நாட்டு நலப்பணி திட்டத்தின் அலுவலராகவும் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2015ஆம் ஆண்டு இவர் காலத்தில்தான் நாட்டுநலப் பணித்திட்டத்தின் சிறந்த கல்லூரி என வளனார் கல்லூரிக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விருதைப் பெற்றுத் தந்தார். 2016ஆம் ஆண்டில் நல்லமுத்துவின் முயற்சியால் வளனார் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டத்தின் பெண்கள் பிரிவு தொடங்கப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது.

முனைவர் ரெ.நல்லமுத்து, சித்தமருத் துவ மூலிகைகளின் மருந்தியல் மேற் கோள்கள், ஓவியமாக வண்ணங்கள், இலக்கு மணப்பிள்ளையின் நாடகத் திறன் போன்ற நூல்களை எழுதியுள்ளார். 2020 மே மாதம் தேனித் தமிழ்ச்சங்கம், சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்திய இணைய வழி தமிழியல் உரைகள் என்னும் ஒரு மாதத் தொடர் நிகழ்வில், முனைவர் நல்லமுத்து “மரங்களும் அதன் மருத்துவக் குணங்களும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

500க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நல்லமுத்துவின் உரையைப் பாராட்டினார்கள்.

கண்களில் கனவுகள் வழிய…

முனைவர் ரெ.நல்லமுத்துவின் வாழ்க்கைத் துணைவியார் ரூபா அவர்கள் குணசீலத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் உள்ளார். இவருக்கு ஹோசிகா என்ற மகளும், அபிணன் என்ற மகனும் உள்ளனர். நெ.1 டோல்கேட் இலால்குடி சாலையில் தாளக்குடி கிராமத்தில் நாராயணன் கார்டன் என்னும் அடுக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.

எதிர்காலத்தில் நிகழ்த்தவேண்டிய ஆய்வுக் கனவுகளோடும் ஆய்வுத் திட்டங்களோடும் அதன் தொடர்பான சிந்தனைகளோடும் வாழ்ந்துவரும் நல்லமுத்து ஒரு வசந்தகாலத்திற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார். நிரந்தரப் பணி என்னும் அந்த வசந்தகாலம் அவரைச் சூழவும் அதனால் தமிழ் ஆய்வுலகம் செழித்தோங்கும் என்ற நம்பிக்கையோடு கண்களில் கனவுகளைத் தேக்கி வைத்துள்ள நல்லமுத்து என்னும் இளைஞனின் கனவுகள் நனவாக வாழ்த்துவோம்.

தமிழ்நாட்டின் கல்லூரிக் கல்வி வரலாற்றில் நிரந்தரப் பணி இல்லாத ஒரு ஆசிரிய இளைஞன் 10 இலட்ச ரூபாய் நிதி உதவி பெற்றது என்பது புதிய வரலாறு. திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் வரலாறு என்றால் மிகையில்லை.  “ஒரு நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன் என்று சுவாமி விவேகானந்தர் பல பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார். ஆற்றல்மிகு இளைஞர்களை உருவாக்குவோம். அவர்களின் மனத்தில் நம்பிக்கையை விதைப்போம் என்பதைத்தான் இந்த வரலாற்று பதிவு நமக்குச் சொல்கிறது என்றால் உண்மைதானே..!

Leave A Reply

Your email address will not be published.