மக்களின் மனம் கவர்ந்த மாமனிதர் இ.பி.மதுரம்

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0
full

தமிழ்நாட்டு அளவில் மட்டுமல்லாது இந்திய அளவில் சமூகத்திற்குக் குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் மருத்துவம் பார்த்த மருத்துவக் குடும்பம்தான் திருச்சி மதுரம் குடும்பம் என்ற பெருமையை உடையது. இக் குடும்பத்தின் மூத்தவரான மருத்துவர் எட்வர்டு பால் .மதுரம் (Dr. Edward Paul Mathuram) புகழ்பெற்ற மருத்துவர். இவருடைய கட்டுரைகள் மருத்துவ இதழ்களில் பல இடம்பெற்றுள்ளமையை இணையத்தில் காணலாம். இவர் திருச்சி நகராட்சியின் தலைவராக, இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார். திருச்சியின் ஆளுமைகளில் முதன்மையிடம் பெறக்கூடிய இ.பி.மதுரம் பற்றி “காதில் விழுந்த (திருச்சி) வரலாறு” பகுதிக்கு எழுதவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது. நடந்தாய் வழி திருச்சிராப்பள்ளி எனும் வரலாற்று ஆவணத்தில் சில குறிப்புகள் மட்டுமே கிடைத்தன. அவை வரலாற்றை எழுதபோதுமானவையாக அமைந்திருக்கவில்லை. மதுரம் குடும்பத்தாரை அணுகி செய்திகள் கேட்டபோது இ.பி.மதுரம் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. சில ஒளிப்படங்கள் கிடைத்தன. மேலும் மதிமுக மாநகர் பொருளாளர் புலவர் வே.தியாகராசன்(85) மதிமுக மாவட்ட அவைத்தலைவர் புலவர் க.முருகேசன்(84) ஆகியோரை அணுகிக் கேட்டபோதும் சில செய்திகள் மட்டுமே கிடைத்தன. பின்னர் இணையத்திற்குச் சென்று பல செய்திகளைப் படித்துவிட்டு, மருத்துவர் இ.பி.மதுரம் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இக் கட்டுரையாக்கம் செய்யப்பட்டுள்ளது. இ.பி.மதுரம் குறித்த தகவல்களை என்திருச்சி மின்இதழோடு(9443214142) பகிர்ந்துகொண்டால் எதிர்காலத்தில் முழுமையான வரலாற்றை எழுதி நிறைவு செய்யலாம்.

டாக்டர் அய்யாதுரை மதுரம்

திருச்சியை அடுத்துள்ள சென்னை புறவழிச்சாலையில் உள்ள இருங்களூரில் உள்ள கிறித்தவக் குடும்பத்தில் சாமுவேல் பிறந்து வளர்ந்து வந்தார். பின்னர் மருத்துவப் பட்டம் பெற்றார். டாக்டர் சாமுவேல் அவர்களுக்கு 1877ஆம் ஜூன் மாதம் 29ஆம் நாள் பிறந்த ஆண் குழந்தைக்கு அய்யாதுரை என்று பெயர் வைத்தார். இவரும் தந்தையைப் போலவே மருத்துவத் துறையில் படித்து பட்டம் பெற்றார். இவர் அமெரிக்க – இலண்டன் இரசாயன ஆராய்ச்சி சங்கத்தின் இந்தியப் பிரதிநிதியாக பொறுப்பேற்றுப் பணியாற்றினார். மருத்துவர் என்பவர் அதிலும் குறிப்பாக கிறித்தவ சமயம் சார்ந்தவர், ஏழை, எளிய நோயர்களிடம் அன்பாக நடந்துகொள்ளவேண்டும். அவர்களின் தேவையறிந்து உதவிகள் செய்யவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மருத்துவர் அய்யாதுரை தன் குடும்ப பெயராக மதுரம் என்ற வார்த்தையைத் தேர்வு செய்து வைத்துக் கொண்டார். மதுரம் என்பது சமஸ்கிருதச் சொல். மது என்றால் தேன் என்ற பொருள். மதுரம் என்றால் தெவிட்டாத, திகட்டாத தேன் சுவை என்று பொருள். தெவிட்டாத தேனின் சுவைபோல மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்யவேண்டும் என்பதுதான் இந்த சொல்லின் உட்பொருள். இந்த உட்பொருளுக்கு ஏற்ப அய்யாதுரை அவர்கள் டாக்டர் ஏ.மதுரம் என்று மாறினார். அவர் பெற்றெடுத்த 7 பிள்ளைகளில் 4 ஆண் பிள்ளைகள் 3 பெண் பிள்ளைகள். ஆண் பிள்ளைகள் நால்வரையும் மருத்துவர்களாக ஆக்கினார். திருச்சியில் குரு மெடிக்கல் ஹால் என்னும் மருத்துவமனையை 10,000 சதுர அடியில் 1920இல் உருவாக்கினார். மருத்துவமனையை நிறுவி மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்தார். ஆங்கில அரசாங்கம் இவரின் மருத்துவ தொண்டிற்காக மிக உயரிய பட்டமான “ராவ்பகதூர்” பட்டத்தை வழங்கி சிறப்பு செய்தது. டாக்டர் ஏ.மதுரம் ஏற்றிவைத்த அந்த மருத்துவ தொண்டு என்னும் அணையா விளக்கு இன்றும் அவரின் வழித்தோன்றல்களால் திருச்சியில் மருத்துவத் தொண்டு தடையின்றி செயல்பட்டு வருகின்றது.

poster

நீதிக்கட்சியில் ஏ.மதுரம்

டாக்டர் ஏ.மதுரம் அவர்கள் நீதிக்கட்சியில் இருந்தார். அதனால் பெரியாரோடும் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோருடன் இணைந்து அரசியல் களத்தில் பணியாற்றினார். திருச்சி மாவட்ட கழகத்தின் (ஜில்லா போர்டு – தற்போதைய மாவட்ட ஊராட்சி) உறுப்பினராக 6 ஆண்டுகளும் திருச்சி நகரசபை உறுப்பினராக 9 ஆண்டுகளும் இருந்து மக்கள் பணியாற்றினார். டாக்டர் ஏ.மதுரம் மக்கள் நோய் நீக்கினார். மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தினார். தனது தந்தையாரின் சித்தமருத்துவத்தைக் கற்றார். தஞ்சையில் இருந்த வேல்ஸ் இளவரசர் மருத்துவக் கல்லூரியில் ஆங்கில மருத்துவம் பயின்று இரண்டையும் கலந்து மக்களுக்கு நோய் நீக்கும் பணியைச் சிறப்பாக செய்தார். தமிழகத்தின் நீண்ட தொலைவில் உள்ள ஊர்களில் உள்ள நோயர்களுக்கு மருந்துகளை பார்சல் மூலம் அனுப்பும் முறையை தன் உருவாக்கிய குரு மெடிக்கல் ஹால் என்னும் மருத்துவமனையின் மூலம் அறிமுகப்படுத்தி, தொலைதூரத்திற்கும் மருத்துவத்தைக் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் டாக்டர் ஏ.மதுரம் எனில் புகழ்ச்சியில்லை. உண்மை.

டாக்டர் (எட்வர்டு பால்) இ.பி. மதுரம்

இருங்களூரில் வாழ்ந்து வந்த டாக்டர் அய்யாதுரை மதுரம் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக 1990களில் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் தூத்துக்குடியை அடுத்துள்ள நாசரேத் என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். 1904ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் நாள் பிறந்த முதல் ஆண் பிள்ளைக்கு எவர்ட்டு பால் என்று பெயரிட்டார். பிற்காலத்தில் இவர் இ.பி.மதுரம் என்று குடும்பப் பெயருடன் அழைக்கப்பட்டார். இவர் தன் பள்ளிப் படிப்பைத் திருச்சி தூய வளனார் கல்லூரியின் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். பின்னர் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து 1930இல் பட்டம் பெற்றார். டாக்டர் ஏ.மதுரம் அவர்களுக்கு தொடர்ந்து 3 ஆண் பிள்ளைகளும் 3 பெண்பிள்ளைகளும் பிறந்தன. ஆண் பிள்ளைகள் நால்வரையும் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவர்களாக ஆக்கினார். டாக்டர் இ.பி.மதுரத்தின் சகோதரர்கள் டாக்டர் நவ்ரோஜி மதுரம், டாக்டர் ஜார்ஜ் மதுரம், டாக்டர் பானர்ஜி மதுரம் ஆகியோர் ஆவர். ஜனவரி 20, 1932இல் ரூபி என்னும் மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருக்கு பிள்ளைகள் இல்லை என்றாலும் மருத்துவப் பணியில், தன்னிடம் வரும் நோயர்களைத் தன் பிள்ளைகளாகப் போற்றினார். நோய் நீக்கி அவர்களின் வாழ்வில் வளம் சேர்த்தார்.

டாக்டர் இ.பி மதுரம் மருத்துவப் பணி – அரசியல் நுழைவு

டாக்டர் ஏ.மதுரம் மறைவுக்குப் பின்னர் அவரின் மூத்த மகன் டாக்டர் இ.பி.மதுரம் குரு மெடிக்கலின் மேலாண்மை இயக்குநராக இருந்து பணியாற்றினார். மருத்துவப் பணியில் மனம் இருந்தாலும் அவ்வப்போது தந்தையின் அரசியல் மூலம் நிகழ்த்திய சமூகப் பணிகள் நெஞ்சில் நிழலாடியது. அரசியலில் ஈடுபட்டார். தந்தை பெரியாரின் ஆதரவு டாக்டர் இ.பி.மதுரத்திற்கு இருந்தது. இந்திய விடுதலைக்குப் பின் 1948ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டு வரை திருச்சி நகராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். திருச்சி நகர மக்களின் அன்றாடத் தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, தொலைத் தொடர்பு வசதி, பேருந்து வசதி, மக்கள் பொருள்களை வாங்க சந்தைகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்கள் மூலம் திருச்சி நகர மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். தந்தை பெரியார் இ.பி.மதுரத்தின் மக்கள் பணிகளைப் பாராட்டி பேசினார். இ.பி.மதுரத்தின் மக்கள் பணியும், மருத்துவப் பணியும் ஒரே நேர்கோட்டில் இணைந்து பயணம் செய்தன. மதுரம் அந்தக் காலத்தில் கோடிக்கணக்கான சொத்துகளில் புரண்டு வாழ்ந்தாலும், ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் மீதான அக்கறையைக் குறைத்துக் கொள்ளவில்லை. மாறாக அக்கறையை அதிகரித்துக் கொண்டிருந்தார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

1951-52ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு நடைபெற்றத் தேர்தலில் திருச்சி நகரசபைத் தலைவர் பொறுப்பிலிருந்த டாக்டர் இ.பி.மதுரம் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இவரைத் தந்தை பெரியார் ஆதரித்தார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுகவும் இவரை ஆதரித்தது. இ.பி.மதுரம் காங்கிரஸ் வேட்பாளர் என்.ஹாலாசியம் என்பவரை எதிர்த்து நின்றார். திமுக எதிரிக் கட்சியாக இருந்த காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தில் இருந்தது. இதனால் திமுகவும் இடதுசாரிகளும் இ.பி.மதுரத்தை ஆதரித்தார்கள். நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இ.பி.மதுரம் 94,154 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 18,000 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். முதல் நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலும் கட்சிச் சார்ந்தவர்கள் இருந்தனர். காங்கிரஸ் கட்சியில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் உறுப்பினர்களாக வந்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் கட்சி சாராத உறுப்பினராகவும், மருத்துவம் படித்த டாக்டர் என்ற பெருமையோடு இ.பி.மதுரம் திகழ்ந்தார். 1954-இல் பாராளுமன்ற சுகாதாரத்துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் செயலாற்றினார்.

பெருந்தலைவரோடு நட்பு

1954-இல் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டது. குலக்கல்வி என்னும் புதிய கல்வித் திட்டத்தை முதல்வர் பொறுப்பிலிருந்து இராஜாஜி அறிவித்தார். இந்தக் குலக்கல்வித் திட்டம் ஏழை,எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயல் என்று இராஜாஜிக்கு எதிராக தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தி, போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக இராஜாஜி பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பிற்கு வந்தார். தந்தை பெரியார் அவர்கள் பெருந்தலைவர் காமராசரைப் “பச்சைத் தமிழன்“ என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். தந்தை பெரியாருக்கும் பெருந்தலைவர் காமராசருக்கும் நெருக்கமான அன்பு உறவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நீதி கட்சியில் இருந்த 1956-இல் டாக்டர் ஏ.மதுரத்தின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சி குரு மெடிக்கல்ஹால் மைதானத்தில் அவருக்குச் சிலை நிறுவப்பட்டது. அதனைத் திறந்து வைப்பதற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து காமராசர் வருகை தந்து, சிலையைத் திறந்து வைத்தார். இவ்விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்

இவ் விழாவினைத் தொடர்ந்து இ.பி.மதுரத்திற்கும் காமராசருக்கும் அறிமுகம் கிடைத்தன. காமராசர் அழைத்தும் இ.பி.மதுரம் காங்கிரஸ் கட்சிக்குச் செல்லவில்லை. 1957இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இ.பி.மதுரம் திருச்சி -1ஆவது (தற்போது திருச்சி கிழக்கு) தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.துரைராஜ்பிள்ளையை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் திருச்சியின் மக்களவை உறுப்பினராக இருந்த இ.பி.மதுரம் திருச்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தார். சட்டமன்ற உறுப்பினராக இருந்து, திருச்சி நகர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்தார். தொடர்ந்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது தி.க., திமுக இடையே உரசல் மிகுதியாக இருந்த காலக்கட்டம். தி.க.வினர் இ.பி.மதுரத்தைக் கொண்டாடினார்கள். அவரும் திராவிடர் கழகத்திற்கு தன்னாலான நிதி உதவிகளைச் செய்தார். தந்தை பெரியாரின் பேரன்பிற்கும் பெருந்தலைவர் காமராசரின் அன்பிற்கும் பாத்திரமானார். இந்தக் காலக்கட்டத்தில் திருச்சி வரகனேரி பெரியார் நகரில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த ஓ.வேலு, முத்துக்கருப்பன், ச.தேவன் ஆகியோரின் முயற்சியில் ஒரு படிப்பகம் தொடங்கினார்கள். அந்தப் படிப்பகத்திற்கு “டாக்டர் இ.பி.மதுரம் படிப்பகம்” என்று பெயரிட்டனர். மேலும் திருச்சி திராவிடர் கழகத்தினர் இல்லங்களில் மதுரம் மருத்துவமனையின் சித்தமருத்துவ மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மஞ்சள் நிற “குரு பல்பொடி”யும், ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட “குரு தைலமும்” ஆத்திகர் வீட்டு விபூதியும், பிரசாதம்போல் இடம்பெற்றிருக்கும் என்றால் இ.பி.மதுரத்தின் புகழ் எப்படி ஓங்கியிருந்தது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்

ukr

1962-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், டாக்டர் இ.பி.மதுரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் திருச்சி-1ஆவது தொகுதியில் போட்டியிட்டார். மதுரத்தை எதிர்த்து திமுகவின் சார்பில் போட்டியிட்டவர் கட்சியின் நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்த உறையூர் எம்.எஸ்.மணி. திருச்சியின் கோடீஸ்வரர், ஏழைகளின் இனிய மருத்துவர், சமூக செயல்பாட்டாளர், முன்னாள் எம்.பி. முன்னாள் எம்.எல்.ஏ. இப்படி பல சிறப்புகளைக் கொண்ட மதுரத்தைப் பீடித் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்த எம்.எஸ்.மணி எதிர்த்துப் போட்டியிட்டார். பெரியாரிடம் பற்றுக் கொண்டிருந்த மதுரம் திமுகவின் எதிரிக்கட்சியாக இருந்த காங்கிரஸில் இணைந்தது அண்ணாவுக்குப் பிடிக்கவில்லை. மதுரத்தின் மீது அன்பு கலந்த கோபம் கொண்டிருந்தார் என்பதை மதிமுக திருச்சி மாவட்ட அவைத்தலைவர் புலவர் க.முருகேசன் பதிவு செய்கிறார்.

தேர்தலில் அண்ணாவின் வியூகம்

புலவர் முருகேசன் 1962 தேர்தல் குறித்து என்திருச்சி மின்இதழிடம் பேசியபோது,“அண்ணா மதுரத்தை வெற்றிக் கொள்ளவேண்டும். அதன் மூலம் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். அது சாத்தியமாகுமா? என்பது உறுதியாகாத நிலையில், அண்ணா 1962 தேர்தலில் எம்.எஸ்.மணியை ஆதரித்து திருச்சி தேவர்ஹாலில் சிறப்புக் கூட்டம் நடத்தினார். சிறப்புக் கூட்டம் என்றால் கட்டணம் செலுத்தித்தான் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியும். கட்டணம் ரூ.1, 3, 5 என்றிருந்தது. கூட்டத்தில் பேசிய ‘அண்ணா, மதுரத்தைத் தோற்கடிப்பது எளிதான காரியமில்லை. மிகவும் கடினமான செயல். அவர் கோடீஸ்வரர் மட்டுமல்ல… ஏழைகளின் மருத்துவர்…. எனவே மதுரத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டும் வாக்காளர்களிடம் சொல்லமுடியாத நிலையில், அவர் காங்கிரஸ் சேர்ந்துள்ளார்… காங்கிரஸ் கட்சியைத் தோற்கடியுங்கள் என்று வேண்டுகோள் வையுங்கள். தவறாமல் வாக்காளர்களை வீடுவீடாகச் சென்று சந்தித்து, வாக்குச் சேகரிக்கவேண்டும். சந்திப்பில் ஒரு வாக்காளர்கூட விடுபடக்கூடாது. இந்த முயற்சி கடினம் என்றாலும் நம் தம்பிகள் வெற்றிக்கான முயற்சியைக் கைவிடக்கூடாது… என்றார். மேலும் இந்தச் சிறப்புக்கூட்டத்தின் மூலம் கிடைத்த ரூ.5000/-ஐ தேர்தல் நிதியாக வைத்து செயல்படுங்கள் வேட்பாளர் எம்.எஸ்.மணியிடம் கொடுத்து. தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அதுபோலவே திமுக தொண்டர்கள் அண்ணாவின் வழிகாட்டுதல்படி சுழன்றடிக்கும் சுழல் காற்றாய் பணியாற்றினார்கள்.

சூறாவளியில் வீழ்ந்த ஆலமரமனார்

தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. திமுகவின் சுழன்றடித்த சுழல் காற்றில் மதுரம் என்னும் மக்களுக்குப் பயன்தந்து, தொண்டுகள் என்னும் விழுதுகள் விட்டு வளர்ந்திருந்த பெரும் ஆலமரம் வேரோடு வீசியெறியப்பட்டதுபோல் தோல்வியைச் சந்தித்தார். இ.பி.மதுரம் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக எம்.எஸ். மணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதை மக்களால் நம்பமுடியாது திகைத்து நின்றார்கள். காங்கிரஸ், திக தொண்டர்கள் அழுது தீர்த்தார்கள். தேர்தல் முடிந்த பின்னர் சென்னை சென்ற எம்.எஸ்.மணி அண்ணாவைச் சந்தித்து, அண்ணா வழங்கிய தேர்தல் நிதியான ரூ.5000/-ஐ திருப்பி வழங்கினார். அண்ணா ‘தேர்தல் செலவு செய்யாமல் எப்படி மதுரத்தை வெற்றிகொண்டீர்கள்’ என்று கேட்டபோது, எம்.எஸ்.மணி,“அண்ணா நீங்கள் காட்டிய அறிவுரையின்படி ஒவ்வொரு வாக்காளரையும் வீடுவீடாகச் சந்தித்தோம். வாக்காளர்கள் வீட்டில் காலை சிற்றுண்டி, நண்பகல் உணவு, மாலை நேர தேநீர், இரவு உணவு வழங்கினார்கள். இரவு என் இல்லத்திற்குத் திரும்பி வராமல் நம்முடைய வட்டச்செயலாளர்கள் வீட்டில் உறங்கிக் கொள்வேன். அடுத்தநாள் பிரச்சாரம் தொடங்குவேன். இப்படித்தான் மதுரத்தை வெற்றிகொண்டேன்’ என்றபோது அண்ணாவின் விழிகள் வியப்பில் ஆழ்ந்தன. கட்டிவா…. என்றால் வெட்டி வருகிற தம்பியாய் இருக்கிறாய் என்று எம்.எஸ்.மணியை அண்ணா வாழ்த்தினார்” என்று தேர்தலில் எம்.எஸ்.மணி வென்ற வரலாற்றையும், மக்களின் மனம் கவர்ந்த மருத்துவர் மதுரம் தோல்வியடைந்த வரலாற்றையும் நம்மிடம் எடுத்துரைத்து முடித்தபோது, இப்படியும் நடந்ததா? என்று நம் விழிகளில் வியப்பு தெரிய, ‘உண்மை….. நடந்துதான்… நம்புங்கள்’ என்று புலவர் க.முருகேசன் என்னும் அந்தத் திராவிட இயக்கச் சிந்தனையாளர் நம்மை சுயநினைவுக்குக் கொண்டு வந்தார்.

அரசியல் களத்தில் விலகினார்

1962- சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த மதுரம் மீண்டும் மக்களுக்கான மருத்துவப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். அரசியலிலிருந்து மெல்ல… மெல்ல…. தன்னை விலக்கிக் கொண்டார். குரு மருத்துவமனைப் பணிகள் புதிய உத்வேகம் கொண்டு செயல்பட்டன. காலம் சமூகசேவையை தன் உயிராகக் கொண்டு செயல்பட்ட டாக்டர் இ.பி.மதுரத்தை 17.01.1971ஆம் நாள் காலம் எடுத்துக்கொண்டது. ஆம்.. அவர் இயற்கை எய்தினார். தந்தையின் வழியில் குரு மெடிக்கல் ஹால் என்னும் ஆலமரத்தை சிறப்பாக வளர்த்தெடுத்தார். அந்தச் சிறப்புக்கு எந்தவொரு பங்கமும் பாதிப்பும் ஏற்படாவண்ணம் நான்காம் தலைமுறையைச் சார்ந்த இ.பி.மதுரத்தின் சகோதரர்களின் பெயரன்கள் இன்றும் குரு மருத்துவமனையை ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் மிக குறைந்தக் கட்டணம் பெற்றுக்கொண்டு நோய் தீர்த்து வருகிறார்கள் என்ற செய்தி மதுரம் குடும்பத்தின் பெருமையைப் பறைசாற்றியது.

டாக்டர் ஏ.மதுரம் சிலைத் திறப்பு விழாவில் காமராசர் (1956)

மதுரம் குடும்பத்தின் கொடையுள்ளம்

திருச்சியில் உள்ள குரு மருத்துவமனை சென்று அதன் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ஐவன் மதுரம் அவர்களை என்திருச்சி மின்இதழுக்காகச் சந்தித்தோம். அப்போது அவர்,“எங்கள் பாட்டனார், தாத்தா, தந்தை வழியில் நான்காம் தலைமுறையாக மருத்துவச்சேவை செய்துவருகிறோம். ரூ.2.50 இலட்சம் மதிப்புள்ள ஒரு அறுவை சிகிச்சைக்கு நாங்கள் ரூ.90,000/- மட்டுமே பெற்றுக்கொண்டு சிறந்த சிகிச்சையைக் கொடுத்தோம். அது மட்டுமல்ல மதுரம் அறக்கட்டளையின் சார்பில் இருங்களூரைச் சுற்றியுள்ள 22 கிராமங்களில் 2500 குடும்பங்களுக்கு உயர்தர அரிசி, பருப்பு, கோதுமை, மளிகைப் பொருள்களை வழங்கினோம். பல இலட்சம் செலவில், திருச்சி மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு கொரோனா பாதுகாப்பு கவசஉடைகள், கிருமிநாசினி போன்றவற்றை வழங்கினோம். இதை நாங்கள் பெருமையாகக் கருதவில்லை. எங்கள் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பாட்டனார் டாக்டர் ஏ.மதுரம் எங்கள் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு இலவசமாக இடம் கொடுத்தார். எங்களுக்குப் பக்கத்தில் உள்ள YMCA கட்டிடங்களை இலவசமாகக் கொடுத்தார். காந்தி சந்தையை அடுத்துள்ள கீழரண் சாலையில் உள்ள விறகுப்பேட்டைக்கு அருகில் உள்ள மதுரம் விளையாட்டு மைதானம் நகராட்சிக்கு எங்கள் முன்னோர் இலவசமாகக் கொடுத்தது. சாலைரோட்டில் உள்ள மெடிக்கல் அசோசியேஷன் எங்களின் பூர்வீக இடம். அதையும் இலவசமாகக் கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாது தாயனூர் சந்தைக்கான இடம், மணிகண்டம் அருகில் உள்ள முடிகண்டம் கிராமம், தாயனூர், அதவத்தூர் கிராமங்களில் மக்கள் குடியிருக்கவும், பயிரிடவும் பல ஏக்கர் நிலங்களை இலவசமாகக் கொடுத்துள்ளார். இந்த வரலாற்று நெடிய பாரம்பரியம் எங்களுக்கு உள்ளது. எங்கள் பெரிய தாத்தா காட்டிய வழியில் நாங்கள் தொடர்ந்து, தொய்வில்லாமல் ஏழை, எளிய மக்களுக்கான மருத்துவச் சேவையில் எங்களை ஆழ்த்திக் கொள்வோம்” என்று கூறினார்.

மதுரமான மதுரம் குடும்பத்தினர்

இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவக் குடும்பம் என்ற பெருமையுடைய மதுரம் குடும்பத்தினர் இன்றும் தங்களின் மூதாதையர் வழியில் தொடர்ந்து நடைபோடுவது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தன. ஆனால் 4ஆம் தலைமுறையினர் தங்களின் பாட்டனார் ஏ.மதுரம் போல், பெரிய தாத்தா இ.பி.மதுரம் போல் அரசியலில் அடியெடுத்து வைக்காமல் மக்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது நமக்கு மதுரம் மருத்துவமனையின் வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கையை விதைத்தது. நம் நம்பிக்கையை அடுத்த 5 தலைமுறையும் மதுரம் குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் வண்ணமே செயல்படும் என்ற உறுதி மனத்திற்குள் ஏற்பட்டது.

வகித்த பதவிகள்

 • மதுரம் குழும நிர்வாக இயக்குநர்
 • குரு மெடிக்கல்ஹால் நிர்வாக இயக்குநர்
 • தலைவர், இந்திய கிறிஸ்தவ சங்கம், திருச்சி
 • தலைவர், அகில இந்திய நாடார் ஐக்கிய சங்கம், திருச்சி
 • துணைத் தலைவர், ஒய்.எம்.சி.ஏ., திருச்சி
 • புரவலர், கிறிஸ்டியன் எண்டெவர் சொசைட்டி
 • செயற்குழு உறுப்பினர், விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சங்கம், திருச்சி
 • நிர்வாகக் குழு உறுப்பினர், ராஜாஜி டி.பி. சானட்டோரியம், திருச்சி
 • ஆயுட்கால உறுப்பினர், ரசிகா ரஞ்சனா சபை, திருச்சி
 • முதல் தலைவர், திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம்
 • ஆயுட்கால உறுப்பினர், இளம் ஆண்கள் கிறிஸ்தவ சங்கம், மெட்ராஸ்
 • மூன்று மிஷன் உயர்நிலைப் பள்ளிகளின் நிர்வாக குழு உறுப்பினர், திருச்சி
 • உறுப்பினர், மாவட்ட மருத்துவ சங்கம்
 • உறுப்பினர், மாவட்ட சுகாதார சங்கம்
 • உறுப்பினர், மாவட்ட தொழுநோய் நிவாரண சங்கம்
 • உறுப்பினர், மாவட்ட குருடர் நிவாரண சங்கம்
 • தலைவர், பாரதிய மாணவர் சாரணர் சங்கம்
 • தலைவர், திருச்சிராப்பள்ளி நகராட்சி மன்றம், 1948—52;
 • தலைவர், உள்ளூர் நூலக ஆணையம், 1950—53;
 • உறுப்பினர், நாடார் சங்கம்
 • உறுப்பினர், சேவா சங்க விளையாட்டு விளையாட்டுக் கழகம்

உறுப்பினர், தி யூனியன் கிளப், திருச்சி

 • உறுப்பினர், பாராளுமன்ற சுகாதார ஆலோசனைக் குழு, 1954.

-ஆசைத்தம்பி

half 1

Leave A Reply

Your email address will not be published.