இதழியலுக்கு ஒரு பன்னாட்டு நூலகம் – ‘நியூஸியம்’ அரிமா பொறிஞர் க.பட்டாபிராமன்

காதில் விழுந்த செய்தி

0
1 full

திருச்சியின் பரபரப்பான சாலைகளில் ஒன்றான புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட்டை அடுத்து அமைந்துள்ள பகுதிதான் சுப்பிரமணியபுரம். இதன் நுழைவாயிலில் மக்கள் திலகம் எம்.ஜி-ஆர். சிலையாக நின்று வரவேற்றுக் கொண்டிருப்பார். கிழக்கு நோக்கி நடந்தால் அதுதான் ஏரிக்கரைச் சாலை. (இப்போது அந்தப் பகுதியில் ஏரி இல்லை. இருந்தபோது வழங்கப்பட்ட சொல்) அச் சாலையில்தான் பன்னீர்செல்வம் தெரு உள்ளது. இந்தியன் வங்கிக்கு எதிராக உள்ள கட்டடத்தின் 2 ஆவது தளத்தில் “பன்னாட்டு தமிழ் இதழ்கள் நூலகம்” அமைந்துள்ளது. அரும்பொருள் இருக்கும் இடத்தை மியூசியம் (அருங்காட்சியகம்) என்று அழைப்பர். அதுபோல இதழியல் தொடர்பான அரிய இதழ்கள், நூல்கள் இருக்கும் இந்த நூலகத்தை ‘நியூஸியம்’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். இந்த நூலகத்தை உருவாக்கிய நிறுவியவர் அரிமா பொறிஞர் க. பட்டாபிராமன்.

பொறிஞர் பட்டாபிராமன்

பட்டாபிராமன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செருவாவிடுதி என்னும் சிற்றூரில் கதிர்காமம்-இராசம்மாள் இணையருக்கு 10.6.1944ஆம் ஆண்டு மூத்த மகனாகப் பிறந்தவர். துறவிக்காட்டில் பள்ளிப் படிப்பை முடித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முத்தையா பல்தொழில்நுட்பக் கல்லூரியிலும், திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியியலாளர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை தமிழிலும் பட்டம் பெற்றுள்ளார். சென்னை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் பணியாற்றி 2004ஆம் ஆண்டு இளநிலை பொறியாளராகப் பணிநிறைவு செய்துள்ளார். பொறியிலாளர் சங்கத்தில் 10 ஆண்டுகள் தொழிற்சங்கப் பணிகள், ஜூனியர் சேம்பர் சமுதாயப் பணிகள், மருத்துவ முகாம்கள், இளைஞர்களுக்கான சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகளை நடத்திச் சமூகப் பணிகளையும் ஆற்றி வருகின்றார்.

2 full

தற்போது திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பன்னீர்செல்வம் தெருவில் வாழ்ந்து வருகிறார். தான் குடியிருக்கும் மூன்றாம் தளத்தில்தான் இதழியலுக்கு என ஒரு நூலகத்தை உருவாக்கியுள்ளார். இந் நூலகத்தில் தமிழ் இதழ்கள் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வெளிவந்த இதழ்களும், இதழியல் நூல்களும் இடம் பெற்றுள்ளன. தனிமனித முயற்சியில் காரைக்குடி ரோஜா முத்தையா செட்டியாரை அடுத்து இத்தகைய வியத்தகு சாதனையைச் செய்திருப்பவர் அரிமா பொறிஞர் க. பட்டாபிராமன் என்றால் மிகையில்லை.

இதழ் சேகரிப்பில் ஆர்வம்

12 வயதில் பட்டாபிராமன், தன் சொந்த ஊரில் உறவினர் வைத்திருந்த கடையில் பொட்டலம் மடிக்கப் பயன்படுத்தப்படும் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களைப் படிக்கத் தொடங்கினார். படித்த இதழ்களை வீசி எறியாமல் அவற்றையெல்லாம் சேகரித்துப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு 1958இல் ஏற்பட்டு அவற்றைச் சேமிக்கத் தொடங்கினார். தற்போது பட்டாபிராமன் நிறுவியுள்ள இதழியல் நூலகத்தில் ஒரு இதழுக்கு ஒரு பிரதி என்ற கணக்கில் சுமார் 6500 தொகுப்புகளாக 60,000 இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளார். இந்தத் தொகுப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாது அயல்நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மெர்சியஷ், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, குவைத், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் நாளிதழ்கள், வார இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளார் என்பது விழிகளை வியப்பில் விரியவைக்கிறது.

முதல் இதழியல் கண்காட்சி நடத்தியவர் 1964இல் 650 இதழ்கள், 1974இல் 2000 இதழ்கள், 1976இல் 2500 இதழ்கள் முறையே சென்னை ஆந்திரா மாநிலத்தின் செகந்திராபாத் போன்ற இடங்களில் இதழியல் கண்காட்சி நடத்தியுள்ளார். 2011இல் அயல்நாடுகளில் 4000 இதழ்களைக் கொண்டு சென்று கண்காட்சிகளை நடத்தி உலகத் தமிழர்களை ஈர்த்துள்ளார். மலேசியாவில் கோலாலம்பூர், சுங்கைப்பட்டாணி, பினாங்கு, பட்டர்வொர்த், ஈப்போ, பகாங், தைப்பிங் நகரங்களில் தொடர்ச்சியாக இதழியல் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். தொடர்ந்து இலங்கையிலும் இதே ஆண்டில் இதழியல் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இவரின் நூலகத்தில் 65000 இதழ்கள் உள்ளன. 400க்கும் மேற்பட்ட தமிழில் வெளிவந்துள்ள இதழியல் நூல்கள் உள்ளன. பிற மலர்கள், அரியவகை நூல்கள் என 6000 எண்ணிக்கையில் உள்ளன. தமிழ் இதழ்கள், தமிழ் இதழியல் நூல்களைக் கொண்ட இந் நூலகம் இதழியல் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த நூலகம் செயல்பட்டு வருகின்றது.

நியூஸியத்தில் இதழ்களும் நூல்களும்

இந் நூலகத்தில் இதழியல் மட்டுமல்லாது கவிதை, இலக்கியம், சுற்றுச்சூழல், சான்றோர் வரலாறு, நகைச்சுவை, கணினி, பொதுஅறிவு, சுயமுன்னேற்றம், மாணவர் நூல்கள், கிறிஸ்தவம், சமணம், இஸ்லாமியம், ஆன்மீக எனப் பல நூல்கள் இடம் பெற்றுள்ளன. சுற்றுலா வழிகாட்டி நூல்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சார்ந்த தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள், உலகத்தமிழ் மாநாட்டு மலர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகள் வெளியிட்ட மலர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களின் தொகுப்பு மலர்கள், ஆங்கில நூல்கள் என 120 வகைப்பாடுகளில் நூல்கள் நூலகத்தை அலங்கரித்து வருகின்றன. இது மட்டுமன்று, வேளாண், உணவு, சிறுதொழில், போக்குவரத்து, ஆவணங்கள், நெசவு, தொழில்கள், வணிகம், நிதி, பங்கு வர்த்தகம், பொறியாளர் கட்டுமானம், பதிப்பு, தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, தொழிலகங்கள் வெளியிடும் ‘இல்ல இதழ்கள்’, தொண்டு நிறுவனங்கள், ஏற்றுமதி தொழில், வேலைவாய்ப்பு போன்ற பிரிவுகளில் தொடர்ந்து வரும் இதழ்கள், வங்கி அலுவலர் சங்கம், ஆசிரியர் சங்கங்களின் இதழ்கள், சன்மார்க்கம், சமூக மத நல்லிணக்கம் சார்ந்து வந்து கொண்டிருக்கும் இதழ்கள், அரசியல் கட்சிகளின் பல்வேறு இதழ்கள், அரசியல் விழிப்புணர்வு, புலனாய்வு இதழ்கள், கொள்கை விளக்க இதழ்கள், சிறுவர், மாணவர்களுக்கான இதழ்கள், மகளிர், மருத்துவ நூல்கள், நுண்கலைகள் குறித்த இதழ்களும் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

உடல் நலமும் நூலக நலமும்

இதழ் சேகரிப்பாளர், இதழ்களைக் காட்சிப்படுத்துபவர், நூலக இயக்குநர் என்னும் பன்முகத் தன்மை கொண்ட பட்டாபிராமன் 75 வயதை நிறைவு செய்து பவள விழாவை விரைவில் காண இருக்கிறார். அவரின் பவள விழாவையொட்டி விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விழா மலர் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விபத்து காரணமாகப் பட்டாபிராமன் அவர்களின் காலில் அறுவைசிகிச்சை நடந்துக் காலை மடக்க முடியாது காலை நீட்டிக் கொண்டு அமர்ந்தபடி உள்ளார். ஊன்றுகோல் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டு நூலகம் இருக்கும் 2ஆவது தளம் வந்து நமக்கு நூலகத்தைச் சுற்றிக் காட்டினார். அறை முழுவதும் நூல்கள் இதழ்கள் சிதறிக் கிடந்தன. நூல்கள் இதழ்களின் மீது புழுதி படர்ந்திருந்தது. விபத்து ஏற்பட்ட காலத்திலிருந்து நூலகத்தை முறையாகப் பராமரிக்க முடியவில்லை என்று வருத்தம் தோய்ந்த குரலில் என் திருச்சி மின்னிதழுக்காக நம்மோடு உரையாடினார்.

இளைய தலைமுறைக்காவே சேகரிப்பு

“எனக்கு 75 அகவை நிறைவடைகிறது. இதழ்களைச் சேகரிக்கத் தொடங்கி 60 ஆண்டுகள் முழுமையடைந்து விட்டது. அரசுப் பணியில் இருந்தமையால் எனக்கு ஓய்வூதியம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இன்னும் இதழ்களைச் சேகரித்து வருகிறேன். நூலகத்திற்கான செலவுகளையும் செய்து வருகிறேன். 160 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நெல்லை அத்தியாச்சாதீன நற்போதம், 110 ஆண்டுகள் பழமையான ஞானத்தூதன், பாரதியார் நடத்திய இந்தியா, திரு.வி.க.வின் தேசபக்தன், பெரியார் நடத்திய குடியரசு, பகுத்தறிவு மற்றும் லோகோபகாரி, ஆனந்தப் போதினி, 1926இல் வெளிவந்த கம்பராமாயணம் போன்ற பழமையான அரிய நூல்கள் என் சேகரிப்பில் உள்ளன. தினமணி நாளிதழின் 10 ஆண்டு காலத் தலையங்கம், கட்டுரைகளைத் தனியே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் இதழ்களில் வெளிவந்த முக்கியச் செய்திகளை வரலாற்று பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். மேலும் கடந்த 3 ஆண்டு காலம் தமிழில் வெளிவந்து மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ள இந்து தமிழ் நாளிதழின் முதல் இதழிலிருந்து இன்று வரை வெளிவந்த நாளிதழை ஆண்டு மற்றும் மாத வாரியாகப் பிரித்துப் பாதுகாத்து வருகிறேன். என்னுடைய சேகரிப்பு நாளைய தலைமுறைக்குப் பயன்படவேண்டும். இளைய தலைமுறை நாளிதழ் படிக்கும் பழக்கத்தை அறவே கைவிட்டுவிட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களுக்குத் தேவைப்படும் செய்திகளுக்காக இதழ்களைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்குப் பயன்படவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

சாதனைகள்

தொடர்ந்து,” கடந்த 40 ஆண்டுகளில் நான் சாதித்த சாதனைகளில் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். 1964இல் இந்திய நாட்டிலேயே அல்லது தமிழ்நாடு முதன்முதலாகப் பத்திரிகை காட்சியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தியவன் நான். அதனுடைய தொடர்ச்சியாகத் தமிழகத்தில் 12 நகரங்களிலும், மலேசிய நாட்டில் 12 நகரகங்களிலும் சிங்கப்பூர் இலங்கை முதலிய நாடுகளிலும் காட்சிகள் நடத்தியதோடு மாநாடுகளில் பங்குகொண்டு கட்டுரைகளும் படித்திருக்கிறேன் இரண்டாவது தமிழ் இதழியல் என்று முதன்முதலாக நான் மாணவனாக இருந்தபோது 1964 இல்லேயே தமிழ் ஏடுகள் வழிகாட்டி வெளியிட்டேன் அது இரண்டாவது சாதனை. அதுதான் முதன்முதலாக இதழியலில் படைக்கப்பட்ட முதல் நூல். ஒரு பத்திரிகைக்கு ஒரு பிரதியாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகுப்புகளைக் கொண்ட இதற்கென்று ஒரு நூலகம் பன்னாட்டு தமிழ் இதழ்கள் நூலகம் எனது இல்லத்தில் இரண்டாவது தளத்தில் அமைத்திருப்பது மூன்றாவது சாதனை” என்று சாதனைகளைப் பட்டியலிட்டார்.

நூலகத்தின் எதிர்காலம்

மேலும், “திருவள்ளுவர் கூறுவதுபோல் இன்றிருப்பார் நாளை இருப்பார் என்பதற்கு உறுதியில்லாத நிலையில், இந்த இதழியல் நூலகத்தை அடுத்த கட்டமாக என்ன செய்யலாம்? எப்படி இயக்கலாம் என்பதற்கு 6 பேர் கொண்ட குழுவை அமைக்க இருக்கிறேன். அதில் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், புலவர் தமிழாளன், அரிமா சங்கத்திலிருந்து 3 பேர் இவர்களுடன் என் மகனும் இருப்பார். இவர்கள் நூலகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். இதழியல் நூலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் அல்லது பயன்பட வேண்டும் என்ற உறுதி பட்டாபிராமன் அவர்களின் வார்த்தைகளின் வழி அறியமுடிந்தது.

நதிநல்கையில் நூலகம்

2010ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தமிழ் இதழ்களை அட்டவணைப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.2,50,000 நிதி நல்கை வழங்கியது. அந்த நிதியின் அடிப்படையில் சுமார் 4000 இதழ்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, இதழ் பெயர், ஆசிரியர் பெயர், வெளிவந்த ஆண்டு, வெளியிட்ட பதிப்பகம், அளவு, விலை குறித்த அனைத்துத் தரவுகளும் உள்ளீடு செய்து திட்டத்தை நிறைவேற்றிச் செம்மொழி நிறுவனத்திடம் வழங்கியுள்ளார். 2019ஆம் ஆண்டில் தமிழக அரசால் அங்கீகரித்துள்ள இந்த இதழியல் நூலகத்தைப் பாதுகாத்திட, பராமரித்திடப் பொது நூலகத் துறை சார்பாக ரூ.1,50,000 நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அரிமா பொறிஞர் பட்டாபிராமன் கைவண்ணத் தில் பின்வரும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1) 1964ஆம் ஆண்டு – தமிழ் ஏடுகள் வழிகாட்டி

2) 1975 ஆம் ஆண்டு – தமிழ்ப் பத்திரிகைகள்

3) 1977ஆம் ஆண்டு – தமிழ்ப் பத்திரிகைகள்

4) 2012ஆம் ஆண்டு – பன்னாட்டு முத்தமிழ் இதழ்கள்

5) 2012ஆம் ஆண்டு – பார்த்ததில், கேட்டதில், படித்ததில் கிடைத்தது

6) 2013ஆம் ஆண்டு – புலனாய்வு இதழ்கள்

இதழியல் கண்காட்சி நடத்தியமை மற்றும் இதழியல் சேகரிப்பு பணிக்காக இவருக்குப் பல்வேறு அமைப்புகள் 50க்கும் மேற்பட்ட பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளன. அவற்றுள் சில :

தமிழ் இதழ்க் காப்புக் காவலர், தமிழ் இதழியல் தேனீ, செந்தமிழ்த் தேனீ, இதழியல் சுடர், இதழியல் வித்தகர், படைப்பியல் பட்டயம், தமிழ்ப் பணிச் செம்மல், மாமனிதர் விருது போன்றவை மலேசியாவில் தமிழ் இதழியல் செம்மல், சீர்மிகு செந்தமிழ் செல்வர், இதழியல் கோ, தமிழ் இதழியல் தென்றல்.

இலங்கையில் செங்கதிர் இலக்கிய விருது: வைரமுத்து பாராட்டு

கவியரசு வைரமுத்து அவர்கள் க.பட்டாபிராமன் அவர்களின் கண்காட்சியைப் பார்த்துவிட்டு,“மிக நல்ல முயற்சி. பத்திரிகைகள் வெளியிடுவதைப் போலவே துன்பமானது சேகரிப்பதும்ஞ்ஞ் உலகத் தமிழ் ஏடுகளை ஒரு கூரையின் கீழ்க் கண்டு களிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார். துன்பம் மிக்க இதழியல் சேகரிப்பதும் அவற்றைப் பாதுகாப்பதும் என்பதில் 75 வயதைத் தொட்டும் 25 வயது இளைஞர் போன்று அரிமா பொறிஞர் பட்டாபிராமன் தொடர்ந்து தெய்வின்றி செயல்படுவது என்பது இந்த உலகில் ஒரு மாற்றம் ஒரு நாள் நிகழும் என்பதற்கு அத்தாட்சியாக அமைந்துள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.