மக்கள் தொண்டன் சாமிநாதன்

காதில் விழுந்த செய்தி

0
1 full

நெல், கரும்பு, வாழை, மஞ்சள் எனப் நன்செய் பயிர்கள் விளையும் மருதநிலம் சூழ்ந்த ஊர்தான் திருச்சி, பொன்மலையை அடுத்துள்ள கீழக் கல்கண்டார்கோட்டை. இந்த ஊரின் மேற்கு புறத்தில் உய்யக்கொண்டான் ஆறு பாய்ந்தோடுகிறது. ஆற்றின் மட்டத்திற்குக் கீழே கல்கண்டார்கோட்டை அமைந்திருப்பதால், இந்த ஊர் நீர் வளமும் நில வளமும் கொண்ட பசுமையான ஊர்.

இந்த ஊரின் ‘பெரிய பண்ணை’ என்று வைத்தியநாத அய்யர் குடும்பத்தை அழைப்பர். வைத்தியநாதர் அய்யரின் பண்ணையில் அந்த ஊரின் தேவேந்திரகுல வேளாளர் என்னும் பள்ளர்களும், குடியானவர்கள் என்னும் முத்துராஜா சமூகத்தினர் விவசாயக் கூலிகளாகப் பலர் இருந்தனர். சிலர் விளைநிலங்களைக் குத்தகை க்கு உழுது கொண்டிருந்தார்கள்.

பசி தீர்த்த குடும்பம்

2 full

இந்திய விடுதலைக்கு முன்பும் இந்திய விடுதலைக்குப் பின்பும் புயல், மழை, வெள்ளம், நோய் போன்ற பேரிடர்களால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுப் பசியோடு இருந்த காலங்களில் வைத்தியநாத அய்யர் நெல் வைத்திருக்கும் ‘பத்தாயத்தைத்’(நெல் சேமித்து வைத்திருக்கப் பயன்படும் மரத்திலானது) திறந்து விட்டு, அனைத்துச் சமுதாய மக்களையும் அழைத்து, தேவைப்படும் நெல்லை எடுத்துச் செல்லுங்கள் என்று பசி தீர்த்த பெருமை இந்தப் பெரிய பண்ணை குடும்பத்திற்கு உண்டு.

வைத்தியநாத அய்யர்-ராஜம்பாள் இணையருக்கு இளைய மகனாக 30.08.1932ஆம் ஆண்டு பிறந்தவர்தான் (ஒருங்கிணைந்த) திருச்சி மாவட்டத்தின் ‘மக்கள் தொண்டன்’ என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற வை.சாமிநாதன் பிறந்தார்.

இளமையில் தலைவர்

வை.சாமிநாதன் அந்தக் காலத்தில்  SSLC  என்னும் பள்ளி இறுதி வகுப்பு வரை திருச்சி சிந்தாமணியில் உள்ள ER பள்ளியில் படித்தவர். தொடர்ந்து மலைக்கோட்டை நந்திகோவில் தெருவில் அமைந்துள்ள ஒரு தட்டச்சு பயில, பயிலகம் சென்று வந்தார்.

அந்தப் பயிலகத்தின் உரிமையாளர் ஜெகநாதன் விடுதலைப் போராட்ட வரலாறு களையும் காங்கிரஸ் கட்சியின் விடுதலைப் பணிகளையும் எடுத்துரைத்தார். இதனால் சாமிநாதன் காங்கிரஸ் கட்சியின் மீது இயல்பாக அன்புகொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் தொண்டனாகத் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். பின்னர்த் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஹோமியோபதி என்னும் மருத்துவப் படிப்பை 1952ஆம் ஆண்டு வாக்கில் படித்துக் கொண்டார். இந்திய விடுதலையடைந்து தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல் முடிந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. கும்பகோணத்தில் படித்துக் கொண்டிருந்த சாமிநாதன் 21 வயது நிரம்பிய நிலையில் இருந்தார்.

வை.சாமிநாதனைக் கீழக் கல்கண்டார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தவர் கீழக் கல்கண்டார்கோட்டை வடக்கு தெருவைத் (தற்போது பெரியார் தெரு) சார்ந்த மா. திருமலை.  இவர் பொன்மலை இரயில்வே பணிமனையில் முதுநிலை எழுத்தராகப் பணியாற்றி வந்தார். மேலும், திருமலை சாமிநாதனுக்கு முன்பு கீழக் கல்கண்டார்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பு படித்தவர் என்பதால் இவரின் மீது வைத்திய நாத அய்யரின் குடும்பத்தினருக்குத் திருமலையின் மீது மரியாதை உண்டு.

இத்தனைக்கும் திருமலை பெரியாரியப் பற்றாளர். பார்ப்பனிய எதிர்ப்பாளர். பெரியாரை யும் அண்ணாவையும் தலைவராகக் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

திருமலை ஊராட்சி மன்றத் தலைவராகச் சாமிநாதன் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியமைக்குக் காரணம், ‘உள்ளாட்சி நிர்வாகம் ஊழல் இல்லாமல், நேர்மையாக நடைபெறவேண்டும் என்பதேயாகும்’ என்பதைத் திருமலையின் மகன் தி.அன்பழகன் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

தலைவர், பெருந்தலைவர்

வேட்பு மனு தாக்கல் செய்த வை.சாமிநாதனை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சாமிநாதன் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 20 ஆண்டு காலம் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பெருமை தமிழகத்தில், ஏன் இந்தியாவில் யாருக்கும் இல்லை என்று சொல்லலாம்.

கீழக் கல்கண்டார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த சாமிநாதன் 1961-66, 1968&71, 1986&-91, 1996-&98,  ஆகிய ஆண்டு களில் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் இருமுறை ஊராட்சி ஒன்றிய உறுப்பி னர்களாலும், அடுத்த இருமுறை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகள் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக அனைத்துக் கட்சியினரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார்.

இவர் போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்த வரலாறு இல்லை என்பது பெருமைக் குரிய செய்தியாகும்.

ஊழல் இல்லாத நிர்வாகம்

கீழக் கல்கண்டார்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திலும், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திலும் தன் தனித்தனித் திறமையை வெளிப்படுத்தி ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்கினார். இதனால் திருவெறும்பூர் பகுதி கிராம மக்களின் பேரன்பிற்குப் பாத்திரமானார்.

மக்கள் பணியே. மகேசன் பணி” என்று கிராமப் புற மக்களுக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்தார். திருவெறும்பூர் பகுதி மக்கள் கட்சிகளைக் கடந்து வை.சாமிநாதனை நேசித்தார்கள். மக்கள் தொண்டன் என்று புகழாரம் சூட்டி அழைத்து மகிழ்ந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும்.

பூணூல் அறுத்தெறிந்தார்

1961இல் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் வாக்களிக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்குத் திமுக சார்பில் பெரியசாமியும் காங்கிரஸ் சார்பில் நவல்பட்டு கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிட்டார்கள். இவரும் கள்ளர் சமூகம் சார்ந்தவர்கள்.

கள்ளர்கள் வாக்கு இல்லாமல் வெற்றி

இந்தப் பெருந்தலைவர் பதவிக்கான போட்டியில் வை.சாமிநாதனும் களம் இறங்கினார். இரு கள்ளர்களும் தங்களின் சமுதாய வாக்கைப் பிரிந்துக்கொள்ள, கள்ளர் சமூகம் அல்லாத உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று வை.சாமிநாதன் முதன்முதலில் ஒன்றியப் பெருந்தலைவர் ஆனார்.

ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலில் வன்முறைகள் வெடிக்கும் என்ற நோக்கில் திருமலை அவர்கள் சிலம்பம் சுற்றும் விளையாட்டில் அனுபவம் பெற்ற தன் தம்பி அருணாசலத்தையும், அவரின் நண்பர்களையும் சாமிநாதனின் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.

வெற்றி பெற்று ஊருக்குத் திரும்பி வரும்போது, சாமிநாதனின் வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு, கீழக் கல்கண்டார்கோட்டை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாலை தேநீர் விருந்து பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த ஏற்பாடுகளைத் திருமலையும் அவரின் தம்பி அருணாசலமும் கவனித்துக் கொண்டார்கள். தேநீர் விருந்துக்குச் சாமிநாதனை அழைத்துவரத் திருமலை இல்லம் சென்றார். சாமிநாதன் வெற்றியின் மகிழ்ச்சியைத் திருமலையோடு கைகுலுக்கிப் பகிர்ந்துகொள்கிறார்.

மக்கள் தொண்டாற்ற பூணுலை அறுத்தவர்

சாமிநாதன் வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளிச் சாலை ஓரத்தில் தெற்கு புறத்தில் ஒரு கிணறு இருக்கும். தேநீர் விருந்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது, கிணற்றைத் தாண்டும்போது, ஏதோ ஒரு உணர்ச்சி வந்தவராகச் சாமிநாதன் சட்டையைக் கழற்றி, மார்பில் அணிந்திருந்த பூணூலைத் தன் கைகளால் அறுத்தெறிந்தார். அந்தப் பூணூலைக் கிணற்றில் போட்டுவிட்டு, மீண்டும் சட்டையை அணிந்துகொண்டு, “நான் இனிமேல் பிராமணன் இல்லை. நான் மனிதன்” என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டு, பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியும், திகைப்பும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

தொடர்ந்து தேநீர் விருந்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார். விழாவில் சாமிநாதனை ஒரு புரட்சியாளராகத் திருமலை உருவகப்படுத்தி உரையாற்றினார். சாமிநாதன் பூணூலை அறுத்தெறிந்த செய்தி காட்டுத்தீயாகத் திருச்சி முழுவதும் பரவியது.

காமராஜரே அழைத்தார்

பின்னர்ப் பெருந்தலைவர் காமராசர் சாமிநாதன் அவர்களைப் பற்றிய செய்திகளை அறிந்துகொண்டு, காங்கிரஸ் கட்சியில் சேரக் கேட்டுக்கொண்டார். அதன்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சட்டமன்ற உறுப்பினர்

வை.சாமிநாதனின் அரசியல் பணிகள், மக்களுக்கு ஆற்றிவந்த தொண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருந்தலைவர் காமராசரை வெகுவாகக் கவர்ந்தது. காமராசரின் பெரும் முயற்சியால் 1965-இல் திருவெறும்பூரில் ஙிபிணிலி என்னும் பாரத மிகுமின் நிறுவனம் என்னும் பொதுத்துறை நிறுவனம் அமைக்கப்பட்டது.

இந் நிறுவனம் திருவெறும்பூரில் அமைய அடிப்படைக் காரணகர்த்தாக் களில் வை.சாமிநாதன் அவர்களும் ஒருவர். அதுபோலவே சூரியூர் பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை என்னும் படைக்கலத் தொழிற்சாலை அமையும் காரணமாக வை.சாமிநாதன் இருந்தார்.

இந்தப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் இந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்கள். 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வை.சாமிநாதன் அறிவிக்கப்பட்டார். திமுகவின் சார்பில் கு.காமாட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சாமிநாதன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெறத் தந்தை பெரியார் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 3 இடங்களில் ஆதரித்துப் பேசியுள்ளார். பெரியாரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தலைவர் காமராசர் அறிவுறுத்தலின்படி கலந்து கொண்டார்.

பிராமணிய எதிர்ப்பு கொண்ட தந்தை பெரியார் தன்னுடைய பிரச்சாரத்தில், “பச்சைத் தமிழன் காமராசர் ஆட்சி தமிழ்நாட்டில் வரவேண்டும் என்பதுதான் நோக்கம். காமராசர் என்னும் தமிழன் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே பார்ப்பனச் சமுதாயம் சார்ந்த சாமிநாதனை நான் ஆதரிக்கிறேன். இதனால் நான் பார்ப்பனருக்கும், பார்ப்பனியத்திற்கும் ஆதரவு என்று பொருள் கொள்ளக்கூடாது” என்று கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் சாமிநாதன் 5000 வாக்குகள் அதிகம் பெற்றுச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், கீழக் கல்கண்டார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர், திருவெறும்பூர் ஒன்றியப் பெருந்தலைவர், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் என்னும் மூன்று பொறுப்புகளில் இருந்தார். இந்த அரிய வாய்ப்பும் யாருக்கும் வாய்க்கவில்லை என்றே சொல்லலாம். வை. சாமிநாதன் வெற்றி பெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தால் வை.சாமிநாதன் 1967இல் வேளாண் துறை அமைச்சராக விளங்கியிருப்பார். அந்த எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நிலவியது.

மக்கள் பணி

சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பொன் மலை சந்தையின் மேற்கு நுழைவாயிலின் அருகிலிருந்து ஒற்றைத் தொலைபேசி ஒயர் 3 கி.மீ. தொலைவில் இருந்த கீழக் கல்கண்டார்கோட்டை வை.சாமிநாதன் இல்லத்தைத் தொலைத்தொடர்பில் இணைத்தது. கீழக்கல் கண்டார்கோட்டை, ஆலத்தூர், கிழக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இவர் வீட்டில் மட்டுமே தொலைபேசி இணைப்பு இருந்தது.

இலவச போன் வசதி

இதனால் பொதுமக்கள் நோய்வாய்ப்படுதல், பெண்களின் பிள்ளைபேறு போன்ற அவசரத் தேவைக்கு விஸிநி காரை அழைப்பதற்கு இவரின் தொலைபேசி 24 மணி நேரமும் இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இலவச மருத்துவம்

மேலும் சாமிநாதன் ஹோமியோபதி மருத்துவம் படித்திருந்ததால், தன்னைப் பார்க்க வரும் பொதுமக்களுக்குக் காய்ச்சல், சளி, இருமல் இருப்பதைச் சாமிநாதன் அறிந்தால் உடனே ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படையில் சின்ன வெள்ளை உருண்டை மாத்திரைகளைக் கொடுத்து, சாப்பிடச் சொல்லி நோய் நீக்கும் பணியையும் செய்துள்ளார் என்பதைச் சாமிநாதனின் அண்ணன் மகன் இராதா நம்மிடம் கூறினார்.  1968ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் (கரூர், பெரம்பலூர், அரியலூர்) காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

1986ஆம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் திருச்சி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவ ராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இவரின் பரிந்துரையால், ஙிபிணிலி, ளிதிஜி, டால்மியா சிமெண்ட், கரூர் சிமெண்ட் நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற்றவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்தவர்கள்தான் அதிகம். சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொள்ளாமல் எல்லாரையும் சமமாகவே நடத்தினார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

மந்திரிப் பொறுப்பில் இருந்தபோதும் இல்லாத நிலையிலும் கக்கன் திருச்சி வரும்போது அரசு விடுதிகளில், தனியார் விடுதிகளில் தங்கமாட்டார்.  கேட்டால், திருச்சியில் என் சகோதரர் சாமிநாதன் வீட்டில் தங்கிக் கொள்வேன் என்ற கக்கனின் கூற்றின் மூலம் சாமிநாதன் அவர்களிடம் சமூக வேற்றுமை இல்லை என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

சூடு பறந்த தேர்தல்

1967இல் அமைந்த தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆயுட்காலம் 1971இல் முடிவடைய, சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குப் பழைய காங்கிரஸ் கட்சியின் சார்பில் (காங்கிரஸ் பிரிந்து இந்திரா காங்கிரஸ் என்றும் பழைய காங்கிரஸ் என்றும் பிரிந்தது. தமிழ்நாட்டில் காமராசர் தலைமையில் பழைய காங்கிரஸ் இயங்கியது) மீண்டும் வை.சாமிநாதன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

திமுகவின் சார்பில் 67இல் தோல்வியடைந்த கு.காமாட்சியே நிறுத்தப்பட்டிருந்தார். கலைஞர் தலைமையில் திமுக சூறாவளி பிரச்சாரம் நடைபெற்றது. திமுக இந்திரா காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருந்தது.  திமுகவின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாமல் புயலில் சிக்கிய தோணியாகப் பழைய காங்கிரஸ் கட்சி திணறிக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு பழைய காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டது திருவெறும்பூர் தொகுதியில் மட்டும்தான். காரணம் வை.சாமிநாதனின் மக்கள் பணியே இதற்கு அடிப்படை காரணம் எனலாம்.

தேர்தலுக்காக தெம்மாங்குப்பாட்டு

1971 தேர்தலில் சாமிநாதன் அவர்கள் மக்கள் பணியைப் பாராட்டிக் கீழக் கல்கண்டார் கோட்டை மயில் என்னும் சௌ.சண்முகம் எழுதாமல் எடுத்துக்கட்டிப் பாடிய தெம்மாங்குப் பாட்டு திருவெறும்பூர் தொகுதியில் அப்போது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டு,

என்னத்த செய்தாரு அய்யாரு

என்னத்த செய்தாரு.. என்பேரே.

எல்லாம் செஞ்சாரு அய்யாரு

எல்லாம் செஞ்சாரு.

பாலங்கள் பல காட்டுனாரு.

குடிக்க நல்ல பைப் போட்டாரு.

நடந்து போக நல்ல ரோடு போட்டாரு

இருட்டைவிரட்ட லைட்டு போட்டாரு.

புள்ளைங்க படிக்கப் பள்ளிக்கூடம் கட்டுனாரு..

அய்யாரு  “என்னத்த செய்தாரு அய்யாரு

என்னத்த செய்தாரு. என்பேரே..

எல்லாம் செஞ்சாரு அய்யாரு

எல்லாம் செஞ்சாரு.

ஓட்டுப் போடுங்க.

மக்களே.. அய்யாருக்கு

ஓட்டுப் போடுங்க.

தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுகவின் கு.காமாட்சி 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு முழுவதும் பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தாலும் சாமிநாதன் தோல்வி பழைய காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. சாமிநாதன் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்ற காங்கிரஸ் நம்பிக்கை பொய்த்துப்போனது.

சட்டமன்றத் தோல்வி

1971இன் தேர்தல் முடிவு எல்லாரையும் பாதித்தது போலவே வேட்பாளர் சாமிநாதனையும் வெகுவாகப் பாதித்தது. தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களிடம் சாமிநாதன் தன் மனஉணர்வுகளை அப்போது வெளிப்படுத்தினார்.

இந்த மக்களுக்கு எல்லா உதவிகளையும் நன்மைகளையும் செய்தேன். என்னைத் தோற்கடித்து விட்டார்கள் என்பதுகூட எனக்குப் பெரிய கவலை இல்லை. என் ஊரில் (கீழக் கல்கண்டார்கோட்டை) எனக்கு மிகவும் குறைந்த வாக்குகளும் திமுக காமாட்சிக்கு அதிக வாக்கும் கிடைத்துள்ளது என்பதுதான் எனக்குப் பெரும் கவலையாக இருக்கிறது. என்னால் பயன்பெற்ற உள்ளூர் மக்கள் என்னைப் புறக்கணித்தது வேதனையாக இருக்கிறது” என்று கலங்கிய நெஞ்சோடு பேசியது பலரையும் திகைக்கவைத்தது.

தோல்விக்கு காரணம் கலைஞரின் சூழ்ச்சியா?

சாமிநாதன் தோல்விக்கு அடிப்படையாக அமைந்தது, 1967 தேர்தலில் சாமிநாதன் 5000 வாக்குகள் அதிகம் பெற்ற மணிகண்டம் பகுதியைத் திருவெறும்பூர் சட்டமன்றப் பகுதியிலிருந்து எடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்குக் கலைஞர் மாற்றியது தான்.

உள்ளூரில் வாக்கு குறைந்த காரணத்தை, சாமிநாதனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த தி.அன்பழகன் என் திருச்சி மின்னிதழுக்காக நம்மிடையே உரையாடினார்.

அப்போது,”என் தந்தையார் திருமலைதான் சாமிநாதனை ஊராட்சிமன்றத் தலைவராக முன்மொழிந்து போட்டியின்றி 20 ஆண்டுகள் தேர்வு செய்யக் காரணமாக இருந்தவர்.

என் தந்தையார் அண்ணாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர். அதனால் மாநிலத்தில் திமுக ஆட்சி ஏற்படவேண்டும் என்ற அடிப்படையில் 67, 71 சட்டமன்றத் தேர்தலில் சாமிநாதனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். நானும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டேன். 71இல் நான் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தால் என்னிடம் இளைஞர்களைத் திரட்டும் நிதி ஆதாரம் என்னிடம் இருந்தது.

மேலும் திமுகவைச் சார்ந்த முத்துராஜா சமூகம் சார்ந்த கணேசன், பார்ப்பனச் சமூகம் சார்ந்த இராமன் ஆகியோரை இணைத்துக் கொண்டு சாமிநாதனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தேன்.

சாமிநாதன் குடியிருந்த கீழக் கல்கண்டார்கோட்டை வைத்தியநாதபுரம் தெருவில் ஒரு அடிக்கு ஒரு அடியில் இருபக்கமும் திமுக கொடியைப் பறக்கவிட்டோம். உதயசூரியன் சின்னம் அச்சிடப்பட்ட காகிதக் கொடிகளைத் தெரு முழுக்கக் கட்டியிருந்தோம்.

வைத்தியநாதபுரம் கடைசியில் சிவன் கோயில் எதிரில் உதயசூரியன் மன்றம் என்ற ஒன்றை அமைத்து, அங்கே முரசொலி, தினத்தந்தி, மாலைமுரசு நாளிதழ்கள் போடப்பட்டு, அனைத்து இளைஞர்களும் அம்மன்றத்தில் நாளிதழ்கள் படித்து விழிப்புணர்வு பெற்றனர்.

மேலும், வெளியூரிலிருந்து வந்த மக்களுக்கும் உள்ளூர் மக்களு க்கும் சாமிநாத அய்யருக்குப் பெரிய செல்வாக்கு இல்லை என்ற மனவுணர்வை ஏற்படுத்தினேன்.

மேலும் 1955லிருந்து நம்மூரில் நடக்கவேண்டிய கிராமத் தெய்வம் அழகுநாச்சியார் (அலவநாச்சி – வழக்குச்சொல்) பொதுதிருவிழா நடைபெறாமல் உள்ளது. இதற்குக் காரணம் சாமிநாதனின் அண்ணன் இராமுதான் இதற்குக் காரணம்.

அரிசனத் தெருவிற்கு அழகுநாச்சியார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படக்கூடாது என்றும் அப்படி எடுத்துச் செல்லப்பட்டால் என் பிணத்தின் மீதுதான் நடக்கும் என்று கூறித் தாழ்த்தப்பட்ட மக்களை அவமரியாதை செய்தார்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சாமிநாதன் அண்ணனின் இந்த அவம திக்கும் பேச்சை ஏன் கண்டிக்க வில்லை.  கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாமிநாதன் ஏன் ஊர்பொது திருவிழாவை நடத்த முன்வர வில்லை.

தேர்தல் தோல்விக்கு காரணமான ஊர்திருவிழா

கடந்த 15 ஆண்டுகாலம் திருவிழா நடைபெறாமல் உள்ளதற்குச் சாமிநாதனும் ஒரு காரணம். அண்ணன் பேச்சை மதித்து நம்மை மதிக்காத சாமிநாதனுக்கு ஏன் நாம் வாக்களிக்கவேண்டும் என்று பிரச்சாரத்தைக் கிராம மக்களிடம் முன்வைத்தேன்.

அந்தப் பிரச்சாரம் எடுபட்டதன் விளைவாகவே சாமிநாதன் எங்கள் ஊரில் திமுக காமாட்சியைவிட மிகவும் குறைவான வாக்குகள் வாங்கினார்.

பின்னர் 1986, 1996 ஒன்றியப் பெருந்தலைவர் நேரடித் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். எங்களின் நோக்கம் சட்டமன்றத்தில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தவிர, சாமிநாதனைத் தோற்கடிப்பது எங்கள் நோக்கம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்திக் கொள் கிறேன்” என்று நிறைவு செய்தார்.

அரசியல் வாழ்வு

1961ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய வை.சுவாமிநான், 70களில் காங்கிரஸ் பிளவுபட்டு, இண்டிகேட் (இந்திராகாந்தி தலைமை), சிண்டிகேட் (நிஜலிங்கப்பா தலைமை) எனப் பிரிந்தது.

காமராசர் இந்திராகாந்திக்கான எதிர்நிலைப் பாட்டை எடுத்துச் சிண்டிகேட்டில் இணைந்தார். பின்னர் அது தமிழ்நாட்டில் பழைய காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது. சாமிநாதன் அவர்கள் காமராசர் தலைமையை ஏற்றுப் பழைய காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார்.

1975ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் காமராசர் மறைந்தார். இதனையடுத்துப் பழைய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு ஜி.கே.மூப்பனார் வந்தார்.

 ஜி.கே.மூப்பனார் தலைமையில் இருந்த பழைய காங்கிரஸ் கலைக்கப்பட்டு, அனைவரும் இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள். அப்போது சாமிநாதனும் மூப்பனாரோடு இணைந்து இந்திரா காங்கிரஸ் கட்சி சென்றார்.

1996இல் இந்திரா காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் விலகித் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்குகிறார். தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியில் வை.சாமிநாதன் இணைந்து பணியாற்றினார். 28.2,1998ஆம் ஆண்டு திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியில் இருந்த நிலையில் இயற்கை எய்தினார்.

எளிமையான வாழ்வு

20 ஆண்டுகள் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவர், 20 ஆண்டுகள் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர், 18 ஆண்டுகள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர், தமிழகப் பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர், தமிழ்நாடு அரசு அமைத்த பஞ்சாயத்து நிதிக்கமிஷன் உறுப்பினர், பெல் தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர், பல்வேறு தொழிற்சங்கத்துக்கு ஆலோசகர், விவசாயச் சங்கப் பொறுப்பாளர் என்று தன் 45 ஆண்டு காலப் பொதுவாழ்வில் நேர்மையுடனும் தூய்மையுடனும் வாழ்ந்தவர்.

எந்தப் பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் நிறைவாழ்வு வந்தவர். திமுக தலைவர் கலைஞர் திருச்சி வரும்போதெல்லாம் சங்கம் ஓட்டல் சென்று காலையிலேயே கலைஞரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ”சாமிநாதன் வருகிறார் என்றால் என்னுடன் யார் இருந்தாலும் அவரை உடனே அனுப்பி வையுங்கள்” என்று கலைஞரே மாவட்டப் பொறுப்பாளர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார் என்றால் சாமிநாதன் எதிர்கட்சியினரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டு அரசியல் வாழ்வு வாழ்ந்தவர்.

1984 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு வேட்பாளராக வை.சாமிநாதன் பெயர் அறிவிக்கப்பட்டு விட்டது. சிவாஜி ரசிகர்கள் வேட்பாளர் தேர்வில் திருச்சியில் சிவாஜி ரசிகர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரச்சனையைக் கிளப்பினர்.

நடிகர் சிவாஜி ஆதரவில் அடைக்கலராஜ்

சிவாஜியும் அந்தப் பிரச்சனையை ஊதி விட்டுக் கொண்டிருந்தார். விளைவு, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வை.சாமிநாதனுக்குப் பதிலாகச் சிவாஜி ரசிகர் என்ற ஒரே தகுதியும் லூர்துசாமிபிள்ளை மகன் என்ற மற்றொரு தகுதியோடும் எல். அடைக்கலராஜ் அறிவிக்கப்பட்டார்.

அடைக்கலராஜ் தட்டிபறித்த எம்பி பதவி

அந்தத் தேர்தலில் அடைக்கலராஜ் வெற்றிப்பெற்றார். தொடர்ந்து 1989, 1991, 1996 ஆம் ஆண்டுகளிலும் என 4 முறை வெற்றி பெற்று அடைக்கலராஜ் சரித்த சாதனை படைத்தார் என்பது உண்மை என்றால், அது வை.சாமிநாதனிடமிருந்து தட்டி பறிக்கப்பட்டது என்பதும் வரலாற்று உண்மையாகும்.

குடும்ப வாழ்வு

சாமிநாதனின் குடும்ப வாழ்வும் எளிமை நிறைந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் குடவாசல் மேலபாலையூரைச் சார்ந்த ராஜாம்பாள் என்பாரைத் திருமணம் செய்துகொண்டார்.

தாயின் பெயரிலே வாழ்க்கைத்துணையான தாரமும் அமைந்தது அவரின் சிறப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. அவருக்குக் குருமூர்த்தி, நாராயணன் இரு மகன்கள் மட்டுமே. குருமூர்த்தி ஆட்டோமெபைல் இஞ்ஜினியரிங் முடித்துப் பணியில் உள்ளார். நாராயணன் வழக்குரைஞராக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வருகிறார். சாமிநாதன் மட்டுமல்ல தன் குடும்பத்தையும் எளிமையாக வாழ வழிகாட்டியவர் என்றுதான் சொல்லவேண்டும்.

சாமிநாதன் பயன்பாட்டு என்று தனியே கார் இருக்கும், பெருந்தலைவர் என்ற முறையில் கார் வரும், காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் ஜீப் வரும். எந்தெந்தப் பணிக்கு எந்தெந்தக் கார்களைப் பயன்படுத்தவேண்டுமோ அதை மட்டும் அந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்வார். தன் குடும்பத்தினர் பயன்பாட்டுக்கு அனுமதித்து இல்லை.

எளிய வாழ்வு வாழ்ந்தவர்

சாமிநாதன் அண்ணன் இராமு திருச்சி டவுனுக்குச் செல்லவேண்டும் என்றால் பேருந்தில்தான் செல்வார். அவர் மகன் நாராயணன் கல்லூரி காலம் தொடங்கி வழக்குரைஞர் படிப்பு வரை பேருந்தில் சென்றுதான் படித்து வந்தார். பொதுவாழ்வில் தான் மட்டும் எளிமையான வாழ்வு வாழாது தன் குடும்பத்தினரையும் இணைத்துக்கொண்டு வாழ்ந்த பெருமையும் புகழும் பெற்றவர்தான் வை.சாமிநாதன் என்னும் மக்கள் தொண்டன் என்றால் மகாகவியின் வார்த்தையில் “வெறும் புகழ்ச்சியில்லை உண்மை” என்று சொல்வதே பொருத்தமுடையதாக இருக்கும்.

நிகழ்காலத்தில் அரசியல்வாதிகள், அரசியல் வியாதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் மக்களுக்காக வாழ்ந்த ஒரு தொண்டனின் வாழ்வை அறிவோம். புதியதோர் உலகு செய்வோம் என்ற சூளுரையை மேற்கொள்வோம்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.