திருச்சிக்கு வருகை தந்த அயல்நாட்டு கிறித்தவ பாதிரிமார்கள்

காதில் விழுந்த செய்தி

0

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

திருச்சிக்கு வருகை தந்த அயல்நாட்டு கிறித்தவ பாதிரிமார்கள்

-ஆசைத்தம்பி

‌சந்தா 1

கிறித்தவம் தமிழ் மண்ணில் வேரூன்றக் காரணமாக அமைந்தவர் இயேசு கிறித்துவின் சீடர்களுள் ஒருவரான  புனித தோமா என்று பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அவர்கள் ஆதாரமாகக் காட்டுவன இவை: இன்றைய கேரள மாநிலத்தில் வந்திறங்கிய புனித தோமா, முதலாம் நூற்றாண்டில் கிபி 52-72 ஆண்டுகளில் கிறித்தவ சமயத்தை அறிவித்து, மயிலாப்பூரில் உயிர்நீத்தார் என்னும் வாய்மொழி மரபு கேரள கிறித்தவர்களிடையே ஆழமான நம்பிக்கையுள்ளது; கிபி முதல் நூற்றாண்டுகளிலிருந்தே புனித தோமா இந்தியாவுக்குக் கிறித்தவத்தைக் கொணர்ந்தார் எனக் கிறித்தவ எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சென்னை சாந்தோம் தேவாலயம் புனித தோமாவின் கல்லறை இருந்ததாகக் கருதப்படும் இடத்தின்மேல் கட்டப்பட்டது என்ற வரலாற்றுக் குறிப்பும் உள்ளது. கிபி 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கோ போலோ போன்ற கிறித்தவப் பயணியர் மயிலாப்பூரில் புனித தோமாவின் கல்லறையைச் சந்தித்த குறிப்புகளை விட்டுச்சென்றுள்ளனர்.

(புனித தோமையர் முதலாம் நூற்றாண்டில் கன்னியாகுமரி அரைப்பள்ளியில் அமைத்த தேவலாயம்)

கிபி 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர்த்துகீசியரின் ஆதரவின் கீழ் பல கிறித்தவ பரப்புரையாளர்கள் தமிழகம் வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார்கள். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சார்ந்தவர்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கோர் சிலர்:

புனித சவேரியார் (1506–1552) என்றிக்கே என்றீக்கசு (1520–1600) இராபர்ட் தெ நோபிலி (1577–1656) எப்ரேம் தெ நேவேர் (1603–1695) புனித அருளானந்தர் (1647–1693) வீரமாமுனிவர் (1680–1746)

கிபி 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து புரோட்டஸ்தாந்த சபைகளைச் சார்ந்த கிறித்தவ மறைபரப்பாளர்கள் தமிழகம் வந்தனர். அவர்கள் ஹாலந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்து, தமிழகத்தில் கிறித்தவ மறையைப் பரப்பினர்.

அவர்களுள் குறிப்பிடத்தக்கோர் சிலர்:

பர்த்தலோமேயு சீகன்பால்க் (1682–1719) இராபர்ட் கால்டுவெல் (1814–1891) ஜி.யூ.போப் (1820–1908)

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த சில தமிழகக் கிறித்தவர்களின் பட்டியல்:

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணைபுரிந்த மேலைநாட்டுக் கிறித்தவர்கள் சிலர்:

14ஆம் நூற்றாண்டில் காம்பஸ் என்னும் திசைக்காட்டும் கருவி கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் இந்தியாவிற்குப் பல பாதிரிமார்கள் கிறித்தவ மதம் பரப்ப வந்தனர். இந்தியாவிற்கு வந்த பாதிரிமார்கள் தங்களுக்கு இடப்பட்ட பணியான கிறித்தவ மதத்தின் அருமை பெருமைகளை மக்களிடம் சொல்லி கிறித்துவ மதத்திற்கு இந்தியாவில் வந்த மக்களை மாற்றினார்கள். தமிழ்நாட்டிலும் இதுபோன்றே மக்களையும் கிறித்தவ மதத்திற்கு மாற்றினார்கள். இப்படி இந்தியா முழுமையும் உள்ள மக்களை மதம் மாற்றம் செய்ய அந்ததந்த மாநில மொழிகளைக் கற்றுக் கொண்டு, அம் மாநில மொழியில் உரையாடி மக்களிடம் கிறித்தவ மதத்திற்கு மாறவேண்டும் என்ற கருத்தை விதைத்தனர். ஆனால் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய வளம் கண்டு, மொழியின் கட்டமைப்பைக் கண்டு வியந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் பெரும் பாங்காற்றினார்கள். இது போன்ற ஒரு பங்களிப்பை இந்திய மொழிகளில் வேறுமொழிக்கும் அவர்கள் செய்ததில்லை என்பது யாரலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஒரு வரலாறு என்பது பன்முகப்பட்டது. வரலாறு என்பது பல செய்திகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றது. வரலாற்றைப் புரிந்துகொள்ள, அறிந்துகொள்ள பல்வேறு உண்மைத் தரவுகள் உதவும். திருச்சி என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டவர் அறிந்த ஊராக இருந்துள்ளது என்றும் இங்கே பலரும் தங்கி வாழ்ந்துள்ளனர் என்று தரவுகள் கிடைக்கின்றன. அந்த வகையில் கிறித்தவ மதம் பரப்ப வந்த பாதிரிமார்கள் பலர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் திருச்சிக்கு வந்துள்ளனர். திருச்சியில் தங்கி வாழ்ந்துள்ளனர். சிலர் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளனர். சிலர் இங்கே தங்களின் இன்னுயிரை ஈந்துள்ளனர் என்ற தரவுகள் என்பன திருச்சி வரலாற்றில் பொதிந்துள்ளன. இந்தத் தரவுகளின் வழியாகவும் திருச்சியின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வழி உள்ளது.

இராபர்ட் தெ நோபிலி தத்துவ போதகர்

இராபர்ட் தெ நோபிலி இத்தாலி நாட்டினர். இவர் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 157-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் பெரிய பிரபுக்கள் குடும்பத்துப் பிள்ளை; வழிவழி வந்த வீரர் மரபினர். நல்ல பரம்பரையைச் சார்ந்த இவருக்குத் தேவ சேவையில் ஆர்வம் ஏற்பட்டது அதிசயமல்ல. குருவாகித் திருச்சபையில் ஒரு பெரிய அதிகாரப் பதவியைப் பெறுவதற்கு இவருடைய பெற்றோர்கள் சிலவேளை தடை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் இவரோ சேசுசபை சார்தல் வேண்டும், துறவு பூண்டு குருவாகச் சேவை செய்யவேண்டும் என்ற ஆசையை தெரிவித்தார். அதற்கு இவருடைய பெற்றோர்கள் உடன்படவில்லை. இவர் ஊரைவிட்டு ஓடினார். நேப்பிள்ஸ் நகரை அடைந்தார். அங்கிருந்த ஓர் உறவினரின் துணையால் தாம் 15ஆம் வயதில் தம்மை அருந்துறவுக்கு அர்ப்பணித்தார்; சேசுசபையில் சேர்ந்தார்.

நேப்பிள்ஸ் நகரிலும் ரோம் நகரிலும் இலக்கணம், இலக்கியம், வாக்கலங்காரம், தத்துவசாத்திரம் வேதசாத்திரம் முதலிய கலைகளைப் பயின்றார். பயிற்சியின் இறுதியில் தம் 26-ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். இந்தியாவுக்கு வந்து தமிழ்நாட்டில் கிறிஸ்தவ சமய போதகஞ்செய்ய விருப்பம் தெரிவித்தார். தெய்வத் திருப்பணியில் நாட்டம் நிறைந்த இந்த இளங்குரு 1605-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி கோவா வந்து சேர்ந்தார். அடுத்த ஆண்டில் கொச்சியை அடைந்தார். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வதிந்த காலத்தில் தமிழ் மொழியைக் கசடறக் கற்றார். 1623-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி 15-ஆம் கிரகோரி பாப்பாண்டவர் நொபிலிக்கு ஆதரவுரை நல்கினார். தொடர்ந்து கிறித்த மதம் பரப்புவதற்காக நொபிலி திருச்சிராப்பள்ளி வந்தார். இவரின் வருகைக்குப் பின்புதான் திருச்சியில் கிறித்த மதத்திற்கு மக்கள் மாறத் தொடங்கினார்கள். தத்துவபோதகர் இயற்றியுள்ள நூல்கள் பல. அவற்றுள் அச்சானவை சில; அவர் பெயரால் வழங்கப்பெறுபவைகளும் அவருடைய என் உறுதியாகாதனவும் சில. அடிகளாரின் நூல்களைப் பயில்வோர் வேத சத்தியங்களின் நுணுக்கங்களை அறிவர். பாவத்தை விலக்கிப் புண்ணியத்தைக் கைகொள்ளும் உறுதி பெறுவர். பிற சமயித்தினருடன் வாதிடும் தன்மை கொண்டவர். இவருடைய நூல்களால் கிறிஸ்தவருக்குப் பெருத்த பயன் உண்டாகும். இவருடைய நூல்களை மொழி நலக்குறியாகப் பயில்பவர். இவர் காலத்துப் பேச்சுத் தமிழின் பிரதிபலிப்பைக் காணமுடியும். தம் 72ஆம் வயதில் தம் நண்பர் கெரிக், சீடர் கோல்காப் அண்மையிலிருக்க உயிர் நீத்தார்.

மனுவேல் மார்த்தீன்ஸ்

மனுவேல் மார்த்தீன்ஸ் 1595இல் போர்ச்சுக்கல் நாட்டில் பிறந்தவர். இளைஞர் எம்மானுவேல் மார்த்தீன்ஸ் சேசு சபையில் சேர்ந்தார். குருமாணவராக ஏவோரா நகரில் முறையாகப் பயின்றார். மூன்று ஆண்டுகள் இலக்கண நூல்களைக் கற்பித்தார். 1625ஆம் ஆண்டு தமிழகம் வந்து பின்னர் மதுரைக்கு வந்த மார்த்தீன்ஸ் அங்கே இரண்டு ஆண்டுகள் விக்கோ அடிகளுடன் தங்கித் தமிழ் கற்றார். பின்னர்த் தத்துவபோதகரின் விருப்பத்தின்படி மாரமங்காலத்தில் பணியாற்றினார். அங்கே அவர் காலைவேளைகளில் தத்துவபோதகரின் அந்தணர்களையும் கோவிலையும் கண்காணித்தார். கொன்சாலோ சுவாமிகளால் கட்டப்பெற்றிருந்த கோவிலையும் பரங்கிக் கிறிஸ்தவர்களையும் இரவு நேரங்களில் கண்காணித்து உதவினார். திருச்சிக்கு மாற்றப் பெற்றபோதும் இம்முறையிலேயே அவர் தொடர்ந்து பணியாற்றினார்.

அடிகளார் இயற்றியருளிய நூல்கள் வேத விசுவாசத்தைக் காக்கவும் பக்தியை மூட்டவும் ஏதுவான சாதாரண நடையில் அமைந்தவை. அவரது முதல் நூலாகிய ஞானப் பூச்செண்டு அதன் பெயருக்கிசைந்தபடி அக்காலத்தவர் தம் கைகண்ட நூல். பாடுகளின் மேல் தியானம் என்பது அவரியற்றிய மற்றொரு நூல். நற்கருணையைப் பற்றிய பிறிதொரு நூல் திருப்பாடுகளைப் பற்றிய நூலைக்காட்டிலும் சிறந்தது என்பர். புதுமைகளும் உதாரணங்களும் அடங்கிய ஒரு நூலையும் அவரியற்றியுள்ளார். ஞானமுத்துமாலை அவரால் ஆக்கம்பெற்ற மொழிபெயர்ப்பு நூல். பெல்லார்மின் அவர்களின் சிறுஞான உபதேசத்தையும் மாற்கு ஜெயோர்ஜியாரின் சாதாரணச் சிறு குறிப்பிடத்தையும் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளார். சாதாரணச் சிறு குறிப்பிடம் ஏற்கனவே கடலோரத் தமிழில் எழுதப் பெற்றிருந்தது. அதை அவர் எளிதான சுத்தமான தமிழ்நடையில் எழுதியுள்ளார். சேசுசபைத் தேசிகர் நொபிலியுடன் உழைத்த கிறித்தவச் சமயப் போதகரும் தமிழ் ஞான நூல் தியான நூல்கள் வழங்கியவருமான சேசுசபை மனுவேல் மார்த்தீன்ஸ் என்பவர் ஜெகனி வாசகர் என்ற இந்நாட்டுப் பெயராலும் விளங்குகின்றார். தமிழ்நாட்டையே தம் பணிக்களமாகக் கொண்டிருந்தனர். தாம் எந்த நாளில் எந்த ஊரிலிருந்து விரட்டப் பெற்றாரோ அந்த திருச்சிராப்பள்ளியில் 1656ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாள் இயற்கை எய்தினார்.

வீரமாமுனிவர்

சந்தா 2

கான்ஸ்டான்ஷியுஸ் ஜோசப் 1680-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் வெனிஸ் மாகாணத்தில் காஸ்டிகிளியோன் என்னும் ஊரில் பிறந்தார். பெஸ்கி என்பது இவரது குடும்பப் பெயர். தந்தையின் பெயர் கண்டல்போ பெஸ்கி. அன்னையின் பெயர் எலிசபெத். இளைஞர் பெஸ்கி 1698-ஆம் ஆண்டு தம் 18-ஆம் வயதில் தேவ அழைத்தலுக்குச் செவி சாய்த்தார்; இயேசு சபையில் சேர்ந்தார். தத்துவசாத்திரம் பயின்றார். இத்தாலி, இலத்தீன், பிரென்ச், கிரீக் மொழிகளில் நல்ல புலமை எய்தினார். படித்த நூலைப் பயன்பெற விரித்துரைக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார். 1706-ஆம் ஆண்டு வேதசாத்திரம், கற்கத் தொடங்கினார். அதனை நான்கு ஆண்டுகள் பயின்றார்; குருப்பட்டம் பெற்றார். இளங்குரு பெஸ்கி இந்தியாவில் திருமறையைப் பரப்ப ஆர்வங்கொண்டார்; தம் அதிகாரிகளை வேண்டினார். அவர்கள் அவரை மதுரைக்கு அனுப்பத் தீர்மானித்தனர். 1710-ஆம் ஆண்டு பெஸ்கி அடிகளார் லிஸ்பனுக்கு விரைந்து வந்தார். அங்கிருந்து இன்னும் சில குருக்களுடன் கோவா துறைமுகத்தை அடைந்தார். கோவா அக் காலத்திலேயே குறிப்பிடத்தக்க கத்தோலிக்க நகர் அங்கே சில நாட்கள் தங்கினார். அங்கிருந்து அம்பலக்காடு சேர்ந்தார். அம்பலக்காட்டில் சேசுசபைக் குருமடம் இருந்தது. தாம் செய்யவிருக்கும் திருமறைப் பணிக்கு ஆயத்தமாக முப்பது நாட்கள் தியானம் செய்தார். இதன்பின் தூத்துக்குடி நகரை அடுத்த கடற்கரைப் பகுதிகளில் சில மாதங்கள் வதிந்தனர். அக்காலத்தில் தூய தென்தமிழைக் கற்றார்; தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களையும் விருப்பங்கொண்டு அறிந்தார். 1710-ஆம் ஆண்டு மே மாதம் அடிகளார் தூத்துக்குடித் துறையை விடுத்து மதுரை வட்டாரத்திலுள்ள காமநாயக்கன்பட்டியை அடைந்தார். அவ்வூரைச் சார்ந்து திருமறைப் பணியை தீவிரமாக மேற்கொண்டார்.

வீரமாமுனிவர் 1740-ஆம் ஆண்டு அவர் திருச்சிராப்பள்ளி வந்தார். திருச்சியைத் தமது வேத போதக அலுவலின் நடுவிடமாக வைத்துக்கொண்டு சுற்றுப்புறங்களில் போதக சேவை செய்தனர். திருச்சியை அடுத்துள்ள ஆவூரில் ஒரு கோவிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த ஊரில் தங்கியபோதுதான் தேம்பாவணியை இயற்றியுள்ளார். ஆவூரில் தேம்பாவணி ஓலைச்சுவடிகள் கிடைத்த செய்தி பதிவாகியுள்ளது. பெஸ்கிஅடிகள் பாலப் பருவத்திலேயே இலத்தீன், பிரென்ச், கீரிக் முதலிய உயர்தனிச் செம்மொழிகளை முறையாகப் பயின்றார். தெலுங்கு, சமஸ்கிருதம், இந்துஸ்தானி மொழிகளிலும் தேர்ச்சி உண்டு. தமிழைச் சிறக்கக் கற்றார். பலமொழிப் புலமையை நம் தமிழ்மொழி வளத்திற்கே பயன்படுத்தி தமிழ் வளர்த்த முனிவரின் சேவைப் பெருமை அளவிடற்கரியது. இவர் இயற்றினவையும் தொகுத்தனவுமான மொழி நூல்கள் வருமாறு: கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி, தமிழ் – இலத்தீன் அகராதி, போர்த்துக்கீஸ் – தமிழ் – இலத்தீன் அகராதி, கிளாவிஸ், அடிகள் இயற்றிய வேத விளக்கம் பேதக மறுத்தல், லுத்தேர் இனத்து இயல்பு தர்க்கமுறை நூலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆறுமாறு போல, அவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையும் நகைச்சுவை நூலுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

சுவார்ட்ஸ் ஐயர்

கிறிஸ்தியான் பிரெடரிக் சுவார்ட்ஸ் ஜெர்மனி நாட்டின் பிரஷியாவில் உள்ள சொனன்பர்க் என்னும் ஊரில் 1726-ஆம் ஆண்டு பிறந்தார். சுவார்ட்ஸ் சிறுபிள்ளையாய் இருந்தபொழுதுதே அன்னை இறந்துபோனார். அவள் தன் மகன் தேவஊழியன் ஆக வேண்டுமென்கிற ஆர்வத்தைத் தன் கணவருக்கும் சில குருக்களுக்கும் வெளியிப்படுத்தியிருந்தார். சுவார்ட்ஸ் ஹல்லே பல்கலைக்கழகத்தில் பயிலுங் காலத்திலேயே தமிழ் தொடர்புடையவரானார். அக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து திரும்பிய சூல்ஸ் ஐயர் வேதாகமத் தமிழ் மொழிபெயர்ப்பினை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அச்சான படிகளை ஒப்புநோக்கி உதவி சுவார்ட்சை வேண்டினார். இதன் காரணமாகச் சுவார்ட்ஸ் தமிழைக் கற்றார். தமிழகத்தில் தம் போன்றோர் தேவைப்படுவர் என்று கேள்விப்பட்டார். தம்மை அத்திருப்பணிக்கு அர்ப்பணித்துக்கொண்டார். 1750-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். கடலூரில் வந்து இறங்கினார். தொடக்கத்தில் தரங்கம்பாடியில் பணியாற்றினார். அப்புறம் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாளையங்கோட்டை, சென்னை முதலிய இடங்களில் பணியாற்றினார். தரங்கம்பாடியில் தமிழையும்  போர்த்துக்கீசியத்தையும் பல ஆண்டுகள் பயின்றார். தம் இந்தியாவிலிருந்து வந்த நான்கு மாதங்களில் தமிழ்ப் சொற்பொழிவு நிகழ்த்தியது இவருடைய மொழி ஆர்வத்திற்கும் கடமையுணர்ச்சிக்கும் தக்க எடுத்துக்காட்டு. சுவார்ட்ஸ் ஐயர் கடுமையான உழைப்பாளி. அதிகாலையில் துயில் எழுந்து முதல் இரவில் நித்திரைக்குச் செல்லும் வரை இடையீடின்றி அலுவல் பார்த்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. திருச்சியின் காவிரிக்குத் தெற்கில் அமைந்த கிறிஸ்தவப் பள்ளிகள் அனைத்தும் அவருடைய பொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கூடங்களின் ஆய்வுக்குப் போகும் பொழுதெல்லாம் இறையுணர்வு சொற்பொழிவுகளிலும் கவனம் செலுத்தினார். ஐயரின் சொற்பொழிவு பெரும்பாலும் அகந்திறந்து பேசும் தன்மை கொண்டதாக இருந்தன. சில தலைப்புக் குறிப்புகளின் துணைகொண்டும் பேசுவதுண்டு. ஆயினும் அவருடைய சொற்பொழிவுகள் சில முழுமையும் எழுதப் பெற்றவை. அவற்றில் சில இன்றளவும் பாதுகாக்கப் பெற்றிருக்கின்றன.

ஜான் வெஸ்டிரி பள்ளி தோற்றம்

1763-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் சுவார்ட்ஸ் ஆங்கிலப் பள்ளியைத் தோற்றுவித்தார். அது போரில் இறந்தபோன வெள்ளைக்கார வீரர்கள் ஆதரவின்றி விட்டுச் சென்ற பிள்ளைகளுக்கென ஏற்பட்டது. இன்று திருச்சியிலுள்ள ஜான் வெஸ்டிரி பள்ளி சுவார்ட்ஸ் தொடங்கியது. ஆங்கில வழியில் பள்ளியில் கற்பித்தல் முறை இருந்தது. வெஸ்டிரி என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கோவில் உள்ள பாதிரிமார்கள் தங்களின் மேல்அணியும் அங்கியை உடுத்திக்கொள்ளவும் களைந்து கொள்ளவதற்குமாக அமைக்கப்பட்ட அறை என்று பொருள். சுவார்ட்ஸ் தன்னுடைய அங்கி மாற்றும் அறையைப் பள்ளி அறையாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து பல அறைகள் கொண்ட பள்ளியாக வளர்ச்சிப் பெற்றது. இன்றுள்ள பிஷப் ஈபர் பள்ளிகள் அவர் தொடங்கியது. இப் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தன. திருச்சியில் இருக்குங்கால் சுவார்ட்ஸ் பெர்சியன் இந்துஸ்தானி மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தஞ்சை மராட்டிய மன்னர்களுடன் பழகுவதற்கெனவே அவர் மராத்தி மொழியையும் பயின்றனர். 1798இல் தஞ்சையில் மரணம் அடைந்தார்.

எல்லீசர்

ல்லீசன் என்ற ஃபிரான்சிசு உவைட் எல்லிசு இங்கிலாந்து நாட்டில் 1777இல் பிறந்தார். 1796-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த நிர்வாகப் பொறுப்பேற்ற இவ்விளைஞர் தாம் அலுவல் பார்க்க வந்த நாட்டின் பழங்கலைப் பொருட்கள், வரலாறுகள், மொழிகள் இவற்றைப் பெருவிருப்புடன் பயின்றார். தமிழைத் தனிப் பேரார்வமுடன் கற்றார். அம்மொழி துறையில் பன்முகப் பணி செய்யவும் அணி செய்யவும் ஆசைப்பட்டு அதற்கான குறிப்புகளை எல்லாம் அட்டவணைப்படுத்தினார். 1810 – 1819 ஆம் ஆண்டு வரை எல்லீசர் சென்னை நிலவரி மன்றத்தின் செயலாளராக நியமனம் பெற்றிருந்தார். இம்மன்றத்தில் எட்டு ஆண்டுகளாக அலுவல் செய்தார். காணியாட்சி முறை பற்றி இவர் எழுதியுள்ள நூல் அத்துறையில் ஓர் ஆதார நூல். தொடர்ந்து இவர் பத்து ஆண்டுகள் சென்னை ஆட்சியர் பொறுப்பிலிருந்தார்.

அக்காலத்தில் ஆங்கில அதிகாரிகளுக்கு தென்னாட்டு மொழிகளில் முறையாகப் பயிற்சி அளிக்கக் கல்விச் சங்கம் என்ற ஒரு நிறுவனம் இருந்தது. அந்த அமைப்புக்கு மூலவராகவும் காவலராகவும் இருந்தவர் எல்லீசர். இதன் உறுப்பினரான பிற ஆங்கிலேயர் ரிச்சர்ட் கிளார்க், ஜெனரல் மல்க்கன், பெஞ்சமின்பாபிங்க்டன் என்பவர். கல்விச் சங்க மேலாளர் முத்துசாமிப் பிள்ளையவர்களைக் கொண்டு பல சுவடிகளைச் சேகரித்தார். திருச்சிக்கு வந்த எல்லீஸ் சேகரிக்கப் பெற்ற ஓலைச்சுவடிகளைப்  பார்வையிட்டார். அதில் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணிச் சுவடியும் இருந்தது. இது திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள ஆவூரில் கிடைத்தது என்ற செய்தியை அறிந்தார். வீரமாமுனிவர் வாழ்க்கையை விளக்கமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் முத்துசாமிபிள்ளையவர்களைக் கொண்டு எழுதுவித்தவரும் எல்லீசரே.

திருக்குறள் முதல் 13 அதிகாரங்களில் 69 பாக்களுக்கு எல்லீசர் ஆங்கிலத்தில் உரை விளக்கம் எழுதியுள்ளார். பாக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தருகிறார். அதை அடுத்துவரும் விளக்கவுரை பெரும்பாலும் பரிமேலழகர் உரையைப் பின்பற்றியது. அதைத் தொடர்ந்து விளக்கத்திற்கேற்ற மேற்கோள்கள் காட்டுகிறார். இவை சங்க இலக்கியங்கள் காவியங்கள் நீதி நூல்கள் பக்திப் பாசுரங்கள் என இத்திறத்தன. சிசரோஅரிஸ்டாடில் போன்றோரின் அரிய மொழிகளும் இதில் இடம் பெறுகின்றன. எல்லீசர் காட்டும் இலக்கணக் குறிப்புகள் அவர்தம் தொல்காப்பியப் பயிற்சியையும் நன்னூல் தொன்னூல் பயிற்சியையும் புலப்படுத்துவன. இந்நூலின் தமிழ் மேற்கோள் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு தனிச் சிறு நூலாகத் தொகுத்துக் கொள்ளற்குரியது. மொழிபெயர்ப்பு பெற்றுள்ள தேம்பாவணிப் பாடல்கள் மட்டும் ஏறத்தாழ ஐம்பது. இவர் 1819ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் இயற்கை எய்தினார்.

இராபர்ட் கால்டுவெல்

இராபர்ட் கால்டுவெல் அயர்லாந்தில் கிளாடி என்னும் ஆற்றங்கரையில் அமைந்த சிற்றூரில் 1814-ஆம் ஆண்டு பிறந்தார். ஸ்காட்லாண்டு தேசத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆங்கிலம் கிரேக்கம் ஆகிய மொழிகளும் ஓவியக் கலையும் இவர் மிகவும் விரும்பிப் பயின்றவை. இவரிடமிருந்த மொழிநூல் ஆர்வத்திற்கு வித்திட்டவர். இவருடைய கிரேக்கப் பேராசிரியர் தானியல் சான்போர்டு என்பாரே. தம் பழம் நினைவுகள் பற்றிய குறிப்புகளில் கால்டுவெல் இதனை மறவாது கூறுகின்றார். இந்தியாவை நோக்கிய பயணத்தின்போதும் இளைஞர் கால்டுவெல் காலத்தை வீணாக்கவில்லை. சென்னை அரசாங்கப் பணி சார்ந்த பிரௌன் என்பாரிடம் சமஸ்கிருதம் கற்றார். சென்னைத் துறைமுகம் வந்ததும் ஐரோப்பியத் திருத்தொண்டருள் தமிழ்ப் புலமை வாய்ந்த தரு என்பவரிடம் விருந்தினராய் அமர்ந்து தமிழ்ஞானம் பெற்றார். மேலும் இந்நாட்டில் திருத்தொண்டாற்றிய டாக்டர் வின்ஸ்லோ, ஜி.யு. போப், பவர், ஆண்டர்சன் ஆகியவர்கள் கூட்டுறவினால் இவருடைய தமிழறிவு தழைத்தது.

1838-1891ஆம் ஆண்டில் திருநெல்வேலிப் பகுதியில் சமயப்பணியும் தமிழ் மொழி வளர்ச்சிப் பணியும் ஆற்றினார்.

திருநெல்வேலி வட்டாரத்தில் திருத்தொண்டிற்காகப் பணிக்கப் பெற்ற கால்டுவெல்-கால்டுவெல் ஐயராக, கர்த்தரின் புகழ் பரப்பும் சேவையாளராக, திருமறைக்கு குருவாக புறப்படுகிறார். இவர் சேரவேண்டிய இடம் இடையன்குடி, அது சென்னையிலிருந்து 400 மைல் தொலைவிற்கு நடந்தே சென்றார். நாட்டு மக்களின் நடையுடை பாவனைகளையும் பேச்சின் பான்மையையும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதேயாகும். சிதம்பரம் மாயூரம் வழியாகத் தரங்கம்பாடி வந்தார். தரங்கையின் தேனியர் திருத்தொண்டின் சிறப்பு கண்டார். கும்பகோணம் வழியாகத் தஞ்சாவூர் வந்தார். தஞ்சையில் எழில்மிக்க கோவிலையும் கோட்டையையும் கண்டார். வேதநாயக சாஸ்திரியாருடன் அளவளாவினார். பின்னர் திருச்சிக்கு வந்தார்.

தமிழைப் பிற திராவிட மொழிகளுடனும் வேறு இனமொழிகளுடனும் ஒப்பிட்டு ஆராய்ந்த முதல் அறிஞர் கால்டுவெல் ஐயரே. தொல்காப்பியர் தொடங்கி நற்றமிழ் இலக்கணஞ் செய்தார் சிலர். ஒப்புக்கு இலக்கணம் செய்தாரும் உளர். ஆனார் ஒப்பிலக்கணம் செய்தார் இவரே. இவர் திராவிட மொழிகளுள் திருந்திய மொழி திருந்தா மொழி எனப் பகுத்தார். வகைக்கு ஆறுமொழிகள் காட்டினார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளுவம் குடகு என்னும் ஆறும் திருந்திய மொழிகள், தோடா, கோடா, கூ, ஒரியா, ராசம்மால், பிராகியி ஆகியவை திருந்தா மொழிகள், மலையாளம் தமிழ்மொழியின் மகள்; வடமொழிக் கலப்பால் தமிழ்த்தாயைப் பிரிந்த சேய், தெலுங்கும் கன்னடமும் அவ்வாறே ஆரியத் தொடர்பினால் தனித்து இயங்கும் ஆற்றல் இழந்தவை. தமிழ் ஒன்றே பிறமொழி கலவாமல் தனித்து இயங்கித் தழைக்கும் பெற்றியது. தமிழ்மொழியில் அமைந்த உயர்திணை அஃஅறிணைப் பகுப்பு செவ்விய பகுப்பு, சமஸ்கிருதத்திற்கும் திராவிடத்திற்கும் பொதுவான சொற்கள் ஆதியில் சமஸ்கிருதத்திற்கே உரிமையாய் இருந்தன என்று தீர்மானித்தல் பொருந்தாது. சொற்களின் முதனிலை நோக்கியே பிறப்பு முறை துணிதல் வேண்டும். தமிழ் சமஸ்கிருதத்தைப் போலவே செம்மையும் தொன்மையும் வாய்ந்தது. இந்நூலின் முன்னுரையில் தமிழ் இலக்கிய வரலாற்று சுருக்கம் உள்ளது. அது அக்காலத்தில் அருகிக்கிடைத்த இலக்கியச் சான்றுகள் சாசனச் சான்றுகள் கொண்டே எழுதப்பெற்றது என்பதனால் நிறைவுற்ற வரலாறு ஆகாது. மொழிநூல் துறையில் நவமான இந்நூல் ஐயர் அவர்களுக்குக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்து டாக்டர் பட்டத்தைப் பெற்றுத்தந்தது. 1891ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடியில் இயற்கை எய்தினார்.

திரிங்கால்

ழான்-பப்தீஸ்த் திரிங்கால் 1815ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் சோக் நகரில் பிறந்தார். கிறிஸ்துவின் அருளரசை நிலைநாட்ட எவ்வித இடுக்கண்ணையும் பொருட்படுத்தாது அயராது உழைத்த பெருந்தகை. உயர்ந்து வளர்ந்த பெரிய உருவம்; அகன்ற நெற்றி; கூரிய கண்கள்; நீண்ட மூக்கு; கட்டமைந்த உடல்; எதையும் தாங்கும் இதயம்; எடுத்ததை நிறைவேற்றும் திறமை கொண்டவர். சுவாமிகள் 1844ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். 1863ஆம் ஆண்டு வரை திருச்சி, தஞ்சை, மதுரை முதலிய இடங்களில் திருப்பணி புரிந்தார். 1863ஆம் ஆண்டிலிருந்து முப்பது ஆண்டுகளாகச் சுற்றித் திரியும் போதகராக விளங்கினார். சாத்தூர், சிரிவில்லிபுத்தூர், பெருங்குளம் வட்டாரங்களில் குதிரை வாகனராய்த் தம் குருத்துவத் தொழிலைத் தளராத ஊக்கத்துடன் நிறைவேற்றினார்.

திருச்சபைச் சரித்திரமும் சுவிசேஷச் சொல் ஒப்பீட்டு நூலும் சங். திரிங்கால் முயற்சியால் வெளிவந்தவை. சிறிய அளவில் அன்னார் தம் சுயசரிதையும் இருப்பதாகத் தெரிகின்றது. அறிஞர்களின் துணைகொண்டு இவர் மொழிபெயர்த்து வெளியிட்ட பரிசுத்தச்சுவிசேஷம் பல பதிப்புகளைக் கண்டது. முந்திய பதிப்பின் முகவுரையில் சுவாமிகள் கூறுகிறார். “வேத வாக்கியங்களில் அர்த்தம் வேறுபடாமல் விளங்கும்பொருட்டுச் சில சமயத்தில் தமிழ் வசன நடையைப் பற்றி இரண்டு அல்லது மூன்று வசனங்களை ஒன்றாய்ச் சேர்க்க அவகாசமாயிற்று. இவ் வேதாகமங்கள் யாவருக்கும் அதிக ஞானப்பிரயோசனம் ஆகும் பொருட்டு இவைகளைச் செந்தமிழ் இலக்கணமாய் எழுதாமல் எல்லோரும் மலையாது இலேசாய் வாசிக்கவும் கண்டுணரவும் தக்க சாதாரண நடையாய் எழுதித்தந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 1891ஆம் ஆண்டு மதுரையில் இயற்கை எய்தினார்.

அயல்நாடுகளிலிருந்து வந்த பாதிரிமார்கள் தமிழைக் கற்றுக் கொண்டார்கள். தமிழில் கிறித்தவ நூல்களையும், தமிழ் மக்கள் மற்றும் பண்பாடு சார்ந்த நூல்களை வெளியிட்டார்கள். இவர்களின் வருகையால் இந்தியாவில் கோவாவில் 1578இல் முதல் அச்சுக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. அங்கே அச்சிடப்பட்ட முதல் இந்தியப் புத்தகம் “தம்பிரான் வணக்கம்” என்பதாகும் 1713இல் தமிழ்நாட்டின் தரங்கம்பாடியிலும் அச்சுக்கூடம் எழுத்துக்களை உருவாக்கக்கூடிய வார்ப்புக் கூடங்களோடு(Foundry Shop) அமைக்கப்பட்டது. இங்கே 1713இல் பைபிளின் புதிய ஏற்பாடு இங்கே அச்சிடப்பட்டது என்ற வரலாறு உண்மைகளை அறிந்துக்கொள்ளமுடிகின்றது.

 

(இந்தக் கட்டுரையின் தரவுகள் திருச்சி தூய வளனார் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அருள்தந்தை ஜோசப் அவர்கள் [தற்போது தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி முதல்வர்] கொடுத்த தமிழ் வளர்த்த பாதிரிமார்கள் நூலிலிருந்தும், இணையத்திலிருந்தும் திரட்டப்பட்டவையாகும்)

———–

 

Leave A Reply

Your email address will not be published.