இந்தியாவின் 2வது சுதந்திரப்போராட்டத் திருச்சி தியாகிகள்

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0

நெருக்கடி நிலைஅவசரகாலப் பிரகடனம் (Indian Emergency – 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977)  இந்தியாவில் 21- மாதக் காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன்அலி அகமதுவால், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன்படி பிரகடனப்படுத்தப்பட்டது. இது இந்திராகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குவதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையில் தேர்தலைச் சந்திக்க விரும்பாததால் தேர்தலைத் தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளைப் பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தப்பட்டது.

இந்திரா காந்தியால் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ராஜ்நாராயணன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்திராகாந்தி மீது தேர்தல் நோக்கங்களுக்காக மாநில இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகத் தேர்தல் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். 12 ஜூன் 1975 , அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹாஇந்த வழக்கில் இந்திராகாந்தியைக் குற்றவாளியாக அறிவித்தார். மேலும் நீதிமன்றம் அத்தொகுதியில் அவரது வெற்றி செல்லாது எனவும் அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படவேண்டும் என அறிவித்தார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாதென தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்தப் போராட்டங்களை ஜெயபிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்துத் தலைமையேற்று நடத்தினார். இப் போராட்டங்கள் ராஜ்நாரயணன், சத்யேந்திர நாராயண் சின்ஹா ​​மற்றும் மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் மக்களுடன் இணைந்து தில்லி தெருக்களில் போராடினர் இதனை அடுத்துப் பாராளுமன்றக் கட்டிடம், பிரதமர் வீடு போன்றவை மூடப்பட்டன. மக்கள் போராட்டத்தைக் கண்டு அஞ்சிய இந்திராகாந்தி அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்த முக்கியக் காரணமாக இருந்தது. நெருக்கடிகால நிலையில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (மிசா) அவசரச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் தேவைக்கேற்ப இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் இந்தியக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலின்படி இந்த நெருக்கடி நிலை ஒவ்வொரு 6 மாதக் காலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு 1977 இல் தேர்தலைச் சந்திக்கும் வரை தொடர்ந்தது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 352 கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கெனக் கூடுதலான சிறப்பு அதிகாரங்களைப் பெற்றார். மற்றும் குடியுரிமைகளை முடக்கினார்; எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார். மேலும் தலைமையமைச்சர் மீது தனிநபர்கள் யாரும் வழக்கு தொடுக்கமுடியாது என்றும் அந்த அவசரச்சட்டம் முன்தேதியிட்டு அமல் செய்யப்பட்டதால் இந்திராகாந்தி சட்டத்தின்படி குற்றவாளியல்ல என்று அரசு அறிவித்தது. இதற்குப் பின்னர் இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்திராகாந்திக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். ஜனசங்கத்தின் சார்பில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களும் போராட்டங்களில் பங்குபெற்றனர். இந்திய அளவில் இந்திய வலது கம்யூனிஸ்ட் கட்சியும் மாநில அளவில் எம்.ஜி.ஆர். தலைமையில் இயங்கி வந்த அண்ணா திமுகவும் இந்தப் போராட்டங்களில் பங்குபெறவில்லை. நெருக்கடிகால நிலையில் எம்.ஜி.ஆர். அண்ணா திமுகவை அகில இந்திய அண்ணா திமுக என்று பெயர் மாற்றமும் செய்து கொண்டார்.

‌சந்தா 1

இந்திராகாந்தி தனக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கக் கிளர்ச்சியாளர்களையும் கிளர்ச்சியாளர்கள் என் கருதப்பட்டவர்களையும் எந்தக் காரணமும் இல்லாமலும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.  அப்படிக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் நிலைநிறுத்தவேண்டிய அவசியமில்லை என்ற மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் என்று சொல்லப்படுகின்ற பிணை கேட்டு நீதிமன்றத்தை நாடமுடியாது என்ற நிலை இருந்தது. மேலும் நாளிதழ்கள், வாரஇதழ்கள் அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்பட்டே செய்திகள் வெளியிடப்பட்டன என்பதிலிருந்து நெருக்கடிகாலத்தின் நிலை மக்களாட்சிக்கு எதிராக அமைந்திருந்தது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடிகால நிலை பிரகடனம் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட அறைகூவல் என்றும் கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் இயங்கி வந்த திமுக எதிர்த்தது. தமிழ்நாடு சட்ட மன்றத்தில் முதலமைச்சராய் இருந்த கலைஞர் நெருக்கடிகால நிலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார். கோவையில் 4 நாள் திமுக மாநாடு நெருக்கடிக் காலத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் நெருக்கடிகாலப் பிரகடனம் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் முதல்முறையாக ஒரு மாநில அரசு துணிச்சலாக நிறைவேற்றியது இந்திராகாந்திக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 1976 ஜனவரி 31ஆம் நாள் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த இரவே திமுக தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். மேலும், இந்திய இடது கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், ஜனசங்கம், ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்ந்த பலர் தமிழ்நாட்டில் சுமார் 4000 பேர் கைது செய்யப்பட்டார்கள். திமுகவினர் கைது செய்யப்பட்டதைக் கலைஞர் கண்டித்துத் தனியாக அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே போராட்டம் நடத்தினார். நெருக்கடிகால நிலையை எதிர்ப்பது என்பது இந்தியாவின் 2ஆவது சுதந்திரப் போராட்டம் என்றும் வருணித்தார்.

திருச்சி சிறையில் ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த திமுக, திராவிடர் கழகம், இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் என 110 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தற்போதைய திருச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியல் மட்டும் இங்கே வெளியிடப்படுகின்றது.

திமுக – 1.எம்.எஸ்.வெங்கடாசலம், 2.எஸ்.ஏ.ஜி.இராபி, 3. எஸ்.கே.வடிவேலு, 4. ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, 5. மலர்மன்னன், 6. ஆர். நாகசுந்தரம், 7. என். நல்லுசாமி, 8. என்.சுப்பிரமணியன் (தாராநல்லூர்) 9. என். சிவா, 10. அ.மு.சம்பந்தம், 11. பொன்மலை சாக்ரடீஸ், 12. ஆர்.கே. சின்னதுரை, 13. தொண்டன் கோபாலகிருஷ்ணன், 14. புலவர் செங்குட்டுவன், 15. உறையூர் செவந்தலிங்கம், 16. கரிகாலன் (வள்ளுவர் நகர்), 17. உறையூர் வெங்கடாஜலம், 18. குஞ்சிதபாதம், வீரபத்திரன், 19. ஆசிரியர் வெங்கடாஜலம் (ஆசிரியர் அமைப்பு), 20. பொன்மலை இருதயராஜ்  இடது கம்யூனிஸ்ட் கட்சி – 21. தீக்கதிர் ஆசிரியர் பரமேஸ்வரன், 22. அனந்தநம்பியார், 23. எஸ்.கே.நம்பியார், ஆர.எஸ்.எஸ். இயக்கம் சார்ந்த பட்டவர் சாலையைச் சார்ந்த வழக்குரைஞர் 24. கங்காதரன் திராவிடர் கழகம் 25. உறைந்த என். செல்வேந்திரன் ஆகியோர் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்தியா முழுவதும் கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். சிறையில் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. ஜார்ஜ் பெர்ணாடஸ் போன்றவர்கள் கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் சிறை அதிகாரி வித்யாசாகர் தலைமையில் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தி.க.தலைவர் கி.வீரமணி, ஆற்காடு வீராசாமி, முரசொலி மாறன், தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் தாக்கப்படுவதைத் தடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு அடித்தும் மிதித்தும் நொறுக்கப்பட்டார். இதனால் அவரின் சீறுநீகரம் பாதிக்கப்பட்டுச், சிறையிலிருந்து வெளியே வந்து இறந்துபோனார். சாத்தூர் பாலகிருஷ்ணன் சிறையில் இறந்தார். இப்படி நெருக்கடிகாலச் சிறை அனுபவங்கள் கொடுமையானது. திருச்சி மிசா கைதியாகச் சிறையில் இருந்த சாக்ரடீஸ் (தற்போது மதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்) அவர்கள் தன் அனுபவங்களை என் திருச்சி மின்இதழுக்காகப் பகிர்ந்து கொண்டார்.

‘’நான் 1972இல் திருச்சி பெரியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது மாணவர் திமுகவின் மாவட்டத் துணைச் செயலராக இருந்தேன். மாவட்டச் செயலராக இருந்தவர் வழக்கறிஞர் அரசங்குடி மு.சம்பந்தம். மாணவர் திமுகவின் சார்பில் நாங்கள் தனித்தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்றினோம். பின்னர் 1975இல் திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் (அப்போது நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி) ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தேன். திமுகவின் தீவிரத் தொண்டனாகவும் இருந்துவந்தேன். இதனால் நான் மிசா சட்டத்தில் 1976 பிப்ரவரி 6ஆம் நாள் கீழக்கல்கண்டார்கோட்டையில் கைது செய்யப்பட்டேன். அப்போது எனக்கு வயது 25. கைது செய்த பொன்மலை காவல்துறை அதிகாரி ‘’நீயெல்லாம் என்ன பெரிய தீவிரவாதியா?” என்று என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர்ப் பொன்மலை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு மாலை கண்டேன்மெண்ட் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே என்னிடம் சில கையொப்பங்கள் வாங்கப்பட்டன. பின்னர் என்னைப் படம் பிடித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பின்னர் என்னைத் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தார்கள்.

என்னை அறிந்த இராபி, மலர்மன்னன், எஸ்.கே.வடிவேலு, செல்வேந்திரன் ஆகியோர் வரவேற்றார்கள். தமிழ்நாட்டில், திருச்சியில் என்ன நிலை என்பதைக் கேட்டறிந்தார்கள். மக்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதைப் பதிவுசெய்தேன். பின்னர்த் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டவர்களோடு எனக்கு நட்பு ஏற்பட்டது. கோ.சி.மணி, தாழை.மு.கருணாநிதி, கரூர் பி.ஆர்.குப்புசாமி, சுபா.இராஜகோபால், மயிலாடுதுறை இடது கம்யூனிஸ்ட் இடும்பையன் (தற்போது வலது கம்யூனிஸ்ட்), கண்ணதாசனைச் செருப்பால் அடித்த பொன்மலை இருதயராஜ் ஆகியோரின் நட்புகள் ஏற்பட்டன. முதல் மூன்று மாதங்கள் சிறை வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருந்தது. காலை 6.00 மணிக்குச் சிறையின் கதவுகள் திறக்கப்படும். திறந்த வெளியில் ஒரு தொட்டியின் பின்புறத்தில் அடியில் ட்ரே இருக்கும் கால் வைத்துக்கொள்ள இரண்டு பக்கம் செங்கற்கள் இருக்கும். அதில்தான் மலம் கழிக்கவேண்டும். ஒருவர் கழித்த மலத்தின் மீது மற்றவர்களும் மலம் கழிக்கவேண்டும். குளிப்பதற்கு 6 குவளை தண்ணீர்தான். அதற்குமேல் கிடையாது. காலை உணவாக ஒரு கரண்டி கோதுமை உப்புமா வழங்கப்படும். அது வயிற்றுக்குப் போதாது. மதியம் சின்னக் கப்பில் சோறு, தண்ணீராகச் சாம்பார் மட்டும் வழங்கப்படும். தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் துவையல் கொடுப்பார்கள். மாலை 2 கோதுமை தோசை அல்லது சப்பாத்தி வழங்கப்படும். மாலை 6. மணிக்குச் சிறையில் அடைக்கப்படுவோம். இரவு உணவு 12 நேரத்திற்குப் போதாமல் என் போன்ற இளைஞர்கள் பசியோடு விழித்திருப்போம். பசியின் கொடுமை தாங்கமுடியாமல் சோறு வடிச்ச கஞ்சியை வாங்கிக் குடித்துப் பசியைப் போக்கிக் கொண்டோம்.

மூன்று மாதத்தில் நிலைமைகள் மாறின. காலை 6.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை எல்லோரும் பேசிக் கொண்டிருப்போம். எங்களின் ரேஷனை முழுமையாக வாங்கி நாங்களே சமைத்துக் கொண்டோம். இதனால் எங்களின் பசிப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்தது. இந்த நிலையில்தான் என்.சிவா, என்.நல்லுசாமி இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு வந்தார்கள். சிறையில் இருப்போர் நலம் காக்கும் வகையில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் மேயராகத் தாழை கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். அந்த அமைப்பிற்கு எல்லா வகையிலும் ஆலோசனைகள் சொல்லுபவராகத் திருச்சி செல்வேந்திரன் இருந்தார். தாழை கருணாநிதியின் முயற்சியால் மாதம் ஒருமுறை உறவினர்கள் எங்களைப் பார்க்க அனுமதியைப் பெற்றுத் தந்தார். சிறையில் அண்ணா பிறந்தநாள் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் என்று நடத்திக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். புலவர் இளங்கோவன் (தஞ்சை துறவி) எல்லாருக்கும் தமிழ் இலக்கணம், கவிதை எழுதுவதற்குத் தேமா, புளிமா போன்ற வாய்ப்பாட்டுகளைக் கற்றுத் தந்தார். நாங்கள் எப்போது விடுதலை என்பதை அறியாமல் சிறையில் இருந்தோம்.

சிறையில் இருந்தவர்களின் குடும்பங்கள் நிதி சுமையால் வாடுகின்றன என்பதை உறவினர்கள் நேர்காணலின்போது அறிந்து கொண்டனர். உடனே அ.மு.சம்பந்தம் சிறையில் இருப்போர் குறித்த விவரங்களை எழுதி அவர்களின் குடும்பங்களுக்குக் கட்சி நிதி உதவி வழங்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் சிறையில் இருந்த திமுக அனுதாபியாக இருந்த ஒரு காவலர் மூலம் சிறையிலிருந்து வெளியே வந்தது. அந்தக் கடிதம் என் அண்ணன் மதியழகன் வசம் ஒப்படைக்கப்பட்டது. மதியழகன் 1976 மார்ச் 3ஆவது வாரத்தில் சென்னைக்கு இரயில்வே வேலைக்கு நேர்காணல் சென்றார். அப்போது சிறைக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்று மதியம் 2.00 மணிக்கு அன்பகத்தில் கலைஞரை நேரில் சந்தித்துக் கடிதத்தைக் கொடுத்தார். கலைஞர் திருச்சி சிறையின் நிலவரங்களைக் கேட்டறிந்து, சிறையில் இருந்த திமுகவினருக்கு மாதம் ரூ.2,500/- வழங்க உத்தரவிட்டார். இந்தத் தொகையை என் தாய் வாங்க மறுத்தார்கள். காரணம் எங்களுக்கு வசதி இருக்கிறது என்றார்.

சிறையிலிருந்து நான் இரயில்வே தேர்வு எழுதத் தேசியக் கல்லூரிக்குக் கைவிலங்கு போடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டேன். இந்தச் செய்தியை அறிந்த திருச்சி பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்து இந்தச் செய்தியை வெளியிட்டார்கள். மேலும் ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது. பின்னர் இந்தச் செய்தி உச்சநீதி மன்றத்தில் தில்லி இடது கம்யூனிஸ்ட் தலைவர்கள் பத்திரிக்கை செய்தியாகப் பதிவு செய்தார்கள். பின்னர் மிசா கைதிகள் வெளியே அழைத்துச் செல்லப்படும்போது கைவிலங்கு போடும் முறையைப் பின்பற்றக்கூடாது என்று அறிவுரை வழங்கியது. 6 மாதத்தில் உடல்நலம் குறைந்த நிலையில் அனந்தநம்பியார் மற்றும் எம்.எஸ்.வெங்கடாசலம், என்.நல்லுசாமி என இன்னும் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள். அதற்கான காரணங்கள் சிறையிலிருந்த எங்களுக்குத் தெரியாது. விடுதலை ஆனவர்களும் பின்னரும் எங்களிடம் தெரிவிக்கவில்லை.

சிறையில் இருந்தபோது BGL படித்துக் கொண்டிருந்தேன். அதன் விளைவாக எனக்குத் தனி அறையும், அறையில் மின்விளக்கு வசதியும், படிக்க மேசை நாற்காலியும் வழங்கப்பட்டது. இதுபோன்ற சில வசதிகளும் சிறையில் வழங்கப்பட்டது. சென்னை சிறை போன்று தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும். ஜனவரி 23, 1977  புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. நான் ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தில் விடுதலை செய்யப்பட்டேன். தொடர்ந்து அடுத்த இரண்டு வாரத்தில் அணிஅணியாக அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்து முடித்தார்.

 1977 மார்ச் மாதம் புதிய தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். நெருக்கடி நிலை அதிகாரப்பூர்வமாக மார்ச் 231977 அன்று முடிவுற்றது. இத்தேர்தலை மக்கள் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடைப்பட்ட நிலையாகக் கருதினர். இதில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந்தது. இந்திரக் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரும் தோல்வி அடைந்தனர். இந்திரா காந்தி உத்திரப் பிரதேசத்தில் தன்னை வழக்கில் வென்ற ராஜ் நாராயணனிடம் பல இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சிறையிலிருந்தே ஜார்ஜ் பெர்ணான்டஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் இரயில்வே வேலை நிறுத்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதனால் மிசா கைதிகளோடு அவர் விடுதலை செய்யப்படவில்லை. மத்தியில் மெராஜிதேசாய் தலைமையில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் நெருக்கடிகால நிலையைக் கடுமையாக எதிர்த்த திமுக படுதோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஆசைத்தம்பி மட்டும் வடசென்னையிலிருந்து வெற்றி பெற்றார் என்ற சோகமான செய்தியும் உண்டு.

திருச்சி மாவட்டத்தின் மிசா சிறை கைதியாக இருந்தவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்த முன்னெடுப்புகளைச் செய்தார். விழாவுக்குக்கான நாளைக் கேட்கக் கலைஞரிடம் சென்றபோது, கட்சியின் சார்பில் சிறப்பாக நடத்தலாம் என்று கூறினார். இறுதிவரை மிசா கைதிகளுக்குப் பாராட்டு விழா நடத்தவில்லை. ‘’தன் மகனை மட்டும் மிசாவில் தியாகம் செய்தான் என்று பாராட்டிக் கட்சியில் இளைஞர் அணி பதவி, சட்டமன்ற உறுப்பினர், இருமுறை சென்னை மேயர் போன்ற பொறுப்புகளைக் கொடுத்தார். எங்களைக் கண்டு கொள்ளவில்லை என்ற குறை மிசாவிற்குச் சென்ற திமுக இளைஞர்களிடம் இருந்தன என்ற தகவலும் உள்ளன. என்றாலும் மிசா சிறைவாசத்தில் திருச்சி சிறை அறை கருவறையாக மாறி 23 வயதில் ஒரு இளம் அரசியல் தலைவரைப் பெற்றெடுத்து. அவர்தான் தற்போதைய இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினராகத்வும் மாநிலங்களவையில் உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகின்றன திருச்சி என்.சிவாதான் அவர். மிசா சிறைவாசம்தான் அவரை அரசியல்வாதியாக மாற்றியது. அவர் இப்போது அரசியல் தலைவராக உயர்ந்து வருகிறார் என்றால் மிகையில்லை.

1989இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மிசாவில் கைதியாக இருந்தவர்களுக்கு அரசின் சலுகைகள் வேண்டும் என்று கலைஞரிடம் தோழர் நல்லகண்ணு வேண்டுகோள் விண்ணப்பம் அளித்தார். உடன் மயிலாடுதுறை இடும்பையனும் சென்றிருந்தார். விரைந்து நடவடிக்கை என்று முதல்வர் பொறுப்பிலிருந்து கலைஞர் கூறினார். கலைஞரிடமிருந்து விடைபெற்று வெளியே வரும்போது அப்போதைய இளைஞர் அணிச் செயலர் ஸ்டாலின் இடும்பையனைப் பார்த்து, “இரண்டாவது விடுதலைப் போரில் என்ன துப்பாக்கிய தூக்கிட்டுச் சண்டையா போட்டிங்க..” என்று கேலியாகப் பேசியிருக்கிறார். இடும்பையன், “இரண்டாவது விடுதலைப் போர் என்று சொன்னது நாங்கள் இல்லை…. உங்கள் அப்பன் என்று”  பதில் கூறியுள்ளார். மிசாவை தியாகம் என்று ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் புலப்படுத்துவதாக உணரமுடியும்.

சந்தா 2

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலிருந்து மிசா சட்டத்தில் சிறைசென்றோர் கூட்டத்தைப் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் நடத்தினார். 45 ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடிகால நிலையை அறிவித்து இந்திராகாந்தி ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த வரலாற்றைச் சொன்னார். உரையின் முடிவில் இல.கணேசன், ‘’வெள்ளையர்களை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் இருந்தாலும் இந்திய அரசு தற்போது தியாகிகள் பென்ஷன் என்னும் ஓய்வூதியத்தை வழங்கி வருகின்றது.

இரண்டாவது விடுதலைப்போர் என்று வருணிக்கப்படுகின்ற நெருக்கடிகால நிலையை எதிர்த்தால் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் விடுதலைப் போராட்டத் தியாகிகள்தான். இவர்களுக்கும் இந்திய அரசு மாத ஓய்வூதியமாக ரூ.10000 வழங்கப்பட வேண்டும் என்று தலைமையமைச்சர் மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு எதிர் அரசியலைப் பாஜக இல.கணேசன் முன்வைத்தாலும் மிசா காலத்தில் காரணம் சொல்லப்படாமலும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்படாமலும் சர்வாதிகாரத்தின் உச்சபட்ட அதிகாரத்தில் சிறை வைக்கப்பட்டவர்களையும் இந்தியாவின் தியாகிகளாகப் போற்றவேண்டும் என்பதில் கருத்து முரண்பாடுகள் இருக்கமுடியாது.

திருச்சி மாவட்டத்தில் மிசாவில் கைது செய்யப்பட்ட திமுகவினர் பட்டியல்

திமுக : -1.எம்.எஸ்.வெங்கடாசலம், 2.எஸ்.ஏ.ஜி.இராபி, 3. எஸ்.கே.வடிவேலு, 4. ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, 5. மலர்மன்னன், 6. ஆர். நாகசுந்தரம், 7. என். நல்லுசாமி, 8. என்.சுப்பிரமணியன் (தாராநல்லூர்) 9. என். சிவா, 10. அ.மு.சம்பந்தம், 11. பொன்மலை சாக்ரடீஸ், 12. ஆர்.கே. சின்னதுரை, 13. தொண்டன் கோபாலகிருஷ்ணன், 14. புலவர் செங்குட்டுவன், 15. உறையூர் செவந்தலிங்கம், 16. கரிகாலன் (வள்ளுவர் நகர்), 17. உறையூர் வெங்கடாஜலம், 18. குஞ்சிதபாதம், வீரபத்திரன், 19. ஆசிரியர் வெங்கடாஜலம் (ஆசிரியர் அமைப்பு), 20. பொன்மலை இருதயராஜ் இடது கம்யூனிஸ்ட் கட்சி – 21. தீக்கதிர் ஆசிரியர் பரமேஸ்வரன், 22. அனந்தநம்பியார், 23. எஸ்.கே.நம்பியார், ஆர.எஸ்.எஸ். இயக்கம் சார்ந்த பட்டவர் சாலையைச் சார்ந்த வழக்குரைஞர் 24. கங்காதரன் திராவிடர் கழகம் 25. உறை யூர் என். செல்வேந்திரன்,

 

திருச்சி மிசா கால அனுபவங்கள் தொடர்பான கடிதங்கள்

 • என் தந்தை சாக்ரடீஸ் திருச்சி பெரியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தனித்தமிழ்நாடு வேண்டி தீர்மானம் நிறைவேற்றினார் என்பதை 50 ஆண்டுகள் கடந்த நிலையில் என் திருச்சி மின் இதழ் பதிவு செய்திருப்பது ஒரு மகளாய் மகிழ்ச்சியடைகிறேன். என் திருச்சிக்கு என் வாழ்த்துகள்

– சா. தமிழீழம், நீலங்கரை, சென்னை.

 • இந்தியாவின் நெருக்கடிக்கால நிலையில் திருச்சி மாவட்ட மிசா கைதிகள் குறித்த கட்டுரையில் நெருக்கடிக்காலம் குறித்தும் அதன் கொடுமைகள் குறித்தும், திருச்சி மாவட்ட தியாகிகள் குறித்தும் அனைத்து செய்திகளும் அருமை. கடந்த காலத்தை ஒரு குறும்படம்போல் என் திருச்சி வெளியிட்டுள்ளது. பாராட்டுகள்.
  • தருமர், மேற்கு தாம்பரம், சென்னை.
 • தமிழ்நாட்டின் விடுதலையை முன்மொழிந்த என் தந்தை, தமிழீழ விடுதலைக்கான ஆதரவு நிலையில் இன்றும் சமரசம் செய்துகொள்ளமால் இருக்கிறார் என்பது பெருமைக்குரியது. இதன் அடிப்படையில்தான் என் அக்காவிற்குத் தமிழீழம் என்றும் எனக்கு தமிழகம் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார். என் தந்தையின் மிசா அனுபவங்களை என் திருச்சி முறையாக பதிவு செய்துள்ளது. நன்றி.

-சா. தமிழகம், தாம்பரம் சென்னை

 • என் திருச்சி வெளியிட்ட திருச்சி மாவட்ட மிசா கைதிகள் குறித்த ஆசைத்தம்பி கட்டுரைப் படித்தேன். நெருக்கடி மிகுந்த அந்த காலத்தில் சிறையிலிருந்து எழுதப்பட்ட ஒரு கடிதம், சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, மதியழகன் மூலம் திமுக தலைவர் கலைஞரின் கைக்குக் கிடைத்தது என்றும் அதன் அடிப்படையில் கலைஞர் கைது செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.2500/- வழங்கினார் என்பதில் மதியழகன் முயற்சியைக் கண்டு வியந்தேன். அந்தக் கால திமுகவினருக்கு அச்சம் என்பதே கிடையாது என்பதையும் அறிந்து வியந்தேன்.

-மோகன் செந்தில்குமார், நைஜீரியா

 • பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில் பணியாற்றிய இருதயராஜ் பற்றிய செய்தி மிசா கைதிகள் பட்டியலிருந்து என்பதை அறிந்து பொன்மலை இரயில்வே தொழிலாளி என்ற வகையில் நெஞ்சம் மகிழ்கிறேன். கலைஞரைக் கண்ணதாசன் விமர்சனம் செய்தார் என்பதற்காக திருச்சி தேவர் மன்றத்தில் வைத்து கண்ணதாசனை செருப்பால் அடித்த ஒரு திமுக போராளிதான் இருதயராஜ் என்பது பதிவு செய்யப்பட்டதற்கு என் திருச்சிக்கு நன்றி.

-துரை. வெங்கடேசன், மதிமுக தொழிற்சங்கம், பொன்மலை.

 • என் திருச்சி வெளியிட்டிருந்த மிசா காலத்து அனுபவங்கள் கட்டுரைப் படித்தேன். மதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சகோதரர் மிசா சாக்ரடீஸ் அவர்களின் அனுபவங்கள் அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை வெளியிட்டு இதழியல் அறம் போற்றும் என் திருச்சியை வாழ்த்துகிறேன்.

-வந்தியதேவன், மதிமுக அமைப்புச் செயலாளர், சென்னை.

 • பாஜக இல. கணேசன் மிசா கைதிகளும் தியாகிகள்தான் என்றும் அவர்களுக்கு அரசின் ஓய்வூதியம் ரூ.10,000/- வழங்கப்படவேண்டும் என்ற வேண்டுகோள் என்ற செய்தி மிசா கைதியாக இருந்தும் சக மிசா கைதிகளைக் கிண்டல் செய்த ஸ்டாலினுக்குக் கொடுத்த சரியான பதிலடி. என் திருச்சியின் கட்டுரை சிறப்பாக இருந்தது.
  • செல்வக்குமார், அம்பேத்கர் தெரு, கீழக்கல்கண்டார்கோட்டை, திருச்சி – 11.
 • கட்டுரை சிறப்பு. வாழ்த்துகள்
  • நந்தவனம் சந்திரசேகரன், உறையூர், திருச்சி.
 • கட்டுரை சிறந்ததோர் வரலாற்று ஆவணம். என் திருச்சியின் வெளியீடும், ஆசைத்தம்பியின் முயற்சியும் பாராட்டுக்கும் வாழ்த்துக்குரியதாகும்.

பேராசிரியர் ஆநிறைச் செல்வன், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சி.

-ஆசைத்தம்பி

 

Leave A Reply

Your email address will not be published.