91 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளுக்கு தெளிவுரை எழுதிய முதல் பெண்மணி

மருங்காபுரி ஜமீன்தாரிணி லட்சுமி அம்மணி

0
1 full

திருவள்ளுவரின் திருக்குறள் நூலுக்குப் பலரும், பல காலக்கட்டங்களில் உரை எழுதியுள்ளனர். இதில், 1929-ம் ஆண்டு மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.லட்சுமி அம்மணி திருக்குறள் தீபாலங்காரம் என்னும் பெயரில் ஒரு அற்புதமான உரை நூலை எழுதி தமிழுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார். அதுவரை திருக்குறளுக்கு உரை எழுதிய தருமர், மணக்குடையார், தாமத்தர், நச்சர் அல்லது  நத்தர், பரிமேலழகர், பருதி, திருவனையர் அல்லது திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் இவர்களது வரிசையில் 91 ஆண்டுகளுக்கு முன்பு எளிய வசன நடையில் அதன் உட்பொருள் மாறாமல் உரை எழுதிய முதல் பெண்மணி என்னும் மதிப்பையும் இவர் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ளது மருங்காபுரி. இது முன்னொரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அழைக்கப் பெற்று வந்துள்ளது. இத்தகைய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர் ஸ்ரீ கிருஸ்ணவிஜய பூச்சய நாயக்கர். இவர் ஒருமுறை புலியோடு சண்டை செய்து, அந்தப் புலியைக் குத்திக் கொன்றதால், புலிக்குத்து நாயக்கர் பரம்பரை என்றும் பெருமையோடு அழைத்து வருகின்றனர்.

இவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்த மருங்காபுரி ஜமீனுக்கு 322 கிராமங்கள் இருந்தது. சுமார் 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பாசனப் பரப்பையும், 24 மைல் சுற்றளவும் கொண்ட பெரிய ஜமீனாகும். மேலும், இந்த ஜமீனின் கட்டுப்பாட்டில் 14 பெரிய கோயில்கள் இருந்து வந்துள்ளது. ஜமீன்தார்கிருஸ்ணவிஜய பூச்சய நாயக்கருக்கு ருக்மணி அம்மணி, முத்தழகு அம்மணி, வெள்ளையம்மணி, பொன்னழகு அம்மணி, லட்சுமி அம்மணி என ஐந்து மனைவியர் இருந்தனர்.

2 full

இவர்களில் பொன்னழகு அம்மணிக்கு நீலாம்பாள் என்ற பெண் குழந்தையும், லட்சுமி அம்மணிக்கு ஆண்டாள் என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஏனைய மனைவியருக்கு குழந்தைப் பேறு இல்லை. மருங்காபுரி ஜமீனுக்கு ஆண் வாரிசு கிடையாது. ஆகவே, கிருஸ்ணவிஜய நாயக்கருக்குப் பின்பு லட்சுமி அம்மணியின் மகள் வழிப் பெயரன் சிவசண்முகப் பூச்சய நாயக்கரை சுவீகார மகனாக (வளர்ப்பு மகன்) எடுத்துக் கொண்டார். பொன்னழகு அம்மணியின் மகள் வழிப் பெயரன் குமாரவிஜய நாயக்கரை சுவீகாரம் எடுத்துக் கொண்டார்.

முறையே பொன்னழகு அம்மணியும், லட்சுமி அம்மணியும் மருங்காபுரி ஜமீனை இருபகுதிகளாகப் பிரித்து நிர்வகித்து வந்தனர். அந்த நடைமுறைப்படி, இன்றும் திருக்கோயில்களை அவர்களது சுவீகார மகன்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

வரலாற்றுப் புகழ் வாய்ந்த மணியங்குறிச்சி அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் உள்படப் பல்வேறு ஆலயங்களின் வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலன், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பொதுப் பணிகளை நீதி வழுவாத நிர்வாகத் திறமையுடன் நிர்வகித்து வந்ததால் இன்றளவும் மருங்காபுரி ஜமீன் மீது மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது.

இந்தப் பெருமைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஜமீன்தார் கிருஸ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவரும், ஜமீன்தாரிணியுமான கி.சு.வி.லட்சுமி அம்மணியின் தமிழ் தொண்டு காலம் கடந்தும் போற்றப்படுகிறது. இவர் 1894-ல் பிறந்து 1971 வரை வாழ்ந்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். இவர் தாம் படித்த நூல் அறிவின் காரணமாக 1929-ம் ஆண்டுத் திருக்குறள் தீபாலங்காரம் என்ற நூலை எழுதியுள்ளார். திருக்குறளை தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் முதலிய மொழிகளில் பெயர்த்துள்ள போதிலும், தமிழ் மொழியில் பரிமேலழகர் மட்டுமே சிறந்த உரை நூலைத் தந்துள்ளதாகவும், மு,ரா.அருணாசலக் கவிராயர் வசன நடையில் உரை யாத்ததாகவும் முகப்புரையில் குறிப்பிடும் லட்சுமி அம்மணி, அனைவருக்கும் எளிதாகப் புரியும் அளவிற்கு கருத்தை விரித்து, குறிப்புகளை அவ்வப்போது துண்டுச் சீட்டில் எழுதி வைத்ததாகவும், அதையே பலரின் விருப்பம் காரணமாகத் திருக்குறள் தீபாலங்காரம் என்னும் நூலாக வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நூலை இதனினும் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் எழுதலாமென்று கல்விமான்கள் கருதலாம். ஆயினும் அதிக நூல் பயிற்சியும், கேள்விகளும்இல்லாத அடியேன், இந்நூலை எழுதியுள்ளதாக அடக்கத்தோடு கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள நூலில் அணிந்துரை வழங்கியவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இவர் எந்தளவிற்கு அறிவுக் கூர்மையர் என்பதும், தமிழ் இலக்கண இலக்கியங்களில் அவருக்கிருந்த விரிந்த பார்வையும் புலப்படும். திருக்குறள் உரை நூலில் அறத்துப்பால், பொருட்பால் என இருபால்களுக்கும் முழு உரை விளக்கம் தந்துள்ளார். காமத்துப் பாலில் உள்ள குறள்களுக்கு மட்டும் சுருக்கமாக உரை எழுதியுள்ளார். இவர் காலத்தில் தமிழுடன், வடமொழி – சமஸ்கிருதம் இரண்டறக் கலந்திருந்ததால் உரை நூல் முழுதும் சமஸ்கிருதத்தின் தாக்கம் நிரம்பியுள்ளது.

இவருடைய உரை நூலுக்கு அப்போதைய திருச்சி ஜில்லா போர்டு தலைவர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.சேச அய்யர், நெல்லை தாகூர் கல்லூரி சட்டப் பேராசிரியர் கே.சுப்பிரமணிய பிள்ளை, திருச்சி பிசப் ஈபர் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, திருவனந்தபுரம் கருவூல அதிகாரி  தி.லட்சுமணப் பிள்ளை, திருவல்லிக்கேணி பெண்கள் வெலிங்டன் கல்லூரி தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி அம்மாள், சென்னை கோ.வடிவேலு செட்டியார், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேஸ்வரன் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதை அசலாம்பிகை அம்மாள், யாழ்ப்பாணம், நல்லூர் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைவர் த.கைலாசபிள்ளை, சிவபுரம் ஜமீன்தார் ப.வே.மாணிக்கம் நாயக்கர், திவான்பகதூர் எஸ்.பவானந்தம் பிள்ளை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சர் டி.சதாசிவ அய்யர் மனைவி மங்களம்மாள், கல்கத்தாவைச் சேர்ந்த எச்.ஏ.பாப்லே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மதுரை தமிழ்ச் சங்கத்து வித்வான் ச.ரா.அருணாசலக் கவிராயர், சேது சமஸ்தான மஹா வித்துவான் ரா.ராகவையங்கார், ஜி.சதாசிவம் பிள்ளை, வித்துவான் அமிர்தசுந்தரநாதனார், தருமபுர ஆதீனம் வித்துவான் சட்டைநாத முனிவர், திருப்புள்ளிருக்கு வேளூர்க் கட்டளை விசாரணை இராமலிங்கத் தம்பிரான், தஞ்சாவூர் வித்துவான் சபாபதி பிள்ளை, மேலூர் கிராம கர்ணம் எம்.அழகப்பெருமாள் பிள்ளை, மருங்காபுரி சாமி நல்லசிவன் பிள்ளை, மருங்காபுரி சமஸ்தான வித்துவான் ஆ.சக்திவேற்பிள்ளை, திரிசிரபுரம் சூசையப்பர் கல்லூரி தலைமை தமிழ்ப் புலவர் அ.சிவப்பிரகாசர், நவசக்தி ஆசிரியர் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் உள்ளிட்ட 29 பேர் அணிந்துரை தந்துள்ளனர்.

இதில், திருச்சி ஜில்லா போர்டு தலைவர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை உள்பட நான்கு பேர் ஆங்கிலத்திலும், திரு.வி.க. உள்பட 12 பேர் விருத்த நடையிலும் வாழ்த்தும், அணிந்துரையும் எழுதித் தந்துள்ளனர். அணிந்துரைக்குப் புத்தகம் அனுப்பி, அறிஞர்கள் எழுதித் தந்ததற்குப் பிறகே இந்த உரை நூல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 4, 5 மாதங்கள் லட்சுமி அம்மணி இப்பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது இதன்மூலம் அறியலாம். செப்டம்பர் 1928-ல் தொடங்கி 1929-ல் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் அப்போது வாழ்ந்த உ.வே.சா, நா.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தை உமாமகேசுவரனார், திரு.வி.க. உள்ளிட்டவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை அளித்திருப்பதன் மூலம் அவர்களுடனான நட்பும் – தொடர்பும் பலமாகவே நூலாசிரியருக்கு இருந்துள்ளது. நூல் தரமான தாளில் நேர்த்தியாகவும் சென்னை – ராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

 உறுதியான கட்டமைப்புடன் (பைண்டிங்) 500 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை ரூ.3-க்கு வெளியிட்டுள்ளார். முறையான நூல் காப்பு உரிமமும் இந்நூலுக்குப் பெறப்பட்டுள்ளது.

உரை விளக்கம் முழுவதிலும் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பக்க எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாலேயே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. நூலின் துவக்கத்தில் திருவள்ளுவர் நாயனார் சரிதமும் ஆன்மிக நடையில் எழுதியுள்ளார். அவருடைய எழுத்தில் ஆங்காங்கே பக்தி நெறி தழைப்பட்டுள்ளது. தமிழ் மொழிப் புலமையில் கொண்டிருந்த ஈடுபாடு அளவிற்கு நூலாசிரியர், பொதுப் பணிகளிலும் அக்கறை செலுத்தியுள்ளார். அப்போதே திருச்சி ஜில்லா போர்டுக்கு நியமன உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்பாக பணியாற்றி உள்ளார். இதுதவிர, மாவட்ட பாரதி சகோதர சங்கத்தின் தலைவராகவும் இருந்து இலக்கியப் பணி செய்துள்ளார்.

2004-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி ரிசிகேசில் (இமயமலை) தமிழ்ச்சுரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் நடத்திய மொழி மாநாட்டில் நூலாசிரியர் லட்சுமி அம்மணியின் படத்தை வெள்ளையாம்பட்டுச் சுந்தரம் திறந்து வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். உ.வே.சாமிநாத அய்யர் நூலகத்தில் இருந்த, இந்த நூல் மற்றும் நூலாசிரியர் தொடர்பான செய்தியறிந்து இந்நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பழம் பெருமை வாய்ந்த திருக்குறள் தீபாலங்காரம் நூலைப் பற்றியும், நூலாசிரியரின் வள்ளுவர் நெறி குறித்தும் வெளி உலகத்திற்குப் போதிய அளவில் தெரியாமல் இருப்பது பெரும் குறைதான். தமிழக அரசு இந்த நூலை நாட்டுடைமையாக்கி எல்லாத் திசைகளுக்கும் லட்சுமி அம்மணியின் புகழை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தமது ஆசை என அவருடைய வளர்ப்பு மகன் சிவசண்முக பூச்சய நாயக்கர் தெரிவித்துள்ளார். பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை நிர்வாகிகள் வருடா வருடம் வள்ளுவர் தினத்தன்று மருங்காபுரியிலுள்ள நூலாசிரியர் அரண்மனையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து வருகின்றனர்.

இவ்வாண்டு மருங்காபுரி அருகேயுள்ள முடுக்குப்பட்டி பழந்தமிழ்க் காவிரி வளாகத்தில் மிகச்சிறப்பாக அம்மையாருக்கும், திருக்குறளுக்கும் விழா நடத்தியது ஆறுதலுக்குரிய ஒன்றாகும். தமிழகம் முழுவதும் பல்வேறு ஜமீன்கள் உயர்ந்த பலமிக்க அரண்மனைகளாலும், பல்வேறு பாரம்பரிய சிறப்பம்சங்களாலும் புகழ் பெற்றிருந்த போதிலும், தமிழ் மொழிக்கும் – திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும்ம பணியில் 91 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தாரிணி பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்பது மருங்காபுரி எல்லை கடந்து தமிழுலகமே வியக்கும் வண்ணம் உள்ளது.

உ.வே.சாமிநாதையர்:

மதிநுட்பம், நூற்பயிற்சி, வேதாந்த விசாரம், உயர்ந்த கருத்து, உரைத்திறன் என்பன இந்நூலால் நன்கு வெளியாகின்றன. மாதர்கள் எத்தகைய கல்வி கற்க வேண்டுமென்பதனையும், அங்ஙனம் கற்றலால் அவர்கட்கும் நாட்டிற்கும் உண்டாகும் நலத்தினையும் இந்நூலைப் பார்த்தபின் யாவரும் தெளிவாக அறியக்கூடும். அம்மணி அவர்கள் இதுபோலும் அரும்பணி பல ஆற்றித் தமிழ் மாதார்க்கு எடுத்துக் காட்டாக நெடிது நிலவ வேண்டுமெனத் திருவருளைச் சிந்திக்கின்றேன்.

-ந.மு.வேங்கடசாமி நாட்டார்

கல்லாத மாந்தர் கைக் கொண்டொழுகும் இந்நெறி, மானுடம் பெற்றார்க்கு இழிதகவு தருவதை நன்குணர்ந்த இந்நூலாசிரியர், தமது எய்ப்பில் வைப்பாகத் தமிழ் நாட்டினர் போற்றி வரும் தமிழ் மறையாகிய திருக்குறள் முதலிய உறுதிப்பொருள் பயக்கும் நூல்களை ஆராய்ந்து, அவற்றில் செம்பொருளெனத் தான் கண்டவற்றைக் கற்றோர்க்கே யன்றி மற்றோர்க்கும் பயன்படும் வண்ணம் எளிய நடையில் எழுதி வெளியிட்டது நாட்டினர் பாராட்டத்தக்க தொன்றாகும்.-தமிழவேள் த.வே.உமாமகேசுவரன் பிள்ளை

 

-மணவை தமிழ்மாணிக்கம்

 

3 half

Leave A Reply

Your email address will not be published.