திருச்சியின் மகுடம் பொன்மலை – பகுதி -1

காதில் விழுந்த செய்தி

0
full

திருச்சி என்றவுடன் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை, அரியமங்கலம் என்றவுடன் நினைவுக்கு வருவது சந்தைப்பேட்டை மலை, இரயில்வே தொழிற்சாலை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பொன்மலை. திருச்சி நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஜெயில் கார்னலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் பொன்மலை என்னும் சிறு குன்று உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் இருக்கலாம். இந்திய வரலாற்றின் பக்கங்களில் பொன்மலை இடம் பெற்றுள்ளது.

இரண்டாம் கர்நாடகப் போரின்போது, ​​ஜூன் 26, 1753 அன்று பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிகளின் படைகளுக்கு இடையே கோல்டன் ராக் என்று அழைக்கப்பட்ட பொன்மலையில்  போர் நடைபெற்றது. ஹைதர் அலி தலைமையிலான மைசூர் வீரர்களின் உதவியுடன் பிரெஞ்சு வீரர்கள் போரிட்டார்கள். அந்தப் போரில் பிரிட்டிஷ் என்னும் ஆங்கிலேய படையினர்  வெற்றி பெற்றனர் என்ற வரலாற்று குறிப்பு உள்ளது. பொன்மலையின் மேல் பகுதி மலைகளைப் போன்று குவிந்துள்ளாமல் குழியாக ஒரு சுரங்கம் போன்று உள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலே சென்று அந்த சுரங்கம் போன்றுள்ள குழியைப் பார்க்கத் தடை செய்யப்பட்டுள்ளது. அதை சுற்றி கம்பி வேலிகளும் போடப்பட்டுள்ளன. அந்த காலத்தில் இந்த மலையில் பொன் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களைப் பதுக்கி வைத்திருந்ததால் இது பொன்மலை என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் என்னும் வெள்ளைக்காரர்களின் ஆளுகையில் இருந்தபோது பொன்மலை ஆங்கிலத்தில் Golden Rock என்றும் தமிழ் ஒலிபெயர்ப்பில் கோல்டன் ராக் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்த பொன்மலை வரலாற்றுக்கு முந்திய காலத்தில் எரிமலையாக இருந்திருக்க வாய்ப்புண்டு நிலவியல் ஆய்வாளர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தனர்.

poster

இந்த கருத்து அப்போது முக்கியமானதாகக் கருதப்பட்டது. காரணம் இந்தியாவில் எங்குமே எரிமலைகள் இல்லை. இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட அந்தமானில் மட்டும் ஒரு உயிர்ப்புடன் இருக்கும் ஒரே ஒரு எரிமலையான பாரன் தீவு எரிமலை, புகை மற்றும் லாவாவை வெளியேற்றத் துவங்கியது. அந்தமான் நிகோபார் தீவுகளில் இருக்கும் இந்த எரிமலையானது சுமார் 150 வருடங்களாக செயலற்று இருந்தது. பிறகு திடீரென கடந்த 1991-ம் ஆண்டு வெடித்தது; அப்போது புகை மற்றும் எரிமலைக் குழம்புகளை வெளியிட்டது.

பிறகு 1994-95 காலகட்டத்தில் மீண்டும் வெடித்தது. அதன்பிறகு இந்த பெரியஅளவில் எரிமலையில் சீற்றங்கள் ஏற்பட்டதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக எரிமலைகளின் வரலாற்றிலும் பொன்மலை இடம்பிடித்துள்ளது என்ற தகவலும் கிடைக்கின்றது.நாகப்பட்டினம் – முதல் இரயில்வே பணிமனைபொன்மலை என்றவுடன் நினைவுக்கு வருவது இரயில்வே பணிமனை என்றழைக்கப்படும் Railway Workshop மற்றும் ஆங்கிலேயர்கள் அதிகம் வாழ்ந்த பொன்மலைப்பட்டியும்தான்.

1860ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில்  இரயில் நிலையம்  உருவாக்கப்பட்டது. தென் தமிழகத்தில் முதன்முதலில் நாகப்பட்டினத்திற்கும் திருவாரூர்க்கும் இடையேதான் முதல் இரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்..ஆர்) தலைமையகம் நாகப்பட்டினத்தில் இருந்தது. 1861 முதல் நாகப்பட்டினம் திருவாரூர் இருப்புப்பாதை தஞ்சாவூர் வழியாக திருச்சி வரை நீடிக்கப்பட்டு பயணிகள் இரயில்கள் இயக்கப்பட்டன. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்..ஆர்) தலைமையகம் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து இரயில்வே பணிமனை நாகப்பட்டினத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. 1918இல் உலகப் போர் நடைபெற்றது. எதிர்காலத்திலும் இதுபோன்ற உலகப்போர்கள் நடைபெற வாய்ப்புண்டு என்பதாலும் நாகப்பட்டினம் கடற்கரையில் இருப்பதால் இரயில்வே பணிமனையின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இதனைத் தொடர்ந்து நாகையில் இயங்கி வந்த இரயில்வே பணி 1924ஆம் ஆண்டு திருச்சிக்கு மாற்றப்பட்டது. 1874ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய இரயில்வே திருச்சியிலிருந்து சென்னைக்குத் தலைமையிடம் மாற்றப்பட்டது.

 பொன்மலையில் இரயில்வே பணிமனைபொன்மலை இரயில்வே பணிமனைதான் திருச்சியின் பெரிய தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலை பொன்மலை இரயில்வே நிலையத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது. பணி மனை சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 30 அடி உயர மதில் சுவர்களால் உள்ளடக்கப்பட்டது. தஞ்சாவூர் திருச்சி இரயில்பாதைக்குத் தெற்கே கிழக்கு மேற்காக 2 கிலோ மீட்டர், வடக்குத் தெற்காக 1 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தொழிற்சாலை திருச்சியில் அமையும்போது தொழிற்சாலைக்குத் தேவைப்படும் மின்சாரத்தை தானே தயாரித்துக் கொள்ளும் முறையும் உருவாக்கப்பட்டது. இதனால் பொன்மலை இரயில்வே பணிமனையும், தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதிகளும் அந்தகாலத்தில் மின்சாரம் பெற்று ஒளிமயமாகத் திகழ்ந்தன.

திருச்சியில் மின்சாரத்தை பொதுமக்களும் தொழிலாளர்களும் கிடைத்த முதல் இடம் பொன்மலை என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.இங்கே மூன்று அலகுக் கொண்ட பணிகள் நடைபெற்றன. 1. இரயில்பெட்டி உருவாக்கும் தொழில், சக்கரங்களை வார்ப்பிக்கும் தொழில், பயணிகள் இரயில் மற்றும் சரக்கு இரயில்களில் பயன்படும் சுருள்வில் (ஸ்பிரிங்) தயாரிக்கும் போன்ற 3 அலகு தொழில்கள் நடைபெற்றன. இரயில்வே பணிமனையில் தொடக்கக் காலத்தில் 18,000 பேர் வேலை பார்த்துள்ளனர். அதில் பாதிபேர் நாகப்பட்டின இரயில்வே பணிமனையில் பணியாற்றியவர்கள் இங்கேயும் தொடர்ந்து பணியாற்றினார்கள்.

திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களும் இங்கே பணியாற்றினார். அதிகாரிகள், உயர் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலோ இந்தியர்கள்தான். இவர்களை அலுவலக மரபுப்படி “துரை” என்றே அழைக்கவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இருந்தது.பொன்மலையில் சங்கொலிஇரயில்வே பணிமனைக்கு நான்கு திசைகளிலும் வாசல்கள் இருந்தன. கிழக்கு வாசல் “சி”டைப் கேட் என்னும் வடக்கு வாசல் “நார்த் டி” கேட் என்றும் மேற்கு வாசல் மெயின்ரோடு என்றும் தெற்கில் உள்ள வாசல் ஆர்மரிகேட் என்றும் அழைக்கப்பட்டது. நான்கு வாசல்கள் வழியாக தொழிலாளர்கள் பணிமனைக்குள் செல்வார்கள். தொடக்கக் காலத்தில் சைக்கிள் உள்ளே அனுமதி கிடையாது.

வேலை நேரம் காலை 7.00 முதல் 11.30 மணி வரையும் பகல் 1.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை இருந்தது. காலை 6.30க்கு பொன்மலை தொழிற்சாலையின் முதல் சங்கு ஒலிக்கத் தொடங்கும். 6.45க்கு இரண்டாவது சங்கு ஒலிக்கத் தொடங்கும். 7.00 மணிக்கு மூன்றாவது சங்கு ஒலிக்கத் தொடங்கும். 11.30 மணிக்கு வேலை முடியும்போது சங்கு ஒலிக்கத் தொடங்கும். பின்னர் பகல் 12.30 மணிக்கும் 12.45 மணிக்கும் 1.00 மணிக்கும் சங்கு ஒலிக்கும். தொழிலாளர்கள் மதிய உணவு முடித்து, கொஞ்சம் ஓய்வு எடுத்து மீண்டும் தொழிற்சாலைக்குச் செல்வார்கள். மாலை 5.00 மணிக்கு சங்கு ஒலிக்கும்.

தொழிலாளர்கள் பணி முடித்து வீடு திரும்புவார்கள். நைட் ஷிஃப்ட் (இரவு நேர பணி) என்பது மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை, இரவு 8.30 மணியிலிருந்து 9,30 மணி வரை உணவு இடைவெளி நேரம். இரவு 9.30 மணிக்கு தொடங்கும் பணி அதிகாலை 2.00 மணி வரை நடைபெறும். இந்தப் பணிநேரங்களில் பொன்மலை சங்கு ஒலிக்காது. இந்த சங்கொலி 3 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கும் கேட்கும். கடிகாரம் இல்லாத காலத்தில் சங்கு ஒலிக்கும் பொழுதுகளை வைத்து நேரத்தைக் கணித்துக் கொள்வார்கள்.

தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வசதிகள்காலை 6.30 மணியிலிருந்து தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வார்கள். உள்ளே நுழையும்போது எல்லா தொழிலாளர்களும் சோதனையிட்டே பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் அந்தந்த தொழிலகத்தில் பஞ்சிங் மிஷின் இருக்கும். அதில் தொழிலாளர்கள் தனக்குரிய வருகை பதிவு அட்டையை மிஷினில் வைத்து கைப்பிடியை இழுத்து பஞ்ச் செய்வார்கள்.

தொழிலாளர்கள் வந்த நேரம் அதில் பதிவாகும். பின்னர் உள்ளே சென்று தங்களுக்குரிய பணியைச் செய்வார்கள். அதுபோலவே 11.30 மணிக்கு சங்கு ஒலித்தவுடன் உணவு இடைவேளைக்காக வெளியே வரும்போதும் கார்டில் பஞ்ச் செய்யவேண்டும். உணவு இடைவேளை முடிந்து உள்ளே வரும்போதும் கார்டில் பஞ்ச் செய்யவேண்டும். மாலை 5.00 மணிக்குப் பணி முடிந்து வெளியே வரும்போதும் கார்டில் பஞ்ச் செய்யவேண்டும். கார்டில் பஞ்ச் செய்யாமல் உள்ளே செல்லவும் முடியாது, வெளியே வரவும் முடியாது. வெளியே வரும்போது தொழிலாளர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குட்படுத்துவார்கள்.

தொழிற்சாலையில் சின்ன அரிவாள் செய்து எடுத்து வந்து பல தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற பதிவும் உள்ளது.தொழிற்சாலையில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கழிப்பிடங்கள் அத்தனை சுத்தமாக இருக்கும் என்று அந்த காலத்தில் பணியாற்றியவர்கள் சொல்வார்கள். உடம்புக்கு முடியவில்லை என்றால் வேலை நேரத்தில் படுக்கவேண்டும், அல்லது உறங்கவேண்டும் என்றால் கழிவறைக்குச் சென்று துண்டை விரித்து தூங்கிவிடும் அளவுக்குச் சுத்தமாக இருந்தது என்பதை இன்றும் பெருமையோடு செல்வார்கள். காலை 9.00 மணிக்கும் மாலை 3.00 மணிக்கும் வடை, தேநீர் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும்.

80களில் தேநீர் 25 பைசா இருந்தபோது தொழிற்சாலையில் தேநீர் 5 பைசா, வடை இரண்டு 5 பைசா என்று தொழிலாளர் நலச் சட்டப்படி Subsistyயில் வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு CL என்னும் தற்செயல் விடுப்பு ML என்னும் மருத்துவ விடுப்பு, தொழிற்சாலையில் வேலை நேரத்தின்போது விபத்து நேரிட்டால் முழு சம்பளத்துடன் கூடிய விபத்து விடுப்பு (Accident Leave), EL என்னும் ஈட்டிய விடுப்பு போன்ற அனைத்து உரிமைகளும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ukr

தொழிற்சாலையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு (Office Work) மாதத்தின் முதல் நாள் சம்பளம் ரொக்கமாக வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 9ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும். மேற்சொன்ன 1ஆம் தேதியும், 9ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் அதற்கு முந்தைய சனிக்கிழமை ஊதியம் வழங்கப்படும். இரயில்வே தொழிற்சாலையின் சிறப்பு அம்சம் சனிக்கிழமை அரைநாள்தான் வேலை (காலை 7.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை) உணவு இடைவேளைக்கு 1.30 மணி நேரம். மே மாதத்தில் மே 1ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை ஒரு வாரம் May Leave ஊதியத்துடன் வழங்கப்படும்.

பணி நிறைவு செய்து ஓய்வு பெறும்போது தொழிலாளி பணியாற்றிய ஆண்டுகளைக் கணக்கிட்டு ஒரு கணிசமான பெரிய தொகை பணிக்கொடையாக வழங்கப்படும். விபத்தில் தொழிலாளி இறந்துவிட்டால் பணிக்கொடையும் வீட்டில் உள்ள ஒரு பிள்ளைக்கு வேலை தரப்படும். ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு பணியில் இணைந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் நடைமுறை இல்லை.‘இரயில் பாஸ்இரயில்வேயில் பணியாற்றும் எல்லா தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் இரயிலில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்படும்.

இந்த பாஸை வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் இரயிலில் இந்தியாவையே சுற்றி வரலாம். ஒரு பாஸ்-இன் காலம் 3 மாதம். வருடத்திற்கு 4 பாஸ் வழங்கப்படும். ஒவ்வொரு பாஸ் பெறுவதற்கும் இன்னொரு பாஸ் பெறுவதற்கும் 3 மாத இடைவெளி வேண்டும் என்ற வரையறையும் இருந்தது. இந்த மூன்று மாத இடைவெளியில் இரயிலில் பயணம் செய்து வெளியூர் செல்ல வேண்டிய தொழிலாளர்களுக்கு PTO என்னும் பாஸ் வழங்கப்படும். இந்தப் பாஸை-ஐ இரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் கொடுத்து மூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்தவேண்டும். (சென்னை செல்ல அப்போது ரூ.60 என்றால் PTO பாஸில் பயணம் செய்தால் ரூ.20 செலுத்தி செல்லலாம் என்ற சலுகை இருந்தது.

மேலும் தஞ்சாவூரிலிருந்து இரயில்வே பணிமனைக்குப் பணியாற்ற வருவோர்க்காக காலை 6.45 மணிக்கு பொன்மலை இரயில் நிலையத்திற்கு முன்புள்ள நார்த் டி கேட்டில் இரயில் நிற்கும். அதுபோலவே மாலையில் தஞ்சாவூர் செல்ல மாலையில் 5.20க்கு அதே நார்த் டி கேட்டில் இரயில் நிற்கும். சனிக்கிழமை அரை நாளில் பணி முடிவதால் 11.45க்குத் தஞ்சாவூர் செல்ல சிறப்பு இரயில் இயக்கப்படும். இதில் பொதுமக்களும் பயணம் செய்யலாம் என்ற விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இரயில்வே மருத்துவ மனைதொழிலாளர்களின் உடல் நலம் பேணவும் சிகிச்சை பெறவும் திருச்சி பெரிய ஆஸ்பத்திரி போல இரயில்வே ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கே இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இங்கே பிரசவம், ஆபரேஷன், இரத்த சோதனை போன்ற அனைத்து இங்கே இலவசமாக செய்துகொடுக்கப்படும்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோருக்குக் காலை, மாலை, இரவு உணவு உயர்தரத்தில் வழங்கப்பட்டது.(இன்று தரம் குறைந்திருப்பதாகவும் தகவல் உண்டு) மாலையில் பன், பிஸ்கெட், பழங்கள் கொடுத்து வந்தனர். வெளி நோயாளியாக சிகிச்சைப் பெறுவோருக்கு தேவைப்படும் மருந்து, மாத்திரை, டானிக் போன்ற அனைத்து இலவசமாகவே வழங்கப்பட்டு வருகின்றது. மருத்துவமனையில் 1960களில் டாக்டர் செரியன், 80களில் மகப்பேறு மருத்துவர் இலலிதா பணியாற்றியுள்ளார்கள். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இரயில் பாஸ்-இல் 21 வயது நிறைந்த மகன்கள் பெயர்கள் நீக்கப்படும். மகள்கள் திருமணம் செய்துகொள்ளும் வரை பாஸ்-இல் பெயர் இருக்கும். திருமணம் முடிந்தவுடன் மகளின் பெயர் நீக்கம் செய்யப்படும்.

என்றாலும் திருமணம் ஆன தொழிலாளியின் மகள்கள் இரு குழந்தைகள் பெறும்வரை இரயில் மருத்துவமனையில் இலவசமாக பிரசவம் பார்த்துக்கொண்டு பிள்ளை பெற்றுக்கொள்ள சிறப்பு அனுமதி இன்றும் உள்ளது. (எத்தனை மகள் இருந்தாலும் அத்தனை மகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும் என்பது வியப்பான செய்தியாகும்)பள்ளிக்கூடங்கள்இரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்கும் அனைத்து C டைப் நார்த் D பகுதிகளிலும் தமிழ் வழிக் கல்வி, F டைப் பகுதியில் ஆங்கில வழி கல்வியும், ஆங்கிலோ இந்தியர்கள் படிப்பதற்கான தனி பள்ளிகள் தொடங்கப்பட்டன. தற்போது ஆங்கிலோ இந்தியர்கள் படித்த பள்ளி கேந்திர வித்யலயா பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் உயர்கல்விக்காக இரயில்வே நிர்வாகம் கல்லூரிகளைக் கட்டவில்லை என்பது செய்தியாகும். தனியார் சார்பில் கிறித்தவ நிறுவனம் உயர்நிலைப் பள்ளி நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.ஆங்கிலேயர்களால் 18,000 பேருடன் தொடங்கப்பட்ட பொன்மலை இரயில்வே பணிமனையில் தற்போது 3000 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் கொடுத்த தொழிலாளர் நலச் சலுகைகள் பல இந்திய விடுதலைக்குப் பிறகு தொடர்ந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1974-இல் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாடஸ் தலைமையில் இரயில் நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பொன்மலை இரயில்வே தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள். இந்த போராட்டத்திற்குப் பின் மத்தியில் அமைந்த ஜனதா கட்சியில் பெர்ணாடஸ் இரயில்வே மந்திரியானார். இவரின் முயற்சியால்தான் இரயில்வே தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் போனஸ் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இரயில்வேயின் வருமானம் இராணுவத்திற்குச் செல்வதால் போனஸ் மறுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிட வேண்டிய செய்தி.

80களில் தொழிலாளர்களின் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டது. பகல் உணவு இடைவேளை 1.30 மணியிலிருந்து 1 மணி நேரமாகவும் பணி முடியும் நேரம் மாலை 5.00க்குப் பதிலாக 4.30 என்று மாற்றியமைக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு 9ஆம் தேதி வழங்கப்பட்ட ஊதியம் 3ஆம் தேதி என்று மாற்றி வழங்கப்பட்டது.

1988ஆம் ஆண்டு தொடங்கி பல ஆண்டுகள் பொன்மலை இரயில்வே தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்கள் பணியாற்றி பொன்மலை இரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார் என்பதும் சிறப்பான செய்தியாகும்.

இரயில்வே தொழிற்சங்கத்தில் அரசியல்வாதிகளான இடதுசாரி இயக்கம் சார்ந்த நம்பியார், அனந்த நம்பியார், உமாநாத், பாப்பா உமாநாத் போன்றவர்கள் தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

2014இல் மத்தியில் மோடி ஆட்சி அமைந்தவுடன் இரயில்வே துறையின் பல பணிகள் தனியார்மயமாக்கப்பட்டது. பலர் வேலை இழந்தார்கள். புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. ஓய்வூதியம் மறுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும்விட இரயில்வே பணிகளில் குறிப்பாக பொன்மலை இரயில்வே பணிமனையில் வடநாட்டவர் எண்ணிக்கையும் ஆதிக்கமும் மேலோங்கியுள்ளது என்பது ஒரு வெளிப்படையான உண்மை. அண்மையில் ரயில்வே கோட்ட பணிகளில் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதில் இருந்து தமிழக இளைஞர்கள் மீள்வதற்குள் அதேபோன்ற பாரபட்சம் திருச்சி ரயில்வே கோட்ட பணி நியமனத்திலும் நடந்துள்ளது. இந்நிலையில், முதல்கட்டமாக பொறியியல் பிரிவில், பணி நியமனம் பெற்ற 189 பேரில் 70 விழுக்காடு வட மாநிலத்தவர்கள் என்றும், இரண்டாம் கட்ட நியமனத்தில் தண்டவாள பராமரிப்பு பணிக்கான 262 பேரில் 39 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதர பிரிவில் 89 பேர் நியமனம் பெற்றதில் 5 பேர் மட்டுமே தமிழர்கள் ஆவர் என்ற பத்திரிகை செய்தி தமிழர்கள் பெரும்பான்மையான நிலையில் தொழிலாளர்களாக இருந்த நிலை மாறி இன்று வடநாட்டார் ஆதிக்கத்தில் உள்ளது என்ற கசப்பான உண்மை நம் மனதைப் பிசைகிறது.

(அடுத்த வாரம் திருச்சியின் மகுடம் பகுதி – 2 இல் பொன்மலை நகரியம் குறித்த வரலாறும் அதற்கு அடுத்த வாரத்தில் ஆங்கிலேயர்கள் அதிகம் வாழ்ந்த பொன்மலைப்பட்டியின் வரலாறும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படும்)

     -ஆசைத்தம்பி

 

half 1

Leave A Reply

Your email address will not be published.