திருச்சியின் மகுடம் பொன்மலை – பகுதி – 3 (பொன்மலைப்பட்டி)

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0

பொன்மலையின் வரலாற்றில் பொன்மலைப்பட்டியும் இணைந்தே இருக்கும். பிரித்துப் பார்க்கமுடியாதப் பிணைப்பு கொண்டது. 1926இல் இரயில்வே தொழிற்சாலை இயங்கத் தொடங்கியதிலிருந்து திருச்சியில் மக்கள் நெருக்கம் கொண்ட பகுதியாகப் பொன்மலை விளங்கியது. இங்கே உள்ள தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கிடைக்காத நிலையில், பொன்மலையிலிருந்து நடந்துபோகும் தொலைவில்தான் பொன்மலைப்பட்டி இருந்தமையால் தொழிலாளர்கள் பலரும் இங்கே குடியிருக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக இங்கே அதிக அளவில் குடியேறியவர் ஆங்கிலோ இந்தியர்கள்தான். பொன்மலை ஒட்டிய இந்தப் பகுதிக்கு ஏன் பொன்மலைப்பட்டி என்று அழைக்கப்படுகின்றது என்ற கேள்வி எழும். தமிழில் ‘பட்டி’ என்றால் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகள் பட்டி என்றே அழைக்கப்படும்.

ஆடு, மாடுகள் நெருக்கமாக அடைக்கப்படும் இடத்திற்குப் பட்டி என்றே அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. மேலும் பொன்மலைப்பட்டியில் அரசு சார்பில் பட்டி என்ற ஒன்று இருந்தது. கிராமங்களில் விளைச்சல் நிலங்களில் மேயும் ஆடு, மாடுகளைப் பிடித்துக் கொண்டுவந்து நிலஉரிமையாளர்கள் இந்தப் பட்டியில் அடைத்துவிடுவார்கள். ஆடு, மாடுகளின் உரிமையாளர்கள் பட்டிக்கு வந்து, அரசாங்கம் விதித்துள்ள தண்டத்தொகையைப் (பைன்) செலுத்தித் தங்களின் விலங்குகளை மீட்டுச் செல்வார்கள். இந்தப் பட்டி பொன்மலையை ஒட்டி இருப்பதால் இதற்குப் பொன்மலைப்பட்டி என்ற பெயர் வந்தது என்ற தகவலும் உண்டு.

பொன்மலைப்பட்டி

‌சந்தா 1

திருச்சியில் பொன்மலைப்பட்டி இந்திய விடுதலையான 1947க்கு முன்பு மக்கள் நெருக்கம் மிகுந்த பரபரப்பான பகுதியாக இருந்தது வந்தது. இதற்குக் காரணம் இரயில்வே தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் 18ஆயிரம் பேர் என்பதும் ஒரு காரணம். இரயில்வே தொழிற்சாலையின் பணி நேரம் காலை 7.00 மணிக்குத் தொடங்குவதால் தொலைவிலிருந்து வேலைக்கு வருவது என்பது எல்லாக் காலங்களிலும் சாத்தியப்படாது.

வெள்ளைக்காரர்கள் அதிகாரிகளாக இருந்தமையால் அவர்கள் காலதாமதத்தை ஒருபோதும் எந்தக் காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகத் தொழிலாளர்கள் பலர் பொன்மலைப்பட்டியில் குடியிருக்கத் தொடங்கினார்கள். பொன்மலைப்பட்டியில் ஆதிகுடிகளாக இருந்தவர்கள் கிறித்தவ உடையார் சமூகத்தினர். இதனால் ஆங்கிலேயர்கள் இப் பகுதியில் குடியேறுவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்தது. அதே நேரத்தில் அங்கே ஆங்கிலேயர்களுக்குப் பிடித்த மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் இங்கே எந்தத் தடையும் இல்லாமல் கிடைத்தது என்பதும் ஒரு காரணம். இங்கே அருந்ததியர் சமூகம் இங்கே தொல்குடிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

பெண் தெய்வங்கள் – மாதாவும், ஈஸ்வரியும்

பொன்மலைப்பட்டியில் மொத்தம் பெரிய சர்ச்-கள் 8 எண்ணிக்கையில் உள்ளன. உடையார் தெருவில் உள்ள அடைக்கல மாதா சர்ச் பெரிய அளவில் தற்போது மீண்டும் கட்டப்பட்டுள்ளது. கிறித்தவர்கள் ஏசுநாதரை முதன்மை தெய்வமாகக் கொண்டவர்கள். அதே நேரத்தில் ஏசுநாதரைப் பெற்ற அவரின் தாயாரை மாதா என்று வணங்கி வந்தார்கள். இது தமிழ்ப் பண்பாட்டில் தாய் வழி சமூகத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கமுடிகின்றது. பொன்மலையின் அடிவாரத்தில் பொன்னேஸ்வரி ஆலயம் உள்ளது. பொன்மலை அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரி அம்மன் ஆலயம் என்பதால் இது பொன்னேஸ்ரி என்று அழைக்கப்படுகின்றது.

இதன் தொடக்ககாலப் பெயர் சுவர்ணகிரிஸ்வரி என்பதாகும். சுவர்ணம் என்றால் தங்கம், பொன் என்று பொருள். கிரி என்றால் மலை என்று பொருள். ஈஸ்வரி என்றால் ஈசன் சிவபெருமானின் மனைவி பார்வதி என்ற பொருள். பொதுவாகக் குன்றிருக்குமிடம் குமரன் (முருகன்) இருக்கும் இடம் என்பார்கள்.

இங்கே முருகன் கோவிலுக்குப் பதிலாக முருகனின் அம்மா என்று புராணங்களில் சொல்லப்படுகின்ற பார்வதியான ஈஸ்வரிக்குத் தமிழ்ப் பண்பாட்டில் உள்ள தாய் வழி சமூகத்தின் அடிப்படையில் இந்து சமயத்தினரும் பெண் தெய்வத்தை வணங்குவது என்பது பொன்மலைப்பட்டி தாய் வழி சமூகத்தின் வரலாற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தியாகும் பொன்னேஸ்வரி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். ஒரு இலட்சத்திற்குமேல் மக்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் நம்மை வியப்பின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது.

பொன்மலைப்பட்டியில் பள்ளிக்கூடங்கள்

1946இல் இப் பகுதியில் இரு கல்வி நிறுவனங்கள் கிறித்தவ அமைப்புகளால் தொடங்கப்பட்டன. 1. திரு இருதய உயர்நிலைப் பள்ளி ஆண்களுக்குக்காகத் தொடங்கப்பட்டது. 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் மேல்நிலைப் பள்ளியாக மாறியது. 2. தூய வளனார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி பெண்களுக்காகத் தொடங்கப்பட்டது. இதுவும் பின்னர் மேல்நிலைப்பள்ளியாக மாறியது.

இந்த இரு பள்ளிக்கூடங்களால் குடியிருப்போர் எண்ணிக்கை பெருகியது. இதனால் வணிகக் கடைகள் எண்ணிக்கையும் கூடியது. 1950களில் பொன்மலைப்பட்டியில் இருந்த கடைகளில் திருச்சியில் கிடைக்கும் எல்லாப் பொருள்களும் கிடைத்தன. குறிப்பாக அழகுசாதனங்கள் பொருட்கள், நோட்டு, புத்தகம், பென்சில், இரப்பர், பேனா போன்ற எழுதுபொருள்களும் கிடைத்தன என்றால் பொன்மலைப்பட்டி ஒரு குட்டி நகரம் போல் இருந்தது என்பதை மனக்கண்ணால் எண்ணிக்கொள்ளலாம்.

பொன்மலைப்பட்டியில் இருந்த இந்த இரு பள்ளிகளால் பொன்மலைப்பட்டி உய்யகொண்டான் ஆற்றின் கிழக்கில் அமைந்துள்ள கீழக்கல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், கிழக்குறிச்சி கிராமத்தில் இருந்த மாணவ, மாணவியர் பெரிதும் பயன் அடைந்தார்கள்.

பொன்மலைப்பட்டியை அடுத்துள்ள கொட்டப்பட்டுப் பகுதியில் வாழ்ந்த பல சமூகத்தவரின் பிள்ளைகள் பலரும் கல்வியறிவு பெற்றார்கள். இதன் தொடர்ச்சியாக இப் பகுதியில் 70களில் பலரும் அரசு வேலைவாய்ப்பைப் பெற்றார்கள் என்றால் இந்த இரு பள்ளிகளின் மகத்தான செயல்பாடுகள் என்றால் மிகையில்லை. அதே நேரத்தில் இந்த இரு பள்ளிகளும் மாணவர்களிடம் காட்டிய கெடுபிடிகளை இங்கே படித்த மாணவர்கள் எளிதில் மறந்துவிடமுடியாது. குறிப்பாக 11-ஆம் வகுப்பு படிக்கும்போது கடைப்பிடிக்கப்படும் கெடுபிடிகள் அளவில்லாதது.

10 மணிக்குத் தொடங்கும் பள்ளிக்கு 8.00 மணிக்குச் சென்றுவிடவேண்டும். 9.30 மணி வரை Study Hour. 9.30 – 9.45 வரை காலை உணவு நேரம். மாலை 4.00 மணிக்குப் பள்ளி நேரம் முடியும். மாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை சிற்றுண்டி நேரம். 4.30 மணி முதல் 6.00 மணி வரை மீண்டும் Study Hour நடைபெறும்.

யாரும் இந்தக் கூடுதல் படிப்பு நேரத்தில் அந்தக் காலத்தில் டிமிக்கி கொடுக்கமுடியாது. இதற்கும் வருகைப் பதிவும் உண்டு. திரு இருதயப் பள்ளி சாமியார் ஸ்கூல் என்றும் தூய வளனார் பெண்கள் பள்ளி மொட்டச்சி ஸ்கூல் என்று பட்டப் பெயரில்தான் அழைக்கப்படும். கிராம மக்களுக்கும் சாமியார் ஸ்கூல் என்றால் ஆம்பள பிள்ளைகளும், மொட்டச்சி ஸ்கூல் என்றால் பொம்பள பிள்ளைகள் படிக்கும் பள்ளி என்று உண்மை பெயர் அறியாமல் இருந்தார்கள் என்பதும் சுவாரஸ்யமான செய்தியாகும்

பொங்கல் விழா விடுமுறையில் மாட்டுப் பொங்கலுக்கு இருப் பள்ளிகளும் நடைபெறும். யாரும் எளிதில் விடுப்பு எடுக்கமுடியாது. மாணவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் பெற்றோர்கள் பள்ளிகளுக்குச் சென்று விடுப்பு மடல் எழுதித் தரவேண்டும். உறவினர்களின் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்குச் செல்ல மாணவர்களுக்கு விடுப்பு கிடையாது.

மீறிச் சென்றால் அடுத்தநாள் பெற்றோர்கள் செல்லவேண்டும். அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்தமைக்கு அபராதக் கட்டணம் செலுத்தவேண்டும். மாணவன் முட்டிப்போட்டு இருக்கவேண்டும். மாணவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் இறந்தால் அரைநாள் மட்டுமே விடுப்பு வழங்கப்படும். படித்த காலத்தில் கொடுமையாக நினைத்த மாணவர்கள், பெரிய அரசுப் பதவிக்கு வந்த நிலையில் கொடுமையாக எண்ணாமல் ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டதாகப் படித்த மாணவர்கள் குறிப்பிடுவது கிறித்தவக் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் அர்ப்பணிப்பு நிறைந்தவை என்பதற்குச் சான்றாக இன்றும் அந்தக் கல்வி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சாமியார் ஸ்கூலில் படித்தவர்கள்தான் மக்கள் கலைஞர் என்று போற்றப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், நடிகர் கராத்தே மணியும் ஆவர். இந்திய நெருக்கடிக்கால நிலையில் (மிசா சட்டம்) கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கீழக் கல்கண்டார்கோட்டையைச் சார்ந்த பொன்மலை சாக்ரடீஸ் இந்தப் பள்ளியின் மாணவர்.

 பொன்மலை(பட்டி) பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கோட்டம்

பொன்மலை பேரூராட்சியாக இருந்து வந்தது. இதன் தலைவராக இடது கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வையாபுரி என்பவர் தலைவராக இருந்து வந்தார். 1972இல் பொன்மலை பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பொன்மலை நகராட்சி பொன்மலை நகரியத்தை (Ponmalai Township) உள்ளடக்காமல் பொன்மலைப்பட்டியை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. இந்த நகராட்சியின் எல்லை சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட், கல்லுக்குழி, மன்னார்புரம் வரை இருந்துள்ளது. இந்த நகராட்சிக்கும் பேரூராட்சியாக இருந்தபோது தலைவராக இருந்த வையாபுரி அவர்கள் தலைவராக இருந்தார். பின்னர் ரெத்தினவேலு, கடலை மிட்டா இராமசாமி தலைவராக இருந்தனர். பொன்மலை நகராட்சி அலுவலகம் பொன்மலையின் அடிவாரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது.

பொன்மலை நகரத் திமுக செயலாளராக நகரியம் சி. கண்ணையன் இருந்தார். 1993இல் வைகோ நீக்கத்திற்குப் பிறகு கண்ணையன் மதிமுகவிற்குச் சென்றுவிட, நகரச் செயலாளராக நாகவேணி வேலு அவர்கள் பல ஆண்டு காலம் இருந்தார். அதிமுகவின் தொடக்கக் காலத்தில் பொன்மலை நகர அதிமுக செயலாளராகப் பொன்மலை டேனியல் இருந்தார். இவரைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் அதிமுகவிற்கு ஆளுமைகள் பொன்மலையில் அமையவில்லை என்பது வியப்பிற்குரிய செய்தியாகும்.

பொன்மலை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியாகவே இன்றும் இருந்து வருகின்றது. திருச்சி – 1, திருச்சி – 2 சட்டமன்றத் தொகுதிகள் சீரமைக்கப்பட்டு முறையே திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு என்று மாற்றம் பெற்றது. இந்த வேளையில் தமிழகத்தின் மிகப்பெரிய சட்டமன்றத் தொகுதியாக உள்ளது என்பதால் திருவெறும்பூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பொன்மலையை மையப்படுத்திப் புதிய சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் திட்டம் இருந்தது. அப்படிப் புதிதாக உருவாகும் பொன்மலை சட்டமன்றத் தொகுதி அதிமுகவிற்குச் சாதகமாக இருக்காது என்பதால் பொன்மலை புதிய சட்டமன்றத் தொகுதியாக உருப்பெறாமல் கருவிலே அழிந்தது என்பது பொன்மலை, பொன்மலைப்பட்டி மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்தியாக அமைந்தது.

1994இல் நகராட்சியாக இருந்த திருச்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது திருவரங்கம் நகராட்சி, பொன்மலை நகராட்சி பகுதிகளும் திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், அரியமங்கலம், காட்டூர், கீழ கல்கண்டார் கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை போன்ற பகுதிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டது. நகராட்சி என்ற நிலையைப் பொன்மலை இழந்தாலும் தற்போது மாநகராட்சியில் பொன்மலை ஒரு கோட்டமாகத் திகழ்ந்து வருகின்றது.                                                                                                                                                                                                                                                                                                                                       

சந்தா 2

உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டாம் – கலைஞர்

1984-இல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சித் தலைவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை முதல்வராய் இருந்த எம்.ஜி.ஆர். நடைமுறைப்படுத்தினார். பொன்மலை நகராட்சியின் தலைவர் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவைத் திமுகவின் சார்பில் கடலைமிட்டாய் இராமசாமி மனு தாக்கல் செய்துவிட்டார். இடது கம்யூனிஸ்ட் கட்சியும் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துவிட்டது. பொன்மலை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் திமுகவின் கூட்டணி கட்சியான இடது கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் பொன்மலை நகராட்சி தலைவர் பதவிக்குக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டு விட்டது.

இடையில் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டுவிட்டது. கட்சியின் சின்னம் கோரி வேட்பாளர்கள் கட்சியின் கடிதத்தையும் கொடுத்துவிட்டார்கள். அதன்படி கடலைமிட்டாய் இராமசாமிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் ஒதுக்கப்பட்டது. அடுத்து வேட்பு மனுவைத் திரும்பப்பெறும் நாளின்போது திமுக வேட்பாளர் மனுவைத் திரும்பப் பெறவில்லை. இதனால் திமுக வேட்பாளர் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. திமுக தலைவர் கண்டித்துச் சொல்லியும் இராமசாமி போட்டியிலிருந்து விலகி இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு என்று அறிவிக்கவில்லை.

இந்நிலையில் பொன்மலைப்பட்டியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது கலைஞர், “தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவின் சின்னம் உதயசூரியனுக்கும் அதன் தோழமைக் கட்சிகளின் சின்னத்திற்கும் வாக்களியுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டு உரையாற்றி வருகிறேன். பொன்மலை நகராட்சி தேர்தலில், தோழமைக் கட்சியான இடது கம்யூ. கட்சியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரச் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அண்ணா கண்ட சின்னம், அண்ணா உருவாக்கிய சின்னம், திமுகவின் சின்னம் உதயசூரியனுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கவேண்டிய நான், பொன்மலையில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது மனதிற்கு நெருடலாய் இருந்தாலும் தோழமைக் கட்சிகளும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்” என்று உரையாற்றினார். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையில் உதயசூரியன் வெற்றிபெற்றது. தோழமைக் கட்சி தோல்வியடைந்தது. உதயசூரியன் வெற்றிபெற்றாலும் கலைஞரின் வேண்டுகோளைப் பொன்மலை நகரத் திமுகவினர் புறம்தள்ளினார்கள் என்பது அப்போதைய திமுக தலைமைக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கண்ணீரில் பொன்மலைப்பட்டி

பொன்மலைப்பட்டியில் வாழ்ந்து வந்த நகரியம் சி.கண்ணையன் திமுக நகரச் செயலராக இருந்தார். இவர் ஒரு இரயில்வே தொழிலாளி. திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை உருவாக்கிக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். இரயில்வே கூட்டுறவு நாணயச் சங்கத் தேர்தலில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை வெற்றிபெறச் செய்து எல்லாரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவரின் முயற்சியால்தான் 1988ஆம் ஆண்டுகளில் வைகோ பொன்மலை இரயில்வே முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக இருந்தார். வைகோவிற்கும் கண்ணையனுக்கும் நல்ல உறவு இருந்தது. 1993இல் வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோது கண்ணையன் திமுகவிலிருந்து விலகினார். வைகோ தொடங்கிய மறுமலர்ச்சி திமுகவின் அமைப்புச் செயலாளராகக் கண்ணையன் சென்னையிலே தங்கிக், கட்சிப் பணிகளைப் பல ஆண்டுகாலம் செய்துவந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி. கண்ணையன் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். அப்போது பல கட்சித் தலைவர்களும் இரங்கலை உரையாற்றினார்கள்.

திமுவோடு மதிமுக நல்லுறவு இல்லாத நிலையிலும் திமுகவின் சார்பில் இரங்கல் உரையில் கண்ணையனின் தியாகம் போற்றப்பட்டது. வைகோ சி. கண்ணையனுக்காக ஆற்றிய இரங்கல் உரையைத் தொடங்கியது முதல் முடிக்கும் வரை கண்ணீர் பெருக்குடன் நா தழுதழுக்க உரையாற்றினார். வைகோவின் உரையைக் கேட்ட கூட்டத்தினர் கண்களிலும் நீர் வழிந்துகொண்டிருந்தது என்பது பொன்மலைப்பட்டி வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆங்கிலோ இந்தியர்கள் – சட்டைக்காரன், சட்டைக்காரி

பொன்மலைப்பட்டியின் வரலாற்றில் ஆங்கிலோ இந்தியர்களின் குடியேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆங்கிலோ இந்தியர்கள் பொன்மலை பணிமனையில் அதிகாரிகளாக இருந்தார்கள். தொழிலாளர்கள் நிலையில் அதிகம் இல்லை. ஆனால் நீராவியால் ஓடும் கரி இஞ்சின் ஓட்டும் டிரைவர்களாக ஆங்கிலோ இந்தியர்கள் இருந்தார்கள். அவர்களின் திடகாத்திரமான உயர்ந்த உடல்வாகு, பழுப்பு அல்லது நீல நிற விழிகள் இவர்களின் அடையாளங்கள். ஆண்கள் எப்போதும் பேண்ட், சாட்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். பெண்கள் ஆண்களைப்போல் மேல்சட்டையும் முட்டியை மறைக்கும் ஸ்கர்ட் போட்டியிருப்பார்கள்.

பெண்கள் சிவப்பு நிற உதட்டுச் சாயம், பா கட்டிங் செய்யப்பட்ட தலை முடி அவர்களின் அடையாளங்கள். பொன்மலைப்பட்டியில் விடுதலைக்கு முன்பு ஆங்கிலோ இந்தியர்களில் ஆண்களைச் சட்டைக்காரன் என்றும் பெண்களைச் சட்டைக்காரி என்றும் இனக்குழு மரபின் சொலவடையில் அழைத்தார்கள். இந்திய விடுதலைக்கு முன்பு ஆண்கள், பெண்கள் சட்டை போடும் வழக்கம் இல்லை. குறிப்பாகச் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் அந்த உரிமை இல்லை. ஆண்கள் மேலே துண்டு அணிந்துகொள்ளலாம். பெண்கள் தங்களின் முந்தானையால் மார்பகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்ற சமூகச் சூழல்தான் இருந்தது. அதனால்தான் ஆங்கிலோ இந்தியர்களை, நிறத்தை வைத்து வெள்ளைக்காரன், வெள்ளைக்காரி என்றும் மேல் சட்டை அணிந்திருப்பதால் அவர்களைச் சட்டைக்காரன், சட்டைக்காரி என்று அழைத்தார்கள் என்பதைச் சமூக வரலாற்றின் பின்புலத்தோடு புரிந்துகொள்ளவேண்டும்.

இந்திய விடுதலைக்கு முன்பு ஆங்கிலோ இந்தியர்கள் பொன்மலைப்பட்டி மக்களிடம் கொஞ்சம் அதிகாரத் தோரணையோடு நடந்து கொண்டதாகவம், விடுதலைக்குப் பின் அந்த அதிகாரம் இல்லாமல் இருந்தார்கள் என்றும் பலர் தங்களின் தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்ற தகவலும் உள்ளது. ஆங்கிலோ இந்தியர்கள் என்பது ஆங்கிலேயத் தந்தைக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவர்கள் என்ற பொருள் உடையது.

அகில இந்திய அளவில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு என்று பல அமைப்புகள் உள்ளன. அதில் தமிழநாட்டில் திருச்சி கிளையும் பொன்மலை கிளையும் அடங்கும். இவர்கள் வாழ்ந்த காலத்தில் சம்பாதித்த ஊதியத்ததைச் சேர்த்து வைக்காமல் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். கிறிஸ்மஸ் விழாவின்போது பொன்மலைப்பட்டி விழாக்கோலம் பூண்டிருக்குமாம்.

மின்னும் விளக்குகளைப் பார்த்தால் நாம் இத்தாலியில் அல்லது ரோம் நகரில் இருக்கின்றோமா என்ற கனவு மேலிடும் என்றால் ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்வு சூழலை நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தற்போது இவர்களில் பெரும்பகுதியினர் பொன்மலைப்பட்டியில் குடியிருக்கவில்லை. சிறு எண்ணிக்கை யில்தான் வாழ்ந்து வருகிறார்கள். திருச்சி மற்றும் மற்ற மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள்.

என்றாலும் பொன்மலைப்பட்டியில் வாழ்ந்து வரும் ஆங்கிலோ இந்தியர்கள் தங்களுக்கான வழிபாட்டு தலமாகப் பொன்மலைப்பட்டி பழனியப்பா ரைஸ்மில்லின் பின்பகுதியில் கிரேட் கிங் செப்பல் என்றும் சர்ச் உள்ளது. ஞாயிறுதோறும் காலை சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது அனைத்து ஆங்கிலோ இந்தியர்கள் கலந்துகொள்வார்கள். தற்போது நடைபெறும் திருமணங்களிலும் மது அருந்தி, ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆடும் நடனம் என்னும் அவர்களின் பண்பாட்டு செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

1971இல் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 333ஆம் விதியின்படி தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியைச் சட்டமன்ற உறுப்பினராக ஆளுநர் நியமனம் செய்யவேண்டும். அதன்படி நியமிக்கப்பட்ட திருமதி ஆல்டா எம். பவுலர் (Alda M. Fowler) பொன்மலைப்பட்டியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

பொன்மலைப்பட்டியின் புகழ்

  • பொன்மலைப்பட்டி இந்திய விடுதலைக்கு முன்பே மின்சாரம் வந்துள்ளது.
  • பொன்மலைப்பட்டிக்கு 1950இல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. தடம் எண்.34. காலை 8.30 மணிக்குப் புறப்படும் இந்தப் பேருந்தும் பொன்மலைப் பட்டியின் காதல் வாகனம் என்று அழைக்கப்பட்டது.
  • பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஜெனித்தா உலக உடல் ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டிகளில் உலகம் முழுவதும் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். 2019ஆம் ஆண்டு சுலோவாக்கியா நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று ஆறாவது  முறை தங்கம் வென்றுள்ளார். இவருக்குத் தமிழ்நாடு முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா 2.50 இலட்சம் பரிசுத்தொகை வழங்கியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் 25,000 பரிசுத்தொகை வழங்கியுள்ளார்.
  • இரயில்வே தொழிற்சாலைகளில் இயங்கிவரும் RLU (Railway Labour Union) என்னும் சங்கத்தின் தமிழ்நாடு, கேரள, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய சங்கங்களின் தலைவராக இரயில்வேயில் பணியாற்றிய கே. சின்னசாமி இருந்தார். இவர் பொன்மலைப்பட்டியில் வாழ்ந்து வந்தவர் என்பது சிறப்பான செய்தியாகும். (தண்ணீர் அமைப்பின் செயலாளர், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கே.சி.நீலமேகத்தின் தந்தையார்)
  • இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்து இருமுறை தேர்வு செய்யப்பட்ட ப.குமார் அவர்கள் உறுப்பினராக இருந்த 10 ஆண்டு காலமும் பொன்மலைப்பட்டியில் சாமியார் ஸ்கூல் அருகில் வாழ்ந்து வந்தார். (தற்போது மொராய் சிட்டியில் வாழ்ந்து வருகிறார்)
  • இப்பகுதியில் தொடக்கக் காலத்தில் டென்ட் கொட்டகையாகத் தொடங்கப்பட்ட சரவணா திரையரங்கம், பின்னர் முல்லை நகர் பகுதியில் உள்ள கட்டிடப் பகுதியில் செயல்பட்டு வந்தது. 2000 ஆண்டுக்குப் பின் அந்தத் திரையரங்கம் செயல்பாட்டில் இல்லை.

பொன்மலைப்பட்டி – பொன்மலை நகரம் – பகுதி – 3 – திருத்தம்

  1. பொன்மலை நகராட்சித் தேர்தலில் திமுக சார்பாக கடலை மிட்டாய் ராமசாமி போட்டியிடவில்லை. அன்றைய பொன்மலை நகர செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சில பிரச்சனையின் காரணமாக அவரே தலைமையின் எதிர்ப்பை மீறி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கடலைமிட்டாய் ராமசாமி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். ராமானுஜத்திற்கு கம்யூனிஸ்டுகளும்தான் கடுமையான போட்டி நிலவியது 99% திமுகவினர் ராமானுஜத்திற்கு தேர்தல் வேலை செய்தனர். செம்பட்டு மற்றும் ஏர்போர்ட் பகுதியில் அதிமுகவிற்கு அதிக வாக்கு கிடைத்ததால் இறுதியில் அதிமுக வேட்பாளர் கடலைமிட்டாய் ராமசாமி வெற்றி பெற்றார்.
  2. பொன்மலை நகரம் என்பது வேறு பொன்மலை நகரியம் என்பது வேறு. பொன்மலை நகரியத்தில் உயர்திரு கண்ணையன் அவர்கள் திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. பொன்மலை நகரத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது. அன்றைய பொன்மலை நகரம் என்பது டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் சங்கிலியாண்டபுரம் செந்தண்ணீர்புரம் பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு செம்பட்டு ஏர்போர்ட் பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். அன்றைக்கு 20 வார்டுகள் கொண்டதாக பொன்மலை நகரம் அமைந்திருந்தது. பொன்மலை நகரியம் என்பது தற்போது மாநகராட்சி 32வது வார்டு உட்பட்ட பகுதிகள் மட்டுமே நகரியம் ஆக இருந்தது அதில் 11 வார்டுகள் அடங்கியிருந்தது. நகரியத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் கிடையாது. ரயில்வே நிர்வாகமே தனி தேர்தலை நடத்தி பிரதிநிதிகளை தேர்வு செய்யும். மாநகராட்சி ஆன பின்புதான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முதல் மாமன்ற உறுப்பினராக உயர்திரு ஜெயசீலன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4.உள்ளாட்சித் தேர்தலின் தலைமையின் உத்தரவுபடி நடக்காததால் பொன்மலை நகர செயலாளர் பொறுப்பிலிருந்து ராமானுஜம் நீக்கப்பட்டு எஸ்ஏ பீர் முகமது என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒரு வார காலத்திற்குள் அவரும் நீக்கப்பட்டு எனது தந்தை நாகவேணி வேலு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு வரை நகர செயலாளராகவும் பகுதி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். திருச்சி திமுக வரலாற்று திருப்புமுனை மாநாடு என்று அழைக்கப்பட்ட 1996 ஆம் ஆண்டு கொட்டப்பட்டு நடந்த மாநாடு இவரின் பெரும் பங்களிப்போடு நடைபெற்றது.

மேலும், உண்மைகளைத் தெரிந்து எழுத வேண்டும், உரிய ஆதாரங்களோடு எழுதவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று  34 ஆவது வட்ட திமுக செயலாளர் நாகவேணி வே. மாரிமுத்து தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிட்டுள்ள திருத்தங்கள் கட்டுரையில் மேற்கொள்ளப்படும் (கட்டுரையாளர்)

-ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.