திருச்சியின் மகுடம் பொன்மலை – பகுதி -2

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0

திருச்சியில் உருவான நகரியப் பகுதிதான் பொன்மலை நகரியம். நகரியம் என்றால் என்ன? என்ற கேள்வி எழும். நகரம் என்ற சொல் நமக்குப் புரியும். நகரியம் என்பது புரியாது. நகராக இயம்பும் பகுதி என்றால் நகரியத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். அப்படியானால் பொன்மலை முழுமையான நகரம் அல்ல. நகரமாக வரையறுக்கப்பட்டது. திருச்சி நகராட்சியோடு இணைக்கப்படவில்லை. நகராட்சி வார்டுகள் இந்த நகரியப் பகுதியில் இல்லை. அதற்குப் பதிலாக இரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களைக் கொண்டு காலனி கமிட்டி என்ற அமைப்பை உருவாக்கியது. அதற்கான தேர்தல்கள் நடைபெற்றுக் காலனி கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வழியாகக் காலனியில் இருந்த குடியிருப்புகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நகராட்சியிடமிருந்து எந்த வசதியையும் இரயில்வே நிர்வாகம் பெற்றிருக்கவில்லை என்பது முக்கியமான செய்தியாகும்.

நகரியத்தின் எல்லைகள்

பொன்மலை நகரியம் என்பது பொன்மலை இரயில்வே பணிமனையையும் குடியிருப்பு பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். கிழக்கே மேலகல்கண்டார் கோட்டை அர்சுணன் நகர் பகுதியின் பின்பகுதி தொடங்கித் தற்போதைய மஞ்சத்திடல் இரயில்நிலையம் தாண்டி முன்னாள் இராணுவத்தினர் குடியிருப்பின் மேற்கு பகுதியைத் தாண்டி அம்பிகாபுரம் வரை சுமார் 4 கி.மீ. நீளம் கொண்டது. வடக்கில் அம்பிகாபுரம் தொடங்கி மேற்குத் திசையில் திருச்சி – சென்னை இரயில் பாதை தாண்டி செந்தண்ணீர்புரம் மேம்பாலம் வரை 4 கி.மீ. தூரம் கொண்டது. மேற்கில் மேம்பாலம் தொடங்கித் தெற்கு நோக்கித் தற்போதைய ஜி கார்னர், பொன்மலைப்பட்டி சாலை வரை உள்ள 2 கி.மீ. தூரம் கொண்டது. தெற்கில், பொன்மலைப்பட்டி சாலையை ஒட்டி, கிழக்கில் மாவடி குளத்தின் வடக்கு கரை வரை நகரியத்தின் எல்லை பரந்து விரிந்தது. சுமார் 14 கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த நகரியத்தின் எல்லைக்குள் 80களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட டீசல் மெக்கானிகல் பணிமனையும் அடங்கும். பொன்மலை நகரியத்தின் எல்லைகள் மட்டும் விரிந்த பரப்பளவைக் கொண்டது என்பது மட்டுமல்ல…. தொழிலாளர்களுக்குப் பல வசதிகளையும் இரயில்வே நிர்வாகம் செய்து கொடுத்தது என்றால் அது மிகையில்லாத உண்மையாகும். இன்றைய நகரத் திட்டமிடலில் இல்லாத பல திட்டங்கள் இந்திய விடுதலைக்கு முன்பே பொன்மலை நகரியத்தில் சாத்தியப்பட்டிருந்தது என்ற பேரூண்மையை நாம் அறிந்தால் வியப்பின் எல்லைக்குச் சென்றுவிடுவோம்.

‌சந்தா 1

நகரியத்தின் அமைப்பு

பொன்மலை பணிமனையின் கிழக்கே தொழிலாளர்களுக்கான  ‘சி’ டை குடியிருப்புகள் இருந்தன. இந்தக் குடியிருப்பில் கலாசி தொழிலாளர்கள் குடியிருந்தார்கள். ஒரு அறை, ஒரு திண்ணையோடும் குடிநீர் வசதியும் கொண்டு அமைக்கப்பட்டது. 80களுக்குப் பின் வீடுகளிலே கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த வசதி வழங்கப்படுவதற்கு முன்பு 40 வீடுகளுக்குப் பின் உள்ள பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்களும், மேற்கூரை இல்லாத பொதுக் குளியல் இடமும், துணிகள் துவைத்துக் கொள்வதற்கான வசதியான கல் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

பொன்மலை சந்தையின் வலப்புறத்தில் பம்பிங் ஸ்டேஷன் வரையுள்ள வடக்குப் பகுதிகள் முழுவதும் சி டை குடியிருப்புகள் அமைந்திருந்தன. இந்தக் குடியிருப்பின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எல்லாத் திசைகளிலும் சாலைகள் 1 கி.மீ. தொடங்கி 1.50 கி.மீ. தூரம் கொண்டது. தரமான சாலைகளும் சாலைகளின் சந்திப்புகளில் உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலையின் மட்டத்தை விடச் சுமார் 4 அடிகள் குறைவாகவே குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலைகளை ஒட்டி 15 அடிக்குப் பாதாளச் சாக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மரங்கள் வளர்க்கப்பட்டன. உயர்ந்த மரநிழல்கள் நடந்து செல்லும் அலுப்பைக் கொடுக்காது. இல்லங்களின் பின்புறம் மா, தென்னை, நாவல், கொய்யா போன்ற மரங்களும், இல்லங்களின் முன்புறம் பல்வேறு செடிகள் வளர்க்கப்பட்டு ஒட்டுமொத்த இரயில்வே குடியிருப்புகள் ஒரு நந்தவனம்போல் அழகு மிளிர்ந்திருந்தது.

‘டி’ டை என்பது மஞ்சத்திடல் இரயில் நிலையம் தொடங்கிப் பொன்மலை நார் டி கேட்டிற்கு வடக்குப் பக்கத்தில் இருந்த குடியிருப்புகள் ஆகும். இதில் இரண்டு அறைகள் இருக்கும். இந்தக் குடியிருப்பில் ஸ்கில்டு தொழிலாளர்கள் குடியிருந்தார்கள்.

எ டை என்பது போர்மேன், அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்ந்த வசதியான வீடுகள். இது ஆர்மரிக்கேட் தொடங்கிப் பொன்மலை இன்ஸ்டிடியூட் வரையிலும் தெற்கில் பொன்மலைப்பட்டி வரை பரப்பளவு கொண்டது.

எ டை என்பது இன்ஸ்டிடியூட் தொடங்கி மேற்கே பொன்மலை அடிவாரம் வரை இந்தக் குடியிருப்புகள் இருந்தன. இதில் உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் போன்றவர்கள் குடியிருந்தார்கள். இதில் அவுட் ஹவுஸ் இருக்கும். அதில் வீட்டில் பணியாற்றுபவர்கள், கார் ஓட்டுபவர்கள் தங்கிக் கொள்ளலாம் என்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

ஐ டை என்ற குடியிருப்புகள் இரயில்வே விளையாட்டு அரங்கத்திற்கு மேற்கே இருந்தன. இதில் மேலாளர்கள், உதவி மேலாளர்கள், இரயில்வே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் போன்றவர்கள் சம்பளத்தின் அடிப்படையில் தங்குவதற்கு உரிமை வழங்கப்படும்.

ஜி டை என்பது பொதுமேலாளர்கள் குடியிருப்புகள், விருந்தினர் தங்கும் விடுதிகள் போன்றவை பங்களா டைப்பில் இருக்கும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு வாட்ச்மேன் இருப்பார். பணியாளர்கள் தங்குவதற்கு இங்கும் அவுட் ஹவுஸ் போன்றவையும் இருந்தன.

பொன்மலை இரயில்வே நிலையத்திற்கு எதிர்ப்புறம் இரயில்வே நிலையத்தில் பணியாற்றும் ஸ்டேஷன் மாஸ்டர், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் போன்றவர்கள் குடியிருக்க எ டைப்பில் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் டீசல் பணிமனையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு டி டைப்பில் வீடுகள் அடுக்கு அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தன.

வெள்ளமெனப் பாய்ந்த நீர் வசதி

தொழிற்சாலைக்கு அடிப்படை நீர் வசதியை அறிந்த இரயில்வே பணிமனை நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தையோ, நகர நிர்வாகத்தையே நம்பாமல் தானே காவிரிக் கரையின் தென்புறத்தில் உள்ள சர்க்கார்பாளையத்திலிருந்து காவிரி நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இங்கேயுள்ள இராட்சத மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்படும் நீர் பொன்மலையில் சேகரித்து வைக்கப்படும். இதற்காகப் பொன்மலைக் குன்றில் மலை குடையப்பட்டு நீர் சேகரித்து வைக்கப்படுகின்றது. மேலும் நீர் இங்கே சுத்தம் செய்யப்படுகின்றது. இங்கிருந்து இரயில்வே பணிமனைக்கும், பணியாளர்கள் குடியிருப்பு, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட டீசல் பணிமனைக்கும் நீர் கொடுக்கப்படுகின்றது. பொன்மலை இரயில்நிலையம் மற்றும் திருச்சி இரயில் சந்திப்பு நிலையத்திற்குத் தேவைப்படும் நீர் தேவைகள் இங்கிருந்தே வழங்கப்படுகின்றது. குடியிருப்பு பகுதிகளில் காலை 5.30 மணியிலிருந்து காலை 9.30 மணி வரையும் மாலை 4.00 மணியிலிருந்து 6.30 மணிவரை காவிரி நீர் கொடுக்கப்படும். பொன்மலை சந்தையில் ஒரு பெரிய இரும்பினாலான நீர் தேக்கத் தொட்டி இருந்தது. (அண்மைக் காலத்தில் அது இடிக்கப்பட்டுள்ளது) திருச்சி நகரத்தில் தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் பொன்மலையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதில்லை. மேலகல்கண்டார்கோட்டை, மாஜி இராணுவத்தினர் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் பொன்மலை பகுதிகளில் காவிரி நீரைப் பிடித்துக் கொண்டு குடிநீராகப் பயன்படுத்தினார்கள். இதற்கு இரயில்வே பணிமனை நிர்வாகம் எந்தத் தடையும் சொன்னதில்லை என்பது பாராட்டுக்குரிய செய்தியாகும். தொழிலாளர்கள் தங்களின் உடைகளைப் பணிமனையில் கொடுக்கும் சோப்பைக் கொண்டு துவைத்துக் கொள்வார்கள். பொன்மலையில் தண்ணீர் பஞ்சமில்லாமல் வெள்ளமாய்ப் பாய்ந்த வரலாறு பொன்மலைக்கு மட்டுமே என்றால் மிகையில்லை.

பம்பிங் ஸ்டேஷன் 

பொன்மலை பணிமனை, குடியிருப்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்கள் 15 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை மூலமும் மழைநீர் குடியிருப்புகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாகவும் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பம்பிங் ஸ்டேஷன் சென்றுவிடும். பம்பிங் ஸ்டேஷனுக்குத் தெற்கு மாவடிக்குளம் இருந்தது. இந்தப் பம்பிங் ஸ்டேஷனில் நீரில் வரும் திடக்கழிவுகள் அனைத்தும் துர்நாற்றம் ஏற்படாத அளவிற்கு இராசயனம் மூலம் நீரில் கலக்கும் அளவிற்கு மாற்றப்படும். பின்னர் அந்தக் கழிவு நீர் அர்சுணன் நகர் வழியாக ஆலத்தூர் – கீழக்கல்கண்டார்கோட்டைக்கான ஆற்றுப்பாலத்தின் மேற்கே உய்யகொண்டான் ஆற்றில் கலந்துவிடப்படும். இந்த நீர் விவசாயத்திற்குப் பயன்படும் அளவிற்கு நீர் சுத்திகரிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகளிடம் எந்த எதிர்ப்பும் எழவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். இந்திய விடுதலைக்கு 20 ஆண்டுக்கு முன்பு செய்யப்பட்ட இந்த முறைதான் திருச்சி நகராட்சி 70களில்தான் கடைப்பிடித்தது. பொன்மலையில் உள்ள இந்தப் பம்பிங் ஸ்டேஷன் முறை இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்டது என்பது பொன்மலைக்குப் பெருமையாகும். பொன்மலையில் எவ்வளவு மழை பெய்தாலும், பெய்து முடித்த 10 நிமிடங்களில் எல்லாப் பகுதிகளிலும் நீர் வடிந்துவிடும். வடிந்த நீர் அனைத்தும் பம்பிங் ஸ்டேஷன் சென்றுவிடும். இந்தப் பம்பிங் ஸ்டேஷன் 24 மணி நேரமும் இயங்கி வந்தது. தற்போது சி டை மக்கள் குடியிருப்பு பகுதிகள் காலியாக உள்ளன. இதனால் பம்பிங் ஸ்டேஷனுக்குக் குறைவான நீரே வருகின்றன. இந்த நீர் சுத்திரிகரிப்படாமல் அப்படியே மாவடி குளத்தில் விடப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன.

பள்ளிக்கூடங்கள்

சந்தா 2

பொன்மலை சி டை குடியிருப்பிலும் நார் டி குடியிருப்பிலும் 1 முதல் 5 வரையிலான தொடக்கப்பள்ளிகள் இருந்தன. உயர்நிலைப்பள்ளிகள் இரயில்வே பணி மனைக்கு மேற்கே அமைக்கப்பட்டிருந்தன. தற்போது KVயாக மாற்றப்பட்டுள்ள பள்ளிக்கூடம் முதலில் ஆங்கிலோ இந்தியர்கள் மட்டுமே படிக்கக்கூடிய பள்ளியாக இருந்தது. இந்திய விடுதலைக்குப்பின் 60களில் ஆங்கிலோ இந்தியர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது. இந்நிலையில் ஆண்,பெண்கள் என இருபாலர் படிக்கும் தமிழ் வழியிலான உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. 80களில் அறிமுகப்படுத்த மேல்நிலைப் பள்ளியாகவும் மாற்றப்பட்டது.

2010இல் தமிழ்வழி படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை குறையத் தொடங்கியது. பின்னர் அந்த இருபாலர் பள்ளி செயல்படாமல் இருந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அது மத்தியக் கல்வி வாரியப் பள்ளியாக மாற்றப்பட்டுச் செயல்பட்டு வருகின்றது. ஆங்கில மீடியம் வழியிலான மேல்நிலை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. தட்டச்சுப் பயிற்சியும், சுருக்கெழுத்துப் பயிற்சியும் பெறப் பயிலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே மிகவும் குறைவான தொகையே வசூல் செய்யப்பட்டது.

திருமண அரங்கம்

தொடக்கத்தில் இரயில்வே இன்ஸ்டிடியூட்டில்தான் திருமணங்கள் நடைபெறும். காலையில் திருமணங்கள் நடைபெறும். காலை, வேளைகளில் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும். மாலை வேளைகளில் ஆங்கிலோ இந்தியர் காலங்களில் இங்குப் பால்ரூம் நடனம் நடைபெறும். இதற்காக இன்ஸ்டிடியூட்டின் தரை மரத்தால் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் நடனம் ஆடுவோருக்குக் காலில் வலி ஏற்படாது. மேலும் நடனம் ஆடும் ஆண்களின் ஷூக்கள் மரத்தில் மோதுவதால் ஏற்படும் ஒருவித இசை கலந்த ஓசை நடனம் ஆடுவோருக்கு உற்சாகம் தருவதாக அமையும். ஆங்கிலோ இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்தபோது அங்கே படிப்பதற்கு நாளிதழ்கள் போடப்பட்டன. காலை, மாலை நேரங்களில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருமண நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது தேவையை இன்ஸ்டிடியூட்டால் நிறைவேற்ற முடியாமல் போனது. 90களில் இரயில்வே இன்ஸ்டியூட்டு பூங்கா அருகே ஒரு திருமண அரங்கு கட்டப்பட்டது. அதற்கு அம்பேத்கர் சமுதாய மன்றம் என்று பெயரிடப்பட்டது. இதில் இரயில்வே தொழிலாளர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாமல் உறவினர்களின் திருமணத்தையும் மிகக்குறைந்த செலவில் நடத்திக் கொள்ளலாம். திருமண அரங்கில் பயன்படுத்தப்படும் காவிரிநீருக்குத் தொகை வசூல் செய்யப்படுவதில்லை என்பது சிறப்பான செய்தியாகும்.

பொழுதுபோக்கு மையங்கள்

பொன்மலை நகரியத்தில் பெரிய அளவில் பொழுதுபோக்கு மையங்கள் இல்லை. சி டை, டி டை, எ டை போன்ற குடியிருப்புப் பகுதிகளில் நூலகமும் படிப்பகமும் செயல்பட்டு வந்தன. இந்தப் படிப்பகத்தில் ஏறத்தாழ எல்லா நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் இருக்கும். நூலகத்தில் உறுப்பினர் தொகை செலுத்தி நூல்களை வீட்டில் எடுத்துப் படிக்கலாம். இரயில்வே தொழிலாளர்கள், அவர்களின் பிள்ளைகளைத் தவிர்த்து மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற கண்டிப்பு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. இரயில்வே பணி மனையின் முதன்மை வாயிலுக்கு எதிராக இரயில்வே சினிமா அரங்கம் செயல்பட்டு வந்தது. தினசரி 2 காட்சிகள் நடைபெற்றன. சனி,ஞாயிறுகளில் மட்டும் 3 காட்சிகள் நடைபெற்றன. இதற்கான கட்டணம் மிகவும் குறைவு. 80களில் மூன்றாம் வகுப்பு 50 பைசா இரண்டாம் வகுப்பு 80 பைசா முதல் வகுப்பு ரூ.1.10 பைசா என்றிருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திரையரங்கம் மூடப்பட்டுவிட்டது. பின்னர் இங்கே செஸ், கேரம்போர்டு என்ற விளையாட்டுகள் நடைபெற்றன. சனி, ஞாயிறுகளில் மாலை நேரத்தில் தம்பேலா என்னும் சூதாட்டம் இரயில்வே நிர்வாகத்தின் அனுமதியோடு நடைபெற்றன. ஜி டை குடியிருப்பு பகுதிகளில் அதிகாரிகளுக்கான பொழுது போக்கு அரங்கம் இருந்தது. அங்கே பேட்மிட்டன், செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் நடந்தன.

ஆர்மரிகேட் எதிரில் மட்டுமே தேநீர் கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வந்தன. சந்தை அருகே அருணா பால் டிப்போ 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தது. பால், டீ, காபி எப்போதும் கிடைக்கும். மேலும் வெண்ணெய் பன் கிடைக்கும். ஒரு பன்னை எடுத்து நீளமான கத்தியால் 6 துண்டுகளாக வெட்டுவார்கள். ஆனால் பிரிக்கமாட்டார்கள். அந்தத் துண்டுகளுக்கு நடுவே வெண்ணெயை அந்தக் கத்தியைக் கொண்டு தடவிக் கொடுப்பார்கள். இரவு ஷிப்ட் முடித்து வரும் தொழிலாளர்கள் நள்ளிரவு 2.30 மணிக்குக் கூட்டமாக வெண்ணெய் பன்னை வெளுத்துவாங்கித் தேநீர் அருந்திவிட்டுத்தான் இல்லம் செல்வார்கள் என்றால் இதன் பெருமையை உணர்ந்து கொள்ளமுடியும். இந்த வெண்ணெய் பன் திருச்சியில் இதுவரை எங்கும் விற்பனை செய்யப்படவில்லை என்பது பொன்மலைக்குப் பெருமைதானே.

பொன்மலை சந்தை

1926இல் பொன்மலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சம்பள நாளிலும் செயல்பட்டு வந்தது. தற்போது சம்பளச் சந்தை கிடையாது என்பதால் ஞாயிறு தோறும் சந்தை நடைபெறுகின்றது. இந்தச் சந்தையில் குண்டூசி முதல் கடப்பாரை வரை கிடைக்கும். மளிகை கவரிகள் கிடைக்கும். பூட்டு, சாவி, குடை ரிப்பேர் சரி செய்து கொடுக்கப்படும். மார்க்கெட் காய்கறிகளும், கீழகல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், கிழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி கிராம மக்கள் விளைவிக்கும் காய்கறிகள் புத்தம் புதிதாய்க் கிடைக்கும். நாய் குட்டி, வாத்து, கோழி, கிளி போன்ற விலங்கினங்களும் கிடைக்கும். எல்லாவகையான பழவகைகள், கருவாடு, ஆற்றுமீன், கடல் மீன், ஆட்டிறைச்சி போன்றவை கிடைக்கும். இந்தச் சந்தையில் வருடம் 365 நாளும் பானை, சட்டியும் இளநீரும் கிடைக்கும். சந்தை இல்லாத நாள்களிலும் இவைகள் விற்கப்பட்டுக் கொண்டிருக்கும். வீட்டில் அலங்காரத்திற்கு வளர்க்கும் மீன், மீன் தொட்டிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். காலை 6.00 மணிக்குத் தொடங்கும் சந்தை இரவு 9.00 மணிக்கு முடியும். இங்கே காலையில் இட்லி, தோசை மதியம் வெரைட்டி ரைஸ் மாலையில் புரோட்டா கிடைக்கும். காலை முதல் இரவு வரை வடை, பஜ்ஜி, போண்டா போன்றவை கிடைத்துக்கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் விடப் பொன்மலை சந்தைக்குப் பெருமைத்தரக்கூடியது ‘சந்தை பால் சர்பத்’. சந்தைக்கு வரும் எல்லாரும் பால் சர்பத் குடிக்காமல் சந்தையை விட்டு வெளியே போகமுடியாது என்ற அளவிற்குச் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கும். கூட்டம் அதிகமானால் அரைமணி நேரம் காத்திருந்து பால் சர்பத் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வார்கள் என்றால் அதன் பெருமையை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

விளையாட்டு மைதானம்

இரயில்வே பணிமனைக்கு மேற்கே, பள்ளிக்கூடங்களுக்கு வடக்கே மிகப்பெரிய மைதானம் இன்றும் இருக்கிறது. காலை, மாலை இங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். ஆக்கி, புட்பால் பயிற்சிகள் நடைபெறும். கிரிக்கெட் பயிற்சியும் போட்டிகளும் நடைபெறும். இங்கே இந்திய இரயில்வே மண்டலங்களின் சாரணர் சந்திப்பு இங்கே நடைபெறும். அதுபோல அகில இந்திய அளவில் இரயில்வே மண்டலங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆக்கிப் போட்டிகள், புட்பால் போட்டிகள் என்று வருடம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இரயில்வே பணிமனையின் சார்பில் சுதந்திரத் தினம், குடியரசு தினம் இந்த மைதானத்தில்தான் நடைபெறும். பொன்மலையின் பிரசித்தி பெற்ற விளையாட்டு கட்டை பேட்மிட்டன். இந்த விளையாட்டை இளைஞர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலும் திறந்த வெளி அரங்கிலும் ஆர்மரிக்கேட் அருகில் உள்ள மைதானத்திலும் நடைபெறும். இந்தக் கட்டைபேட் பூப்பந்தாட்டம் வேறு எங்கும் நடைபெற்றதில்லை.

நகரியத்தின் தனிச் சிறப்புகள்

 • இங்கே 60% தொழிலாளர்கள் நாகப்பட்டினத்திலிருந்து இடம்பெயர்ந்த நாயுடு சமூக மக்கள். இங்கே சமூகப் பதற்றம் எதுவும் இதுவரை ஏற்பட்டதில்லை. எல்லா மக்களும் எல்லாருடனும் இணைந்து அமைதியாக வாழ்ந்தனர்.
 • இரயில்வே பணிமனையில் இடதுசாரி தொழிற்சங்கம் செயல்பட்டு வந்தது. இதன் அலுவலகத்திற்கு எதிரே இருந்த பெரிய மைதானம்தான் சங்கத்திடல் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சங்கத்திடலில் இந்தியாவின் புகழ்பெற்ற இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்கள் இங்கே உரையாற்றியுள்ளனர். இங்கே சட்டமன்ற உறுப்பினர் நம்பியார், நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தநம்பியார் உமாநாத், பாப்பா உமாநாத் ஆகியோர் இங்கே பல ஆண்டுகள் தங்கியுள்ளனர்.
 • 1950களில் பொன்மலைக்குப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. 60களில் பொன்மலை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்திலிருந்து காலை 9.00 மணிக்குப் புறப்படும் TVS 21 என்ற பேருந்துக்குத் திருச்சியின் காதல் வாகனம் என்ற செல்லப் பெயர் உண்டு. இங்கே காதல் திருமணங்கள் நிறைய நடைபெற்றிருக்கின்றன.
 • ஆர்மரிக்கேட்க்கு எதிரே பொன்மலை பாரதி நாடக் குழு அமைத்த காந்தியின் வெண்கலச் சிலை உலகப் பெருமை பெற்றது. காரணம் சிலையின் உயரம் 6 அடி. அதுமட்டுமல்ல காந்தி கைத்தடி இல்லாமல் வலது கையில் புத்தகம் வைத்து நடந்துகொண்டிருப்பதுபோல் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே இல்லை என்பது தனிச்சிறப்பு
 • மெயின் லைன், கார்டு லைன் என்னும் இருப்புப் பாதைகள் சந்திக்கும் பொன்மலை இரயில்நிலையத்திற்குச் சிறப்புண்டு. தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மஞ்சத்திடல் என்னும் இரயில் நிலையமும் உண்டு.
 • 1905இல் பொன்மலை இரயில் நிலையத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றிய வின்சென்ட் சாமிகண்ணு என்பவர்தான் தமிழ்ச் சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகின்றார். இவர் லூமியர் சகோதரர்கள் உருவாக்கிய சலனப் படத்தைப் பொன்மலையில் திரையிட்டுக் காட்டியுள்ளார். மேலும் ஏசுவின் ஜீவ சரித்திரம் என்னும் திரைப்படத்தை அருகில் உள்ள கிராமங்களில் திரையிட்டுத் திரைப்படத்தை மக்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
 • இரயில் பணி மனையில் பணியாற்றிய தொழிலாளியான அலெக்ஸ் பின்னர்த் திரைப்படத் தயாரிப்பாளராக, நடிகராக, மேஜிக் நிபுணராக வலம் வந்தார்.
 • கவிதைத் துறையில் தனக்கெனத் தனியிடம் பிடித்தக் கப்பல் கவிஞர் கிருட்டிணமூர்த்தி இரயில்வே பணிமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கவிதைகள் சென்னை, பாரதிதாசன், பாரதியார் பல்கலைக்கழகங்களிலும், பல தன்னாட்சி கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்றன.
 • திருச்சியின் நாடக நடிகர் என்ற போற்றப்பெற்ற பாலகிருஷ்ணன், சினிமா நடிகர் விணுசக்கரவர்த்தி ஆகியோர் இரயில்வே பணிமனையில் பணியாற்றியவர்.
 • நடிகை வடிவுக்கரசி சி டைப்பில் குடியிருந்தவர். இரயில்வே தொழிலாளியின் மகள். தொடக்கக்காலத்தில் நாடகத்தில் நடித்தார். பின்னர்க் கன்னிப்பருவத்திலே திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
 • தண்ணீர் அமைப்பின் செயலர், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் நீலமேகம் இரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார்.
 • பொன்மலை இரயில்வே நிர்வாகத்திற்குட்பட்ட ஜி கார்னர் மைதானத்தில் இந்தியாவின் அனைத்து அரசியல் இயக்கத்தின் தலைவர்களும் உரையாற்றியுள்ளனர். கொரோனா காலத்தில் இந்த மைதானத்தில் காந்தி சந்தை இடம் பெயர்ந்து செயல்பட்டு வருகின்றது.

பொன்மலை நகரியம் என்பது மற்ற நகரம் போல் அல்லாமல் ஒரு தனிஉலகம் என்றால் மிகையில்லை. ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பல வசதிகள் இன்னும் முறையாகப் பராமரிக்கப்பட்டுப் பொன்மலை நகரியம் பெருமையோடு திகழ்ந்து வருகின்றது.

(அடுத்த இதழில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்த பொன்மலைப்பட்டியைப் பற்றிய கட்டுரை இடம் பெறும்)

-ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.