காலில் சலங்கைகட்டி ஆடச்செய்வோரின் வாழ்க்கை அல்லோலப்படுகிறது…!

0

கோயில் திருவிழா காலங்களில் அருள் வந்து ஆடும் மருளாளிகளின் காலை அலங்கரிக்கும் சலங்கை.. காளியம்மன், மாரியம்மன் கோலத்தில் வந்தாடும் சாமிகளின் சலங்கை..கரகாட்டக் கலைஞர்களின் காலில் சப்தமிடும் சலங்கை..பரதக் கலைஞர்களின் பாதக்கமலங்களை அலங்கரிக்கும் சலங்கை..ஒயிலாட்டம்,தேவராட்டம் ஆடுவோரின் ஆடலுக்கு ஏற்ப குலுங்கிடும் சலங்கை.. ஜல்லிக்கட்டு மாடுகளின் கழுத்தை அலங்கரிக்கும் சலங்கை.. என ஓசை மிளிரும் சலங்கை வேலைப்பாடுகள் செய்வோரின் வாழ்க்கை அடிப்படைத் தேவைக்கு வழியின்றி அல்லோலப்படுகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள மருங்காபுரி வட்டம், அடைக்கம்பட்டி ஊராட்சி வெங்கிட்டநாயக்கன்பட்டியில் கை வேலைப் பாடுகளால் சலங்கை செய்து வாழும் 150 குடும்பங்கள், இன்று வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த ஊரில் உள்ள இவர்கள் சலங்கைத் தொழில் செய்து வருகின்றனர். ஆங்கிலேயர்கள் காலத்திலும் இவர்கள் செய்யும் சலங்கை வேலைப் பாடுகளைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.

‌சந்தா 1


சித்திரை, வைகாசி மாதங்கள் தான் இவர்கள் வாழ்வில் வசந்த காலம். கிராமப் புறங்களில் நடக்கும் கோயில் விழாக்களில் இவர்களிடம் சலங்கை பெற்றுச் செல்வதற்கு பக்தர்கள் வரிசை கட்டி நிற்பார்கள்.

சந்தா 2

இத்தகைய சிறப்புக்குரிய இந்தக் குடும்பங்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் திருவிழாக்கள் இல்லாமல், தேரோட்டம் காணாமல் வறுமையின் பிடியில் சிக்கி திணறுகின்றனர்.

நியாய விலைக் கடைகளில் வழங்கும் பருப்பு, சர்க்கரை, எண்ணை இவர்களின் முழுத் தேவைக்கு போதுமானதாக இல்லை. கையில் காசின்றி அவசர மருத்துவ செலவுக்கோ அல்லது குழந்தைகளுக்கு திண் பண்டங்கள் வாங்கிடவோ, வீட்டுத் தேவைக்கு காய் கனிகள் வாங்கிடவோ வழியின்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளனர். ஆகவே, மாவட்ட ஆட்சியர் இவர்களின் வாழ்வாதாரம் தழைத்திட நிவாரணப் பொருள்களுடன், கை செலவுக்கு நிதியும் வழங்கிட அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

திருவிழாக்கள் இந்தாண்டு இல்லை என்பதால் மீண்டும் இவர்கள் தொழில் சார்ந்து இயங்கிட வட்டியில்லாக் கடன் வழங்கிடவும் ஏற்பாடு செய்ய வேண்டும். காலில் சலங்கை கட்டி விடும் இவர்களின் வாழ்விலும்.. சலங்கைச் சப்தம் கேட்க அரசு செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

மணவை தமிழ்மாணிக்கம்,

Leave A Reply

Your email address will not be published.