80களில் திருச்சியைக் கலக்கிய சூதாட்டங்கள் – பகுதி – 2

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0
full

80களில் திருச்சியைக் கலக்கிய சூதாட்டங்கள் பகுதி – 1க்கு என் திருச்சி நேயர்கள் வழங்கிய வரவேற்பு கண்டு வியந்தேன். பொதுவாக 50 வயதைக் கடந்தவர்கள்தான் இதுபோன்ற நினைவலைகளை எண்ணிப் பார்க்கமுடியும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் திருச்சி அலுவலகத்திற்கு நிறைய இளைஞர்கள் கட்டுரையைப் பாராட்டி பேசினார்கள் என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியைச் சினிமா காமிராவில் படம்பிடித்து காட்டுவதுபோன்றுள்ளது என்ற விமர்சனம் எனக்கு உற்சாகம் கிடைத்தது. இந்த பகுதி – 2இல் திருச்சியில் ஜூபிடர், இராமகிருஷ்ணா, சென்ட்ரல், ராஜா திரையரங்குகளின் முன்னால் நடைபெற்ற சூதாட்டங்களான லங்கர் கட்டை, நாடாகுத்து, மூணுசீட்டு, மூணுஸ்டைகர், படம் பார் பணம் வை, பூவா தலையா, லக்கி பிரைஸ்  குறித்த செய்திகளும் திருச்சி நகரத்தின் முக்கியப் பகுதியான வரகனேரி பெரியார்நகரையொட்டிய குழுமிக்கரையில் நடைபெற்ற தம்போலா என்னும் சூதாட்டம் பற்றியும் பதிவுகள் செய்யப்படுகின்றன.

லங்கர் கட்டை

சூதாட்டத்துக்கு தேவையான ஒரு பெரிய பெட்ஷீட் போன்ற விரிப்பை தரையில் விரிப்பார்கள். அந்த விரிப்பின் மேல் நியூஸ் பேப்பரை விரித்து வைத்தாற்போல உள்ள கொட்டி அட்டையின் மீது 6 கட்டங்கள் இருக்கும். 4 கட்டங்கள் மேல் வரிசையிலும் கீழே வலது இடது பக்கத்தில் ஒரு கட்டங்கள் இருக்கும். நடுவில் உள்ள இடைவெளி 4 கட்டங்கள் மேல் வரிசையிலும் கீழே வலது இடது பக்கத்தில் ஒரு கட்டங்கள் இருக்கும். நடுவில் உள்ள இடைவெளியில்தான் டப்பாவில் வைத்து குலுக்கப்படும் லங்கர் கட்டையை வைப்பார்கள். கட்டங்களில் மேலிருக்கும் 4 கட்டங்களில் ஆர்ட்டின், இஸ்பேட், டைமன்ட், கிளாவர்  போன்ற  சீட்டாட்ட  அட்டையில்  உள்ள  குறியீடுகளும், மேலும் கீழ்உள்ள இரு கட்டங்களில் நட்சத்திரம், அம்புக்குறி  உள்ளிட்டவைகள் இருக்கும்.

poster

ஒரு தகர டப்பா இருக்கும். அந்த தகரடப்பாவுக்குள்  ஒன்று, இரண்டு, மூன்று என்று கூட்டத்திற்கேற்ப  கட்டையைப்  போடுவார்.  அந்த  கட்டையில்  ஆர்ட்டின்,  இஸ்பேட்,  டைமன்ட், கிளவர், அம்புக்குறி, நட்சத்திரம் என 6 பக்கங்கள் கொண்ட கனசதுர அமைப்பில் இருக்கும். அப்போது அங்கு  கூடியிருப்பவர்கள்  ஏதாவது  ஒரு  குறியின்  மீது  பணம்  கட்டலாம். ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பணம் கட்டலாம். பந்தய பணத்தை விரிப்பின் மீதுள்ள அட்டையில் உள்ள கட்டத்தில் உள்ள குறியின் மீது வைத்துவிட வேண்டும் ஆட்டம் துவங்கும், ஒருவர் டப்பாவுக்குள் உள்ள கட்டையை உருட்டுவார்.

குறிப்பிட்ட நேரம் உருட்டி டப்பாவை கீழே கவிழ்ப்பார். அப்போது எந்த சிம்பிள் வானத்தை பார்த்த மாதிரி கட்டையில் தெரிகிறதோ அதே சிம்பிளில் விரிப்பின் மீது பணம் வைத்திருப்பவருக்கு இரண்டு மடங்கு பரிசு (5 ரூபாய் வைத்தால் 10 ரூபாய்) கொடுப்பார்கள்.

மற்ற சிம்பிளில் பணம் கட்டியவர்களின் பணம் கம்பெனிக்கு போய்விடும்.  இப்படி டப்பாக்குள் கட்டையை போட்டு உருட்டி கவிழ்ப்பதில் பலே தில்லாலங்கடி வேலைகள் நடக்கும் அதிக பணத்தைக் கட்டிய சிம்பல்களில் கட்டை விழாது. அந்த மாதிரி டிரிக்ஸாக குலுக்குவார்கள். மூன்று கட்டைப் போட்டு குலுக்கும்போது ஒரே சிம்பல் மூன்று கட்டைகளில் இருந்தால் அதற்கு ஜாக்பட் என்று பெயர். 10 வைத்தால் 40ரூபாய் கிடைக்கும்.

லங்கர் கட்டை சூதாட்டத்தை ஒருவர்தான் நடத்துவார். ஆனால் அவரின் கையாள்கள் சுமார் 5 பேராவது இருப்பார்கள். கூட்டம் குறைவாக இருக்கும்போது அவர்களே பணம் கட்டி சூதாடுவார்கள். இந்த விளையாட்டில் விளையாடுபவர்கள் பிரச்சனை செய்தால் அந்த கையாள் மிரட்டுவது தொடங்கி அடிப்பது வரை நடக்கும். இந்தச் சூதாட்டத்தில் பணத்தை ஜெயித்துக் கொண்டு போகமுடியாது. கையாள்கள் விளையாட வற்புறுத்துவார்கள். விளையாட மறுத்தால் ஜெயித்த பணத்தை கையில், பையில் வைத்திருந்தால் பறித்துக்கொள்வார்கள்.

இந்தச் சூதாட்டங்களில் வெற்றிப் பெற்றவர்களும் தோல்வியடைந்தவர்களும் அழுதுகொண்டே செல்வதுதான் சோகமான செய்தியாகும். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திருச்சி நகர இளைஞர்கள் என்றால் இந்தச் சூதாட்டக்காரர்கள் “பாஸ்… போங்க…… நாங்க நாலு காசு பாக்கவேணாமா….. போங்க பாஸ்…. தொங்குங்க (போங்க)” என்று கனிவாக வேண்டுகோள் வைப்பார்கள் என்பது நம்பமுடியாத விந்தையான செய்தி. போலீஸ்(காவல்துறை) வருவதை கையாள் பார்த்துவிட்டால்… “குச்சான்……. தொங்குங்க……’ என்று எச்சரிக்கைக் கொடுத்துவிட்டு ஓட…. மற்றவர்களும் ஆட்டத்தைக் கலைத்துவிட்டு தலைதெறிக்க ஓடுவது நகைச்சுவையாகவும் பரிதாபமாகவும் இருக்கும்.

 

நாடாகுத்து

பாவாடைக்கு பயன்படுத்தப்படும் நாடாகுத்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். ஒரு மீட்டர் நீளமுள்ள நாடாவை இரண்டாக மடித்து நடுப்பகுதியில் நான்கு அல்லது 5 ஓட்டைகள் இருப்பதுபோல் அமைத்துக்கொள்வார்கள். சூதாட்டக்காரர் முக்கியமான பகுதிகளை மறைத்துக்கொண்டு இருப்பார். சூதாட்டம் விளையாடுபவர் மறைத்திருக்கும் ஓட்டைகளிலிருந்து விரல்களை எடுக்கச் சொல்வார். பின் சூதாட்டம் விளையாடுபவர் கையில் சாக்குத்தைக்கும் கோணி ஊசி வைத்திருப்பார். அந்தக் கோணி ஊசியை தெரியும் ஓட்டைகளில் குத்துவார்.

பின்னர் சூதாட்டக்காரர் சுருட்டி வைத்துள்ள நாடாவை மெல்ல அவிழ்பார். அப்படி அவிழ்க்கும்போது கோணி ஊசி இரண்டாக மடிக்கப்பட்டுள்ள நாடாவின் நடுவில் இருந்தால் வெற்றி என்று பொருள். கோணி ஊசி நாடாவிற்கு வெளியே இருந்தால் தோல்வி என்று பொருள்.

ஆட்டத்திற்கு 5 ரூபாய் என்றால் வெற்றி என்றால் 5 ரூபாய் கிடைக்கும். தோல்வி என்றால் தொகை கம்பெனிக்குச் சென்றுவிடும். இந்தச் சூதாட்டத்தில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே விளையாடுவார். யாரும் நாடாவின் நடுவில் உள்ள ஓட்டைகள் குறித்து விளையாடுபவருக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடாது. இந்த விளையாட்டில் வெளியே பந்தயம் நடைபெறும்.

நாடாகுத்து சூதாட்டத்தில் விளையாடுபவர் வெற்றி பெறுவார், தோல்வி பெறுவார் என்ற ரீதியில் பந்தயங்கள் நடைபெறும். இந்தச் சூதாட்டத்தின் பின்னணியில் ரவுடிகள் அவர்களின் கையாள்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதிலும் வெற்றிப் பெற்று பணத்தைக் கொண்டுச் செல்லமுடியாது. முயன்றால் அடித்து, உதைத்து பணம் பிடுங்கப்படும். விளையாட வந்தவர் 4 நண்பர்களுடன் வந்திருந்தால் அந்த இடத்தில் ஒரு அடிதடி கலவரமே நடைபெறும்.

மூணுசீட்டு, மூணு ஸ்டைகர்

மூணுசீட்டு என்ற சூதாட்டத்தில் 3 சீட்டாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் அட்டைகள் பயன்படுத்தப்படும். இரண்டு சீட்டுகள் வெள்ளையாக இருக்கும். ஒரு சீட்டு K ராஜா அல்லது ஜேக்கராக இருக்கும். சூதாட்டக்காரர் மூணு சீட்டுகளில் இரண்டைப் பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு இடம் வலமாக வைப்பார். மூன்றில் இரண்டு சீட்டை மீண்டும் மீண்டும் இடம் மாற்றி வைத்துக் கொண்டே இருப்பார். 5 நிமிடத்தில் 3 சீட்டையும் கவிழ்த்து வைப்பார்.

பின்னர் பார்வையாளர்களைப் பார்த்து ராஜா சீட்டு எது என்று கண்டுபிடித்து 5 ரூபாய் வைத்தால் 10 ரூபாய் கிடைக்கும். வை ராஜா வை, இதுல பொய்யில்லா… மந்திரம் தந்திரம் இல்லை…. என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார். விளையாட்டில் விருப்பம் கொண்டவர்கள் சீட்டில் பணத்தை வைப்பார்கள்.

ukr

மூணுசீட்டிலும் பணம் வைப்பார்கள். பின்னர் சூதாட்டக்காரர் ஒவ்வொரு சீட்டாகத் திருப்புவார். ராஜா சீட்டில் பணம் வைத்தவருக்கு வைத்த தொகைக்கு இரண்டு மடங்கு தொகை தருவார். மற்ற இருவரின் தொகைகள் கம்பெனிக்குச் சேர்ந்துவிடும். இந்தச் சூதாட்டமும் ரவுடிகளின் துணையோடு நடக்கும். கூட்டம் சேரும்வரை ரவுடிகளின் கையாள்கள்தான் விளையாடுவார்கள்.

பார்க்கும் அனைவருக்கும் ராஜா சீட்டு எது என்பது தெரியும் என்பதுதான் வேடிக்கை. ஒரு கட்டத்தில் நாம் மிகச் சரியாக கணித்து ராஜா சீட்டில் பணம் வைத்தால் அது வெள்ளையாக இருக்கும். மற்ற இரண்டு சீட்டுகளைத் திருப்பமாட்டார்கள். கண்ணுக்கு நேராக ஏமாற்றும் சூதாட்டம்தான் இந்த மூணுசீட்டு விளையாட்டு.

இதே முறையைப் பின்பற்றிதான் மூணு ஸ்டைகர் சூதாட்டமும். கேரம் போர்டு விளையாட்டில் அடிக்கப் பயன்படும் ஸ்டைகர்தான் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும். மூணு ஸ்டைகரில் ஒரு ஸ்டைகரில் படம் ஒட்டப்பட்டிருக்கும். படம் உள்ள ஸ்டைகர் எது என்று கண்டுபிடிக்கவேண்டும். அதன் மீது பணம் வைக்கவேண்டும். மூணு சீட்டுப் போலவே மூணு ஸ்டைகரையும் மாற்றிமாற்றி வைத்துக் கொண்டே இருப்பார்கள். பின்னர் ஸ்டைகர்கள் கவிழ்த்து வைக்கப்படும். சூதாட்டம் விளையாடுபவர்கள் பணம் வைப்பார்கள். சூதாட்டக்காரர் ஒவ்வொரு ஸ்டைகராக திருப்புவார். படம் உள்ள ஸ்டைகர் மீது பணம் வைத்தவருக்கு இரு மடங்கு தொகை கிடைக்கும். ஒரே நேரத்தில் எத்தனைபேர் வேண்டுமானாலும் இந்தச் சூதாட்டத்தில் விளையாடலாம். இதிலும் ரவுடிககளின் கைவரிசைகள் இருக்கும்.

படம் பார் பணம் வை

லங்கர் கட்டை விளையாட்டில் இருந்த 6 கட்டங்களுக்குப் பதிலாக நடிகைகள் படம் இருக்கும். குறிப்பாக கே-ஆர்.விஜயா, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, ஜோதிலெட்சுமி, விஜயலலிதா படங்கள் என 6 கட்டங்களில் படங்கள் இருக்கும். இந்தப் படங்களில் ஜோதிலெட்சுமி, விஜயலலிதா படங்கள் படுகவர்ச்சியாக இருக்கும். படத்தபாரு….. பணத்தை வை….. 5 வைச்சா 10, 10 வச்சா 20, 50 வச்சா 100 வை ராஜா வை…. என்று விளையாட்டு சூதாட்டக்காரர் அழைப்பார். சூதாட்டம் விளையாடுபவர்கள் 6 கட்டங்களில் பணம் வைப்பார்கள். பின்னர் சூதாட்டக்காரர் ஒரு அலுமினியப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்ட படங்கள் அடங்கிய வெள்ளை உறைகள் இருக்கும்.

ஒரு உறையை எடுத்து எல்லாருக்கும் தெரியும்படி அந்த உறையில் உள்ள 3 படங்களை எடுத்து வெளியே காண்பிப்பார். அந்த 3 படங்களில் பணம் வைத்தவர்களுக்கு இரண்டு மடங்குப் பணம் கிடைக்கும். சமயத்தில் 3 படங்களும் ஒரே நடிகையைக் கொண்டதாக இருக்கும். அந்த நடிகையின் படத்தின்மீது பணம் வைத்தவருக்கு 3 மடங்கு பணம் கிடைக்கும். இதை ஜாக்பாட் என்று சூதாட்டக்காரர் குறிப்பிடுவார். இந்த விளையாட்டை சினிமா பார்க்கவரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களே அதிகம் விளையாடுவார்கள். இளைஞர்கள் இந்த விளையாட்டை அதிகம் விளையாட மாட்டார்கள். இதனால் இந்த விளையாட்டில் ரவுடிகளின் ஆதிக்கம் இருக்காது.

பூவா தலையா?

இந்த விளையாட்டு சினிமா அரங்கத்தின் முன்பு கூட்டம் அதிகம் இருந்தால் இந்தச் சூதாட்டம் விளையாடப்படும். ரவுடி கூட்டத்தின் ஒருவர் பூவா தலையா விளையாட்டு என்று எல்லாரையும் அழைப்பார். பூவுன்னு சொல்லி பூ விழுந்தா 5 ரூவா வச்சா 10 ரூபா என்று அழைப்பார். ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமனாலும் விளையாடலாம். சூதாட்டக்காரர் ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிடுவார். சுண்டிவிட்ட நாணயம் இடது கையில் விழும். விழுந்தவுடன் வலது கையால் உடனே மூடிக் கொள்வார். பூவா…. தலையா……. பூவா …. தலையா என்பார் (தலை என்பது இந்திய அரசின் மூன்று சிங்கத் தலை இருக்கும் பக்கம், பூ என்பது நாணயத்தின் மதிப்பு இருக்கும் பக்கம்) விளையாடுபவர்கள் பூ…. தலை என்று சொல்வார்கள். சூதாட்டக்காரரின் கையாள் தலை என்று சொன்னவர்களிடம் தொகையை வாங்கிக் கொண்டு தனியாக நிற்கச் சொல்வார்.

பூ என்று சொன்னவர்களிடம் தொகையை வாங்கிக் கொண்டு தனியாக நிற்கச் சொல்வார். சூதாட்டக்காரர் மூடி இருக்கும் வலது கையை மெல்ல விலக்கி எல்லாருக்கும் காட்டுவார். தலை இருந்தால் தலை சொன்னவர்கள் வெற்றிப்பெற்றவர்கள் ஆவர். அவர்கள் கொடுத்தத் தொகைக்கு இருமடங்குத் தொகை உடனே வழங்கப்படும். பூ என்று சொன்னவர்கள் தோல்வி அடைந்தவர்கள் ஆவர். போலீஸ் வருகிறது என்றால் சூதாட்டக்காரர் எதுவுமே நடக்காதுபோல் கையைக் கட்டிக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டோ, சினிமா போஸ்டரையோ பார்த்துக்கொண்டிருப்பார். சூதாட்டத்தில் விளையாட்டவர்களும் அமைதியாக அப்படியே நிற்பார்கள். போலீஸ்க்கு எதுவும் புரியாது என்பது இந்த விளையாட்டின் சிறப்பு அம்சம்.

லக்கி பிரைஸ்

கடந்த வாரத்தில் வெளியான பகுதி – 1இல் வெளியான அதே லக்கி பிரைஸ்தான் இதுவும். ஆனால் அதில் பரிசு பொருள்கள் இருக்கும் இதில் பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக பணம் இருக்கும். மேலும் 50 பைசா, 25 பைசா, 10 பைசா, 5 பைசா என்று இருக்கும். லக்கி பிரைஸ்இல் உண்மையான பணமும் இருக்கும். இல்லையெனில் ரூபாயின் மாதிரிகள் அச்சிடப்பட்டிருக்கும். ஒருவர் இந்த லக்கி பிரைஸ் அட்டையை வலது கையில் பிடித்திருப்பார். அட்டையின் கீழ்ப்பகுதியில் பிரைசஸ் கிழிக்கும் பகுதியில் அதற்குரியத் தொகை கொடுத்துவிட்டு, பிரைசஸ் கிழிக்கவேண்டும். அதில் எண் இருந்தால் அந்த எண்ணுக்கு என்ன தொகை பிரைஸ் அட்டையில் குறிக்கப்பட்டிருந்ததோ அந்தத் தொகை உடனே வழங்கப்படும். சைபர் இருந்தால் பரிசு வழங்கப்படாது. இந்தச் சூதாட்டத்தையும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும். இந்த சூதாட்டத்தில் ரவுடிகளின் தலையீடு என்பது இருக்காது என்பது தனிச் செய்தியாகும். போலீஸ் வந்தாலும் இந்த விளையாட்டைக் கண்டுக்கொள்ளமாட்டார்கள் என்பது கூடுதல் செய்தியாகும்.

தம்போலா

70களில் பாம்பாய் சூதாட்டக் கிளப்களில் விளையாட்டப்பட்ட தம்போலா என்னும் சூதாட்டம் 80களில் சென்னை திருச்சியில் உள்ள சூதாட்டக்கிளப்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் அங்கீகாரம்பெற்ற மனமகிழ் மன்றங்களிலும் இந்தச் சூதாட்டம் ஞாயிறு மற்றும் விடுமுறை, பண்டிக்காலங்களில் நடத்தப்பட்டது. இது மேல்தட்டு மக்கள், மாத சம்பளம் பெறும் மத்திய தர மக்களின் சூதாட்டமாக விளங்கியது. ஆண்களும் பெண்களும் இந்த விளையாட்டில் பங்குகொள்வார்கள். இந்த விளையாட்டில் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். காரணம் விளையாட்டுக்கு அச்சடிக்கப்பட்ட மெல்லிய அட்டைதான் பயன்படுத்தப்படும். அந்த அட்டையில் 5 கட்டங்கள் கொண்ட 3 வரிசைகள் இருக்கும். 15 கட்டங்களில் வரிசைக்கு 5 எண்கள் வீதம் 15 எண்கள் இருக்கும். இந்த எண்கள் 1 இலிருந்து 100 வரை இருக்கும். எண்கள் வரிசையாக இல்லாமல் கலைந்த நிலையில் இருக்கும்.

இந்த விளையாட்டுக்கு இந்த அட்டையைத் தவிர்த்து வரிசைக்கு 10 எண்கள் வீதம் 10 வரிசைக்கு 100 எண்கள் அச்சிடப்பட்ட பெரிய அட்டை ஒன்று இருக்கும். டீக் கடையில் டீ வாங்கக் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் டோக்கனில் எண் 1 முதல் 100 வரை இருக்கும். அந்த 100 டோக்கனையும் ஒரு பையில் போட்டு குலுக்கி ஒவ்வொரு டோக்கனாக எடுப்பார்கள். அந்த டோக்கனில் உள்ள எண்ணை சத்தம் போட்டு சொல்லுவார்கள். அந்த எண் உள்ளவர்கள் தங்களின் அட்டையில் பேனாவினால் டிக் மார்க் செய்துகொள்வார்கள். சொல்லப்பட்ட டோக்கனை 100 எண் வரிசையில் உள்ள அட்டையில் அந்தஅந்த எண்ணுக்குமேலே வைப்பார்கள். 15 கட்டங்களையும் முதலில் டிக் செய்தவர் வெற்றிப்பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். ஒரு அட்டை 1ரூபாய் வீதம் விற்கப்படுகிறது என்றால் 100 பேர் விளையாடினால் மொத்தம் பணம் 100 ரூபாயாக இருக்கும். அதில் வெற்றிப் பெற்றவருக்கு 75ரூபாய் வழங்கப்படும். சூதாட்டக் கம்பெனிக்கு 25ரூபாய் என்று கணக்கிடப்படும்.

தம்போலா விளையாட்டில் நிறையபேர் பரிசு பெறவேண்டும் என்ற காரணத்தில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்றும் அறிவிக்கப்படும். மேலும் முதல்வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை என்று முதலில் முடியும் வரிசைக்கும் பணம் கொடுக்கப்படும் வழக்கம் தொடங்கியது. மேல்தட்டு மக்கள் விளையாடிய இந்த விளையாட்டு 80களில் திருச்சி வரகனேரி பெரியார் நகர் குழுமிக் கரையில் சாதாரண ஏழை, எளிய மக்கள் கலந்துகொள்ளும் விளையாட்டாக மாறியது. இந்த விளையாட்டு ஒவ்வொரு நாளும் (மழைக்காலம் தவிர) 9.30 மணி தொடங்கி நள்ளிரவு 1.30 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்றது. ஒரு ஆட்டம் சுமார் 20 நிமிடம் நடைபெறும் சராசரியாக 12 ஆட்டங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகள் தம்போலா என்னும் சூதாட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிர்ஷ்டம்தான் கைகொடுக்கவேண்டும் என்பது விதி.

வாசகர்களே….. எனக்குத் தெரிந்த, நான் நேரில் பார்த்த, பங்கெடுத்துக் கொண்ட திருச்சியின் சூதாட்டங்கள் குறித்த செய்திகளைப் பதிவு செய்திருக்கிறேன். விடுபட்ட சூதாட்டங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றின் விவரங்களை என்திருச்சி இணைய இதழுக்கு அலைபேசி எண்98424 10090 இல் தெரிவிக்கலாம். திருச்சியின் வேறுஒரு பதிவு செய்யப்படாத வரலாற்றினை அடுத்த இதழில் பதிவு செய்வேன். வாசகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

– ஆசைத்தம்பி

half 1

Leave A Reply

Your email address will not be published.