80களில் திருச்சியை கலக்கிய சூதாட்டங்கள்

0
full

80களில் திருச்சி சென்னை, கோவை என்னும் பெருநகரங்களுக்கு இணையாக வளர்ந்திருந்தது. காரணம் பொன்மலை இரயில்வே தொழிற்சாலை திருவெறும்பூர் பகுதியில் BHEL என்னும் பாரத மிகுமின் நிறுவனம், நவல்பட்டு பகுதியில் OFT என்னும் படைக்கலத் (துப்பாக்கி) தொழிற்சாலை, அதே பகுதியில் HAPP
கனரக உலோகக்கலப்பு ஊடுருவல் திட்டத் தொழிற்சாலை, தபால் தந்தி அலுவலகம், தொலைபேசி அலுவலகம், திருச்சி சந்திப்பு அது தொடர்பான மண்டலத் தலைமை அலுவலகங்கள், காந்தி மருத்துவ மனை என்னும் பெரிய ஆஸ்பத்திரி, மாவட்ட நீதிமன்றங்கள், செயிண்ட் ஜோசப், ஹோலிகிராஸ், SRC, ஜமால், நேஷனல் எனக் கலைக் கல்லூரிகள், RCE என்றழைக்கப்பட்ட மண்டலப் பொறியியல் கல்லூரி, துவாக்குடியில் பாலிடெக்னிக் எனப்படும் பல்தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம், திருவெறும்பூரில் ITI எனப்படும் தொழில் பயிற்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனப் பல்வேறு துறைகளைப் பெற்றிருந்தது என்றால் மிகையில்லை.

80களின் காலகட்டங்களில் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சூதாட்டங்களும் பெருகி வளர்ந்திருந்தன. பொதுவெளியில் ரம்மி என்னும் சீட்டு விளையாடுவது குற்றம். காவல்துறையினர் சீட்டாடுபவர்களைப் பிடித்துச் சென்று அபராதம் விதிப்பர்கள் அல்லது வழக்கு தொடர்ந்து 2 வாரச் சிறைத் தண்டனை பெற்றுத் தருவார்கள். கிராமப்புறங்களில் விளையாடப்படும் ஆடு-புலி ஆட்டம் சூதாட்டம் என்றாலும் அது குற்றமாகக் கருதப்படவில்லை. நகரங்களில் சிட்டி கிளப் என்றும் மனமகிழ் மன்றம் என்ற பெயரிலும் காவல்துறையின் அனுமதியோடு சீட்டாட்டம், கேரம்போர்டு, செஸ் போன்றவை சூதாட்டமாக நடைபெற்றன.

அடித்தட்டு மக்களின் சூதாட்டமாக லங்கர் கட்டை, நாடா குத்து, படம் பார்த்துப் பணம் வை, இழுத்தடிச்சான் பொட்டி, மூணு சீட்டு, மூணு ஸ்டைகர் (கேரம் விளையாட்டில் காய்களை அடித்து விளையாடப் பயன்படும் வெள்ளை நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டது) தம்போலா, கடைகளில் இருந்த பிரைஸ் கிழித்தல், சுரண்டல் லாட்டரி, வெளிமாநில லாட்டரி போன்று சூதாட்டங்கள் பலவகைகளில் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிராமங்களிலிருந்து நகரத்திற்கு வருவோர் பலர் இந்தச் சூதாட்டங்களில் பங்கெடுத்துப் பணத்தை இழந்து அழுது கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டே கடந்து செல்வார்கள். காரணம் சூதாட்டங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திருச்சியிலிருந்த ரௌடி கும்பல்கள். அவர்களை எதிர்த்துப் பேசமுடியாது. கேள்வி கேட்கமுடியாது என்ற நிலையில் காவல்துறையின் கடுமையான நடவடிக்கையால் இந்தச் சூதாட்டங்கள் 2000ஆம் ஆண்டு வாக்கில் முழுமையாக நிறுத்தப்பட்டன. இந்தச் சூதாட்டங்கள் எப்படி நிகழ்த்தப்படுகின்றன என்பதை விவரிப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

poster

திருச்சி சிட்டி கிளப்

இது திருச்சியில் உள்ள செல்வந்தர்கள் சூதாடுவதற்கு அரசின் அனுமதியோடு இயங்கி வந்தது. மேலரண் சாலையில் தமிழ்ச்சங்கத்திற்கு எதிர்ப்புறம் திருச்சி சிட்டி கிளப் இருந்தது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி அந்த இடத்தை அரசுக்குச் சொந்தமான இடம் என்று கைப்பற்றி, அங்கே வாகனங்கள் நிறுத்துவதற்காகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இங்கே திருச்சியின் அனைத்துக் கட்சி பிரமுகர்களும், வணிக நிறுவன அதிபர்கள், செல்வந்தர்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இங்கு நடைபெறும் ரம்மி, கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடுவார்கள். வென்றவர்கள் பணம் பெற்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள். தோற்றவர்கள் நாளை எப்படியும் ’இன்னிக்கு விட்ட பணத்தை நாளைக்குச் சேத்து புடிச்சீருவேன்’ என்று வஞ்சினம் உரைப்பார்கள். சூதாட்டங்களில் ஈடுபடுவோர்க்குக் காலையில் டீ, காபி, வடை, பேண்டா, சிகரெட் என்றும் நண்பகல் உணவு, சிக்கன், மட்டன், மீன் வறுவல்கள் மாலையில் டீ, காபி, வடை, சிற்றுண்டிகள் வாங்கித்தர என ஒரு இளைஞர் கூட்டமே இருக்கும்.  அந்த இளைஞர் கூட்டம் அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். போதை ஏறாத அளவுக்குப் ‘பெக்’ என்னும் அளவில் வெளிநாட்டு மதுபானங்களும் அவ்வப்போதுப் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் டிப்ஸ் என்னும் சேவைத் தொகையை இளைஞர்கள் கூட்டம் பெற்றுக் கொள்ளும். அந்தக் காலத்தில் ஒருவர் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.250 வரை சம்பாதிப்பார்கள். இது அந்தக் காலத்தில் அரசு ஊழியரின் சம்பளத்தைவிட அதிகம்.

சிட்டிக் கிளப்பில் சேர ஆண்டுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும். அப்புறம் நிறைய நன்கொடைகள் வசூல் செய்யப்படும். சிட்டிக் கிளப்பில் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவி செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கட்டுக்காவல் இருக்கும். ஒருவரை நாம் பார்க்கவேண்டும் என்றால், முன்பகுதியில் உள்ளவரிடம் தகவல் சொன்னால், நாம் சந்திக்கவேண்டிய நபர் நாம் இருக்கும் இடத்திற்கு வருவார் அவ்வளவுதான். உள்ளே செல்லமுடியாது. எல்லா உறுப்பினர்களும் காரில்தான் வருவார்கள் என்றால் அந்தச் சிட்டி கிளப் வெளிநாட்டு சூதாட்ட அரங்கம் போல் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளவேண்டியதுதான். சிட்டி கிளப்பின் அலுவலகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட விரும்புவோர் அங்குப் பணத்தைக் கட்டி அதற்கு ஈடாகப் பிளாஸ்டிக் டோக்கன் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆட்டம் முடிந்த பின்னர் வெற்றி பெற்றவர் டோக்கனைக் கொடுத்து அதற்கு ஈடான தொகையைப் பெற்றுக் கொள்வார். இது வெறும் சூதாட்ட அரங்கமாக மட்டும் இருக்கவில்லை. இங்கே பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெறும். வணிக ரீதியான நட்புகள் ஏற்படும், நட்புகளின் இடையேயான உரசல்கள் தீர்த்து வைக்கப்படும். பல வியாபாரங்கள் தொடர்பான செய்திகளும் பேசப்படும் என்பது இந்தச் சிட்டி கிளப்பின் தனிச் சிறப்பாகும்.

கிராமப் புறச் சூதாட்டங்கள்

கிராமப் புறங்களில் ரெம்மி என்னும் சீட்டாட்டத்தைக் காசு வைத்து விளையாடுவார்கள், இதில் 3 கட்டு சீட்டுகள் ஒன்றாகக் கலக்கப்பட்டு அதிகபட்சம் 9 பேர் அல்லது 10 பேர் கலந்துகொண்டு விளையாடுவார்கள். ரெம்மி இன் சூட்டை இரண்டு முறைகளில் விளையாடுவார்கள். 1. டிக்ளேர் முறையில் 2. கார்டுக்குக் காசு முறையில் என்று விளையாடுவார்கள். டிக்ளேர் முறையில் ஒருவர் ஒரிஜினல் ரெம்மி, டூப்ளிக்கேட் ரம்மி, ஒரு மூனடி, ஒரு நாலடி இருந்தால் அவர் வெற்றி பெற்றவர் ஆவார். 9 பேர் ஆட்டத்திற்கு 10 என்று விளையாடினால் தோல்வி அடைந்த 8 பேரும் தலா 10ரூபாய் தரவேண்டும்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் கவிழ்த்துவிட்டு விளையாடவில்லை என்றால் ரூ.2.50ம் இடையில் கவிழ்த்தால் ரூ.5.00ம் என்றும் விளையாடித் தோற்றால் ரூ.10 சீட்டாட்டத்தை நடத்தும் கம்பெனிக்காரரிடம் தந்து விடவேண்டும். தோற்றவர்கள் கொடுக்கும் 80 ரூபாயில் கம்பெனி காசு என்று ரூ.10ஐ கழித்துக் கொண்டு வெற்றிபெற்றவர்களுக்குக் கொடுப்பார்கள். (இதே நடைமுறைதான் சிட்டி கிளப்பிலும் பின்பற்றப்படும்) கார்டுக்குக் காசு என்ற முறையில் ரெம்மி இல்லாமல் தொடக்கத்தில் கவிழ்த்தால் 3 சீட்டு என்றும் இடையில் கவிழ்த்தால் 6 சீட்டு எனவும் ஒரிஜினல் ரம்மி, டூப்ளிக்கேட் ரெம்மி இல்லையென்றால் 12 சீட்டு என்றும் ஒரிஜினல், டூப்ளிக்கேட் ரம்மி இருந்தால் அதைக் கழித்துக் கொண்டு மற்றச் சீட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கு வைக்கப்படும். சீட்டுக்கு 1 ரூபாய் என்றால் இடையில் கவிழ்த்தால் 3 ரூபாயும், இடையில் கவிழ்த்தால் 6 ரூபாயும், ரெம்மி இல்லை என்றால் 12 ரூபாயும், ஒரிஜினல், டூப்ளிக்கேட் ரம்மி என 6 சீட்டு கழித்து 7 சீட்டுக்கு 7 ரூபாய் கம்பெனிக்குக் கொடுத்துவிடவேண்டும்.

மொத்தப் பணத்தில் ஆட்டத்திற்கு 10 விளையாடுகின்றார்கள் என்றால் கம்பெனி 10 ரூபாயை எடுத்துக் கொண்டு வெற்றி பெற்றவருக்கு மீதித் தொகையை வழங்கி விடும்.

வெட்டு சீட்டு விளையாடுவார்கள். வெட்டு சீட்டு என்பது இருவர் விளையாடக் கூடியது. ஒருவர் சீட்டைப் போடுவார். அதன் மீது மற்றவர் சீட்டைப் போடுவார். இரண்டும் ஒரே சிவப்பு கலர் டைமண்ட் என்றால் பின்னர்ச் சீட்டைப் போட்டவர் வெற்றி பெற்றவராவர். தோல்வி அடைந்தவர் ஆட்டத்திற்கான பேசப்பட்ட தொகையைத் தரவேண்டும். பெரும்பாலும் ரெம்மி விளையாடத் தெரியாதவர்கள்தான் இந்த விளையாட்டில் பங்குகொள்வார்கள்.

ஆடு – புலி ஆட்டம்

சிகப்பு காய்கள் – புலி, கருப்பு காய்கள் ஆடுகள்

நான்கு கோடுகள் மேலிருந்து கீழாகவும் மூன்று கோடுகள் இடமிருந்து வலமாகவும் விளையாட்டுக்கான களமாக இருக்கும் இதில் புலி என்று மூன்று கல்கள் இருக்கும் ஆடுகள் என்று 9 இருக்கும். மூன்று புலிகளையும் நகரவிடாமல் ஆடுகள் சூழ்ந்து இருந்தால் புலி தோற்றது என்று பொருள். ஆடுகளைப் புலி தாண்டி சென்றால் வெட்டுதல் என்று பெயர். அப்படி ஆடுகளைப் புலிகளை வெட்டினால் ஆடு என்று ஆடுபவர் தோற்றதாகப் பொருள். இதிலும் 10 ரூபாயிலிருந்து 100 வரை பந்தயங்கள் நடைபெறும். இதைப் பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும். கூட்டத்தில் இருப்பவர்கள் ’ஆடு ஜெயிக்கும் புலி ஜெயிக்கும்’ என்று பந்தயம் கட்டி கொண்டிருப்பார்கள். இந்த விளையாட்டில் விளையாடும் இருவர் தவிர வேறு யாரும் புலியின் நகர்வையோ ஆடுகளின் நகர்வையோ சொல்லிக் கொடுக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதி. மீறிச் சொல்லிக் கொடுத்தால் பெரிய கலவரமே ஏற்பட்டு விடும். இந்த விளையாட்டு பொதுவாக நிழல் தரும் ஆலமரம், இச்சி மரம், வேப்பமரம் – இவற்றின் கீழ்தான் நடைபெறும். இந்த விளையாட்டை யாரும் சூது என்று கருதுவது இல்லை. காவல்துறையும் இது ஒரு கிராமப்புறப் புத்திசாலித்தனமான விளையாட்டு என்றே எடுத்துக் கொள்வார்கள். பெண்களும் கிராமத்தில் இந்த விளையாட்டை விளையாடுவார்கள். ஆனால் பணம் கட்டி விளையாட மாட்டார்கள் என்பது தனித்துவமான செய்தியாகும்.

தாயம்

தாயம் என்னும் சூதாட்டத்தின் வரலாறு மகாபாரதத்திலிருந்து தொடங்குகின்றது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த இந்தத் தாய விளையாட்டுதான் வினையாக முடிந்தது. தாய விளையாட்டில் பாண்டவர்கள் தோற்றுவிடுகிறார்கள். பாண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள். விளையாட்டுக்குப் பொன்னையும் பொருளையும் வைத்து விளையாடுகின்றனர்.

தாயக் கட்டம்

பின்னர் நாட்டை வைத்து விளையாடுகின்றனர். விளையாட்டின் உச்சமாக மனைவியையே வைத்து விளையாடுகின்றனர். சூதாட்டம் வெற்றிபெறவேண்டும் என்ற வெறியை எந்தளவு மனித மனத்தில் ஏற்படுத்துகின்றது என்பதற்கு மகாபாரதம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ukr

தாய விளையாட்டு என்பது எல்லா வயதினரும் விளையாடுவார்கள். பள்ளிக்கூடப் பிள்ளைகள் சனி-,ஞாயிறு விடுமுறைகளிலும் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு விடுமுறையிலும் விளையாடுவார்கள்.

மழைக்காலங்களில் வெளியேபோய் விளையாட முடியாத நிலையில் தாயம் விளையாட்டை விளையாடுவார்கள். இதற்கு மேல் கீழ் 7 கட்டங்கள் கொண்ட நான்கு பக்கச் சதுர அமைப்பைக் கொண்டது. தாயம் விளையாட்டுக்கு இரும்பு அல்லது செம்பினால் ஆனா 4 பக்கம் கொண்ட தாயக்கட்டைகள் 2 பயன்படுத்துவார்கள். அந்தக் கட்டையில் 1 புள்ளி, 2 புள்ளி, 3 புள்ளி எனவும் ஒரு பக்கத்தில் புள்ளிகள் இல்லாமல் இருக்கும்.

இரண்டு தாயக் கட்டைகளையும் இரண்டு கைகளால் தேய்த்துத் தரையில் உருட்டி விடுவார்கள். அவை உருண்டு நிற்கும். இந்த விளையாட்டை 2 பேர் ஒரு அணியாக 2 அணியாக 4 பேர் விளையாடுவர்கள். ஆண்கள் பணம் கட்டி சூதாட்டமாக விளையாடுபவர்கள் 4 பேராக விளையாடுவார்கள்.

 

தாயக்கட்டை

இரண்டு தாயக் கட்டையிலும் 1 புள்ளி மட்டும் இருந்தால் தாயம் என்று பெயர். தாயம் பெற்றவர் மறுபடியும் உருட்டி விளையாட உரிமைபெற்றவர். 2, 3, 4, 5, 6, என்று புள்ளிகளை வைத்துக் கணக்கு வைக்கப்படும். இரு கட்டையிலும் புள்ளிகள் இல்லாமல் இருந்தால் அது 12 என்று கணக்கில் வைக்கப்படும். 12 பெற்றவர் மறுபடியும் உருட்டி விளையாட உரிமை பெற்றவர். புள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கட்டங்களில் காய்கள் நகர்த்தப்படும்.

பின்னர் உள்வட்டத்திற்குச் சொல்லும். அதன் பின் நடுவில் உள்ள X கட்டத்திற்கு 6 காய்களைக் கொண்டு செல்பவர்கள் வெற்றிபெற்றவர் ஆவார். 9 X கட்டங்களில் இருவர் அல்லது நால்வரும் சந்தித்துக் கொள்கிற மலை என்று பெயர். மற்ற இடங்களில் இருவர் அல்லது நால்வர் சந்தித்துக் கொள்ளும்போது அந்தக் காய் வெட்டப்பட்டதாகப் பொருள் கொள்ளப்படும். காய்கள் வெட்டுப்பட்டால் எதிர் அணியின் காய்களை வெட்டி எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.

இல்லையெனில் வெற்றி சாத்தியப்படாது. இந்தத் தாயக் கட்டை ஆட்டத்திற்கும் பணம் வைத்து விளையாடுவார்கள். பார்வையாளர்கள் யார் வெற்றிபெறுவார்கள் என்று வெளியில் பந்தயம் கட்டி கொண்டிருப்பார்கள்.

லக்கி பிரைஸ்

லக்கி பிரைஸ் என்பது கடைகளிலும் சில தனிநபர்கள் கோயில்களிலும் திருவிழா நேரங்களிலும் நடைபெறும். ஒரு பெரிய அட்டையின் மேற் பகுதியில் சில பாத்திரங்கள், பாக்கெட் வானொலி, பல்வேறு விளையாட்டு சாமான்களைப் பாலித்தீன் பையில் போட்டு அட்டையோடு ஒட்டி வைத்திருப்பார்கள். அந்தந்தப் பொருள்களுக்குக் கீழே நம்பர் எழுதியிருக்கும். பிரைஸ் அட்டையின் கீழ்பகுதியில் ஒரு கட்டைவிரல் அளவு அட்டையை வெட்டி கலர் காகிதத்தில் மடித்து ஒட்டி வைத்திருப்பார்கள். அந்தக் காலத்தில் 5 பைசா கொடுத்துப் பிரைஸ் கிழிக்கவேண்டும். பின்னர்ச் சுற்றியிருக்கும் பேப்பரை நீக்கி அட்டை எடுக்கவேண்டும். அதில் நம்பர் இருந்தால் பிரைஸ் (பரிசு) கிடைக்கும். 0 என்றிருந்தால் பிரைஸ் கிடைக்காது. சின்ன அட்டையில் உள்ள எண்ணுக்கு என்ன பரிசோ அதைப் பெற்றுக்கொள்ளலாம். கடைக்காரர் பரிசு விழுந்தால் அதற்குரிய தொகையைக் கொடுத்துவிடுவார். பொருள் அங்கே இருக்கும். பிரைஸ் கிழிக்க வரும் ஆர்வலர்கள் பொருள் இன்னும் விழாமல் உள்ளது என்று ஆர்வம் கொள்ள வைக்கும் ஒரு வகை உத்தி. கடைக்காரர் 1000ரூபாய் கொடுத்துப் பிரைஸ் அட்டையை வாங்கி வந்தால் அதன்மூலம் சுமார் 500ரூபாய் கிடைக்கும். இது சின்னப் பிள்ளைகளுக்கான சூதாட்டம் என்றுதான் வைத்துக் கொள்ளவேண்டும்.

ரொட்டி பிரைஸ்

இதுவும் சின்ன வயதினருக்கான சூதாட்டம்தான். இந்தச் சூதாட்டம் இரவு நேரம் 7.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும். பொதுவாக இந்த ரொட்டி பிரைஸ் நடத்துபவர்கள் பெரும்பாலும் தாத்தாவாகவே இருப்பார்கள். அவர் ஒரு தட்டில் தேங்காய் பன், சுவீட் பன், ஊட்டி வறிக்கி, சில பேக்கரி ரொட்டிகளை வைத்திருப்பார்.

இவற்றின் நடுவில் சீமஎண்ணையில் எரியும் காடா விளக்கு எரிந்து கொண்டிருக்கும். இந்த வெளிச்சம் கண்டவுடன் சிறுவர்கள் படையெடுக்கத் தொடங்குவார்கள். பின்னர் ரொட்டி பிரைஸ் தொடங்கும். தாத்தாவின் கையில் 20 அட்டைகள் 1 முதல் 20 நம்பர் போட்டு இருக்கும். 6க்கும் 9க்கும் வித்தியாசம் தெரிய 9க்குக் கீழ் ஒரு புள்ளி வைத்திருப்பார்.

ஒரு அட்டை 1 பைசாவிலிருந்து 5 பைசா 10 பைசா வரை விற்கும். அந்தத் தாத்தா 20 அட்டைகளை மேலும் கீழும் குலுக்கி அட்டை 1 பைசா என்றால் 5 அட்டை 5 பைசா என்ற வீதத்தில் விற்றுக் கொண்டிருப்பார். அட்டைகள் விற்று முடிந்தவுடன் ஒரு டப்பாவில் 1 முதல் 20 வரை எழுதப்பட்ட சீட்டுகள் சுருட்டப்பட்டு உள்ளே இருக்கும். அதைத் தாத்தா மேலும் கீழும் குலுக்கி யாராவது ஒருவரை எடுக்கச் சொல்வார்.

ஒரு பையன் ஒரு சீட்டை எடுத்துக் கொடுப்பார். அதைப் பிரித்து அதில் உள்ள எண்ணைச் சொல்வார். அந்த எண் வைத்திருப்பவருக்குப் பிரைஸ் விழுந்துவிட்டது என்று பொருள். உடனே 20 பைசாவிற்குப் பெறுமதியான பன், ரொட்டி, வறிக்கி போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். இதற்குப் பதிலாகக் காசும் வாங்கிக் கொள்ளலாம்.

மொத்தம் 20 பைசாவில் 5 பைசா கழித்துக்கொண்டு தாத்தா 15 பைசாவைப் பிரைஸ் விழுந்தவருக்குக் கொடுப்பார். உடனே அடுத்த ஆட்டம் தொடங்கிவிடும். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு அட்டையின் விலை 5 பைசா 10 பைசா என்று கூடிவிடும். இந்தச் சிறுவர்களின் சூதாட்டத்தையும் காவல்துறை கண்டுகொள்ளமாட்டார்கள்.

சூதாட்டங்களில் அறிவுக்கு வழியிருக்காது. அதிர்ஷ்டத்தை நம்பியே வெற்றியும் தோல்வியும் கிடைக்கும். இதற்கு என்று தனியே உடலை வருத்தி உழைக்கவேண்டியது இல்லை என்பதாலும் யார் வேண்டுமானாலும் இந்தச் சூதாட்டங்களை விளையாடலாம் என்பதாலும் சூதாட்டங்களுக்குப் புராணகாலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை செல்வாக்கு இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். தேனி எழுத்தாளர் யாழ்ராகவன் என்பவர் தான் பார்த்த சினிமா குறித்தும் பார்க்கச் சென்றபோதும், பார்த்துவிட்டுச் சைக்கிள் திரும்பும்போதும் நள்ளிரவில் ஏற்பட்ட அனுபவங்களை முகநூலில் பகிர்ந்து வருகிறார்.

அவர் சினிமா கொட்டகைகளை முன்னிறுத்தி நடத்தப்படும் லங்கர் கட்டை என்னும் சூதாட்டத்தைக் ”குலுக்குக்கட்டை” என்று குறிப்பிடுகின்றார். அடுத்த இதழில் சினிமா அரங்கங்களின் முன் நடைபெற்ற லங்கர் கட்டை, நாடா குத்து, மூணு சீட்டு, மூணு ஸ்டைகர், பூவா தலையா, படம் பார் பணம் வை, லக்கி பிரைஸ்(பரிசு பொருள் கிடையாது. பணம்தான்) இதுபோன்ற பல்வேறு சூதாட்டங்கள் குறித்து அடுத்த இதழில் எழுதுவேன். உங்களுக்குத் தெரிந்து நான் விட்டுவிட்ட சூதாட்டங்கள் என்று வாசகர்கள் கருதினால் அது விளையாட்டு குறித்து என்னிடம் தகவல் தெரிவிக்கலாம்.

அலைபேசி எண்-9443214142

half 1

Leave A Reply

Your email address will not be published.