எம்.ஜி.ஆரின் விடாமுயற்சி: கரும்பு சக்கையிலிருந்து காகிதம்

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0
1

1972-இல் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அண்ணாதிமுக என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணாதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். 1979இல் கரும்பு சக்கையில் காகிதம் தயாரிக்க முடியும் என்ற ஆய்வறிக்கையில்,“ மரக் கூழ், மூங்கில், சலாய், மற்றும் சவாய் புற்கள், உபயோகப்படுத்தப்பட்ட காகிதங்கள், கரும்பு, சக்கை போன்றவை காகிதத் தொழிற்சாலைக்குத் தேவையான மூலப் பொருட்கள் ஆகும். மேற்கு வங்காளம் இந்தியாவில் காகித உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலம் ஆகும். மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்றவை காகித உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாநிலங்கள் ஆகும். தொடக்கத்தில் மூங்கில் போன்ற மரங்களைச் சிறுசிறு துண்டுகளாக்கி அதனை நன்றாக அரைத்துக் கூழாக்கினர். இதுவே செல்லுலோஸ் எனப்படும் காகிதக் கூழ் ஆகும். இந்தக் கூழினை நன்கு காய்ச்சி, அதில் உள்ள நீரை வடித்துக் கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தித் தாள்களை உருவாக்கினார்கள்.இவ்வாறு தான் காகிதம் உருவானது. இதன் அடிப்படையில் கரும்பு சக்கையிலிருந்தும் காகிதம் தயாரிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.‘

தமிழ்நாட்டில் சர்க்கரை தயாரிக்கும் கரும்பு ஆலைகளில் கரும்பு சக்கைகள் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இதனைக் காகிதமாக மாற்றினால் கிடைக்கும் இலாபம் அதிகம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கமுடியும் என்ற அடிப்படையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முன்வந்தது. பரிசோதனை முயற்சியில் முதலில் தோல்வியே கிடைத்தது. 1979 முதல் 1983 வரை 4 ஆண்டுகளில் நடைபெற்ற பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. இடையில் 1980-இல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு, அதே ஆண்டில் அவரே இரண்டாவது முறையாகவும் ஆட்சிக்கு வந்தார். அரசியல் அதிர்வுகளால் எம்ஜிஆர் சில பாதிப்புக்குள்ளக்கப்பட்டாலும், கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் முயற்சிகளிலிருந்து அவர் பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

கரூர் வேலாயுதம்பாளையத்திலிருந்து புகழூர் இரயில் நிலையம் செல்லும் சாலையில், இரயில் நிலையம் ஒட்டிய சுமார் 1250 ஏக்கரில் காகிதத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. தொழிற்சாலைக்கு நிலங்களைக் கொடுத்தவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்குக் காகிதத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டது. 1983இல் கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலையின் பணிகளை 5 ஆண்டுகளுக்கு மேற்பார்வையிடவும் உற்பத்தியைப் பெருக்கவும் ஈரோடு சேசாயி பேப்பர் தொழிற்சாலையோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2

ஈரோடு பள்ளிபாளையம் காவேரி இரயில் நிலையத்திற்கு அருகில் இயங்கி வரும் சேசாயி காகிதத் தொழிற்சாலை 1955இல் நிறுவப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் தமிழ்நாடு அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, அவரின் ஒத்துழைப்போடும் பரிந்துரையோடும் சேசாயி காகிதத் தொழிற்சாலை அமைய அரசின் சார்பில் பல உதவிகள் செய்யப்பட்டன. சேசாயி காகிதத் தொழிற்சாலை காகிதத்தை மூங்கில் மூலம் தயாரிக்கத் திட்டம் வைத்திருந்தது. இந்தத் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் மூங்கில்களை வெட்டிக்கொள்ளத் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மூங்கில் காடுகள் 99 வருட நீண்ட காலக் குத்தகைக்கு 10,000 ஏக்கர் கொடுக்கப்பட்டது. அப்படிக் கொடுக்கப்பட்ட மூங்கில் காடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்று குத்தகை நிர்ணயம் செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.10,000/- மட்டுமே என்ற குத்தகை தொகையை இன்றளவும் அந்தக் காகிதத் தொழிற்சாலை அரசுக்குச் செலுத்திவருகின்றது. ஆண்டுக்குச் சுமார் 4 கோடி ரூபாய் நிகர இலாபம் மட்டுமே 1980களில் ஈட்டி வந்தது. இப்போது நிகர இலாபம் பன்மடங்காக உயர்ந்திருக்கும். அரசின் உதவிகளோடு தொடங்கப்பட்ட அந்தத் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அந்தக் காலத்தில் ஐயங்கார், ஐயர் சமூகத்தினருக்கு மட்டுமே வழங்கப்பட்டன. கூட்டுவது, பெருக்குவது போன்ற துப்புரவு பணிகளில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் புகழூர் காகிதத் தொழிற்சாலை ஒப்பந்தத்தின்படி நிர்வகிக்கும்போது, சேசாயி தனியார் காகித நிறுவனத்தில் பணியாற்றிய பல ஐயங்கார், மற்றும் ஐயர்கள் மேலாண்மை சார்ந்த உயர்பதவிகளில் அப்படியே இடம் பெயர்ந்து அரசு ஊழியர்களாக மடைமாற்றம் செய்யப்பட்டனர். இதை எம்ஜிஆர் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. 1984இல் திட்டக் காலம் முடிந்து உற்பத்திக் காலம் தொடங்கியது. மாதத்திற்கு 10,000 டன் என்பதிலிருந்து 1,00,000 டன் வரை உயர்ந்தது. 5 ஆண்டுகள் ஒப்பந்தம் முடிந்தவுடன் சேசாயி காகித நிறுவனம் வெளியேறியது. அதன் பின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் நிரப்பப்பட்டன. தொழிற்சாலையின் சொத்து மதிப்பு 790 மில்லியன் என்ற அளவுக்கு உயர்ந்தது.

TNPL காகிதத் தொழிற்சாலைக்குக் கிழக்கே இருந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில், சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டில் TNPL நிறுவனம் தன்னுடைய இரண்டாவது தொழிற்சாலையை மணப்பாறையில் அமைத்தது. அந்தத் தொழிற்சாலையும் தற்போது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆலைகள் செய்வோம் நல்ல காகிதங்கள் செய்வோம் என்ற பாரதியின் கனவை எம்ஜிஆர் எரிக்கப் பயன்படும் கரும்பு சக்கையிலிருந்து காகிதத்தை உற்பத்தி செய்து சாதனைகள் பல படைத்தார். கரூர் புகழூர் காகிதத் தொழிற்சாலை அமைக்கப்பட்ட 1980களில் கரூர் திருச்சி மாவட்டத்தின் வருவாய் மாவட்டமாக இருந்தது. அப்போது திருச்சி மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை என்றே இதழ்களில் செய்திகள் வெளியாயின.

கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் முதன் முயற்சிகள் தோல்வியடைந்த குறித்துக் கவலை கொள்ளாமல் தொடர்ந்து ஊக்கம் அளித்து வெற்றியை ஈட்டினார். இதனால் தமிழ்நாடு அரசின் தொழில்துறையில் பல்லாயிரம்கோடி சொத்து கொண்ட நிறுவனமாகத் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது என்பது எம்ஜிஆர் முயற்சியால்தான் என்ற உண்மையான வரலாற்றை உணர்ந்துகொள்ளவேண்டும். தொழில்துறை வளர்ச்சியில் காமராசரைப் பாராட்டும் நாம் மக்கள் திலகம் எம்ஜிஆரையும் பாராட்டுவோம்.

(கட்டுரையாளர் 1984-85ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் புகழூரில் போக்குவரத்து துறையில் 2-ஆம் நிலை எழுத்தராகப் பணியாற்றியவர்)

-ஆசைத்தம்பி

3

Leave A Reply

Your email address will not be published.