Ntrichy.com

பல்கலை.க்கு பெரியார் பெயர் நீக்கி பாரதிதாசன் பெயர்

பெயர் மாற்றத்திற்கு காரணம் யார்? (காதில் விழுந்த செய்தி)

RTI

1981-இல் திராவிட இயக்கத்தின் ஆணிவேர் தந்தை பெரியாருக்கும், இந்தியாவின் தேசியக் கவி என்று போற்றப்படுகின்ற மகாகவி பாரதியாருக்கும் நூற்றாண்டு விழா.

Ukr

முதல்வர் பொறுப்பிலிருந்த எம்.ஜி.ஆர். இருவரின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாட முடிவு எடுத்தார். இருவரின் பெயரிலும் பல்கலைக்கழகங்கள் அமைப்பது என்று தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்தது. அப்போது சென்னை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமே இருந்து வந்தன. (அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம்)

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு மையங்கள் (Madras University PG Study Centers)செயல்பட்டு வந்த திருச்சி மையத்தையும், கோவை மையத்தையும் பல்கலைக்கழகமாக மாற்றுவது என்றும் அறிஞர்கள் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

Happy house

அதன் அடிப்படையில் திருச்சியிலும் கோவையிலும் பல்கலைக்கழகம் அமைப்பது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருச்சியில் அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்குப் பெரியார் பல்கலைக்கழகம் என்றும் கோவையில் அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்குப் பாரதியார் பல்கலைக்கழகம் என்றும் பெயரிடப்பட்டு நாளிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

திருச்சி பெரியார் பல்கலைக்கழகத்திற்குத் தற்போதைய பெரியார் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டன. பெரியார் கல்லூரி அமையவுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாகவும் செயல்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. தந்தை பெரியாரோடு மிகவும் நெருக்கமான தொடர்புடைய திருச்சியில் பெரியாருக்குப் பல்கலைக்கழகத்தை எம்ஜிஆர் அமைத்ததைப் பாராட்டாத பெரியாரிய சிந்தனையாளர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எம்ஜி.ஆரைப் பாராட்டினார்கள்.

பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த எம்ஜிஆரைச் சந்திக்க ஆனந்த விகடன் இதழில் இதழில் ‘இதயம் பேசுகிறது’ என்று பயணக் கட்டுரை எழுதி புகழ் பெற்றவரும், இதயம் பேசுகிறது இதழின் ஆசிரியரும், எம்ஜிஆர் நடித்த இதயவீணை திரைப்படத்தின் தயாரிப்பாளருமான மணியன் வந்தார்.

அவரின் வருகை எம்ஜிஆருக்குத் தெரிவிக்கப்படவில்லை. எம்ஜிஆரை எந்த முன்அனுமதியும் இல்லாமல் இருவரும் மட்டுமே சந்திப்பார்கள். ஒருவர் முன்னாள் அமைச்சர், சத்யா மூவிஸ் அதிபர் ஆர்.எம்.வீரப்பன் மற்றொருவர் இதயம் பேசுகிறது மணியன்.

அப்படியன்றால் மணியனுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள நெருக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியும். மணியன் ஒருவித பதற்றத்துடன் எம்ஜிஆர் அறைக்குச் சென்றதை எல்லாரும் பார்த்தார்கள். என்ன காரணமாக இருக்கும் என்பதை எம்ஜிஆரைச் சுற்றியிருப்பவர்களால் உணரமுடியாது தவித்து நின்றார்கள்.

மணியன் எம்ஜிஆரை சந்தித்த உரையாடிக் கொண்டிருந்த போது,“திருச்சியிலும் கோவையிலும் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் செய்தியைப் ‘பெரியவா’ (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர்) பார்த்து பாராட்டினார்.

Gold

கல்வியை எல்லாருக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் புதிய பல்கலைக்கழகங்கள் இன்னும் தேவை என்பதை வலியுறுத்தினார். மேலும் உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒரு செய்தியையும் சொல்லச் சொன்னார். கோவையில் பாரதியார் பெயர்ல பல்கலைக்கழகம் வைத்தது ஷேமகரமானதுன்னாரு, திருச்சி பல்கலைக்கழகத்துக்கு. ராமசாமி பெரியார் பெயருல்ல வைக்கறத பெரியவா விரும்பவில்லை. வேறு பெயரைப் பரிசீலிங்க” என்று சொல்லி மணியன் எம்ஜிஆர் அறையை விட்டு வெளியேறினார்.

எம்ஜிஆர் தனக்கு நெருக்கமான சிலரை அழைத்தார். மணியன் சொன்ன செய்திகளை அவர் களிடம் விவரித்தார். எதையும் குழப்பமில்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என முடிவெடுக்கும் எம்ஜிஆர் இந்த விஷயத்தில் அதிகமாகவே குழம்பியிருந்தார் என்பதை உடன் இருந்தவர்கள் புரிந்துகொண்டார்கள்.

எம்ஜிஆரின் குழப்பத்திற்குக் காரணம், திருச்சி பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பை மாற்றினால் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி பெரிய போராட்டத்தை நடத்துவார். கருணாநிதியைச் சமாளிக்கும் விதத்தில் என்ன பெயர் வைப்பது என்பதேயாகும்.

வா.செ.குழந்தைசாமி போன்ற அறிஞர்களோடு எம்ஜிஆர் பெயர் மாற்றம் பற்றி விவாதித்தார். பின்னர் அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது என்னவெனில், பாரதியார் நூற்றாண்டு விழாவையட்டி கோவையில் பாரதியாருக்குப் பல்கலைக்கழகமும், அவருக்குத் தாசன் என்று தன்னை அழைத்துக்கொண்ட புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனுக்குத் திருச்சியில் பல்கலைக்கழகமும் அமைப்பது என்பதாகும்.

எம்ஜிஆர் பெயர் மாற்றத்தைக் கலைஞருக்குத் தெரிவித்து ஒப்புதலும் பெற்றார் என்பது தனிச் செய்தி. இதனால் பெயர் மாற்றம் குறித்து கலைஞர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எம்ஜிஆர் குழப்பங்கள் நீங்கி அமைதியானார்.

குழப்பம் வேறு வகையில் வந்தது. பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டவுடன் பல்கலைக்கழகத்தின் இடமும் மாற்றப்பட்டது. திருச்சி -சென்னை புறவழிச் சாலையில் சிறுகனூர் அருகில் சுமார் 500 ஏக்கர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டன.

பணிகளைத் தொடங்க அரசு தயார் நிலையில் இருந்தபோது, எம்ஜிஆரிடம் மிகவும் நெருக்கமாக இருந்த இளைஞர், அப்போதைய துணை சட்டப்பேரவைத் தலைவர், தற்போதைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு ஆவார்.

அவர் எம்ஜிஆரைச் சந்தித்து திருச்சி – புதுக்கோட்டை சாலையில் பல்கலைக்கழகம் அமைந்தால் நன்றாக இருக்கும். விமானநிலையமும் இந்த சாலையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார். மாத்தூர் தாண்டியவுடன் சாலையின் இருபுறமும் புதுக்கோட்டை மாவட்ட எல்லை தொடங்கிவிடும். திருச்சி மாவட்ட எல்லையில்தான் பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பதை எம்ஜிஆர் உறுதிப்படுத்தினார்.

பின்னர் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ஒட்டிக் கொண்டு திருச்சி மாவட்ட எல்லையில் சூரியூர் இருந்தது. சூரியூரில் இருந்த அரசு புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்திற்கான கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகம் திருச்சி வானொலி நிலையத்திற்கு எதிரே காம்பியன் பள்ளிக்குத் தெற்கே இருந்த ஒரு விடுதியில் இருந்தது. பதிவாளர் மற்றும் நிதி அலுவலர் அலுவலகங்கள் இப்போதைய சோனா,மீனா திரையரங்கிற்கு எதிரே உள்ள இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் இயங்கி வந்தன. 1984ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிர்வாகக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. தற்போது 25 ஆண்டுகளைக் கடந்து, பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் முதன்மை வளாகம் சூரியூரிலுள்ள பல்கலைக்கழகப் பேரூரிலும், திருச்சியின் காஜாமலை வளாகத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழகத்தின் பெயரில் மாற்றம் நிகழ்ந்தாலும் அதன் நோக்கத்தில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை என்பதே நிதர்சனம்.

– ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.