திருச்சியில் மறைந்துபோன திரையரங்குகள்

1
1 full

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்ற செய்தி பகுதி – 2ஐ எழுதுவதற்கு எனக்கு நம்பிக்கையைத் தந்தது.  70களில் திரையரங்குகள் மக்களின் பொழுது போக்கு இடமாக அமைந்திருந்தது என்பதுதான் இதில் உள்ள செய்தி.

மக்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் என்று பிரிந்திருந்த வேளையில்தான் ஜெய்சங்கர், இரவிச்சந்திரன் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களும் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

அதில் ஜெய்சங்கருக்கு ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்ற பட்டப்பெயரும் உண்டு. 70களில் வெளியான திரைப்படங்களில் நாகேஷ் – மனோரமா ஜோடியின் நகைச்சுவைக் காட்சிகளால் திரையரங்குகள் சிரிப்பொலி விண்ணைப்பிளக்கும். நாகேஷின் நடன அசைவுகளும், உடல் மொழியும் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும்

2 full

அந்தக் காலத்தில் நாகேசை விரும்பிய குழந்தைகள் ஏராளம். நகைச்சுவை நடிகராய் வலம் வந்த நாகேஷ்- இயக்குநர் பாலச்சந்தர் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

நாகேஷ் கதாநாயகனாக நடித்த படங்கள் அத்தனையும் எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களுக்கு நிகராக ஓடியது. வசூலை அள்ளிக் குவித்தது. எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் தன்னை இயக்குநராக வெளிப்படுத்திக் கொண்ட பாலச்சந்தர் பல வெற்றிப் படங்களைத் தந்தவர். மக்கள் கதாநாயகர்களை மட்டும் இரசிக்காமல் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களையும் இரசித்தார்கள். அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தின் வெற்றியை இதற்குச் சாட்சியாகக் கூறலாம். 80களில் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். சிவாஜி வயதாகிப் போனதால் ஏறத்தாழ ஓய்வு நிலையில் இருந்தார்.

இந்த இடைவெளியில் கமலஹாசன், ரஜினிகாந்த் வருகை இருந்தது. இவர்களின் இளமை துள்ளல் திரையுலகத்தின் போக்கை மாற்றி அமைத்தன. மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனால்தான் 80களில் புதிய திரையரங்குகள் தோன்றத் தொடங்கின.

2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பல திரையரங்குகள் இடிக்கப்பட்டன. சில வணிக வளாகங்களாக மாற்றப்பட்டன. சில திருமண அரங்குகளாக உருமாற்றம் பெற்றன. அப்படிக் காலவெள்ளத்தில் மறைந்துபோன திருச்சி திரையரங்குகளுக்கு என்று சில தனித்துவமான வரலாறுகள் உள்ளன.

இப்போதும் உயிர்ப்போடுள்ள திரையரங்குகளுக்கும் வரலாறுகள் உள்ளன. இந்த வரலாறுகள் எல்லாம் வாய்மொழி வரலாறுகள்தான் என்றாலும் அவற்றைப் புறக்கணித்தால் நாளைய வரலாற்றிற்குப் பதிவுகளுக்கான தரவுகள் இல்லாமல்போகும் என்பதால் இந்தக் கட்டுரையில் சில செய்திகள் பதிவு செய்யப்படுகின்றன.

பிரபாத்

மதுரை சாலையும் மார்க்கெட் சாலையும் சந்திக்கும் பாலக்கரையில் இந்தத் திரையரங்கம் இருந்தது. இதன் தனித்துவம் என்னவென்றால் சிவாஜி நடித்த திரைப்படங்கள் நிறைய வெளிவரும். ஆனால் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் ஒன்றுகூட வெளிவந்ததாகப் பதிவில்லை. சிவாஜியும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி பிரபாத்தில் வெளிவந்திருக்க வாய்ப்பு உண்டு. எம்ஜிஆர் தனியாக நடித்த எந்தப் படமும் இதில் வெளிவந்ததில்லை. மேலும் இந்தத் திரையரங்கத்திற்கும் நடிகர்திலகம் சிவாஜிக்கும் நெருங்கித் தொடர்பு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு விளம்பரச் சிலைடுகள் போடுவார்கள். சிவாஜியின் அம்மா பெயரைத் தாங்கிய ‘ராஜாமணி பிரஸ்’ என்ற சிலைடு போட்டுவிட்டார்கள் என்றால் அடுத்தது சினிமாதான் என்று கைதட்டத் தொடங்கிவிடுவார்கள்.  சிவாஜி தன் தாயருடன் சங்கிலியாண்டபுரத்தில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் உண்டு.

சிவாஜியின் தங்கப்பதக்கம், அன்பே ஆயிரூரே, மன்னவன் வந்தானடி, திரிசூலம், நீதி போன்ற பல படங்கள் இந்தத் திரையரங்கில் வெளிவந்தன. சிவாஜி நடித்த 150ஆவது திரைப்படமான சவாலே சமாளி பிரபாத் திரையரங்கில் வெளியானது. வெளியான நாளில் திருச்சி நகரத்தையே கலக்கிய ஒரு பெரிய ஊர்வலம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

80களில் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே, தமிழ் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒருதலை ராகம், ரஜினியின் முரட்டுக்காளை போன்ற திரைப்படங்களும் பிரபாத்தில் திரையிடப்பட்டன.

பிரபாத் திரையங்கின் இடது பக்கத்தில் கிராண்ட் ஹோட்டல் இருக்கும். இடைவேளையின்போது அந்த ஹோட்டலிருந்து கப் அன் சாஸரில் டீ வாங்கி ரசிகர்கள் குடிப்பார்கள். வலது பக்கத்தில் பிஜி நாயுடு சுவீட் கடையும் கொஞ்சம் தள்ளி ஆறுமுகம் அசைவ உணவகம் இருக்கும்.

இரவு காட்சி (10.00 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்கு முடியும்) முடிந்தபின்னர் வெளியே வரும் வெளியூர் இரசிகர்கள் அறுமுகம் உணவகத்தில் புரோட்டா, தோசை சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். மேட்னி ஷோ (பகல் 2..30 மணிக்குத் தொடங்கி 5.30 மணிக்கு முடியும்) முடிந்து வெளியே வரும் இரசிகர்கள் பிஜி நாயுடு சுவீட் கடைக்கு முன்பு ஒரு பழைய புத்தகக் கடை இருக்கும். அந்தப் புத்தகக் கடையில் சிலர் தங்களுக்குத் தேவையான பழைய புத்தகங்களைச் சொந்தமாகவோ, வாடகைக்கோ வாங்கிச் செல்வார்கள். காலை 9.00 மணிக்கு விரித்து வைக்கப்படும் இந்தப் பழைய புத்தகக் கடை இரவு 7.00 மணி வரை இருக்கும்.

கட்டுரையாளர் தன் கல்லூரி காலங்களில் காலை 9.15 மணிக்குத் தான் படித்த புத்தகங்களைக் கொடுத்துவிடுவார். மாலை 5.00 மணியளவில் வீடு திரும்பும்போது புத்தகக் கடையில் புத்தகங்களை வாங்கிச் செல்வார். வார இதழ்களில் வெளிவந்த பல தொடர்கதைகள் இங்கே பைண்ட் செய்யப்பட்டு வாடகைக்குக் கிடைக்கும். பிரபாத் திரையரங்கு சென்று திரும்பும் இரசிகர்கள் வயிறாற உண்ணுவர்கள். மனம் நிறைய படிப்பார்கள் என்ற ஒரு செய்தி வேறு எந்தத் திரையரங்கிற்கும் இல்லாத புதுமை என்றே துணிந்து சொல்லலாம்.

ஜூபிடர்

வெல்லமண்டி சாலையிலிருந்து மேற்குப் பக்கமாக உள்ள மதுரை சாலையில், சையது முர்துசா மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் எதிரில் ஜூபிடர் திரையரங்கம் இருந்தது. 70களில் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், எங்கள் தங்கம், தேவரின் நல்லநேரம், சிவாஜியின் பேசும் தெய்வம், குலமா குணமா, கமலின் வறுமையின் நிறம் சிகப்பு, மகேந்திரனின் வெற்றிப்படமான உதிரிப்பூக்கள், தோல்வியைத் தழுவிய பூட்டாத பூட்டுகள், பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள், பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, கலைஞரின் மகன் மு.க.முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை, பூக்காரி போன்ற திரைப்படங்கள் இந்தத் திரையரங்கில் வெளியிடப்பட்டன.

இந்தத் திரையரங்கில் மட்டும் திரைப்படம் முடிந்தவுடன் வெளியே வரமுடியாது. காரணம் மூவர்ணக் கொடி அசையும் தேசியகீதம் திரையிடப்படும். தேசியக் கீதம் முடிந்த பின்னர்தான் கதவுகள் திறக்கப்படும் என்பதைக் காலம் காலமாக இத் திரையரங்கில் கடைப்பிடிக்கப்பட்டது என்றால் ஆச்சர்யம்தானே வருகிறது.

மு.க.முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை திரையிடப்பட்டபோது அந்தப் பிலிம் பெட்டி யானையின் மீது அமர்த்தப்பட்டுச், சிந்தாமணி அண்ணா சிலையிலிருந்து அன்பில் தர்மலிங்கம் தலைமையில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. அந்த ஊர்வலத்தில் தமிழர்களின் வீரவிளையாட்டுகளான, குச்சி விளையாட்டு, சிலம்பாட்டம், மான்கொம்பு சண்டை போன்றவை இடம் பெற்றிருந்தன. திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற இந்தத் திரைப்படமும் ஒரு முக்கியக் காரணம் என்பதை அந்தக் கால வரலாற்றை அறிந்திருப்பவர்கள் உணர்வார்கள்.

இந்தத் திரையரங்கில் படம் பார்க்கவேண்டுமென்றால் மிக எளிதாக டிக்கெட் வாங்கச், சைக்கிள் கொண்டு சென்று, அதற்குரிய தொகையைச் செலுத்திப் பாஸை வாங்கிக் கொண்டு, டிக்கெட் கொடுக்குமிடத்தில் சைக்கிள் பாஸைக் காட்டினால் வரிசையில் கால்கடுக்க நிற்காமல் டிக்கெட் வாங்கிவிடலாம்.

இங்கே புரெஜெக்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்த மாதவன் என்பவரிடம் ஏன் இந்த முறை என்று கேட்டபோது, “சைக்கிள் எடுத்துக்கொண்டு சினிமா பார்க்க வருபவர்கள் சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவிலிருந்து வருபவர்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காகத்தான் சைக்கிள் பாஸ் காட்டினால் டிக்கெட் என்ற முறை இருந்தது” என்பதில் திரையரங்கத்தினர் இரசிகர் மீது எவ்வளவு கருணை வைத்திருந்தார்கள் என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும்.

80களில் இந்தத் திரையரங்கில்தான் முதன்முதலில் 25 பைசாவுக்குப் பெரிய சமோசாவும், முழுமுட்டை போண்டாவும் இடைவேளையின்போது சுடச்சுட இரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. சமோசாவையும் முட்டை போண்டாவையும் சுவைக்காத இரசிகர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இதனால் இடைவேளை நேரம் 15 நிமிடம் என்பது 25 நிமிடமாக உயர்த்தப்பட்டிருக்கும். இரசிகர்களைத் தன்வயப்படுத்திக் கொண்ட திரையரங்குகளில் ஜூபிடர் தனித்துவமானதுதான்.

சென்டரல்

இந்தத் திரையரங்கம் திருச்சி மார்க்கெட்டின் தெற்குப் பகுதியிலுள்ள உப்புப்பாறை என்னுமிடத்தில் அமைந்திருந்தது. இந்தத் திரையரங்கின் தனித்துவமான, பெருமையான செய்தி என்னவெனில், திரைப்படம் பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கச் கியூவில் நிற்கவேண்டிய தேவையில்லை. சுமார் 100 பேர் அமர்வதற்குச் சிமெண்ட் பலகைகள் போடப்பட்டிருக்கும். அதில் காற்றோட்டமாக அமர்ந்திருக்கலாம்.

இந்தத் திரையரங்கின் நிர்வாகத்தை இஸ்லாமியச் சமுதாயம் சார்ந்தவர்கள் நிர்வகித்து இருப்பார்கள் என்ற எண்ணம் வலுப்பெற இரண்டு செய்திகள். 1. திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு விளம்பரச் சிலைடுகள் போடுவார்கள். அதில் முதல் சிலைடு “எங்களின் அருட்கொடை” என்று இஸ்லாமியப் பெரியவரின் புகைப்படம் தாங்கியிருக்கும். 2. வளநாடு சினி ரிலீஸ் திரைப்படங்கள் பெரும்பாலும் சென்டரல் திரையரங்கில்தான் வெளியிடப்படும்.

எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படம் 70களில் வெளியானது. திரையரங்கின் முன்பு எம்ஜிஆர்  கட் ஆவுட் வைக்கப்பட்டிருந்து. அந்த எம்ஜிஆர் கட் ஆவுட்-இல் கழுத்துப் பகுதியில் 5 பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டது. விவசாயி திரைப்படம் 100 ஓடியது. அதுவரை அந்தத் தங்கச் சங்கிலி கட் அவுட் இருந்தது. இதைப் பார்க்க மாலையில் ஒரு பெரிய கூட்டமே கூடியிருக்கும்.

எம்ஜிஆரின் தேர்த்திருவிழா, ஜெய்சங்கரின் சிஐடி சங்கர், கர்ணனின் ஜம்பு, சிவாஜியின் எங்க மாமா, சரஸ்வதி சபதம், ஆதி பராசக்தி, அன்னை வேளாங்கண்ணி போன்ற பக்தி படங்களும் இங்குத் திரையிடப்பட்டது.  அரசியலில் இருந்த கலைஞரின் கதை – வசனத்தில் அண்ணாவின் வண்டிக்காரன் மகன் சென்டரலில் திரையிடப்பட்டது.

மத்திய அரசின் பாலியல் கல்வி தொடர்பான மருத்துவம் சார்ந்த குப்த ஞான் (பிறப்பின் இரகசியம்) என்ற திரைப்படம் வரி விலக்கு அடிப்படையில் அரை கட்டணம் வசூல் செய்யப்பட்டுத் திரையிடப்பட்டது. திருச்சியில் இந்தப் படம் போன்று பாலியல் கல்வி தொடர்பான படங்களை வெளியிடப்பட்டதில்லை.

சென்டரலின் தனித்துவமான செய்தி என்னவெனில், சரஸ்வதி சபதம், ஆதி பராசக்தி திரைப்படங்களின் சனி,ஞாயிறுகளில் மேட்னி காட்சிகள் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டது. குறை என்னவெனில், 3 மற்றும் 4ஆம் வகுப்பு டிக்கெட்களில் பாதி டிக்கெட்கள் அதிக விலைக்கு அந்தப் பகுதி தாதா போன்றவர்களால் பிளாக்கில் (கள்ளத்தனமாக) விற்கப்படும். இதை அந்தத் திரையரங்க நிர்வாகம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இடையில் கூன் கூன் என்ற இந்திப் படமும், மெக்கா என்ற இஸ்லாமியர்களின் ஆவணப் படமும் வெளியிடப்பட்டது.

ராஜா

திருச்சியில் மதுரை சாலையில் தேவர் மன்றத்திற்குப் பின்னால் ராஜா திரையரங்கம் செயல்பட்டு வந்தது. முதல்முதலாக இடிக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட திரையரங்கம் இதுதான்.

திரையரங்கத்தைச் சுற்றி நிறைய இடங்கள் இருக்கும். சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கும். மின் விசிறிகளின் காற்றோடு, அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்குக் கீழே தரை தளத்தில் மின் விசிறிகள் பொருத்தப்பட்டுத் திரையரங்கம் எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். 80 வரை டிக்கெட் கொடுக்கும் இடங்களில் ஆண்கள் என்பதற்குப் புருஷர் என்றும் பெண்கள் என்பதற்கு ஸ்திரி என்றே குறிக்கப்பட்டிருக்கும்.

இங்கே எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வெளியிடப்படும். அன்பே வா, வசந்த மாளிகை, எதிரொலி, கௌரவம், எம்ஜிஆரின் 100ஆவது படம் ஒளிவிளக்கு போன்றவை திரையிடப்பட்டன. வசந்த மாளிகை 250 நாள் ஓடி வெள்ளிவிழா கண்டது. இந்தத் திரையரங்கம் தற்போது இல்லை என்றாலும் மார்க்கெட் வழியாகச் சத்திரம் பேருந்து நிலையம் செல்லும்போது ராஜா தியேட்டர் என்று பேருந்து நடத்துனர் சொல்லக் கேட்கலாம்.

இரட்டைக் கொட்டகை -வெலிங்டன், ராக்ஸி

திருச்சி பெரிய கடை வீதியில் அல்லிமால் தெருவிற்கு எதிர்ப்புறமாக இந்த இரு திரையரங்குகளும் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தன. இதன் நுழைவாயில் பெரிய கடை வீதியில் இருக்கும். சினிமா பார்த்துவிட்டுச் சிங்காரத்தோப்பு  சாலையில் செல்லவேண்டும். இங்கு எம்ஜிஆர் நடித்த என் அண்ணன், நாளை நமதே, சிவாஜி நடித்த கவரிமான், பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்தத் திரையரங்கில் திரையைச் சுற்றி வண்ணவிளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும். கதாநாயகன் அறிமுகப்படுத்தப்படும் காட்சியின்போது இந்த வண்ணவிளக்குகளை ஒளிரச் செய்வார்கள். அப்போது கைதட்டல் திரையரங்கை அதிரச் செய்யும். இப்படி வெலிங்டனுக்குச் சிறப்புகள் இருந்தாலும் சிறப்புக்குச் சிறப்பு சேர்த்தது பணமா? பாசமா? என்ற திரைப்படம்தான். எலந்தப்பழம் பாட்டுக்காகவே அந்தப் படம் 100 நாள்கள் ஓடியது. தமிழ்த் திரையுலகின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற ராஜராஜசோழன் இங்குத்தான் திரையிடப்பட்டது.

ராக்ஸி மற்றத் திரையரங்குகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. எல்லாத் திரையரங்குகளும் நீள வாக்கில் இருக்கும். ராக்ஸி அகல வாக்கில் இருக்கும். நீளம் மிகவும் குறைவாக இருக்கும். இங்குப் பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது, நூல்வேலி, பாரதிராஜாவின் நிழல்கள், மகேந்திரனின் முதல் படம், ரஜினிக்குப் பெயரைப் பெற்றுத்தந்த முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வெலிங்டனில் முதலில் டிக்கெட் கொடுப்பார்கள். டிக்கெட் தீர்ந்துவிட்டது என்றால் ராக்ஸியில் டிக்கெட் கொடுக்கத் தொடங்குவார்கள்.

பிளாசா

மத்தியப் பேருந்துநிலையம் பெரியார் சிலைக்குப் பின்னால் இந்தத் திரையரங்கம் இருந்தது. இதன் சிறப்பு என்னவெனில் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. எப்போதும் 4 காட்சிகள். சனி, ஞாயிறு என்றால் 5 காட்சிகள் நடைபெறும். ஆங்கிலப் படங்களின் மொத்த நேரம் 1 மணி 30 நிமிடங்கள்தான். மத்தியப் பேருந்து நிலையம் வருவோர் பேருந்து கிடைக்கவில்லை, பொழுதுபோகவில்லை என்றால் அவர்களுக்கான இடமாகப் பிளாசா திகழ்ந்தது. ஆங்கிலப் படத்தில் கிரேசி பாய்ஸ் என்னும் திரைப்படம் 100 நாள் ஓடியது. தமிழ்நாடு அரசு தமிழ்ப் படங்களையும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளியிடவேண்டும் என்ற அரசாணையின்படி பிளாசாவில் நாகேஷ் நடித்த ஹேலோ பார்ட்டனர் என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது.

கலையரங்கம்

தற்போது திருமண அரங்கமாக மாறியுள்ளது. திருச்சியின் முதல் குளிரூட்டப்பட்ட அரங்கம்.

இங்கு ரஜினி நடித்த ப்ரியா, பாலுமகேந்திராவின் மூடுபனி, மூன்றாம் பிறை, பாரதிராஜா நடித்த கல்லுக்குள் ஈரம், கமலின் சலங்கை ஒலி போன்ற திரைப்படங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றன. 

தெலுங்கில் வெளியான சங்கராபரணம் என்னும் திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. முதன்முதலில் டிக்கெட் முன்பதிவு இந்தத் திரையரங்கில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

மகாராணி

கீழரண் சாலையில் இந்தத் திரையரங்கம் இருந்தது. இதுதான் திருச்சியின் முதல் 70விவி திரை அமைப்பைக் கொண்டது. இங்கு ஷான் என்ற இந்தி திரைப்படம் 70விவி திரையில் வெளியிடப்பட்டது. ஷான் தயாரித்த சினிமா நிறுவனம் அதற்கு முன்பு ஷோலே என்ற திரைப்படத்தை 70விவி இல் எடுத்திருந்தது.

சென்னையைத் தவிர்த்த மற்ற நகரங்களில் ஷோலே திரைப்படம் 35விவி இல் திரையிடப்பட்டது. பின்னர் ஷான் படம் வெளியிடப்படுவதற்காகவே மகாராணி திரையரங்கம் கட்டப்பட்டது என்ற தனிச் செய்தியும் உண்டு. இப்போதும் இந்தத் திரையரங்கம் இடிக்கப்படாமல் உள்ளது. ஆனால் செயல்பாட்டில் இல்லை.

பீமநகர், பாலாஜி, பாலக்கரை காவேரி, உறையூர் அருணா லிட்டில், சாலைரோடு ருக்மணி, சங்கிலியாண்டபுரம் ராஜாராம், மரியம், காமதேனு, கிராப்பட்டி சாந்தி, பொன்மலை இரயில்வே சினிமா, மேலகல்கண்டார்கோட்டை சண்முகா, மேகலா, அரியமங்கலம் அலங்கார், பழைய பால்பண்ணை கனி போன்ற திரையரங்குகளும் தற்போது இல்லை. திரையரங்குகளுக்கான சில மொழிகள் பயன்படுத்தப்பட்டன. திருச்சி மக்களின் வாழ்க்கையோடு பிணைந்திருந்த வரலாற்று பதிவை ஆவணமாக்கும் முயற்சியில் நாம் இறங்கவேண்டும் என்பதே இக் கட்டுரையின் எதிர்பார்ப்பு.

-ஆசைத்தம்பி

 

 

 

3 half
1 Comment
  1. ஆனந்த் says

    மன்னார்புரம் வெங்கடேஸ்வரா.
    சுப்பிரமணியபுரம் சபியா விடுப்பட்ட பட்டியல்

Leave A Reply

Your email address will not be published.