திருச்சி வரலாற்றில் மக்கள் வாழ்வோடு பிணைந்திருந்த தியேட்டர்கள்

0

நலம் தானா… நலம் தானா… உடலும், உள்ளமும் நலம்தானா….

1970களில் திருச்சி வளர்ந்துகொண்டிருந்த நகரம். தற்போது பெருநகரங்களில் ஒன்றாக தன்னை உருமாற்றி வளர்ச்சியை அடைந்துக் கொண்டிருக்கின்றது. 70களில் திருச்சி மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருந்தது திரையரங்குகள் என்னும் சினிமா கொட்டகைகள்.

இந்தத் திரையரங்குகளில்தான் சாதி, மத உணர்வுகளால் மக்கள் பிரிக்கப்படாமல் ஒன்றாக சுமார் 3 மணிநேரம் அமர்ந்திருந்தார்கள் என்றால் திரையுலகத்தின் மேடையாக விளங்கிய திரையரங்குகளின் சமத்துவ உணர்வுகளை எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.

அந்த காலத்தில் சனி, ஞாயிறு என்றால் திரையரங்குகள் அனைத்தும் நிரம்பி வழியும். மக்கள் ஏதோ தேர் திருவிழாவிற்குச் செல்வதுபோல செல்வார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் செல்வார்கள்.

இளைஞர்கள் தங்களின் நண்பர்களோடு செல்வார்கள். எம்ஜிஆர், சிவாஜி வெளியிடப்படும் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டிருக்கும். உயர்ந்திருக்கும் அந்த நடிகர்களின்   கட்.-அவுட்களுக்கு இரசிகர்கள் பெரிய அளவில் காகித மாலைகள், மலர் மாலைகள் அணிவித்து மகிழ்வார்கள்.

முதல் காட்சி ரசிகர் காட்சியாக நடைபெறும். அப்போது திரையரங்கமே அதிரும் வண்ணம் அதிர்வேட்டுகள் முழங்கும். சரவெடிகள் 15 நிமிடத்திற்கு வெடித்துக் கொண்டே இருக்கும்.

பிலிம் பெட்டிகள் யானைகள் மீது வைத்து இரசிகர் பட்டாளம் ஊர்வலம் நடத்தி திரையரங்குகளுக்குக் கொண்டு வருவார்கள். அந்த ஊர்வலங்களில் இரு முதன்மை நடிகர்களின் பெண் இரசிகர்களும் இருப்பார்கள் என்பது அதிர்ச்சி கலந்த செய்தியாகும். திருச்சி மக்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்து பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக திரையரங்குகள் கொடிகட்டிப் பறந்தன. 90ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி பெட்டிகளின் வரவுகள் திரையரங்குகளை உடனே பாதிக்கவில்லை.

96ஆம் ஆண்டு சன் டிவி, ராஜ் டிவி, கேல்டன் ஈகிள் டிவி பின்பு விஜய் டிவியாகி தற்போது ஸ்டார் விஜய் டிவிகளின் வருகையும் அதில் ஒளிபரப்பரப்பான தொடர்கள் ஒரு சினிமா போல இருந்தமை திரையரங்கு சென்று சினிமா பார்ப்பது என்பது குறையத் தொடங்கியது.  காரணம் எல்லா தொலைக்காட்சிகளிலும் சினிமா ஒளிரப்பட்டது என்பதும் ஒரு காரணம்.

2000 ஆண்டுகளில் தொலைபேசிகளின் ஆதிக்கம் குறைந்து அலைபேசிகளின் ஆதிக்கம் பெருகத் தொடங்கியது. 2003ஆம் ஆண்டில் இண்டர்நெட் இணைப்பு எல்லா நகரங்களிலும் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2ஜி, 3ஜி, 4ஜி என்றும் அகல்கற்றை இணைப்பால் அலைபேசியின் வழியாக சினிமாவைப் பார்க்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. தொலைக்காட்சிகளின் வளர்ச்சியில் கேடிவி 24 மணி நேரமும் சினிமாவை ஒளிபரப்பியது. மற்றத் தொலைக்காட்சிகள் நாள்தோறும் சினிமாவை ஒளிபரப்பியது.

இந்தக் காலகட்டத்தில் வார நாட்களில் தினசரி 3 காட்சி என்பது நாள்தோறும் 4 காட்சி என்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு சனி,ஞாயிறுகளில் மட்டும் காலை காட்சிகள் நடைபெற்றன. அவை பெரும்பாலும் தெலுங்கு டப்பிங் படங்கள். ரிவால்வார் ரீட்டா, கன் பைட் காஞ்சனா, கத்திக் குத்து கந்தன், லேடி பைட்டர் ரேகா போன்ற பழிவாங்கும் மசாலா திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இது இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. தினசரி 4 காட்சிகள் நடந்தபோது 11.30 மணி காட்சி என்று வேறு மொழி படங்கள் அல்லது பழைய ஹிட் படங்கள் திரையிடப்பட்டன. கொஞ்ச காலத்தில் பகல் 11.30 மணி காட்சி என்பது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மலையாள மொழிப் படங்கள் திரையிடுவது என்பது எழுதப்படாத விதியாக அமைந்தது. மக்களைத் திரையரங்கிற்கு வரவழைப்பது என்பது சிரமங்கள் மிகுந்ததாக அமைந்திருந்தன.

2010ஆம் ஆண்டுகளில் திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தன. அந்த நிலையில் திரையரங்குகள் வணிக வளாகமாக மாற்றப்பட்டன. திருமண அரங்குகளாக மாறின.

மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த திரையரங்குகள் இடிக்கப்பட்டபோது, மாற்றங்கள் செய்யப்பட்டபோது மக்களிடம் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. திரையரங்கம் சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது, பிடித்த இடத்தில் அல்லது காற்றாடிக்கு கீழ் அமர்வது, சினிமா காட்சிகள் திரையில் தெரியத் தொடங்கியவுடன் காதைக் கிழிக்கும் விசில் சத்தம், இடைவேளை நேரத்தில் கடலை மிட்டாய், முறுக்கு, சமோசா, முட்டை போண்டா, கலர், ஐஸ் கிரீம், கேக் போன்றவற்றைச் சாப்பிட்டு மகிழ்வது என்பதோடு, அந்த பீடா போட்டு, வாயில் குதப்பும் சுகம் என்பது அளவிட முடியாத ஒன்றாகும்.

காட்சி முடிந்து வெளியே வரும்போது ஒரு மாய உலகத்தில் வாழ்ந்த ஒரு பேரின்பம் மனதில் எழும். அதற்கு இணையாக எதையும் சொல்லமுடியாது. காதலர்கள் தங்களின் காதலை உறுதி செய்து உலகை மறந்து அருகருகே அமர்ந்த அந்த 3 மணிநேர தேவலோகம் திரையரங்கம் என்பதை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாதுதான்.

70களின் திரையரங்குகள்

திருச்சியின் போக்குவரத்து மிகுந்து எப்போதும் பரபரப்பாக இருக்கும் மதுரை சாலையில் ராஜா, இராமகிருஷ்ணா, ஜூபிடர், பேலஸ் திரையரங்குகள் இருந்தன. மதுரை சாலையும் மார்க்கெட் சாலையும் சந்திக்கும் பாலக்கரையில் பிரபாத் இருந்தது. கீழரண் சாலையில் முருகன், பெரிய கடைவீதியில் இரட்டை கொட்டகை என்றழைக்கப்படுகின்ற வெலிங்டன், ராக்ஸி, மார்கெட் அருகில் சென்டரல் டாக்கீஸ் அமைந்திருந்தன. மெயின்கார்டுகேட்டில் கெயிட்டி திரையரங்கம் இருந்தது.

பீமநகரில் பாலாஜியும் சாலை ரோட்டில் ருக்மணியும், உறையூரில் அருணாவும் லிட்டில் அருணாவும் இருந்தன. மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலைக்குப் பின்னால் பிளாசா திரையரங்கம் இருந்தது. மன்னார்புரத்தில் வெங்கடேஸ்வரா இருந்தது. பொன்மலையில் இரயில்வே சினிமா என்ற பெயரில் திரையரங்கம் இருந்தது. மேல கல்கண்டார்கோட்டையில் சண்முகா, மேகலா, பொன்மலைப்பட்டியில் சரவணா, காட்டூரில் சரோஜா அரியமங்கலத்தில் அலங்கார் திரையரங்குகள் இருந்தன. சங்கிலியாண்டபுரத்தில் இராஜாராம் என்று ஒரு கூரை வேயப்பட்ட டெண்ட் திரையரங்கம் இருந்தது.

80களில் திரையரங்குகள்

திருச்சியின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நகரம் மாநகரமாக விரிந்து கொண்டிருந்து. நகரத்தையொட்டி இருந்த விளைநிலங்கள் பிளாட் போடப்பட்டன. வெளியூர் மக்கள் பலர் திருச்சியில் நிரந்தரமாக தங்கினர்.

இதனால் மக்களின் பொழுதுபோக்கு இடமாக விளங்கிய திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. இதனால் பல திரையரங்குகள் புதிதாக தொடங்கப்பட்டன. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட கலையரங்கத்திற்கு பல பெருமைகள் அமைந்திருந்தன. முதல் குளிர்பதனம் மற்றும் ஆயிரம் இருக்கைகள் கொண்ட பெரிய அரங்கம். தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டது. மேலும் முதன்முதலில் முன்பதிவு செய்யும் வசதியும் இந்த திரையரங்கில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய வளனார் கல்லூரிக்குப் பின்னால், கோட்டை இரயில் நிலையத்திற்கு வடக்கே மாரிஸ் 70விவி, மாரிஸ் ராக், மாரிஸ் போர்ட், பின்பு மாரிஸ் மேக்ஸி, மாரிஸ் மினி என்று ஒரே இடத்தில் 5 திரையரங்குகள் அமைந்திருந்தன. கீழரண்சாலையில் மகாராணி 70MM திரையரங்கம் தொடங்கப்பட்டது. இதில் ஷான் என்னும் 70MM படம் திரையிடப்பட்டது. பாலக்கரை இரயில் நிலையம் செல்லும் வழியில் காவேரி திரையரங்கம் தொடங்கப்பட்டது. அந்த திரையரங்கின் முன்னால் பெரியார் சிலை வைக்கப்பட்டது. அது ஏன் என்பது யாருக்கும் விளக்கப்படவில்லை. மதுரை சாலையில் ஜூபிடருக்குப் பக்கத்தில் ஸ்டார் என்னும் திரையரங்கம் தொடங்கப்பட்டது. சத்திரம் பேருந்து நிலையத்தின் வடக்கு பக்கத்தில் ரம்பா, ஊர்வசியும் மத்திய பேருந்து நிலையம் அருகில் சேனா,மீனா திரையரங்குகள் தொடங்கப்பட்டன. மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பொன்னகரில் VVV என்னும் திரையரங்கம் சுப்பிரமணியபுரத்தில் ஏரிக்கரை சாலையில் சங்கீதா திரையரங்கமும் தொடங்கப்பட்டது. தற்போதைய கரூர் புறவழிச்சாலையில் கோஹினூர், சாஸ்திரி சாலையில் சிப்பி திரையரங்கமும் புதிதாக அமைக்கப்பட்டன. பழைய பால்பண்ணை அருகில் ராஜாளி விடுதிக்கு அருகில் வரகனேரியில் கனி திரையரங்கம் தொடங்கப்பட்டது. சங்கிலியாண்டபுரத்தில் மரியம் எனும் திரையரங்கமும், கிராப்பட்டியில் சாந்தி எனும் திரையரங்கமும், மல்லிகை புரத்தில் ஜோதிஆனந்த், திரையரங்கும் செயல்பட்டு வந்தது.

2015ஆம் ஆண்டில் நீதிமன்றம் அருகில் தொடங்கப்பட்ட விஜய் வணிக வளாகத்தில் மங்களம் என்னும் சிறிய திரையரங்கம் தொடங்கப்பட்டது.

காற்றில் கரைந்த திரையரங்குகள்

2000 ஆண்டுகளுக்குப் பின் 2010க்கு முன்னும் பின்னும் பல திரையரங்குகள் இடிக்கப்பட்டன. மக்களின் வாழ்வோடு இணைந்திருந்த பல திரையரங்குகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.

மதுரை சாலையில் இயங்கி வந்த ராஜா, ஜூபிடர், பிரபாத், சென்டரல், மகாராணி, பீமநகர் பாலாஜி, சாலைரோட்டில் இயங்கி வந்த ருக்மணி, மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த பிளாசா, கலையரங்கம், உறையூர் லிட்டில் அருணா, மன்னார்புரம் வெங்கடேஸ்வரா, கல்கண்டார்கோட்டை சண்முகா, மேகலா பொன்மலைப்பட்டி சரவணா, அரியமங்கலம் அலங்கார், பழைய பால்பண்ணையில் இருந்த கனி திரையரங்கம், சங்கலியாண்டபுரம் இராஜராம், பாலக்கரை காவேரி, பட்டாபிராம் சாலை சிப்பி போன்றவை இருந்த இடங்கள் தற்போது மாறியுள்ளன. அதுபோலவே வெள்ளைக்காரர்கள் காலத்திலிருந்து இயங்கி வந்த பொன்மலை இரயில்வே சினிமாவும் சுப்பிரமணியபுரம் சங்கீதாவும் தற்போது இல்லை.

இந்த வரலாற்றில் மாரிஸ் வளாகத்தில் இயங்கி வந்த அனைத்து திரையரங்குகளும் கடந்த பல வருடங்களுக்கு முன்பு செயல்படாமல் இருந்தன. சில வருடங்களுக்கு முன்பு அந்தத் திரையரங்குகள் மறுகட்டுமானம் செய்யப்பட்டு LA சினிமா என்ற பெயரில் தற்போது இயங்கி வருவது புதிய செய்தியாகும்.

இந்த திருச்சி திரையரங்க வரலாற்றில் விடுபட்ட செய்திகளையும் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளையும் படிக்கும் வாசகர்கள் தெரிவித்தால் இந்த வரலாற்றைப் புதுப்பிக்க உதவும்.

ஆசைதம்பி

Leave A Reply

Your email address will not be published.