திருச்சிராப்பள்ளி மாவட்டம் உருவான வரலாறும், மாவட்டங்களை உருவாக்கிய வரலாறும்

0

உருவான வரலாறு

1800ஆம் ஆண்டில் மன்னார்குடி, மயிலாடுதுறை என்னும் இருபெரும் நகரங்களை இணைத்துத் தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கப்படுகின்றது. இதே 1800 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்தில் திருச்சியும் இருந்துள்ளது. மதுரை மாவட்டத்தின் எல்லை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முன்புள்ள வல்லம் வரை இருந்துள்ளது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்துதான் திருச்சி மாவட்டம் பிரிந்துள்ளது.

1834ஆம் ஆண்டு வாக்கில் மதுரை மாவட்டத்திலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் பிரிக்கப்பட்டுத், தனி மாவட்டமாகச் செயல்பட்டு வந்துள்ளது. இதன் செயல்பாடுகள் அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மனநிறைவைத் தரவில்லை. 3 ஆண்டுகள் கழித்துத் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மீண்டும் மதுரை மாவட்டத்தில் இணைக்கப்பட்டுச் செயல்படுகின்றது. இன்னும் 2 ஆண்டுகள் கழித்துத் திருச்சியின் தேவதானம், தாராநல்லூர், வரகனேரி, உறையூர், வாமடம், வடவூர் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து நகரம் உருவாக்கப்படுகின்றது. நகரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திருச்சி நகரப் பகுதி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு வட்டமாகத் (தாசில்) செயல்பட்டுக் கொண்டிருந்தது.

‌சந்தா 1

தற்போதுள்ள மேலரண் சாலையும் கீழரண்சாலையும் அகழிகள் இருந்த பகுதிகளாகும். அந்த அகழிகள் தூர்க்கப்பட்டுச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. மலைக்கோட்டைக்குப் பின்புறம் கீழரண்சாலையும் மேலரண்சாலையும் இணையும்படி சாலைகள் அமைக்கப்படுகின்றன. மலைக்கோட்டை செல்லத் தற்போதைய மார்க்கெட் கண் வளைவிலிருந்து நேர் சாலையும் அமைக்கப்படுகின்றது. இந்தப் பகுதிகளைச் சுற்றி வணிகம் நடைபெறுகின்றது. இதனால் திருச்சி நகரத்தின் வருவாய் பெருகுகின்றது. இதை ஒரு அறிக்கையாக மதுரை ஆட்சியருக்கு அறிக்கை தயார் செய்யப்படுகின்றது. இதன் அடிப்படையில் ஏறத்தாழ 1846ஆம் ஆண்டு வாக்கில் திருச்சி மாவட்டம் உருவாக்கப்படுகின்றது.

உருவாக்கப்பட்ட திருச்சி மாவட்டத்தில் திண்டுக்கல் பகுதியும் நாமக்கல் பகுதியும் ஒரு வட்டமாக இணைக்கப்பட்டிருந்தது என்றும் சேலம் மாவட்டத்தின் ஒரு வட்டமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கரூர் திருச்சி மாவட்டத்தோடு இணைக்கப்படுகின்றது என்னும் அரிய தகவலைத் திருச்சி மாவட்டத்தின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள சமூக அறிஞர் திருக்குறள் முருகானந்தம் குறிப்பிடுகின்றார். இணையத்தில் கிடைத்த கரூர் மாவட்ட வரலாற்றில், கோவை மாவட்டத்தின் ஒரு வட்டமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த கரூர் 1910ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது என்று செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் திருச்சி மாவட்டத்தின் வட்டமாகச் செயல்பட்டுவந்த திண்டுக்கல் மதுரை மாவட்டத்தோடும், நாமக்கல் சேலத்தோடும் இணைக்கப்படுகின்றன.

திருச்சிக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புதுக்கோட்டை தனிச் சமஸ்தானமாக மன்னராட்சியின் கீழ் செயல்பட்டுவந்தது. 1947 இந்திய விடுதலைக்குப் பின் சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் முயற்சியில் அப்போதைய இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய்பட்டேல் கடுமையான தீவிரம் காட்டினார். சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைத்தால் சமஸ்தானங்களை ஆண்டுவந்த மன்னர்களுக்கு ஒன்றிய அரசின் சார்பில் ஒரு பெருந்தொகை மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைந்து கொண்டன, இணைய மறுத்த சமஸ்தானங்களை இராணுவத்தின் உதவியோடு அச்சுறுத்தி, மிரட்டிப், பணியவைத்து இந்திய ஒன்றியத்தோடு இணைக்கப்பட்டன. புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய ஒன்றியத்தில் 04.03.1948ஆம் ஆண்டு இணைந்து கொண்டது. இணைந்து கொண்ட புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தின் வட்டமாகச் செயல்பட்டு வந்தது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் பரப்பளவு புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் எனப் பரந்து விரிந்திருந்தது.

திருச்சியிலிருந்து மாவட்டங்கள் உருவான வரலாறுகள்

புதுக்கோட்டை மாவட்டம்

திருச்சி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை பிரிக்கப்பட்டுத், தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டைதான் முதன்முதலில் பிரிந்த பகுதியாகும். ஜனவரி 14, 1974 ஆம் நாள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூா் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களையும், குளத்தூர், இலுப்பூா், பொன்னமராவதி, விராலிமலை, ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம், கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய பன்னிரெண்டு தாலுகாக்களையும் கொண்டுள்ளது.

கரூர் மாவட்டம்

1996இல் திருச்சி மாவட்டத்திலிருந்து ஒரே நேரத்தில் கரூர், பெரம்பலூர் என்னும் இரு மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கரூர் மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண்.683 வருவாய்(.நி1(1)) துறை, நாள்.25.07.1996 இன்படி பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாகச் செயல்பட்டும் என்னும் அறிவிப்பு வெளியிடப்படுகின்றது. கரூர் மாவட்டம், கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இரு கோட்டங்களையும், கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலைக், கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் ஆகிய ஏழு வட்டங்களையும், 203 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, .பரமத்தி, குளித்தலைக், கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகமலை ஆகிய எட்டு வட்டாரங்களையும் கொண்டு அமைக்கப்பட்டது.

சந்தா 2

பெரம்பலூர் மாவட்டம்

ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து அரசாணை எண் Ms. NO..913 வருவாய், (Y3) துறை நாள் 30.09.1995 இன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து மேற்கண்ட அரசாணைப்படி புதிய பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்டு உருவானது. பெரம்பலூர் கோட்டத்தை உள்ளடக்கி வேப்பந்தட்டை, ஆலத்தூர், பெரம்பலூர், குன்னம் என்னும் 4 வட்டங்களை உள்ளடக்கிப் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதிகளும் விரைவான முன்னேற்றம் வளர்ச்சி பெற மாவட்டமாக அறிவிக்கப்பட்டு ஊக்கம் அளிக்கவேண்டும்  என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி அமைக்கப்பட்ட முதல் மாவட்டம் பெரம்பலூர் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

அரியலூர் மாவட்டம்

அரசாணை எண் Ms. 656, வருவாய்த்துறை, நாள் 29.12.2000 மற்றும் அரசாணை எண் Ms. NO.657, அரசாணை நாள் 29.12.2000 இன்படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்ட அரியலூர் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் அரியலூர் என்னும் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது தமிழகத்தின் முதல்வராகக் கலைஞர் இருந்தார்.

அரியலூர்  பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைப்பு

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. அதிமுக ஆட்சியைக் கைப்பற்றி ஜெயலலிதா முதல்வராக வந்தார். அதன் பின்னர் அரசாணை எண் Ms. No. 167 வருவாய்த்துறை நாள் 19.04.2002 மற்றும் அரசாணை எண் Ms. No.168 வருவாய்த்துறை நாள் 19.04.2002 இன்படி மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களையும் ஒன்றிணைத்துப் பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையின் படி ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் 19.04.2002 அன்று உருவானது.

 

அரியலூர் மீண்டும் தனி மாவட்டம்

2006ஆம் ஆண்டு அதிமுக தோல்வியடைந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் அரசாணை எண் Ms. No. 683 வருவாய்த்துறை நாள் 19.11.2007 இன்படி பெரம்பலூர் மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டுப் பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுப் பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டமும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்டு அரியலூர் மாவட்டமும் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம்  ஆகிய நான்கு வட்டங்களையும், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய ஆறு வட்டாரங்களையும் கொண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.

 

மாவட்ட உருவாக்கத்தில் அரியலூர் அரசியல் காரணங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டதும், இணைக்கப்பட்டதும் என்ற செய்தி நமக்குச் சுவாரசியமாக இருக்கலாம். மக்களுக்கு எவ்வளவு மனஊலைச்சலைத் தந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால், வரலாறு என்பது மகிழ்ச்சியும் சோகமும் ஒருசேர இணைந்த ஓர் அதிசயக் கலவை என்றே சொல்லலாம். இந்தத் திருச்சி மாவட்டத்தின் வரலாற்றில் இணைக்கப்பட வேண்டிய செய்திகள் மற்றும் பிழையான தரவுகள் இருப்பின் அவற்றை இக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் சுட்டி காட்டினால் மெய்யான வரலாறு உருவாக வழிகோலும்.

-ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.