காவேரி பாலத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்ற திருச்சி தியாகி
காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தேசிய விடுதலைப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஓர் இளைஞன் பிற்காலத்தில் பெருந்தலைவர் காமராசரின் நம்பிக்கைக்குரியவராக மாறுகிறார். திருச்சி வரலாற்றில் திருச்சியையும் தியாகியையும் அடைமொழியாகக் கொண்டு புகழ்பெறுகிறார்கள் டி.எஸ்.அருணாசலம் பிள்ளை.
மெலிந்த உடல், வலிமை பொருந்திய உள்ளம், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கக்கூடிய மன உறுதி, மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது தளராத உழைப்பாலும், தேசபக்தியாலும், தியாக உள்ளத்தாலும் முன்னுக்கு வந்தவர். திருச்சி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற ஒரு சிலரில் இவர் முதன்மையானவர். பெருந்தலைவர் காமராஜ் இவரது தியாகத்தையும், தீரத்தையும் போற்றி இவர் மீது அசைக்கமுடியாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்.
ஒருங்கிணைந்த (புதுக்கோட்டை,கரூர், பெரம்பலூர், அரியலூர்) திருச்சி மாவட்டத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பல தலைவர்களும் இவரைத் தமக்குச் சமமாக நடத்தினர். இவர் காலத்தில் செல்வத்திலும், கல்வியிலும் உயர்ந்திருந்த தியாகச் சீலர்கள் திருச்சி மாவட்டத்தில் இருந்தார்கள். அவர்களில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், ஹிந்தி பிரச்சாரச் சபா பாலகிருஷ்ண சாஸ்திரி, ரத்தினவேலு தேவர், டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, என்.ஹாலாஸ்யம், கதர் சங்கிலியா பிள்ளை, கரூர் நன்னாச் சாஹிப் ஆகியோர் நினைவுகூரத் தக்கவர்கள். இவர்களெல்லாம் இருந்த திருச்சி மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி மிக எளியவரான டி.எஸ்.அருணாசலத்தைத் தேடி வந்தது என்றால் அது இவரது அயராத உழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

மகாத்மா காந்தி இட்ட கட்டளைகளையெல்லாம் தலைமேற்கொண்டு தளராத உழைப்பாலும், இடைவிடாத முயற்சியினாலும், மாவட்டம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்துப் போராட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், தொண்டர்கள் கைதானால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வந்தார் அருணாசலம். காங்கிரஸ் தொண்டர்களும், அனுதாபிகளும், தேசபக்தர்களும் இவரைத் தங்கள் சொந்தச் சகோதரரைப் போலவே எண்ணினார்கள்.
1930ல் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களும் பெரும்பாலும், திருச்சி மாவட்டத்தில் கிராமப் புறங்களில் மிகச் சாதாரணத் தொண்டர்களால் நடத்தப்பட்டவை. இதற்கு அருணாசலமே காரணம். சாமானியர்களின் தலைவர் என்று இவர் போற்றப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலும் பெரிய தலைவர்களைத் தொண்டர்களும் சாமானியர்களும் கிட்டே நெருங்கவோ, சகஜமாகப் பேசவோ முடியாத நிலையை மாற்றி இவர் தொண்டர்களுள் ஒருவராகவே இருந்தார். இதன் காரணமாகக் கிராமப் புறங்களில் காங்கிரஸ் இயக்கம் வேரூன்றி வளர்ந்தது. இளைஞர்கள் பெருமளவில் இவருடன் வந்து சேர்ந்து கொண்டனர்.
1942 ஆகஸ்ட் போராட்டத்தில் திருவாடானை சிறையில் இருந்து மக்கள் சின்ன அண்ணாமலையை விடுதலை செய்தனர். அந்தப் போராட்டம் தொடர்பாகக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சின்ன அண்ணாமலையின் கையில் ஒரு குண்டு பாய்ந்ததும், போலீஸ்காரரிடம் இருந்து தப்புவதற்காகப் பல பகுதிகளில் ஒளிந்து மறைந்து கையில் ஏற்பட்ட காயத்துடன் திருச்சிக்கு வந்து சேர்ந்தார். திருச்சியில் திரு டி.எஸ். அருணாசலம் அவர்கள், இப்போது காமராஜ் மன்றம் என்ற பெயரால் இயங்கி வரும் நூல்நிலையக் கட்டிடம் அப்பொழுது ஜில்லா போர்டு ஆபீஸாக இருந்து வந்தது. அதில் அவர் தங்கி இருந்தார். நடு இரவில் மேற்படி கட்டிடத்திற்குச் சென்று கையில் காயங்களுடன் அவரைச் சின்னஅண்ணாமலை எழுப்பினார்.
அருணாசலம் சின்னஅண்ணாமலையைத் திடுக்கிட்டுப் பார்த்து, “எப்படி இங்கு வந்தாய்? என்று கேட்டார். நடந்த சம்பவங்களைச் சொல்லிச் சின்னஅண்ணாமலை கையில் இருந்த காயத்தைக் காண்பித்தார். உடனே சின்னஅண்ணாமலையை டாக்டர் ஜகந்நாதன் என்பவரிடம் கூட்டிச் சென்றார். திருச்சி நகரசபை சேர்மனாக இருந்த டாக்டர் ரங்கநாதன் அவர்களுடைய மாமனார்தான் டாக்டர் ஜகந்நாதன். டாக்டர் ஜகந்நாதன் அவர்கள் சிறந்த காங்கிரஸ் அபிமானி, ஆகையால் கையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டைக் காவல்துறைக்கு அறிவிக்காமல் வெளியில் எடுத்துக் காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டிவிட்டார். அதற்குள் போலீஸார் தேவகோட்டையிலும், திருவாடானையிலும் சிறையில் இருந்த தப்பிய சின்னஅண்ணாமலையை உயிருடனோ, அல்லது பிணத்தையோ கொண்டு வந்தால் ரூ.10,000 பரிசளிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விவரம் தெரிந்ததும் டி.எஸ். அருணாசலம் சின்னஅண்ணாமலையை பாதுகாப்பாக ஒரு வீட்டில் தலைமறைவாக இருக்கச் செய்தார்.
டி.எஸ் அருணாசலமும் சின்னஅண்ணாமலையும் பல யோசனைகள் செய்து திருச்சியில் உள்ள காவேரி பாலத்தை வெடி வைத்துத்தகர்ப்பது என்றும் அகில இந்திய ரேடியோ நிலையத்தைப் பாம் வைத்துத்தகர்ப்பது என்றும் திட்டம் தீட்டி அதற்கு வேண்டிய வெடிமருந்துகள் தயார் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர். இந்தக் காரியத்தைச் செய்வதற்குக் குறித்த நாளுக்கு முதல்நாள் காவல்துறையினர் திடீரென்று டி.எஸ்.அருணாசலத்தைக் கைது செய்தனர். பின்னர் அவர் உத்திரபிரதேச மாநிலத்தின் அலிகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
டி.எஸ். அருணாசலம் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் சின்னஅண்ணாமலை தப்புவதற்காக ஏற்பாடுகள் செய்யும்போது திருச்சியின் பெரிய கம்மாள தெருவில் ஏராளமான போலீஸார் நடமாட்டம் இருப்பது தெரிந்தது. மேற்படி கம்மாள தெருவில்தான் சின்னஅண்ணாமலையை டி.எஸ்.அருணாசலம் தலைமறைவாகத் தங்கவைத்தார். அந்த வீட்டுக்கு உரியவர் ஒரு ஏணியை எடுத்து நடுவாசலில் வைத்து ஒட்டின்மீது ஏறச்செய்து வரிசையாக இருந்த வீடுகளின் வழியாக ஒட்டின் மீதே நடந்து அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு எல்லா வீடுகளையும் கடந்து குதிக்கச் சொன்னார். அவர் சொன்னதுபோல் செய்து சின்னஅண்ணாமலை குதித்தார். அந்த வீட்டுக்காரர் ஏற்பாடு செய்திருந்த காரில் ஏற்றிக் கரூருக்குச் சின்னஅண்ணாமலையை அனுப்பி வைத்தார் என்ற வரலாற்றில் டி.எஸ்.அருணாசலத்தின் போராட்ட உணர்வுகளுக்கு மக்களிடம் இருந்த மரியாதையை உணரமுடிகின்றது.
காமராசர் தலைமறைவு வாழ்க்கையின்போது திருச்சியில் அருணாசலத்தின் ஏற்பாட்டில் மலைக்கோட்டையில் சமணர்கள் தங்கியிருந்த குடவரை அறைகளில் தங்கியிருந்ததாகவும், காமராசருக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகளையும் அருணாசலம் செய்து வந்ததாகவும் செய்திகள் உள்ளன. தேச விடுதலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஓர் எளிய மனிதர் வரலாற்றில் வாழமுடியும் என்பது எடுத்துக்காட்டாகத் திருச்சி மாவட்ட நூலகத்தின் அருகில் மெயின்கார்டுகேட்டில் சிலையாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நூற்றாண்டு நிறைவு விழா 15.11.2011ஆம் ஆண்டு திருச்சியில் கொண்டாடப்பட்டது. அதற்கான சிறப்பு மலரைத் திருச்சி ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவராய் விளங்கிக் கொண்டிருக்கும் திருக்குறள் முருகானந்தம் தயார் செய்து வெளியிட்டார்.
-ஆசைத்தம்பி
