திருச்சி திமுக நகரச் செயலாளர் தேர்தலில் சம ஓட்டு – முடிவு?

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகத்தை உயிர்மூச்சாகக் கொண்ட ஒரே கட்சி பேரறிஞர் அண்ணா உருவாக்கித் திமுகதான். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாக உட்கட்சி தேர்தல் நடைபெறும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். உறுப்பினர்கள் அனைவரும் கட்சி தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள். கிளைக் கழகத் தேர்தல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஒன்றிய/நகரக் கழகங்களின் தேர்தல் நடைபெறும். பின்னர் மாவட்டச் செயலாளர் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தல்களில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அலுவல் வழியிலும், தேர்வும் செய்யப்படுவார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் கழகத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற உயர்மட்டத் தலைவர்களைத் தேர்வு செய்வார்கள். அண்ணா தொடங்கி வைத்த உட்கட்சி தேர்தல் கலைஞர் தொடங்கித் தற்போது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் வரை முடிந்தளவு கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

உட்கட்சி தேர்தல் என்பது சட்டமன்ற உறுப்பினருக்காகத் தேர்தல்போல நடைபெறும். ஒரே கட்சியைச் சார்ந்தவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து தேர்தல் பணியாற்றுவார்கள். வாக்காளர்களான கட்சி உறுப்பினர்களைச் சந்திப்பார்கள். வாக்கு சேகரிப்பார்கள். தேர்தல் ஆணையர் அறிவிக்கப்படுவார். அந்த ஆணையரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும். வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்படும். பின்னர்ப் போட்டி என்றால் தேர்தல் நடைபெறும். வாக்களிக்கும் நாளின்போது வாக்குப்பதிவு நடைபெறும். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வென்றவருக்குத் தோற்றவர் மாலை அல்லது கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்து தெரிவிப்பார். வென்றவரும் தோற்றவரும் கரங்களைப் பிணைத்துக் கொண்டு கட்சியின் நலனுக்குப் பாடுபடுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வார்கள்.

1977ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரை மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து திமுக தோல்வியைச் சந்தித்து வந்தது. எம்.ஜி.ஆர். அசைக்கமுடியாதச் சக்தி வாய்ந்த மக்கள் ஆதரவு பெற்ற முதல்வராக இருந்தார். பல திமுக முன்னணித் தலைவர்கள் எம்.ஜி.ஆர். பக்கம் சென்ற நிலையிலும் திமுகவின் உட்கட்சி தேர்தலில் போட்டிகள் பலமாக இருந்தன. கட்சி பணியாற்ற நான் முந்தி நீ முந்தி என்று போட்டிபோட்டுக் கொண்டார்கள்.

‌சந்தா 1

23.01.1983ஆம் ஆண்டு திருச்சி திமுக நகரக் கழகத்தின் செயலாளர் பொறுப்புக்குத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அப்போதைய நகரக் கழகத்தின் செயலாளராக இருந்த ஏ.வி.கிருஷ்ணமூர்த்தியும் (ஏவிகே), திருச்சி 1ஆவது தொகுதி (தற்போது திருச்சி கிழக்கு) மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மலர்மன்னனும் (மலர்) போட்டியிட்டார்கள். போட்டி கடுமையாக இருந்தது. திருச்சி 1ஆவது தொகுதி திமுகவினரின் ஆதரவு ஏ.வி.கிருஷ்ணமூர்த்திக்கும், திருச்சி -2ஆவது தொகுதி திமுகவினரின் ஆதரவு மலர்மன்னனுக்கும் இருந்தது. மலர்மன்னனை அன்பில் தர்மலிங்கம் ஆதரித்தார். திமுக தலைவர் கலைஞரின் ஆதரவும் இருந்தது. மலர்மன்னன் எல்லாரிடமும் இனிமையாகப் பழகுவார். குறிப்பாக இளைஞர்களிடம் நெருக்கமாகப் பழகுவார். பெயர் சொல்லி அழைப்பார். மலர்மன்னனின் உதவியை நாடி இல்லத்திற்குச் சென்றால், முடிந்த உதவிகளைச் செய்வார். அரசு சார்ந்த / காவல்துறை சார்ந்த பணிகள் என்றால் அப்போதைய உதவியாளர் வெல்லமண்டி சோமுவிடம் சொல்லி எல்லாவற்றையும் சரி செய்யச் சொல்வார்.

சந்தா 2

ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி திருச்சியின் மிகவும் சிறுபான்மையராக உள்ள சௌராஷ்ட்ரா என்னும் பட்டுநூல் சமூகத்தவர். பெரியார், அண்ணா கொள்கைகளில் தீவிரப் பற்றாளர். கொள்கைகளில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளமாட்டார். ஏவிகே கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு காரியம் நடக்கவேண்டும் என்று திமுக தொண்டன் சென்றால், பிரச்சனைகளைக் கேட்டு, முடியும் முடியாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று மிகவும் கறாராகப் பேசக்கூடியவர். பிரச்சனையை முடிக்கிறேன் என்றால் அந்தக் காரியத்தைக் காலம் கடத்தாமல் முடித்துக் கொடுப்பார். கட்சியில் யாருக்கும் அஞ்சுவது, பணிவது என்ற பேச்சுக்கே ஏவிக் கிருஷ்ணமூர்த்தியிடம் இடம் இருக்காது. கலைஞர் திருச்சி வந்துவிட்டார் என்றால் மாவட்ட நிர்வாகிகள் அத்தனை பேரும் காலையில் சங்கம் ஓட்டலில் குவிந்துவிடுவார்கள். ஏவிகே காலை 10.00 மணிக்கு வருவார். தலைவர் இருக்கும் அறைக்குச் செல்வார். மரியாதை செய்வார். 10 நிமிடங்களில் வெளியே வந்துவிடுவார். வந்த ஆட்டோவில் திரும்பிக் கட்சிப் பணிக்குச் சென்றுவிடுவார். ஏவிகேயிடம் நெருங்கிப் பேசினால்,‘நான் யாருக்கும் ஜல்ரா போடவேண்டிய அவசியம் இல்லை’ என்று மிடுக்காகச் சொல்வார்.

ஏவிகே, மலர் இடையே நகரச் செயலாளர் பொறுப்புக்கு மிகவும் கடுமையான போட்டி நடைபெற்றது. இதை அப்போதைய நாளிதழ்கள் செய்தியாகவே வெளியிட்டன. 23.01.1983ஆம் நாள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, திருச்சி வாழைக்காய் வியாபாரிகள் சங்கக் கட்டிடத்தில் தேர்தல் ஆணையர் அப்போதைய அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மணலூர் இராமநாதன் தலைமையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக வாக்குப்பதிவு காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மாலை 5.00 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. மாலை 6.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பதிவான மொத்த வாக்குகள் 123. அதில் செல்லாத வாக்குகள் 3. ஒரு வாக்குச் சீட்டில் ஏவிகே என்றும் 2 வாக்குச் சீட்டில் மலர் என்றும் எழுதப்பட்டிருந்ததால் அவை செல்லாத வாக்குகள் என்று தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டது. செல்லத்தக்க வாக்குகள் 120 என்று அறிவிக்கப்பட்டது. அதில் ஏவிகே பெற்ற வாக்கு 60. மலர் பெற்ற வாக்கு 60. இருவரும் சமநிலையில் வாக்குகளைப் பெற்றிருந்தார்கள். ஆணையர் ‘திருவுளச் சீட்டு’ மூலம் நகரச் செயலாளரைத் தேர்வு செய்யலாம் என்று அறிவிப்பை வெளியிட்டார். அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையர் செய்திருந்தார். போட்டியாளர் இருவரையும் அழைத்தார். போட்டியாளர்கள் இருவரும் தலா 60 வாக்குகள் என்று சமநிலையில் வாக்கு பெற்றிருப்பதால் திருவுளச் சீட்டு மூலம் நகரச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவிப்பை ஆணையர் தெரிவித்தவுடன் இருவருக்கும் சம்மதமா? என்ற கேள்வியையும் கேட்டார்.

மலர் மன்னன் எழுந்து, “அண்ணன் ஏவிகே என்ன சொல்கிறாரோ அதுதான் என் கருத்து” என்று அமர்ந்துவிட்டார். ஏவிகே எழுந்தார். இதில் எனக்கென்று ஒரு கருத்து இருக்கிறது என்றவுடன் கூட்டத்தினர் குழப்பத்தோடு ஏவிகேயைப் பார்த்தனர். தொடர்ந்து ஏவிகே,“நான் கட்சியின் நலனுக்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறேன். 1977,80 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் தொடர்ந்து கட்சி பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில் அடுத்துத் தலைமுறையில் கட்சிக்காக உழைக்க முன்வந்த சகோதரர் மலர்மன்னன் அவர்கள் சமமான வாக்கினைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில் திருவுளச் சீட்டு என்ற குலுக்கல் முறையில் திமுக நகரச் செயலாளரைத் தேர்வு செய்யவேண்டாம். மலர்மன்னன் நகரச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி அமர்ந்தார். பின்னர் மலர்மன்னனுக்கு ஏவிகே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அதே நாளில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் நகரக் கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் ஏவிகே மலர்மன்னனிடம் ஒப்படைத்தார். தோல்வியடையாமல் மலர்மன்னனை வெற்றியடையச் செய்த ஏவிகேயின் மாண்பைத் திருச்சி நகரத் திமுகவில் மட்டுமல்ல, திமுகவின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே துணிந்து சொல்லலாம்.

1983இல் நகரச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட மலர்மன்னன் முன்பைவிடவும் வேகமாகச் சுழன்று கழகப் பணிகளைச் செய்துவந்தார். மக்களின் அன்பினையும் பெற்றார். இதன் விளைவாக 1984 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் திருச்சி -1ஆவது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1993இல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது, திமுகவிலிருந்து விலகி மதிமுகவில் தன்னை மலர்மன்னன் இணைத்துக்கொண்டார். மதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட பல திமுகவினர் மீண்டும் தாய் கழகத்திற்குச் சென்றபோதும், மலர்மன்னன் திமுகவில் இணையாமல் மதிமுகவின் தொண்டராகவே உயிர் நீத்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி ஜனநாயகத்தின் உயிர்ப்புக்குச் சாட்சியாக ஏவிகேயும் மலரும் இன்றும் வரலாறாய் வாழ்ந்து வருகிறார்கள் எனில் மிகையில்லா உண்மையாகும்.

-ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.