நம்முன்னோர்களின் வாழ்வியலை கண்முன்னே காட்டும்குழுமாயி திருவிழா

அனைத்து சமூகத்தினரும் கொண்டாடும் சமத்துவம்... கெடா பலியிடும் அக்ரஹாரத்து அந்தணர்கள்...

0

உய்யங்கொண்டானில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது குழுமாயி அம்மன் திக்கோயில். தார்சாலையாக இருந்தாலும் சுமார் 2கி.மீ தூரத்திற்கு ரோடு சற்று குண்டும் குழியுமாகவே உள்ளது. ரோட்டிலிருந்து ஒரு சிறிய பாலத்தைக்கடந்தவுடன் மிகவும் பிரசித்திப்பெற்ற குழுமாயி அம்மன் கோயில் உள்ளது.

10 படிக்கட்டுகள் ஏரி உள்ளே செல்லும் போது நுழைவாயிலை விட பெரியதாக, நுழைவாயிலுக்கு உள்ளே குழுமாயி அம்மனின் திருஉருவம் உள்ளது. பக்தர்கள் அனைவரும் சென்று குனிந்தபடியேதான அம்மனை பார்க்கமுடியும். மேலும், கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் முதலில் ஆஞ்சினேயர் கோவில் அமைந்துள்ளது.

குழுமாயிஅம்மன் கோவில் வரலாறு
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மங்கம்மாள் ஆண்ட காலத்தில் சோழனூர் கிராம மக்கள் உய்யங்கொண்டான் பாலத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள். மண்வெட்டியை வைத்து வெட்டிக்கொண்டிருந்த போது, இரத்தமானது பீறிட்டு அடித்தது. கிராம மக்கள் திகைத்து போய் பார்த்துகொண்டிருந்த வேளையில், பணி செய்த ஒருவரின் உடலில் குழுமாயி அம்மன் அருள் புகுந்து, தன்னை இங்கு கோவில் கட்டி வழிபட்டால், நான் உங்களை பாதுகாக்கிறேன் என்று கூறியுள்ளது. குழிவெட்டி அம்மன் பிரசன்னம் ஆனதால் இக்கோவிலுக்கு குழுமாயி அம்மன் என்ற பெயர்க்காரணம் பெற்றது.

வழிபாட்டு முறைகள்: காப்புகட்டுதல்
மாசி மாதம் முதல் வாரத்தில் தண்டோரா போட்டு காப்புகட்டும் தேதியை அறிவிக்கின்றனர். காப்புகட்டும் தினத்தன்று கருப்புப்பாறையில் உள்ள நாலுவேல் மற்றும் பின்புறம் ஒரு சூலாயுதம், கொண்ட காவல் தெய்வத்திடம் உத்தரவு கேட்கப்படுகிறது. காவல் தெய்வம் உத்தரவு கொடுத்தவுடன் இரு ஆடுகள் வெட்டப்படுகின்றன. மருளாளி ஆட்டின் இரத்தைக்குடிக்கிறார். பின்னர், குழுமாயி அம்மனின் எல்லைக்குட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் சென்று விபூதி கொடுத்து ஆசீர்வாதம் செய்கிறார். பின்பு, வைக்கோல் போர், ராஜா, ஆண்டிப்பண்டாரம், சேப்லாபிள்ளை என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வேடத்தில் செல்கிறார். காப்புகட்டிய தினத்தில் இருந்து திருவிழா முடியும் நாள்வரையில் உள்ளூர் மக்கள் யாரும் வெளியூர் சென்று தங்குவதில்லை.

ஓலைபின்னுதல்
ஒரு மண்டத்திற்குள் ஓலையை வைத்து பலப்படுத்தி, உருவேற்றி குழுமாயி அம்மன் செய்கின்றனர். இந்த சிலை ஒவ்வொரு வருடமும் புதிதாக ஓலையைகொண்டு செய்யப்படுகிறது. கடந்த வருடம் செய்யப்பட்ட சிலையானது இந்த முறை செய்யப்பட்ட சிலைக்கு பின்புறம் வைக்கப்படும். மூன்றாவது வருடம் அந்த சிலையை ஆற்றில் விட்டுவிடுகின்றனர்.

திருவிழா
ஒவ்வொரு வருடமும் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காளிவட்டம், சுத்த பூஜை, குட்டிக்குடி வைபவம், மஞ்சள் நீராடுதல், சாமி குடியேறுதல் என மொத்தம் 5 நாட்களுக்கு இத்திருவிழா நடைபெறும்.

மருளாளி
மருளாளி என்பது கருப்பண்ணசாமியின் பரதிபலிப்பாக மக்களால் வணங்கப்படக்கூடியவர் குழுமாயி அம்மன். திருவிழாவில் முக்கிய அங்கம் வகிப்பவர் இவரே. ஒரு முறை மருளாளி தேர்வு செய்யப்பட்டவுடன் இறக்கும் வரையில் அவரே நீடிப்பார். ஒவ்வொரு முறை மருளாளி தேர்வின் போதும், பல்வேறு சோதனைகள் தேர்வுகளாக வைக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக, பூசாரியால் மறைத்து வைக்கப்படுகின்ற தொப்பி, இடைமணி, இரத்தம் குடிக்கப் பயன்படுத்தும் வெள்ளிக்கிண்ணம் உள்ளிட்டவையை சரியாக கண்டுபிடிக்கவேண்டும். பின்னர், மூன்றரை அடி நீளமுள்ள அரிவாளை விரல் பட்ட உடன் துண்டாகும் படி நன்றாக கூர் செய்து அதன் மீது அருள்வந்து சாமி ஆடவேண்டும். அதன் பிறகே அவர் மருளாளியாக தேர்வு செய்யப்படுகிறார்.

குழுமாயி அம்மன் ஒண்டிக்கருப்பண்ணசாமியிடம் உதவி கேட்டுசென்றபோது அவர் செய்துள்ளார். அதற்குப் பரிகாரமாக சுத்தபூஜை எனக்கு, இரத்தபூஜை உனக்கு என்று குழுமாயி ஒண்டிக்கருப்பண்ணசாமியிடம் கூறியதாக ஒரு வரலாறும். குழுமாயி அம்மனின் சக்தியைக் மலையாள மந்திரவாதி கட்டுப்படுத்த முயல்கிறார்.

அப்போது ஊர்பொதுமக்கள் ஒண்டிகருப்பண்ணசாமியிடம் உதவிகேட்கின்றனர். அதற்கு, அவர் ஆடுபலிகேட்டதாகவும் மற்றொரு வரலாறு உண்டு. அன்றிலிருந்து இன்று வரையில் மருளாளியிடம் மக்கள் தங்களுக்கு தேவையான பிரார்த்தனைகளை முன்வைக்கின்றனர். அது நிறைவேறியவுடன் அவருக்கு ஆட்டுக்குட்டியை காணிக்கையாக வழங்கிவருகின்றனர். மருளாளியாக இருப்பவர் பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்வார்.

காளிவட்டம்
உய்யங்கொண்டான் கோவிலில் இருந்து புத்தூருக்கு குழுமாயி அம்மன் செல்லும் நிகழ்வே காளிவட்டம். உய்யங்கொண்டான் கோவிலில் பூஜை முடிந்தவுடன் சூலாயுதத்துடன் சிவப்பு துணி போர்த்திய கொடியமுனியும், உறையூர் மேட்டுக்குடியில் செய்யப்பட்ட இரு கிளிகளுடன் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட மாலையுடனும், கையில் தீப்பந்தத்தை வைத்தப்படியே மருளாளியையும், குழுமாயி அம்மனையும் மக்கள் தூக்கிய படியே பக்தர்கள் குழுமாயி கோயிலின் வாசலில் ஒலிக்கக்கூடிய தாரை, தம்பட்டை முழங்க குழுமாயி அம்மனை வண்ணாரப்பேட்டைக்கு கொண்டு வருகின்றனர்.

இடையில் குழுமாயிஅம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள வயல்காட்டில் குழுமாயி அம்மனை மருளாளி சுற்றிவருகிறார். அப்போது ஆயி என்று நிலமதிர அவர் கத்தும் போதும் அவருடைய உக்கிரமான முகத்தை பார்க்கும் போது உண்மையான கருப்பண்ணசாமியின் தோற்றத்தை மக்களால் உணரமுடிகிறது.

பின்னர் மருளாளியின் கழுத்தில் இருக்கும் கிளிகளை மக்கள் வாங்கி கூடையில் வைத்துகொள்கின்றனர். பின்னர் அந்த வயல்காட்டின் வழியாக வண்ணாரப்பேட்டையை வந்து அடைகின்றனர். அவர்கள் வருவதை எதிர்ப்பார்த்து காத்துகொண்டிருக்கும் ஊர்மக்கள் குழுமாயி அம்மனும், மருளாளியும் வந்த உடன் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்கின்றனர்.
படுத்தப்படியே கோவிலில் இருந்து தூக்கிவரப்படும் குழுமாயி அம்மன், வண்ணாராப்பேட்டை வந்த உடன் நிமிர்த்தியபடியே தேரில் வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. மருளாளியை கோவிலில் ஐந்து நிமிடம் இறக்கிவிட்டு மீண்டும் மக்கள் தூக்கிக்கொள்கின்றனர்.

பின்பு தேர் அலங்காரம் செய்யும் வரையில், மருளாளியை தூக்கியபடியே மக்களின் மத்தியில் முன்னும், பின்னும் கையில் இருக்கும் தீப்பந்தத்தை ஆட்டியபடியே கொண்டுவருகின்றனர்.

அப்போது, குழந்தைகளை மருளாளியிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெறுகின்றனர் ஊர்மக்கள். மருளாளி குழந்தையை தூக்கினால் காத்து, கருப்பு எதுவும் அண்டாது என்பதும், ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கை. அலங்காரம் முடிந்தவுடன் மருளாளி முன்செல்ல

குழுமாயி அம்மன் தேரில் பின்னே அழைத்துவரப்படுகிறார்.
பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள வண்ணாரப்பேட்டை எல்லைக்கோவிலில் ஆடுபலியிட்டு உத்தரவு பெற்றவுடன் அங்கு திரண்டு நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் மருளாளி முன்னே செல்ல

மீண்டும் குழுமாயி அம்மனுடன் தேர்பின்னே செல்கிறது.
அதைத்தொடர்ந்து, புத்தூர் நான்கு ரோட்டில் காத்துகொண்டிருக்கும் அப்பகுதிமக்களிடம் மருளாளியையும், குழுமாயி அம்மனின் தேரையும் அவர்கள் பொறுப்பில் ஒப்படைக்கின்றனர். பின்னர், புத்தூர் மந்தைக்கு குழுமாயிஅம்மனையும், மருளாளியையும் அழைத்துச்செல்கின்றனர்.

அங்கு குழுமாயி அம்மனுக்கு கோபுரம் கட்டப்படுகிறது. இக்கோவிலின் எல்லைகள் என்று சொல்லக்கூடிய கோவில் வாசல், கல்லாங்காடு, வண்ணாரப்பேட்டை, புத்தூர் மந்தை, கேலிக்காரன் தெரு, சூரியன் பாறை, புத்தூர், பிள்ளையார் கோவில் ரோடு, வடக்குத்தெரு களத்துமேடு, தெற்குத்தெரு எல்லைக்கல், சீனிவாசநகர், கீழலேற்றம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டு கொடியமுனியை சுற்றி கொண்டுவரப்படுகிறது.

சுத்தபூஜை
அடுத்தநாள் காலையில் இருந்த புத்தூர் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவாக சென்று புத்தூர் வாழ் மக்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் குழுமாயி அம்மன். சுத்தபூஜையின் போது சுமார் 28க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு குழுமாயி அம்மன் செல்கிறார். அப்போது ஒவ்வொரு வீட்டினரும் தேங்காய், பழத்தட்டுகளுடன் வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். சுத்தப்பூஜையின் போது மருளாளி பங்கு பெறுவதில்லை.

விமர்சையாக கொண்டாடப்படும் குட்டிக்குடி
குட்டிக்குடி திருவிழா என்பது குழுமாயி திருவிழாவின் ஒரு பகுதியாக இருந்தாலும், இது அனைத்து தரப்பு மக்களாலும் விமர்சையாக கொண்டாடப்படுகிற ஒன்று. இத்திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்த வண்ணமே இருப்பார்கள்.

புத்தூர் மந்தையில் நடக்கும் இந்நிகழ்வின் போது சுமார் ஆயிரக்கணக்கில் மக்கள் பெரும் திரளாக நின்று பார்வையிடுவார்கள். இதில், ஒருவரின் தோள் மீது மருளாளி அமர்ந்து கொண்டு கருப்பு ஆட்டின் இரத்தத்தைக்குடிப்பார். முன்னதாக, குட்டிக்குடிக்க தயாராகும் மருளாளி வானத்தைப்பார்த்தப்படியே இருவிரல்களையும் அறுக்கும்படி காண்பிப்பார்.

அப்போது அரசு சார்பில் இருக்கும் முதல் குட்டி வெட்டப்பட்டு வெள்ளி கிண்ணத்தில் இரத்தம் பிடிக்கப்படும். இரத்தத்தைக்குடிக்கும் மருளாளி குடித்துமுடித்தபின்னர் வெள்ளிக்கிண்ணத்தை மக்கள் மத்தியில் காட்டுவார். அதை கண்ட மக்கள் அனைவரும் ஆரவாரமிட்டு தங்களின் பக்தியை வெளிப்படுத்துவார்கள்.

அரசு சார்பில் முதல் ஆடு
80 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் கலெக்டராக பணியாற்றியவர். இதெல்லாம் மூடநம்பிக்கை என்ற பழித்து குட்டிகுடி வைபவத்தை தடுக்க முயற்சி செய்தார். அதன் விளைவாக அவருக்கு பார்வை போய்விட்டது. பின்னர் மக்கள் அனைவரும் சேர்ந்து குழுமாயி அம்மனுக்கு ஆட்டை பலிகொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அவரும் ஒரு ஆட்டை பலிகொடுத்துள்ளார். பின்னர், அவருக்கு பார்வை வந்துவிட்டது. அன்று முதல் குட்டிகுடி திருவிழாவில் முதல் ஆடாக அரசின்

ஆடே இருக்கும்.
ரத்தம் குடிக்கும் கிளி
அதன்பின் ஒவ்வொன்றாக பக்தர்களின் ஆடுகள் வரும். அனைத்து (ஆட்டுக்)குட்டிகளின் இரத்தத்தையும் மருளாளி குடிப்பார். இந்த இரத்தமானது அம்மன் தோளின் மீது இருக்கும் கிளிகள் குடிக்கின்றன என்பது ஐதீகம். மருளாளியின் தோளில் உருவம் பொறிக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்ட கிளிகளின் உருவத்தை காணமுடியும். ஆயிரக்கணக்கான குட்டியின் இரத்தத்தை மருளாளி குடிப்பார்.

கெடா பலியிடும் அக்ரஹாரத்து அந்தணர்கள்
புத்தூர் மந்தை என்பது அந்தணர்கள் வாழக்கூடிய அக்ரஹாரத்திலேயே அமைந்துள்ளது. புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ள ஐயர்கள் குழுமாயி அம்மனுக்கு குட்டிகுடி திருவிழாவின் போது ஆட்டுக்குட்டி வாங்கி தருவது வழக்கம். முன் காலத்தில் குழுமாயியை அந்தணர்கள் வேலைக்கு வைத்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல குழுமாயி அம்மனுக்கு வேலை அதிகமாக கொடுத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த கொடுமைகளை ஒண்டிகருப்பண்ணசாமியிடம் குழுமாயி அம்மன் முறையிட்டுள்ளார்.

அதன் பரிகாரமாக தற்போது புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ள ஐயர்கள் சேர்ந்து குட்டிக்குடி திருவிழாவிற்கு ஆட்டை வாங்கித் தருவது வழக்கமாக உள்ளது. தமிழகத்திலேயே இது போன்ற நிகழ்வு வேறு எந்த அக்ரஹாரத்திலும் நடைபெறுவதில்லை. ஆனால், புத்தூர் அக்ரஹார மக்கள் இதை தங்களுக்கே உண்டான உரிமை என்று முன்வந்து செய்கின்றனர்.

மஞ்சள் நீராடுதல்
குட்டிக்குடி திருவிழாவின் போது ஏற்பட்டிருக்கும் இரத்தக்கறைகளை போக்கும் விதமாக மஞ்சள் நீராடுதல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குழுமாயி அம்மன் ஓய்வெடுக்கும் நாளாகவும் இருக்கின்றது. தேரைச்சுற்றிலும் வெள்ளைத்துணியில் கட்டப்பட்டு அதன் மீது மஞ்சள் நீர் ஊற்றப்படுகிறது.

சாமி குடியேறுதல்
இவ்விழாவின் கடைசிநாள் நிகழ்வாக நடைபெறுவது சாமி குடியேறுதல். புத்தூர் மந்தையில் இருக்கும் குழுமாயி அம்மன் உய்யகொண்டானில் இருக்கும் தனது சொந்த வீட்டிற்கு குடியேறும் நாள். முதல் நாள் போலவே இறுதி நாளும் மிகவும் விமர்சையாக ஊர்மக்களால் ஆரவாரத்துடன், குழுமாயி அம்மன் வந்த படியே மக்கள் கொண்டு செல்கின்றனர்.

இவற்றில், குழுமாயி அம்மனின் முகம் காளிவட்டத்தின் போது சிரித்தப்படியாக, மீண்டும் சாமி குடியேறும் போது சோகமாகவும் இருக்கிறது. இந்த, பாவனையானது, அம்மனின் முகத்தில் இயற்கையான நிகழ்வாக நிகழ்கின்றது.

அனைத்து சமூகத்தினரும் கொண்டாடும் திருவிழா
இத்திருவிழாவில், பரம்பரை பரம்பரையாக மருளாளியாகவும், பூசாரியாகவும் சோழிய வெள்ளாளர் சமூகத்தினரும், ஆதிதிராவிடர் சமூகத்தினர் மருளாளியை தூக்குவதற்கும், ஆட்டை பலிகொடுக்க முத்தரையர் சமூகத்தினரும், சாமிக்கு தேவையான துணிகளை பராமரிப்பதற்கு வண்ணான் சமூகத்தினரும், குழுமாயி அம்மனை ஓலையில் பின்னுவதை ஆசாரி சமூகத்தினரும், இந்த திருவிழாவை ஐயர் சமூகத்தினர் எடுத்து நடத்துவதையும் அவரவர்கள் உரிமையாக வைத்துள்ளனர். இது போன்ற ஒரு நல்லிணக்கமான திருவிழா தமிழகத்திலேயே எங்கும் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனிச்சிறப்பு
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை வைத்தால், விரைவில் நல்ல செய்தி வரும் என்பது மக்களின் நம்பிக்கை, அவ்வாறாக வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழுமாயி அம்மனுக்கு ஆடு பலிகொடுப்பார்கள்.

ஓலைகளினால் பின்னப்பட்டு வருடம் ஒரு முறை அம்மன் உற்சவம் வருவதால், குழுமாயி அம்மனை ஓலைப்பிடாரி அம்மன் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். அவ்வளவாக வளர்ச்சிகள் இல்லாத அந்த காலத்தில் கிராமங்களில் எவ்வாறு திருவிழா மற்றும் வழிபாடுகள் நடைபெறுமோ அதே போன்றே இன்றும் இப்பகுதி மக்கள் இந்த திருவிழாவை நடத்திவருகிறார்கள் என்பது முக்கியமான விஷயம்.

திருவிழாவின் முதல் நாள் முதல் இறுதிநாள் வரையில் வரும் மக்கள் கூட்டம். கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம், வாசலில் போடப்பட்டிருக்கும் பொம்மை, பலூன் கடைகள் என அனைத்தும் இந்த திருவிழாவில் கிராமமாக இருந்த புத்தூர் பகுதியினைக்காட்டுகிறது. 21-ம் நூற்றாண்டிலும் ஒரு காலத்தின் போக்கிற்கு தகுந்தாற்போல் ஒரு மரபையும் மாற்றி அமைக்காமல் நம்முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை கண்முன்னே விரிக்கிறது இந்த குழுமாயி அம்மன் திருவிழா.

மேலும், குழுமாயி அம்மனின் அக்கா, தங்கைகளாக கூறப்படுகிற, குழுமாயி அம்மனின் எல்லையைத்தாண்டி குழுந்தலாயி, உக்ரகாளியம்மன், காராயி, செல்லாயி, மதவாயி, அடைக்காயி உள்ளிட்ட அம்மன்கள் அவர்களுக்கென்று தனித்தனியே எல்லைகளைகொண்டுள்ளன. இந்த தெய்வங்களுக்கும் மருளாளி உண்டு.
இருப்பினும், குழுமாயி அம்மனைப்போன்று விமர்சையாக இந்த திருவிழாக்கள் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், இந்த பகுதியில் உள்ள மக்களும், மருளாளியும் குழுமாயி திருவிழாவில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தொகுப்பு: வெற்றிச் செல்வன், பாரத், ஜெ.கே

Leave A Reply

Your email address will not be published.