பழைய சமையல்காரரின் பரிந்துரையில் துணைவேந்தர் நியமனம்

0

திருச்சி துவாக்குடி யில் இயங்கி வந்த மண்டலப் பொறியியல் கல்லூரி (REC) தற்போது (NIT) என்று தேசியத் தொழில்நுட்ப நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது.

1980ஆம் ஆண்டிற்கு முன்பு மணிசுந்தரம் மண்டலப் பொறியியல் கல்லூரியின் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மாணவர் விடுதியில் சமையல்காரராகப் பணியாற்றி வந்த குருசாமி பணியின் போது மது அருந்திவிட்டு வருவதும், அது தொடர்பாக மெமோ என்னும் ஒழுங்கு நடவடிக்கை குறிப்பாணை அனுப்பியும் அவர் மது அருந்திப் பணிக்கு வருவதைத் தொடர்கிறார். எனவே குருசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட குருசாமி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பதைவிடவும் எம்.ஜி.ஆர். பக்தர் என்பதே பொருத்தமுடைய சொல்லாக இருக்கும். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவராக இருந்தார். எம்.ஜி.ஆர். அப்போது ஆட்சியில் இருந்தார்.

‌சந்தா 1

குருசாமி துவாக்குடி பகுதியின் தீவிரத் தொண்டராகத் தன் கடுமையான உழைப்பின் காரணமாக மாறினார். அதிமுக பொதுக்கூட்டங்களை நடத்துவது, எம்.ஜி.ஆர்.ஆட்சியின் நலத்திட்டங்களை ஏழை, எளிய மக்களிடம் எடுத்துச்சொல்வது, திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் (உள்ளாட்சி அமைப்பு அப்போது இல்லை) பொதுமக்களின் குறை களை எடுத்துச் சொல்வது, பொதுமக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பது, காலம் தாழ்த் தும் அதிகாரிகளை நேருக்கு நேர் கண்டிப்பது என்று குருசாமி அரசியல் வளர்ச்சி வேகம் பிடித்தது.

துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் வரும் போதெல்லாம் அவர் பணியாற்றிய மண்டலப் பொறியியல் கல்லூரியை ஒரு ஏக்கவுணர்வுடன் பார்த்துக் கொண்டே செல்வதும் வருவதும் என்பது அவரின் வழக்கமாயிற்று.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே (இராசிபுரம், சிவகாசி) வெற்றி பெற்றது. திமுக 16க்கு 16இலிலும் வெற்றி பெற்றது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வைத்திருந்த இந்திரா காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சியை அமைத்தது.

திமுக தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தோல்வியைத் தாங்கமுடியாத எம்.ஜி.ஆர். தொண்டர்கள் ஆட்சியும் கலைக்கப்பட்டது என்பதை அவர்களால் தாங்கி கொள்ளமுடியவில்லை. அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் சிலர் திமுக பக்கம் தாவினார்கள்.

கலைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் போட்டியிடக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிமுகவில் போட்டியிடப் பலரும் தயங்கினார்கள். திமுக. காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் (புதுச்சேரி உட்பட) வாங்கிய ஓட்டுகளைக் கூட்டிப் பார்த்தால் அதிமுக வெல்லவே முடியாது என்ற நினைப்பு அதிமுகவினரிடமே அதிகம் இருந்தது.

எம்.ஜி.ஆர். காசு,பணம் வைத்திருக்கும் பணக்காரர்களை விட்டுவிட்டுக், கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களுக்கும், எளிய தொண்டர்களுக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். திருவெறும்பூர் சட்டமன்றத்திற்கு அதிமுகவின் எளிய தொண்டர் குருசாமி, அண்ணாதாசன் என்ற பெயரில் போட்டியிட எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். 1980 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாதாசன் வெற்றிபெற்றுச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சந்தா 2

1981இல் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்போது அதற்குச் சிறப்பு அலுவலர் (Special Officer) நியமிக்கப்படுவார். அவர் பல்கலைக்கழகத்திற்குச் சட்டவிதிகளையும் துணைச் சட்ட விதிகளையும் உருவாக்குவார். அரசு வழங்கும் பல்கலைக்கழகத்திற்கான நிலத்தைப் பல்கலைக்கழகத்தின் பெயரில் பதிவு செய்வார். பின்னர்ப் பல்கலைக்கழகத்திற்குத் துறைகளை உருவாக்குவார். ஆசிரியர் அல்லாத பணியாளர்களைக் கொண்டு பல்கலைக்கழகத்திற்கு அலுவலகத்தை உருவாக்குவார்.

இதுபோன்ற அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தவுடன் அந்தச் சிறப்பு அலுவலர் “துணைவேந்தராக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும். இதுதான் பல்கலைக்கழகம் உருவாக்கத்திற்கான நடைமுறைகள்.

இந்தச் சிறப்பு அலுவலர் பணியைப் பெற்றுவிட வேண்டும் என்று மண்டலப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் மணிசுந்தரம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார் என்ற தகவல்கள் உண்டு.

எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தால் சிறப்பு அலுவலர் நியமனம் உறுதி என்பதை உணர்ந்த மணிசுந்தரம் எம்.ஜி.ஆரை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் நெருங்கிய வட்டம், “பாரதிதாசன் பல்கலைக்கழகத் தனி அலுவலர் நியமனத்திற்காகத் திருச்சி ஆர்இசி பிரின்சிபால் உங்களைச் சந்திக்க நேரம் கேட்கிறார் அவர் நம்ம நாவலரின் (நெடுஞ்செழியன்) மிகநெருக்கமான உறவினர் என்று சொன்னவுடன்,

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதாசனோடு என்னைப் பார்க்கவேண்டும் என்று மணிசுந்தரத்திடம் சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொன்ன தகவலைக் கேட்டுப் பொறியியல் கல்லூரி முதல்வர் முதலில் அதிர்ந்துபோனார்.

தன்னால் பணிநீக்கம் செய்யப்பட்ட சமையல்காரர் குருசாமியைத் துணைவேந்தர் பதவிக்காகச் சந்திப்பதா? என்ற கேள்விகள் பல எழுந்தாலும் தனி அலுவலர் பின்னர்த் துணைவேந்தர் பதவி என்னும் கனவை நினைவாக்கிக் கொள்ள மணிசுந்தரம் எல்லாவற்றையும் கடந்து மறந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் குருசாமி என்னும் அண்ணாதாசன் 1980 மற்றும் 1984 சட்டமன்றத் தேர்தல்களிலும் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அந்தக் காலங்களில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஆனந்த்-இல் மாத வாடகை கொடுத்துத் தங்கியிருந்தார்.

தன்னைப் பணிநீக்கம் செய்த முதல்வர் மணிசுந்தரம் தன்னைச் சந்திக்க வருகிறார் என்ற செய்தியைப் பழைய குருசாமியாக அல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதாசனாக எடுத்துக் கொண்டார். முதல்வர் மணிசுந்தரம் ஆனந்த் ஒட்டல் வருகிறார். அறையிலிருக்கும் தன் பழைய குருசாமியை அண்ணாதாசனாகச் சந்திக்கிறார். பழைய நினைவுகளை இருவரும் பேச அண்ணாதாசன், “நீங்க பணிநீக்கம் செய்யவில்லை என்றால் இன்றைக்கு நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கமுடியாது என்றவுடன் மணிசுந்தரம்,“ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவைத்தான் நான் செயல்படுத்தினேன் என்று கூறச் சரி வந்த விஷயம் என்ன சொல்லுங்க என்று அண்ணாதாசன் கேட்டவுடன், “பாரதிதாசன் பல்கலைக்கழகத் தனி அலுவலர் நியமனம் எனக்குக் கிடைக்க முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தேன். அவர் சட்டமன்ற உறுப்பினரான உங்களை அழைத்துக் கொண்டு வரச்சொல்லியிருக்கிறார் என்று மணிசுந்தரம் சொன்னவுடன், பழைய குருசாமியாக இல்லாமல், அண்ணாதாசனாக,“என்னுடைய முதல்வருக்காக என்னுடைய முதலமைச்சரிடம் உங்களுக்காகப் பரிந்துரை செய்வேன் என்று உறுதிபடக் கூறினார்.

எம்.ஜி.ஆர். மணிசுந்தரம் சந்திப்பு சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதாசனோடு நடைபெற்றது. பின்னர்ப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தனி அலுவலராகத் “திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் மணிசுந்தரம் நியமனம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவு நாளிதழ்களில் முதன்மைச் செய்தியானது. நியமனத்தை ஏற்றுத், தனி அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதாசனை ஆனந்த் ஓட்டலில் அவரின் அறையில் மணிசுந்தரம் மாலை வேளையில் சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் பாராட்டி மகிழ்ந்திருந்தனர். அன்றைய இரவில் அண்ணாதாசனுக்கு வழங்கப்பட்ட மாபெரும் விருந்தில் வெளிநாட்டு உயர்ரக மதுபானங்களும் இடம்பெற்றிருந்தன என்பது உறுதிப்படுத்த முடியாத தகவல் என்றாலும் அதில் உள்ள பொருத்தப்பாட்டை எண்ணிப்பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். “மக்கள் அனைவரும் ஒரே குலம், ஒரே நிறை என்பதுதான் அந்த உண்மை.

Leave A Reply

Your email address will not be published.