எங்கள் பார்வையில் திருச்சி

திருச்சியில் பணிபுரிந்த முன்னாள் கலெக்டர்களின் மறக்கமுடியாத பணி அனுபவங்கள்

0

கலெக்டர் சாந்த ஷீலா நாயர்

43 ஆண்டுகள் 25க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற அவர் தான் திருச்சியின் கலெக்டராக இருந்த போது நடந்த, நடத்த நினைத்த செயல்களைப்பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.

 தமிழ்நாட்டின் இதயம் திருச்சி. என்னுடைய தாய்வீடு. எந்த ஒரு மாநாடு நடந்தாலும் அதை திருச்சியில்தான் நடத்துவார்கள். அந்த அளவிற்கு திருச்சி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகரம்.

‌சந்தா 1

அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். திருச்சியை தலைநகராக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். எங்கு தலைமை செயலகம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல இடங்களை அவர் கூறியதன் படி தேர்வு செய்தேன்.  எம்.ஜி.ஆரின் சத்துணவுத்திட்டம் திருச்சி பாப்பாக்குறிச்சியில் தான் ஆரம்பிக்கப்பட்டது. முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த ஊர் இது.

சென்னையில் நடைமுறைப்படுத்திய Rain Harvesting System இங்கு அறிமுகப்படுத்தினேன். பெண்களின் தற்சுகாதாரம் பேண அவர்களின் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பல யோசனைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது.

3 வருடங்களுக்கு முன் வாங்கிய சிறந்த தூய்மை நகரத்திற்கான விருதை திரும்பவும் திருச்சி வாங்கணும் அதுதான் என் விருப்பம்.

 

கலெக்டர் மூர்த்தி

திருச்சி ஒரு பாதுகாப்பான நகரம். அப்போது என்னுடன் பணியாற்றிய காவல் துறை ஆணையர் திரிபாதி உடன் காவல் நண்பன் என்ற திட்டம் பொதுமக்கள் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. நான் ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் சேவை தொண்டு நிறுவனம் கோவிந்தராஜ் அவர்கள் உதவியுடன் 110 சானிட்டரி காம்ப்ளக்ஸ் அமைக்கப்பட்டு, இப்பவும் அது நடைமுறையில் உள்ளது.

இல்லம் 4 உள்ளம் 1  என்ற சாட்டிலைட் கிராமத்தை லால்குடி அருகே உருவாக்கினோம். அதாவது 4 மாதத்தினர் ஒன்றாக  இணைந்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து, அவர்கள் திருவிழா, சடங்குகள், சம்பிரதாயங்களை எல்லோருமாக சேர்ந்து செய்து வாழ்வது. இதனை இந்தியாவில் மற்ற மாநிலத்தவரும்  பார்த்துவிட்டு தனது மாநிலத்திலும் இதனை நடைமுறைப்படுத்த முயன்றனர். அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த முத்துவீரன் உதவியுடன் அண்ணாநகர் உழவர் சந்தை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டிற்காக செய்யப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் மாதிரி நம் காந்தி மார்க்கெட்டையும் தரம் உயர்த்த வேண்டும். குடமுருட்டி, உய்யக்கொண்டான் கரைகளை உயர்த்தி, நீர் ஆதாரத்தை அதிகரித்து அதில் படகு போக்குவரத்து, மற்றும் அதன் கரைகளில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், இரவில் தெருவில் உறங்கும் மக்களுக்காக ஒரு விடுதி, காம்ப்ளக்ஸ் என பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்கள் பயன்படும் வகையில் அமைக்க வேண்டும். மோனோ எலக்ட்ரிக்கல் மாதிரி வட்ட வடிவில் திருச்சியை இணைக்க வேண்டும். இவையெல்லாம் அமைக்க வேண்டும் என்பது எனது ஆசை.

 

கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன்

திருச்சி ஒரு அழகான தூய்மையான நகரம். நான் பிறந்தது சென்னையில் என்றாலும் எனக்கு மற்றொரு தாய்வீடாக இருப்பது திருச்சி தான்.

சந்தா 2

நான் ஆட்சியராக பணிபுரிந்தபோது மணப்பாறை மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் நோக்கில் ஜிழிறிலி நிறுவனம் அமைக்கப்பட்டது. கொள்ளிடம் பாலம், அரிஸ்டோ பாலம், யாத்ரிநிவாஸ், ஆர்ட்ஸ் காலேஜ் அமைக்கப்பட்டது. திருச்சி தலைமை மருத்துவமனையை புதுப்பொலிவுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக 100 கோடி ரூபாய் செலவில் மாற்றப்பட்டது.

ஒரு பள்ளிக்கு விசிட் சென்றிருந்தபோது இரு குழந்தைகள் முட்டையை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அவர்களிடம் இதற்காக அரசு நிறைய செலவு செய்கிறது. நீங்கள் இதை வீணாக்குகிறீர்களே என்று கேட்க, தினம் இதே மாதிரி முட்டை எங்களுக்கு பிடிக்கவில்லை. வெரைட்டியாக வேண்டும் என்றனர். உடனே சமையல்கலை நிபுணர் தாமுவை தொடர்புகொண்டு, இதே செலவில் வெரைட்டி ரைஸ் செய்ய தர முடியுமா என கேட்க, அவர் அதற்கு சம்மதித்து 8 வகை கலவை சாதத்தை செய்து தந்தார். முட்டையிலும் மசாலா முட்டை என சில வெரைட்டிகளை செய்தார். அது தமிழ்நாடு முழுதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

திருச்சி ஏர்போர்ட்டை தரம் உயர்த்த வேண்டும். ஏனெனில் பல்வேறு நாடுகளுக்கும் திருச்சி மக்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கும், பல்வேறு நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதற்கும் தகுந்தாற்போல் மேலும் நவீனமயமாக்கவேண்டும் இது எனது விருப்பம்.

கலெக்டர் டாக்டர் பழனிச்சாமி

திருச்சி ஒரு புகழ் பெற்ற நகரம், பழங்கால சிறப்பு வாய்ந்த நகரம்.சைவ, வைணவ மதங்கள் கோயில்கள் நிறைந்து உள்ளது. சிறப்பு பெற்ற பாரத மிகுமின் நிறுவனம், என்.ஐ.டி, வாழை ஆராய்ச்சி மையம், அனைத்தும் இங்கு அமைந்துள்ளது. இங்கிருக்கும் மக்கள் அனைவரும் அன்பாக பழகக்கூடியவர்கள்.

நீதிமன்றத்தைச்சுற்றி பாதை அமைத்தது. 2016ல் 1650 கோடி செலவில் கொள்ளிடம் பாலம் அமைத்தது. ஓடத்துறை, ஓயாமாரி சுடுகாடுகளை நவீன மயமாக்கியது.

துறையூர் காட்டுநாயக்கனூர் மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றியது. 2017ல் கருங்குளம் விவசாய பெருங்குடி மக்களுக்கு குடிமராமத்து  பணிகள் செய்து தந்தது. நீர் சேகரிக்கும் தொட்டிகள் அமைத்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது. குடும்ப அட்டையில் பேர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உட்பட அனைத்தும் எளிமைப்படுத்தப்பட்டது.

மகாத்மாகாந்தி மருத்துவமனையுடன் மருத்துவக்கல்லூரி இணைக்கப்பட்டது. புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை இந்த ஊர்மக்கள் திருச்சியை சார்ந்து இருக்கின்றனர். அதனால் அவர்கள் எளிதாக திருச்சி வந்து செல்லும்படி சாலைகள், விமானப்போக்குவரத்து,ரயில் போக்குவரத்து அமைக்கப்பட்டது.

கலெக்டர் சிவராசு

பழங்கால கட்டிடக்கலையின் சிறப்புகள் மிகுந்த நகரம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், கரிகாலனின் கல்லணை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போது அரைவட்ட மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முடியும்போது கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை ஆகிய நான்கு ஊர்களையும் இணைக்க முடியும். அப்போது கனரக வாகனங்கள் ஊருக்குள் வராது. போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். மேலும் சத்திரம் பேருந்து நிலையத்தை மேலும் நவீனப்படுத்தும் திட்டம் 2022ல் முடியும்.

குடமுருட்டி, முக்கொம்பு, திண்டுக்கரை பாலங்களை நவீனப்படுத்த 55 கோடி செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பாலங்கள் அமைக்கப்பட்டால் அரிஸ்டோ பாலத்திலிருந்து கிளிக்கூடு, இடையாற்றுமங்கலம் வரை செல்லலாம்.
விருப்பம் : யுனெஸ்கோபட்டியலில் கல்லணையை இடம்பெற செய்ய வேண்டும்.

மக்கள் அனைவரும் சுற்றுப்புற தூய்மையை காத்தால் திருச்சி தூய்மையான நகரமாக மட்டுமல்லாமல் அழகான நகரமாகவும் மாறும் என்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.