பெண்களின் சூப்பர் ஸ்டார் : எம்.கே.தியாகராஜ பாகவதர்

0

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் தற்போதைய நாகை மாவட்டத்திலும் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தவர், இசைத் துறையில் மட்டுமல்ல, திரைத்துறையிலும் கொடிகட்டிப் பறந்த ’அந்தக் காலத்துச்’ சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. என்றழைக்கப்படுகின்ற மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர். சீர்காழி என்றால் கோவிந்தராசனையும் அன்பில் என்றால் தர்மலிங்கத்தையும் மன்னை என்றால் நாராயணசாமியையும் குறிப்பதுபோல் பாகவதர் என்றால் தியாகராஜர் ஒருவரை மட்டுமே குறிக்கும் சொல்லாகும். அந்த அளவுக்கு இசைத் துறையிலும் திரைத்துறையில் புகழ் கொடி நாட்டியவர்.

பாகவதர் குடும்பம் வறுமையின் காரணமாக மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. தற்போதைய எடத்தெருவில் உள்ள பழைய கோவில் பள்ளியில் படித்தார். அப்போது பெருக்கெடுத்தோடிய உய்யகொண்டான் ஆற்றில் நீச்சலடித்து மகிழ்ந்து தன் சிறுபிள்ளை பருவத்தைக் கழித்தார்.

1926-இல் திருச்சி பொன்மலையில் நடைபெற்ற ‘பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனாக வேடமேற்று பாகவதர் நடித்தார். 1934இல் பவளக்கொடி திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் பாகவதர் நடித்தது மட்டுமல்ல…. அதில் இடம் பெற்ற 55 பாடல்களில் 22 பாடல்களைப் பாடி மக்களிடம் புகழ் பெற்றார். 10 ஆண்டுகளில் 9 வெற்றிப் படங்களில் நடித்துச் சாதனை படைத்தார். 1944ஆம் ஆண்டு தீபாவளி நாளின்போது வெளியான ஹரிதாஸ் தொடர்ந்து 3 ஆண்டுகள் திரையிடப்பட்டு வசூலை அள்ளிக் குவித்தது.

புகழின் உச்சியில் இருந்த மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அந்த மகத்தான நாயகன் ‘லட்சுமிகாந்தன்’ என்னும் பத்திரிக்கையாளரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார். வழக்கில் 4 வருடச் சிறை தண்டனை கிடைத்தது. வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு இரு வருடங்கள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பில், பாகவதரும் என்எஸ்கேயும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

0 R

சிறை விடுதலைக்குப் பின் மீண்டும் திரைப்படங்களில் நடித்தார். பாடினார். இசையால் வசீகரித்தார் எனினும் முன்புபோல அவர் புகழ் பெறமுடியவில்லை. தொடர்ந்து உடல்நலக் குறைவு, கண்பார்வை மங்கல் என இருந்து 1959ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புகழ்உடம்பை எய்தினார்.

பாகவதரின் தோற்றப் பொலிவு பெண்களை மட்டுமல்ல ஆண்களையே மயக்கும் அற்புத ஆற்றல் கொண்டது. தங்கக் கோதுமை நிறம், நிலவு போன்ற அமைதி தவழும் முகம், மயக்கும் விழிகள், நீண்ட நாசி, கழுத்து பிடரியைத் தொடும் சிகை அலங்காரம் என எல்லாரையும் பாகவதர் வசீகரித்தார். பாகவதர் அழகுக்கு அழகு கூட்டும் வண்ணம் தினமும் காலையில் வெந்நீரில் பன்னீர் கலந்து குளிப்பார். அரைத்த சந்தனம், சவ்வாது, புனுகு, அத்தர் போன்ற இயற்கை மணம் நிறைந்த வாசனை திரவியங்களை உடலில் பயன்படுத்தி மணத்தால் மனங்களை மயக்கினார். நாள்தோறும் பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் என்றும் நீண்ட துண்டு அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பாகவதர் இரயில் போகிறார் என்றால் இரசிகர் கூட்டம் படையெடுத்து இரயிலை முற்றுகையிட்டுப் போகவிடாமல் செய்யும். பாகவதரின் தரிசனத்திற்கும், அவரின் கரங்களைத் தொடுவதற்கும், கைகளில் முத்தங்களைத் தருவதற்கும் கூட்டம் அலைமோதும். இரயில் 4 மணி நேரத் தாமதத்திற்குப் பின் புறப்பட்டுச் செல்லும். பாகவதர் புதுக்கோட்டைக்குக் காரில் செல்லும்போது கீரனூருக்கு முன்னுள்ள இரயில் பாதையில் கேட் மூடப்பட்டுவிட்டது. காரில் பாகவதர் காத்திருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்ப் பரவி மக்கள் காருக்கு முன் குவிந்துவிட்டார்கள். பாகவதரைப் பார்த்த மகிழ்ச்சியில் …. மன்மதலீலையை வென்றார் உண்டோ……. என்ற பாடலைப் பாட வற்புறுத்துகின்றனர். இரயில் வந்துவிட்டது. கடந்த சென்ற இரயிலை மறித்து நிறுத்தி விட்டார்கள். இரயில் கேட்டை மறித்துக் கொண்டு இரயில் நிற்கிறது. இரசிகர் பட்டாளத்தின் வேண்டுகோளை ஏற்றுப் பாகவதர் பாடலைப் பாடி முடித்தார். இரயில் புறப்பட்டது. பாகவதர் புதுக்கோட்டை சென்றார்.

அந்தகாலத்தில் பல பெண்களின் தூக்கத்தைப் பாழடித்தவர் எம்.கே.டி. தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன் எம்.கே.டி’தான்.  வெள்ளைக்குதிரை. அதன் மேல் ஒய்யாரமாகப் பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வரப், பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்துப் பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள். தன் மனைவி பாகவதரைப் பார்த்துவிடக்கூடாது, அவர் அழகில் மயங்கிவிடக்கூடாது என்பதற்காகக் கணவன், மனைவியை முக்காடு போட்டு மறைத்துக்கொண்டே இருப்பான்.  ஆனால் மனைவி முக்காட்டை நீக்கிப் பாகவதரைப் பார்த்துச் சொக்கிப்போவாள். இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி.  படத்தில் மட்டுமல்ல,  உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்துப், பித்து பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம். ’உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்’ என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதர் வீட்டில் குவிந்தன.

1940களில் தமிழ்நாடெங்கும் பாகவதர் கச்சேரிகளுக்குச் செல்வார். கச்சேரியில் பெண்கள் கூட்டம் திரண்டிருக்கும். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிக்குச் சென்றால் கூட்டம் சொல்லிமாளாது. ஸ்ரீரங்கத்துப் பெண்கள் பாகவதரைத் தரிசனம் செய்யப் பெரிய போட்டியே நடக்குமாம். கச்சேரி முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும் பெண்களின் பேச்சுகளில் பெரும்பாலும் ’பாகவதர் புராணம்தான்’.

அந்தக் காலத்தில் இந்தியாவில் மிகக் குறுகிய இரயில் பயணத்தில் 2-ஆம் இடம் பிடித்தது ஸ்ரீரங்கம் – திருச்சி ஜங்ஷன் பயணம்தான். ஸ்ரீரங்கம் புறப்பட்டு, டவுன்ஸ்டேசன், அரியமங்கலம்(இப்போது இல்லை) பொன்மலை அப்புறம் ஜங்ஷன். இந்த இரயிலுக்கு ‘ஆபிசர் டிரெயின்’ என்று பெயர். ஸ்ரீரங்கத்திலிருந்து காலை 10.00 மணிக்குப் புறப்பட்டுத் திருச்சி ஜங்ஷனுக்கு 10.30 மணிக்குப் போய்ச் சேரும்.

இந்த இரயில் பயணத்தில் ஆண்களிடமும் பாகவதர் புராணம் பேசப்படும். ஒரு தரப்பு பாகவதரை எதிர்த்தும், ஒரு தரப்பு ஆதரித்தும் பேசும். “இங்கே பாருங்கோ….. பாகவதர் நன்னாப் பாடுறார்…… நன்னா நடிக்கிறார் ….. அவ்வளவுதான். நம்ம பொம்மனாட்டிகள் பாகவதர் மீது மோகம் கொண்டு அலையறது அவ்வளவு நல்லதில்லை…… நாகரிகமும் இல்லை……..” என்று எதிர்த்தரப்பு சொன்னவுடன்…. ஆதரவு தரப்பு “பாகவதர் நன்னாப்…. அழகா இருக்கா….. நன்னா பாடி மயக்குறா……. நம்ம பொம்மனாட்டிகள் பாகவதர் மேல மோகத்தோடு இருக்கறது தப்பில்லைன்னுதான் தோணுறது……. பாகவதர் நினைப்பிலே பொம்மனாட்டிகள் கர்ப்பம் தரிச்சி……. ஒரு கால் பாகவதர் போல ஒரு ஆண்பிள்ளை பிறந்தால் நம் குலத்துக்கே பெருமைதானே………..” என்றவுடன் “நாசாமா போச்சி….. ஜங்ஷன் வந்திருச்சி இறங்கி ஆபீஸ் வேலையைப் பார்ப்போம்” என்று கலைந்து செல்வோர்…. மாலை 5.00 மணிக்கு ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்படும் இரயில் மீண்டும் பாகவதர் புராணம் தொடங்கி விடும்.

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1975-இல் எடுக்கப்பட்ட முடிவின்படி 1976-ஆம் ஆண்டு கலைநிகழ்ச்சிகளுக்காகத் தற்போதைய தமிழ்நாடு ஹோட்டலை அடுத்துள்ள இடத்தில் கலைநிகழ்ச்சிகளுக்காக அப்போதைய முதல்வர் கருணாநிதியின் சிறப்பு பெயரான கலைஞர் பெயரில் ஒரு அரங்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. கலைஞர் கலையரங்கம் என்ற பெயரில் கட்டப்பட்டது. 1977 ஜுன் 30 எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். கலைஞர் கலையரங்கம் என்றது திரையரங்கமாக மாற்றப்பட்டுப் பணிகள் நடைபெற்றன. சுமார் 1400 பேர் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட திரையரங்கமாக நிறைவு பெற்றது. திறப்பு விழாவுக்கு எம்ஜிஆர் வருகை தந்தார்.

அவ் விழாவில் கலந்துகொண்ட எம்ஜிஆர். “பாகவதர் மயிலாடுதுறையில் பிறந்தாலும் திருச்சியில் வாழ்ந்தவர். அவரோடு நானும் நடித்திருக்கிறேன். பாகவதர் எல்லாருடைய உள்ளங்களையும் ஏன் என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர். அதனால் நான் திறந்து வைத்துள்ள இந்தக் கலையரங்கிற்குத் தியாகராஜ பாகவதர் கலையரங்கம் எனப் பெயர் சூட்டுகிறேன்” என்று கலைஞர் பெயரை மிக எளிதாக எம்.ஜி.ஆர். மறைத்தார். கலைஞரும் இது குறித்து எந்தவொரு மறுப்பு அறிக்கையும் வெளியிடவில்லை. காலத்தால் அழியாத காவிய நாயகனாகப் பெண்கள் மனதிலும் ஆண்கள் மனதிலும் குடிகொண்டிருந்த ஆளுமையின் பெயரே பாகவதர் என்னும் தியாகராஜர் எனில் மிகையில்லை.

-ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.