சூரிய கிரகணமும் கட்டுகதைகளும் – முதுநிலை விஞ்ஞானி M.வெங்கடேஷ்வரன்

0
1

மத்திய விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில்(விஞ்ஞான் பிரசார்) முதுநிலை விஞ்ஞானி M.வெங்கடேஷ்வரன் உடன் ஒரு நேர்காணல்.

உங்களுடைய பணிகள் என்ன?

அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அறிவியல் திறமைகளை வளர்த்தல், வெளிக்கொணர்தல்தான் எங்களுடைய பணி. அறிவியலை பொதுமக்களிடம் எளிய முறையில் எடுத்துச் செல்கிறேன். அது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

கிரகணம் என்பது கவ்விப்பிடித்தல் என்று பொருள். அந்த காலத்தில் 3 ஆயிரம் முன்பு கிரகணம் என்றால் ஒரு பாம்பு என்ற ராட்சசன் சூரிய சந்திரனை விழுங்குவதாக ரிக், யஜுர் இலக்கியங்களிலும் இது சொல்லப்படுகிறது.

நவீன காலத்தில் அறிவியல் விளக்கம் “மறைபடுதல் என்று பெயர். சூரியனை நிலா மறைத்தால் சூரிய கிரகணம். சந்திரனை பூமியின் நிழல் மறைத்தால் சந்திர கிரகணம். கோள் மறைப்பு(கிரகணம்).

கிரகண நேரத்தில் வெளியே செல்வது, சாப்பிடுவது குறித்து?

கிரகணம் பிடித்துவிட்டது. வெளியே போகக்கூடாது. வீட்டினுள் இரு என்பர். கடவுளுக்கு களங்கம் வந்துவிடும். கிரகணம் முடிந்தவுடன் குளித்து விட்டு சாப்பிடு என்கின்றனர். இது எல்லாம் கட்டுக்கதைதான்.

கோவில் நடை சாத்துவது அறிவியல் பூர்வமானதா—?

அசுரர்கள், தேவர்கள் கூட்டணி  வைத்துக்கொண்டு பாற்கடலை கடைவோம். அமிர்தம் வரும் அதனை இருவரும் பகிர்ந்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கின்றனர்.  அக்காலத்தில் பூமி தட்டை வடிவம் என நம்பினர். எப்படி எனில் வட்ட தட்டு மாதிரி(சாப்பாடு தட்டு மாதிரி). நடுவில் மேரு மலை. அதனை சூரியன் சுற்றி வருகிறது அதனால் இரவு பகல் ஏற்படுகிறது என்று எண்ணினர்.  மேருமலையை மத்தாக வைத்து கடைந்தனர். விஷ்ணு (கூர்ம)ஆமை அவதாரம் எடுத்து மத்தை தாங்கிக்கொள்கிறார். அமுதம் வருகிறது. தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க கூடாது என்று முடிவு செய்து, “சுறா என்று அமுதத்திற்கு முன் வந்த “கள்ளை கொடுத்து அவர்களை மயக்கி விடுகின்றனர். பாம்பு வடிவ அசுரன் அமுதத்தை கேட்டு வாங்கி குடிக்கிறான். சூரிய, சந்திரர்கள் அவனை காட்டிக்கொடுக்க விஷ்ணு அந்த பாம்பை வெட்டி விடுகிறார். அது தலை ராகு, வால் பகுதி கேது அது சூரிய, சந்திரனை விழுங்குவதால் சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று நம்பினர். அதனால் இப்போதும் கோவில்களை அடைக்கின்றனர். இது அறிவியல் பூர்வமான உண்மை இல்லை.

வளையல் வடிவ சூரிய கிரகணம் பற்றி சொல்லுங்கள்

ஆகாய விமானம் தொலைவில் பார்க்கும் போது சிறிதாக தெரியும். அதுபோல் ஒரு பொருள் பக்கத்தில் இருந்தால் பெரிதாக தெரிகிறது.  தூரத்தில் இருந்தால் சிறிதாக தெரியும். 

நிலா பூமியை கோலிக்குண்டு வடிவில் சுற்றுகிறது. பூமி பக்கத்தில் இருந்தால் பெரிதாக தெரியும். தூரத்தில் இருந்தால் சிறிதாக தெரியும். அதே மாதிரி சூரியனும். ஜனவரி 4,5 தேதியில் பூமி சூரியனுக்கு பக்கத்தில் இருக்கும். ஜுலை மாதத்தில் தொலைவில் இருக்கும்.

இப்போது நடைபெற்ற வளையல் கிரகணத்தில் டிச.26 ஜனவரி 4க்கு பக்கத்தில் உள்ளது. நம் பார்வைக்கு சூரியன் பெரிது. நிலா டிச.26-ல் ரொம்ப தொலைவில் இல்லை, ரொம்ப பக்கத்திலும் இல்லை. கொஞ்சம் நடுவில் இருக்கிறது. நிலா அளவு சிறிது. ஜாடிக்கு ஏற்ற மூடி என்போமே. ஜாடி வாய் பெரிது மூடி சின்னது. சூரியனுக்கு மேல் நிலா மறைக்கும் போது முழுதும் மறைக்க முடியாது விளிம்பு வளையல் மாதிரி தெரியும். அதனால்தான் வளைவட்ட சூரிய கிரகணம். இதுதான் வளையல் சூரிய கிரகணம்.

2

வளைவட்ட கிரகணம் யார் யார் பார்க்கலாம்?

பூமியில் நாம் எங்கு இருக்கிறோமோ நிலா நம் தலைக்கு மேல் சென்றால் வளை வடிவ கிரகணம் தெரியும். இந்தியாவில் மங்களூர், கண்ணூர், தமிழ்நாடு ஊட்டி, கோவை, அவினாசி, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை. தெரியும். இந்தியா முழுவதும் 8 மணிக்கு தொடங்கி 11.15 மணிக்கு முடியும்.9.30க்கு தெரியும். மணப்பாறையில் நன்கு தெரிந்தது.

ஏன் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்க்கக் கூடாது?

எந்த ஒரு பிரகாசமான பொருளையும் நேரடியாக பார்க்கக்கூடாது.  உதாரணமாக ஒரு கலர் சட்டையை துவைத்து நாம் நிழலில்தான் உலர்த்துகிறோம். ஏனென்றால் சட்டை வெளுத்து விடும். ஏன் அது வெளுத்து விடுகிறது. சட்டையில் ஏற்படும் போட்டோ கெமிக்கல் ரியாக்ஷன்தான் காரணம். ஒரு சட்டைக்கு கலர் கொடுப்பதற்கு நிறமி என்று பொருள். ஒவ்வொரு கலருக்கும்  நிறமி பொருள் உண்டு. இலை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும். ஒளி பட்டவுடன் அந்த கெமிக்கல் உடைந்து விடும். ஒளி அதனை உறிஞ்சிவிடுகிறது. அதனால் சட்டை வெளுத்து விடுகிறது.

ஒளி நேராக நம் கண்ணுக்குள் விழுகிறது என்று வைத்துக்கொண்டால் உள்ளிருக்கும் சென்சார் அந்த ஒளியை கிரகித்து அந்த ஒளி நம் கண்ணில் இருக்கும் செல்லை  அழித்து விடும். இதுமட்டுமின்றி அதிக ஒளி தரக்சூடிய வெல்டிங், மின்னல் இவற்றையும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதனால் ஒளியின் அடர்த்தியை குறைத்து பார்க்கணும்.

அதற்கு சோலார் டிடெக்டர் என்ற கண்ணாடியை பயன்படுத்துகிறோம். இதில் உள் நுழையும் ஒளியில் 1 லட்சத்தில் 1 மட்டுமே கண்களுக்கு தெரியும். இதனை சூரிய கிரகணத்தின் போது பயன்படுத்தலாம்.

சூரியனுக்கு கிரகணம் பற்றி மேலும் செய்திகள்?

சூரியனை பார்த்தால் தோஷம் என்கின்றனர். அப்படி இல்லை. ஒரு தோஷம் மட்டுமே உண்டு. அது “சந்தோஷம்.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 சூரிய கிரகணம் உண்டு. அது நம் இடத்தில் நடக்குமா என்பது கரெக்டாக சொல்ல முடியாது. வளை வடிவ சூரிய கிரகணம் அடுத்து 2034ல் நடக்க உள்ளது.  அப்போது தேனி, மதுரையில் தெரியும். இங்கு தெரியாது.

சூரிய கிரகணத்தில் விஷக்கதிர்கள் வருவது உண்மையா?

சூரிய கிரகணத்தில் அதிக கதிர்கள், விஷக்கதிர்கள் வருகிறது என்பது கட்டுக்கதை.  உதாரணத்திற்கு, சூரிய ஒளிக்காக நான் ஒரு குடை பிடித்துள்ளேன் என வைத்துக்கொள்ளுங்கள். அதனால் சூரியனுக்கு ஒன்றும் ஆகிவிடாது. அதுபோல்தான் சூரியனை நிலா மறைப்பது. இதனால் சூரியனுக்கு ஒன்றும் ஆகிவிடாது.

கிரகணத்தன்று கடல் பொங்குமா?

கிரகணம் அமாவாசை அன்றுதான் நிகழும். எல்லா அமாவாசை அன்றும் கடல் பொங்கும். கிரகணம் அன்றும் பொங்கும். இது இயற்கையான நிகழ்வு.

எப்படி மரம் செடி வளருதோ, சூரியன் உதிக்கிறதோ, அதுபோல இது இயற்கை நிகழ்வு. நாம் பார்த்து சந்தோஷமாக பார்த்து ரசிக்கவேண்டிய நிகழ்வை கட்டுக்கதைகளின் மூலம் மக்களிடம் பீதியை ஏற்படுத்தி நம் சந்தோஷத்தை மாற்றும் செய்திகளை நம்ப வேண்டாம் என்கிறார் விஞ்ஞானி M.வெங்கடேஸ்வரன்.

-வெற்றிச்செல்வன்

 

3

Leave A Reply

Your email address will not be published.