மக்களின் பசிப்பிணியை போக்கும் No food waste

தினசரி அரசு மருத்துவமனை முன்பு ஒரு வண்டி வந்து நிற்கிறது. அதிலிருந்து 3 பாத்திரங்கள் இறக்கப்பட்டு, 4 தன்னார்வலர்கள் இறங்குகின்றனர். உடனே உட்புற நோயாளிகளின் பார்வையாளர்கள் வரிசையில் வருகின்றனர். டிபன் பாக்ஸ், தட்டு ஏதாவது ஒன்று கையுடன் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு No food waste ஒருங்கிணைப்பாளர் மோகன் தனது தன்னார்வலர்களுடன் இன்முகத்துடன் பரிமாறுகிறார். என்திருச்சிக்காக அவருடன் ஒரு சந்திப்பு.
இந்த அமைப்பு தொடங்கப்பட்டது எப்போது? இதன் நோக்கம் என்ன?
தரமான உணவை குப்பையில் போடாமல் வறுமையில் உள்ளவர்களுக்கு கொடுப்பதுதான் இதன் நோக்கம். சேவை குறிக்க ஆரஞ்சுகலர் யூனிபார்ம் அணிந்துள்ளோம். 10 இடங்களில் கிளைகள் உள்ளது.

2014-ல் திரு. பத்மநாபன் என்ற கோயம்புத்தூரைச்சேர்ந்த பொறியியல் மாணவர் இந்த அமைப்பை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு 26 வயது. அவர் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது வெளியே பசியுடன் நிறைய பேர் காத்திருக்கிறார்கள். ஆனால் மண்டபத்தில் மீந்து போன உணவை கீழே கொட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த இரண்டையும் பார்த்த அவருக்கு இந்த இரண்டு செயல்களையும் ஒருங்கிணைத்தால் என்ன என்று நினைத்து, இருப்பவர்களிடம் மீந்து போன நல்ல சாப்பாட்டை பெற்று இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த அமைப்பை ஆரம்பித்தார். 2017-ல் திருச்சியில் ராமகிருஷ்ணன் என்பவர் பொறுப்பில் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு வருடமாக நான் (மோகன்) அந்த பொறுப்பில் இருந்து வருகிறேன்.
உணவு மீந்து விட்டால் ஒரு போன் செய்தால் போதுமா?
திருமணத்தில் உணவு மீந்து விட்டால் 90877 90877 அலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அது ஒரு கால் சென்டருக்கு செல்லும். அங்கிருந்து எந்த ஊரில் எங்களது அமைப்பு இருக்கிறதோ, அங்கு அவர்கள் 30 நிமிடத்தில் எங்களுக்கு தகவல் கொடுத்து விடுவர். நாங்கள் சென்று கலெக்ட் செய்து கொள்கிறோம்.
இலவச சேவை : பாத்திரங்களை கொண்டு சென்று உணவை பெற்றுக்கொள்வோம். எங்களால் முடியாத சூழலில் எந்த இடத்திற்கு உணவு தேவைப்படுகிறதோ அந்த இடத்தின் நம்பரை கொடுத்து அவர்களுக்கு கொடுத்துவிடும்படி சொல்கிறோம். முதியோர் இல்லத்தில் சொல்லிவிட்டால் அவர்கள் வந்து எடுத்து சென்றுவிடுவர். உணவு கழிவுகளாக மாறாமல் மற்றவர்களுக்கு உபயோகப்படும்படி மக்களின் பசிப்பிணியை போக்கும் பாலமாக இருந்து வருகிறோம்.
நாங்கள் ஏதாவது செய்யலாமா? உணவைத் தவிர?
உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். பெட்ரோல் செலவு, இலை செலவு, பாத்திரங்கள் கொடுத்து உதவுவது, கொண்டு சென்று சேர்ப்பது இதுமாதிரி செய்யலாம். மக்களிடம் சென்று சாப்பாடு வேண்டுமா என்று கேட்கும்போது மரியாதை குறைவாக நினைப்பார்களா என்று முதலில் தயங்கியதுண்டு. ஆனால் தற்போது எனக்கு மட்டுமின்றி எங்கள் அமைப்பிற்கும் மரியாதை, அங்கீகாரம் கிடைத்துள்ளது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறோம் என்கிறார் ஒருங்கிணைப்பாளர் மோகன்.
–வெற்றிச்செல்வன்
