மத்தவங்க பாராட்டே பெரிய சன்மானம்

0
full

ஆறு வயசுல இருந்து அறுபது வயசு ஆளுங்க வரைக்கும் ஆ….ன்னு வாயைப் பிளந்து ஆச்சர்யமாகப் பார்க்கும் ஒரு விஷயம்னா அது மேஜிக் தான்… அப்படி அடுத்தவர்களை ஆச்சர்யப்படுத்துவதையே தன் தொழிலாக கொண்டிருப்பவர் தான் ஜெசி.கே.வைரமுத்து சாமி. மேஜிக்கை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல், அவ்வப்போது இந்த மேஜிக் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார்.

கிட்டத்தட்ட 40 வருடங்களாக மேஜிக்கில் பட்டையைக் கிளப்பிவரும் ஜெசி.கே.வைரமுத்து சாமியை நேரில் சந்தித்து பேசினோம். “திருச்சி தான் என்னோட சொந்த ஊர். 1978-ல் எஸ்.எஸ்.எல்.சி முடிச்சேன்.
என்னோட அம்மா, அப்பா தெருத்தெருவாக காய்கறியை தூக்கிட்டுப்போய் வியாபாரம் செஞ்சி தான் குடும்பத்தை நடத்துனாங்க. அந்தக் குடும்பச் சூழ்நிலையால் என்னால தொடர்ந்து மேல்படிப்பு படிக்க முடியலை. டூவீலர் மெக்கானிக், எலெக்ட்ரீஷன் ஒர்க் என கிடைச்ச வேலையெல்லாம் செஞ்சேன். ஒருகட்டத்துல 10 பேருக்கு தெரியிற மாதிரி எதாவது வித்தியாசமாக செய்யணும்னு முடிவு பண்ணேன். ஆனா, என்ன செய்றதுங்கிற ஐடியா அப்போ பெருசா தோணலை.

அந்த நேரத்துல திருச்சியில பொருட்காட்சி போட்டிருந்தாங்க. உதய் ஜாதுகர்-ங்கிற பெங்களூர்க்காரர் மேஜிக் பொருட்களுக்கான ஸ்டால் போட்டிருந்தார்.

poster

அவர்கிட்ட 25 ரூபாய்க்கு மேஜிக் செய்யிற பொருள் வாங்கினேன். ஒருசில மேஜிக்கையும் சொல்லிக் கொடுத்தார். சின்ன வயசுல இருந்தே ஸ்கூல், கண்காட்சி என பல இடங்களில் மேஜிக் ஷோ பார்த்திருக்கேன். அதனால எனக்கு மேஜிக் மேல ஒரு ஆர்வம். சரி மேஜிக் கத்துக்கலாம்னு முடிவு பண்ணேன்.

சேது மாதவன் என்பவர் திருவனந்தபுரத்துல மேஜிக் கிளப் வச்சிருந்தார். அந்த கிளப்ல மெம்பர் ஆனேன். அதுக்கப்புறம் மேஜிக் யோனா என்பவர் கோயமுத்தூரில் ‘மாய இயல் சங்கம்’ ஒன்றை ஆரம்பிச்சார். அதுலயும் மெம்பர் ஆனேன். அங்க நிறைய மேஜிக் கத்துக்கிட்டேன். ஓட்டுமொத்த மேஜிக்மேன்களும் தங்களோட ஐடியாவை மத்தவங்களோட பகிர்ந்துக்குவாங்க. அங்க தான் எனக்கு அம்முட்டி பாபா அறிமுகமானார்.

அவரும் திருச்சிக்காரர். ‘நீங்களும் திருச்சி தானா!…’ன்னு தான் எங்களோட சந்திப்பு ஆரம்பிச்சது. அவர் தான் எனக்கு மேஜிக் நெறிமுறை, ஆடியன்ஸை எப்படி கவர் பண்றது என பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். அந்தவகையில் எனக்கு அவர் தான் எனக்கு குருநாதர்.

அதுக்கப்புறம் மேஜிக் மேல உள்ள ஆர்வத்தால் நானே நிறைய விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். மேஜிக்ல மைண்ட் ரீடிங், கஞ்சூரியன், க்ளோஷப், இல்யூஷன், மெண்டலிஷம் என பல வெரைட்டி இருக்கு. பல மெஜிசியன்ஸ் இதுல எதாவது ஒன்னு தான் செய்வாங்க. ஆனா, நான் எல்லா வெரைட்டியையும் செய்வேன். அதுல மைண்ட் ரீடிங் தான் என்னோட ஹைலைட்.

ukr

ஆரம்பத்துல தனியாத் தான் மேஜிக் செஞ்சிக்கிட்டு இருந்தேன். பலபேர் ட்ரூப் வச்சிக்கிட்டு பிரமாண்டமாக மேஜிக் செய்றதை பார்த்து எனக்கும் ட்ரூப்போட மேஜிக் செய்யணும்னு ஆசை வந்துச்சி. இப்போ 5 பெண்கள், 10 ஆண்களை வச்சி ‘வைரம்’ஸ் மேஜிக்’ என்ற பெயரில் ட்ரூப்பாக மேஜிக் ஷோ பண்ணிட்டு வர்றேன்.

பேப்பரை பணமாக மாத்துறது, தண்ணிய பூவா மாத்துறது, வெற்றிடத்தில் புறா மற்றும் முயல் போன்றவற்றை வரவைப்பது, பெண்ணை அந்தரத்தில் நடனம் ஆட வைப்பது, கத்தியில் படுக்க வைப்பது என பல மேஜிக் எனக்கு அத்துப்படி. அடுத்தக்கட்டமாக, தண்ணீரில் மிதந்த வாக்கில் படுத்திருக்கவும், தண்ணீரில் நடப்பதற்கும் முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன். அது தான் என்னோட அடுத்த லட்சியம். நான் கத்துக்கிட்ட இந்த மேஜிக்கை என்னோட பையன் செந்தில்குமாருக்கு நான் சொல்லிக்கொடுக்க, இப்போ அவரும் மேஜிக் செய்வார்.

மேஜிக் என்பது ஒரு தந்திரக்கலை. கஷ்டமான கலையும் கூட. ஒரே நேரத்துல வாய் பேசணும், கையும் வேலை செய்யணும். பலதடவை பயிற்சி செஞ்சி பார்த்தா தான் பர்ஃபெக்டா மேஜிக் வரும். ஒரு மேஜிக் ஷோ செய்யணும்னா அசிஸ்டண்ட்ஸை ஒண்ணு திரட்டி, அவங்களுக்கு மேக்கப் போட்டு நல்ல படியா செஞ்சி முடிச்சி, நல்லபேர் வாங்குறதுக்குள்ள உயிர் போயிடும். நிறைய பேர் மேமெண்ட் கொடுக்காம ஏமாத்திடுவாங்க. வெளியூர்க்கு மேஜிக் ஷோவுக்கு கூப்பிடுறவுங்க, மேஜிக் ஷோ முடிஞ்சதும் ‘நீங்க போங்க அக்கவுண்ட்ல பணத்தை போட்டு விடுறோம்’பாங்க. ஆனா, பணம் வராது.

மத்த தொழில்ல வருஷம் முழுவதும் வருமானம் இருக்கும். ஆனா, எங்களுக்கு அப்படியில்லை. இருந்தாலும் மனசுக்கு திருப்தியான தொழில். நம்மளைப் பார்த்து மத்தவங்க ஆச்சர்யப்பட்டு பாராட்டுறதே பெரிய சன்மானம். புடிக்காது. என்னோட குடும்பத்துல எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க.

என்னோட மனைவிங்க சரோஜா, தேன்மொழி ரெண்டு பேரும் நான் மேஜிக் பண்ற மேடைக்கு கீழ உட்கார்ந்து ரசிச்சு பார்த்து எதாவது குறை இருந்தா சொல்வாங்க.

நிறைய ஸ்கூல், காலேஜ், கோவில் திருவிழா, பிறந்தநாள் விழா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் மேஜிக் செஞ்சிக்கிட்டு வர்றேன். அதுமட்டுமில்லாம, அப்பப்போ ஆத்ம திருப்திக்காக குழந்தைங்க ஹோம்க்கு போய் காசே வாங்காம மேஜிக் செஞ்சிட்டு வர்றேன். எனக்கு பாடகராக ஆகணும்னு தான் ஆசை. ஆனா, மேஜிக் மேன் ஆகிட்டேன்.

இருந்தாலும் அவ்வப்போது கச்சேரிக் குழுவினருடன் மேடைகளில் கிராமிய நாட்டுப்புறப் பாடல்களை பாடிக்கிட்டு இருக்கேன். நேரம் கிடைக்கும்போது இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும் படிச்சிக்கிட்டு வர்றேன்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண்களை கட்டிக்கொண்டு பைக்கும், காரும் ஓட்டியிருக்கிறேன். ‘கண்கள் மூடியிருந்தாலும், விதிகளை மீறக்கூடாது’ என்பது அதன் சாரம்சம். இப்படி குழந்தைகளுக்கு மேஜிக் மூலமாக விழிப்புணர்வும் செய்து வருகிறேன்.

அரசாங்கத்திடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். ரிக்ஷாக்காரங்களுக்கு கூட நலவாரியம் இருக்கிறது. ஆனால், மேஜிக்மேன்களுக்கென நலவாரியம் இல்லை. அதை அரசு அமைத்துக் கொடுத்தால் ரொம்ப சந்தோஷம்” என விடைபெற்றார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.