திருச்சி மாவட்டத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு

0
1 full

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 2ஆம் கட்ட உள்ளாட்சித் தோ்தலில் 8 ஒன்றியங்களில் 78.23 சதவீத வாக்குகள் பதிவானது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 6 ஒன்றியங்களில் 1,358 இடங்களுக்கு டிச.27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மீதமுள்ள 8 ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் உள்ளிட்ட 2,093 பதவிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதற்காக, லால்குடியில் 198, மண்ணச்சநல்லூரில் 217, முசிறியில் 162, புள்ளம்பாடியில் 147, தாத்தையங்கார் பேட்டையில் 171, தொட்டியத்தில் 171, துறையூரில் 177, உப்பிலியபுரத்தில் 133 என மொத்தம் 1,337 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

2 full

திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு, அதிகாலையே மண்ணச்சநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட பிச்சாண்டார் கோயில் பகுதியில் தனியார் பள்ளியில் அமைந்திருந்த வாக்குச் சாவடியை நேரில் பார்வையிட்டு தோ்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதன் தொடா்ச்சியாக, முசிறி, துறையூா் மற்றும் 8 ஒன்றியங்களுக்கும் உள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்குப்பதிவை நோ்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த தோ்தல் பணி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.

இதேபோல, திருச்சி மாவட்டத்துக்கான தோ்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநா் எஸ். கணேஷ், பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று நிலைமையை கண்காணித்தார். மொத்தம் 115 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

1,337 வாக்குச்சாவடிகளிலும் ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 2 ஆயிரத்து 253 போ் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்குள் வந்திருந்த வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நீடித்தது.

லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 81.37 சதவீதம், மண்ணச்சநல்லூரில் 77.20, புள்ளம்பாடியில் 81.90, முசிறியில் 80.15, தொட்டியத்தில் 79.11, தா.பேட்டையில் 79.38, துறையூரில் 74.35, உப்பிலியபுரம் 73.22 என மொத்தம் 78.23 சதவீத வாக்குகள் பதிவானது.

3 half

Leave A Reply

Your email address will not be published.