மணவையின் மைந்தர்கள்….!

மணவையின் மைந்தர்கள்….!
திராவிட இயக்கத்தில் கோலோச்சிய தளகர்த்தர்களில் ஒருவரும், நகரதூதன் ஆசிரியரும், தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் இந்தி எதிர்ப்பு நடைபயணக் குழுவின் அமைச்சருமான திருமலைசாமி அவர்கள் முதன்முதலில் தன் பெயருக்கு முன்னால் எங்கள் தொட்டில் பூமியான மணப்பாறை என்னும் திருப்பெயரின் அடையாளமாக மணவை திருமலைசாமி என முதலில் இணைத்துக் கொண்ட முன்னோடி ஆவார்.
அதன்பிறகு “செம்மொழிக் காவலர்” மறைந்த முஸ்தபா அவர்கள் மணவை முஸ்தபா என இணைத்துக் கொண்ட தமிழறிஞர்.

இதனைத் தொடர்ந்து “பாக்யா” ஆசிரியர் குழுவில் பணியாற்றிடும் தீவிர எம்.ஜி.ஆர் பக்தரும், “எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்” என்னும் நூலாசிரியரும், தற்சமயம் தமிழக அரசின் “கலைமாமணி” விருதை பெற்றிருக்கின்ற அண்ணன் மணவை பொன்.மாணிக்கம் அவர்களது பெற்றோர் வைத்த மாணிக்கம் பெயருடன் தன் தந்தை பொன்னன் பெயரையும் இணைத்து மணவை பொன்.மாணிக்கம் என மாற்றிக் கொண்டார்.


தமிழ் மீது கொண்ட தீவிர பற்றாலும், என் ஊர் மீது கொண்டிருக்கின்ற அளவற்ற காதலாலும் எட்டாம் வகுப்பு படிக்கின்றபோதே மாணிக்கம் என்று பெற்றோர் இட்ட பெயருடன் மணவை தமிழ் என சேர்த்து மணவை தமிழ்மாணிக்கம் என ஆக்கிக் கொண்டேன். அரசிதழிலும், ஆதார அட்டைகள் அனைத்திலும் இப்பெயரே இன்று என் திருப்பெயராயிற்று.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளரும், இளம் வயதில் இருந்து என்னை ஒரு தம்பியாக பாவித்து வரும் அண்ணன் த.இந்திரஜித் அவர்களும் மணவை த.இந்திரஜித் என குறிப்பிடுவதை பெருமையாகக் கொள்வார்.
இன்று பலரும் எங்கள் நகரத்துப் பெயரை பெயருக்கு முன்னால் சேர்க்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருப்பது எங்களுக்கு பெருமை.
இத்தகைய ஊர் பெயருக்கு சிறப்பினை பெற்றுத் தந்த முன்னோடிகளில் ஒருவரான அண்ணன் மணவை பொன்.மாணிக்கம் அவர்களை இன்று அவர்பிறந்த தவிட்டுப்பட்டி இல்லத்தில் சந்தித்தோம். தமிழகம் புகழ்ந்து பாராட்டிய “கலைமாமணி” விருது பெற்றமைக்காக பயனாடை அணிவித்து பாராட்டினோம். இல்லத்தில் இருந்த குடும்பத்தினரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து, சென்னை பயண நெருக்கடி நிலையிலும் சில மணித்துளிகள் சிலாகித்துப் பேசினார்.
படங்கள் நா.சண்முகம்
