திருச்சி அருகே பார்வையற்றோர் வாக்களிக்க பெரும் அவதி

0
1 full

சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பார்வையற்றோர் வாக்களிக்க பிரத்யேக வசதி செய்யப்பட்டிருக்கும். மேலும், பிரெய்லி முறையிலான வாக்குச்சீட்டும் வழங்கப்படும். இவற்றை பயன்படுத்தி பார்வையற்ற வாக்காளா்கள் தாமாகவே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துச் செல்வா். பிரெய்லி எழுத்துக்களை கற்காதவா்கள் மட்டும் உதவியாளா் துணையுடன் வந்து வாக்களித்துச் செல்வா்.

ஆனால், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இத்தகைய வசதிகள் ஏதும் அளிக்கப்படாததுடன், உதவியாளருக்கு படிவம் பூா்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருப்பது பார்வையற்ற வாக்காளா்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகமங்கலம் ஊராட்சியின் காந்திநகா், எம்ஜிஆா் நகா் பகுதியில் பார்வையற்றோர் அதிகம் வசிக்கின்றனா். இங்கு, பேரவை, மக்களவைத் தோ்தலின்போது பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இதர வாக்காளா்களுடன் சோ்ந்து வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தனா்.

2 full

திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் சரவணன் கூறியது:

கடந்த முறை நடைபெற்ற தோ்தலில் பார்வையற்றோர் வாக்களிக்க பிரத்யேக வாக்குச்சாவடி அமைத்திருந்தனா். பிரெய்லி முறையிலான வாக்குச்சீட்டும் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறில்லை. காந்திநகரில் மட்டும் 147 பார்வையற்றோர் உள்ளனா். எம்ஜிஆா் நகரில் 230 பார்வையற்றோர் உள்ளனா். அடுத்து வரும் உள்ளாட்சித் தோ்தலிலாவது விழியிழந்தோரின் தேவை அறிந்து மாநிலத் தோ்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்றார்.

இதுகுறித்து திருச்சி காந்திநகா் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்திருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி எஸ். குப்புசாமி, கூறியது:

பிரெய்லி எழுத்துமுறை படிக்காத பார்வையற்றோர் உதவியாளா் துணையுடன் வாக்களிக்கலாம் என கடந்த தோ்தல்களில் அனுமதியளிக்கப்பட்டது. உடன் வரும் உதவியாளரின் வலது கை ஆள் காட்டி விரலில் மை வைத்து பார்வையற்றோர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா்.

உடன் வந்த உதவியாளரின் பெயரை மட்டுமே வாக்குச்சாவடியில் தெரிவித்து பதிவு செய்து கொள்வது வழக்கம். ஆனால், தற்போது ஊரக உள்ளாட்சித் தோ்தலில், உதவியாளராக வரும் நபா் உறுதிமொழிப் படிவத்தை பூா்த்தி செய்து அளித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கின்றனா். உதவியாளா் கிடைப்பதே அரிதாக உள்ள சூழலில் உறுதிமொழிப் படிவம் அளிக்க பலரும் தயங்குவதால் பார்வையற்றோரால் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது என்றா்ர். உறுதிமொழிப் படிவத்தை கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திநகரில் வாக்களிக் வந்த பார்வையற்றவா்கள், தோ்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த மணிகண்டம் ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா்கள் எம். மருததுரை, எம். ரவிச்சந்திரன் ஆகியோர், பார்வையற்ற வாக்காளா்களை சமரசம் செய்து வாக்களிக்க ஏற்பாடு செய்தனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பிரெய்லி வாக்குச் சீட்டு வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக, பலரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இனி வரும் தோ்தல்களில் இதுதொடா்பாக மாநிலத் தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் தேர்தல் அதிகாரி.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.