திருச்சி அருகே கள்ள ஓட்டு போட்ட 2 பேர் பிடிபட்டனர்

0
full

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, திருவெறும்பூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் மினிக்கியூர் கிராம ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் 22-ம் எண் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வார்டு எண் 1-க்குரிய வாக்காளர் எண்ணிக்கை 178, வார்டு எண்- 2-க்குரிய வாக்காளர் எண்ணிக்கை 184 ஆகும். காலை 7 மணிக்கு இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு  நடந்து கொண்டிருந்தபோது

மாலை 3.45 மணி அளவில் 2 வாலிபர்கள் இந்த வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு சீட்டை காட்டிவிட்டு ஓட்டு போட்டனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வேட்பாளர்களின் முகவர்கள் அவர்கள் 2 பேரும் கள்ள ஓட்டு போட்டதாகவும், வெளியூர்காரர்களான அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் செய்தனர்.

poster
ukr

வெளியே வந்த அந்த 2 வாலிபர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஒருவரது பெயர் அரிபாலாஜி (வயது20), ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், இன்னொருவர் சோனா பெஞ்சமின் (20) மணப்பாறை மஞ்சம்பட்டி என்றும் தெரியவந்தது. அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயல்கையில், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அவர்களை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இந்த வாக்குச்சாவடியில் காலையில் இருந்தே இது போல் கள்ள ஒட்டு போடப்பட்டுள்ளது. எனவே வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும், தேர்தலை ரத்து செய்யவேண்டும் என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாலை 4 மணி அளவில் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அப்போது வார்டு எண் ஒன்றில் 169 வாக்குகளும், வார்டு எண் 2-ல் 157 வாக்குகளும் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து 5 மணிக்கு அதிகாரிகள் வாக்குப்பதிவு நேரம் முடிந்து விட்டதாக கூறி ஓட்டு பெட்டிக்கு சீல் வைத்து வாகனத்தில் ஏற்றி வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் அரசியல் கட்சியினர் ஓட்டு பெட்டியை எடுத்து செல்ல அனுமதிக்காமல் வாகனம் முன் படுத்து மறியல் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி மறியல் செய்தவர்களை கலைந்து போக செய்தனர். அதன் பின்னர் ஓட்டு பெட்டி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கள்ள ஓட்டு போட்டதாக பிடிபட்ட 2 பேரிடமும் வளநாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருநெல்லிப்பட்டி ஊராட்சி சுக்காம்பட்டி பகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடு இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். கல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்டநேரம் வெயிலில் காத்திருந்தனர். இதுப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.