ஸ்ரீரங்கம் கோவிலில் சென்னை போலீஸ் ஐ.ஜி.அன்பு நேரில் ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான சிலைகள் மற்றும் விலை மதிப்பிட முடியாத கலைப்பொருட்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு கால கட்டத்தில் திருடப்பட்டு விட்டதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த புகார் குறித்து விரிவான விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி சென்னை ஐகோர்ட்டு தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை சிலை திருட்டு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் உள்பட 6 பேர் மீது 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாதவன் நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று பிற்பகல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. அன்பு தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு மாதவன் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சில விஷயங்கள் குறித்து பேசினர். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய கற்சிலைகளை ஆய்வு செய்த பின், சக்கரத்தாழ்வார் சன்னதி, மூலஸ்தானம் சென்றும் ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து 45 நிமிடம் அலுவலகங்களில் சிலைகள் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு நிருபர்களிடம் கூறியது

‘‘இக்கோவிலில் 2015-ம் ஆண்டு திருப்பணிகள் செய்த போது, ஒருசில முறைகேடுகள் நடந்ததாக ரெங்கராஜன் நரசிம்மன் அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு செய்தபின் விசாரணையின் முடிவில் என்ன தெரியவருகிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கு சம்பந்தமாக 3 முறை விசாரணை நடத்தினாலும், வழக்கு தற்போதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, களப்பணியில் நான் முதலில் இருந்து முழுமையாக விசாரணை செய்வேன். எங்களது களப்பணி முடிந்ததும் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் வரவழைத்து விசாரிக்கப்படும்’’ என்றார்.
