திருச்சியில் கங்கண சூரிய கிரகணம் பார்க்க திரண்ட மக்கள்

கங்கண சூரிய கிரகணத்தை பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் காண்பதற்காக திருச்சி கோளரங்கத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு பிரத்யேக கண்ணாடிகள் வழங்கியும், தொலைநோக்கி மூலமும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது தொடர்பாக அண்ணா அறிவியல் மையத்தின் கோளரங்க இயக்குநர் ஆர். அகிலன் கூறிய தகவல்:
சூரியனை புவி சுற்றி வரும் பாதையுள்ள தளமும், நிலவு புவியைச் சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றி வரும் பாதை புவி-சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, முழுவு நிலவு நாளோ ஏற்பட்டால் சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் நிகழும்.

சந்திரன் சூரியனைவிட மிகவும் சிறியது. எனினும், அது புவிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தோன்றுகிறது. நிலவும், புவிக்கும் உள்ள தொலைவுபோல் புவிக்கும், சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமார் 400 மடங்கு அதிகம். அதே நேரம் நிலவின் விட்டத்தை விட சூரியனின் விட்டமும் சுமார் 400 மடங்கு அதிகம். எனவேதான், சூரியனும் நிலவும் வானில் ஒரே அளவு கொண்டது போல் தோன்றுகின்றன. இதனால்தான் முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கிறது.


நிலவு புவியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. இதனால், புவிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு 3,57,200 கி.மீ. முதல் 4 ,07,100 கி.மீ. வரை மாறுபடுகிறது. வெகுதொலைவில் நிலவு இருக்கும்போது, அதன் தோற்ற அளவு, சூரியனின் தோற்ற அளவை விட சற்று சிறியதாக இருக்கும். எனவே, அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் சந்திரனால் முழுமையாக மறைக்க முடியாது. ஒரு கங்கணம் (வளையம்) போல சூரியனின் வெளி விளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளியே தெரியும். எனவே, இதனை கங்கண சூரிய கிரகணம் என்கிறோம்.
தமிழகத்தில் மீண்டும் 2031இல் மே 21ஆம் தேதிதான் காண முடியும்.
திருச்சியில் 95 விழுக்காடு வரையில் சூரியனை சந்திரன் மறைத்துச் செல்லும். திருச்சியில் கிரகணம் 8.07 மணிக்கு தொடங்கி 11.16 மணிக்கு முடிந்தது. அதிபட்ச கிரகணம் காலை 9.32 மணிக்கு நிகழந்தது என்றார்.
கிரகணத்தை காண மாணவர், மாணவிகள், சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் வரிசையில் நின்று தொலைநோக்கி மூலமும், பிரத்யேக கண்ணாடிகள் அணிந்தும் கண்டு ரசித்தனர்.
