வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகள் அகற்றம்

ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவாக ஜனவரி 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதையொட்டி வருகிற 25-ந் தேதி முதல் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் தொடங்குகிறது.
பக்தர்கள் சிரமம் இன்றி வந்து செல்லும் வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள், கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்ட அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணி தொடங்கியது.

சில இடங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தெற்கு உத்திரவீதியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் ஒரு கடை வியாபாரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வைகுண்ட ஏகாதசிக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. எங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்தால் நாங்களே அகற்றி கொள்கிறோம் என்றார். ஆனால், அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றினர். ஏற்கனவே போதும், போதும் என்கிற அளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுத்து விட்டோம். இனி அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

அடையவளைஞ்சான் வீதி, ஸ்ரீரங்கம் காந்திசிலை அருகே வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கொடிக்கம்பத்தையும் அதிகாரிகள் அகற்றினர். அப்போதும் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
