திருச்சி அருகே மொபட்டில் சென்ற முன்னாள் கவுன்சிலர் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாநகராட்சிக்குட்பட்ட செவலூரில் இருந்து விடத்திலாம்பட்டிக்கு புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லிக் கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அந்த வழியாக வந்தது. லாரி வருவதை பார்த்ததும் சற்று தொலைவில் மொபட்டில் வந்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முத்துவீர லெக்கப்ப கவுண்டர் மொபட்டை நிறுத்தினார். இருந்தபோதும் அந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துவீர லெக்கப்ப கவுண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஊர் மக்கள் அந்த வழியாக வந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தனர். இவ்விடத்துக்கு விரைந்த மணப்பாறை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் இந்த சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் ஏற்கனவே 4 பேர் காயமடைந்துள்ளனர். இப்போது முன்னாள் கவுன்சிலரான இவரும் மரணமடைந்துவிட்டார். சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தவேண்டும்., லாரிடிரைவர் செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டியதால்த்தான் இவ்விபத்து நடந்தது. அவரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். இதற்கிடையே லாரிடிரைவர் கரூர் கட்டபுளிப்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி மணப்பாறை போலீசில் சரணடைந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
