சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன்

0
1

கரிசல் இலக்கியப் படைப்பாளியான சோ.தர்மனுக்கு அவருடைய ‘சூல்’ நாவலுக்காக இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மூத்த படைப்பாளியான கி.ராஜநாராயணனைத் தன்னுடைய ‘முன்னத்தி ஏராக’ச் சொல்லும் தர்மனுடைய உறவினர் எழுத்தாளரான பூமணி.

(அசுரன்- படம் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவானது தான்!)

2

கோவில்பட்டியைச் சேர்ந்த இவர் பிறந்தது 1953-ல்.

முதலில் பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்து வந்த தர்மனுடைய இயற்பெயர் தர்மராஜ். 1980-க்குப் பிறகு சிறுகதை மூலமாக எழுத்துலகிற்குள் நுழைந்த இவர் பகுதி நேர விவசாயி.

முதலில் இலக்கிய வாசகனாக நுழைந்த இவர், அபூர்வமாகத் தான் எழுதியிருக்கிறார். பல சிறுகதைகளை எழுதிய பிறகு வெளியான இவருடைய ‘தூர்வை’ நாவல் கரிசல் கிராமத்து வாழ்வியலை விரிவாகச் சொன்னது. அந்த நாவல் அவரைக் கவனிக்க வைத்தது.

அண்மையில் வெளிவந்த ‘சூல்’ நாவல் நீர் மேலாண்மையைப் பற்றிப் பேசும் நாவல்.

நீர் இல்லாமல் போனால் கிராமங்களில் வயற்காடு வறண்டுபோய், விளைச்சல் இல்லாமல் போய், விவசாயக்குடும்பங்கள் நகரங்களைத் தேடிப் போகின்றன. ஊரில் முதியவர்கள் மட்டும் மிஞ்சியிருக்கிறார்கள்.

சுதந்திரம் அடைந்தபிறகு தமிழகத்தில் மட்டும் 39,640 கண்மாய்கள் இருந்தன.

அந்தக் கண்மாய்களைத் தூர் எடுக்க “ஊர் மராமத்து” என்று கிராமத்து மக்களே ஒன்று சேர்ந்து தூர் வாருகிற அருமையான வழக்கம் எல்லாம் இருந்தது.

அந்த வழக்கம் பிறகு ஒழிந்து போய் விவசாயத்திற்கு நீர்வரத்து இல்லாமல் கண்மாய்கள் எல்லாம் மேடாகிவிட்டதைச் சொல்கிற தர்மன் “நீர் போனால் கிராமத்து ஒழுக்கமே போய்விடும்.

மழை இல்லைன்னா பேசாம கொள்ளையடிக்கப் போக வேண்டியது தான்” என்று கிராமங்களில் விவசாயிகள் பேசிக் கொள்வதைப் பற்றியும் சொல்கிறார்.

கிராமத்தில் முன்பு என்ன மாதிரியான சடங்குகள் எல்லாம் இருந்தன தெரியுமா? மழை கூடுதலாகப் பொழிகிறபோது மழை போதும் என்று வேண்டிக் கொள்வதற்கு ஒரு சடங்கு இருந்தது.

அதற்காக உருவமில்லாத வடக்கத்தி அம்மனை பெண்கள் கூடி பச்சரிசி மாவைக் கொண்டுவந்து ஆடியபடி ‘மழை போதும்’ என்ற சடங்கைச் செய்வார்கள்.

இப்போதும் மழையும் இல்லை. மழை போதும் என்று செய்யப்படும் சடங்குகளும் இல்லை என்பதைச் சொல்கிற தர்மன், இப்போதும் கிராமத்துக் கண்மாய்களில் தூண்டில் போட்டு மீன்களைப் பிடிக்கிறார்.

“பல கண்மாய்களில் விதவிதமான நாட்டு மீன்கள் முன்பு இருந்தன. எல்லாவறையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘சிலேபிக் கெண்டை’ என்கிற மீன் இல்லாமல் செய்துவிட்டது” என்கிற தர்மன், தற்போது பதிமூன்றாவது மைய வாடி என்கிற நாவலை எழுதி முடித்திருக்கிறார்.

கிறித்துவ மிஷினரிகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நாவல்.

“நூலை வாங்குவது பெரிதில்லை. அதை வாசிக்க வேண்டும்.” என்று சொல்கிற உலகளாவிய அரசியலையும், கிராமத்து வாழ்வியலுக்குமான இடைவெளிகளையும் அலசுகிற கரிசல் படைப்பாளியான சோ.தர்மனுக்கு அண்மையில்தான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விருது கிடைத்தது.

கரிசல் மண்ணுக்கு எழுத்தின் மூலம் வளம் சேர்த்திருக்கிற சோ.தர்மனுக்கு வாழ்த்துகள்!

 

– நெடுஞ்செழியன்

3

Leave A Reply

Your email address will not be published.