சட்டவிரோதமாக கோரை ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

0
1

திருச்சி மாநகராட்சி முழுவதும் சேமிக்கப்படுகின்ற பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து முறையாக சுத்திகரிக்கப்படாமல் சட்டவிரோதமாக கோரை ஆற்றில் கலக்கும் காட்சிதான் இது…

திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாடுகளை பெற்றுவருகிறது.
மேலும் 336 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இப்படி ஒருபக்கம் வளர்ச்சிப் பாதையில் மாநகராட்சி சென்று கொண்டிருக்கின்றது என்று அனைவரும் வியக்கும் நிலையில், இந்த காட்சி அனைவரின் மனதையும் பதைபதைக்க வைக்கிறது.

2

திருச்சி மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படுகின்ற பாதாள சாக்கடை கழிவுநீர் அனைத்தும் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சப்பூர் பகுதியிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, முதல் கட்டமாக விஷவாயுவை வெளியேற்றும் பணி, இரண்டாம் கட்டமாக நீரை வடிகட்டும் பணி, மூன்றாம் கட்டமாக இயற்கையாகவே நீரை சுத்திகரிக்க இதற்கெனவே வெட்டப்பட்ட குளங்களில் சேகரிக்கும் பணி என மூன்று கட்டங்களாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு பரிசோதனை மையம் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நீர் கோரை ஆற்றில் விடப்படும்.

 

ஆனால் கடந்த சில மாதங்களாக கழிவு நீர் தேக்கி வைக்கப்படும் குளங்கள் பராமரிப்பு பணிநடைபெற்று வருவதாக சொல்லி ஒப்பந்ததாரர்கள் கழிவுநீர் செல்லும் குழாயை அடைத்து வைத்துள்ளனர். மேலும் பாதாள சாக்கடை கழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலந்து வருகின்றனர். இதனால் கழிவுநீர் முழுவதும் நிறைந்து கட்டிடத்து மேலிருந்து கீழே அருவி போல் கொட்டி கோரையாற்றில் சென்று கலப்பது நமது கள ஆய்வில் தெரியவந்தது.கடந்த சில நாட்களாக மழை பெய்து கோரை ஆற்றில் நீர் இருந்த நிலையில், தற்போது இந்த கழிவுநீர் கலந்ததால் ஆற்றிலிருந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதக்கின்றன. மேலும் ஆற்று நீரை குடித்து கால்நடைகளும் இறந்துள்ளதாகவும், மக்களுக்கும் நோய்தொற்று ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு ஒப்பந்ததாரர்கள் இரவு நேரங்களில் கோரை ஆற்றின் கரையை உடைத்து அதன் வழியாக கழிவுநீரை செலுத்தி விடுவதால் இத்தகைய நிலை ஏற்படுவதாகவும், மாநகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித் துறையினரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

இரவு நேரங்களில் கோரை ஆற்றின் கரையை உடைத்து அதன் வழியாக கழிவுநீரை வெளியேற்றும் காட்சி

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட பொழுது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதும்,
பாதாள சாக்கடை கழிவு நீரை தனியாரிடம் ஒப்படைப்பதை தவிர்த்துவிட்டு திருச்சி மாநகராட்சி நிர்வாகமே இப்பணியை மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய தொடர் பிரச்சினைகள் ஏற்படாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.