திருச்சியில் இளைஞர் காங்கிரசார் பதவிக்காக அடிதடி மோதல்

திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முன்னிலையில் நடந்த அடிதடி மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் விழுதுகளைநோக்கி எனும் தலைப்பில் கருத்தரங்கம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்தது. இதற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன்மவுலானா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் தமிழகபொறுப்பாளர் ஜெமிமேத்தா கலந்துகொண்டனர்.

கூட்டம் நடக்கும்போது மாநகர் மாவட்டத் தலைவர் பிரேம், செயல் தலைவர் ரமேஷ்சந்திரன் என மாவட்ட நிர்வாகிகள் பெயர் வாசிக்கப்பட்டது. அப்போது ரமேஷ்சந்திரன், நான் மாநகர் மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டு 6 மாதம் ஆகி, சில கூட்டங்களையும் நடத்திவிட்டேன். பிரேம் செயல்பாடு சரியில்லை என கூறி அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். இப்போது எப்படி பிரேமை தலைவர் என்றும், என்னை செயல்தலைவர் என்றும் கூறலாம் என மாநில தலைவர் அசன் மவுலானாவிடம் கேட்டார்.
ஒருகட்டத்தில் இருதரப்பினரும் அடிதடியில் இறங்கினர். பின்னர் ஜெமிமேத்தா இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, மாநகர் மாவட்ட தலைவர் பதவி தொடர்பான பிரச்னயை தீர்க்க ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
