வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் திருச்சிக்கு 5 -ம் இடம் !

0
Full Page

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் திருச்சிக்கு 5 -ம் இடம் !

 

2018-ம் ஆண்டு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த மாவட்டங்கள் குறித்து சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்கள் முதலிடமும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிரிவில் திருச்சி மாவட்டத்துக்கு 5-ம் இடமும் கிடைத்துள்ளது.

 

இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது. தொன்மையான வரலாற்று நினைவுச் சின்னங்கள், பழமையான கோவில்கள், பண்பாட்டை விளக்கும் திருவிழாக்கள், குகை ஓவியங்கள், நீண்ட கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள், அருவிகள் என அந்தந்த பகுதிகளின் தன்மைக்கேற்ப மாநிலம் முழுவதும் சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கவும், கல்வி மற்றும் மருத்துவம் காரணமாகவும், உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி பிற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தமிழ்நாட்டுக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கடந்த, 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்துள்ளது.

 

Half page

கடந்த, 2017-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வருகைதந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 34½ கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 48 லட்சத்து 60 ஆயிரமாகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் கணிசமாக உயர்ந்து உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 38 கோடியே 59 லட்சமாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 60 லட்சத்து 73 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

 

இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்குள் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த மாவட்டங்களின் தரவரிசை பட்டியலை மாநில அரசின் சுற்றுலாத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பிரிவில் காஞ்சீபுரம் மாவட்டம் (4.19 கோடி பேர்) முதலிடம் பிடித்துள்ளது.

 

சென்னை (3.82 கோடி) 2-ம் இடம், ராமநாதபுரம் (2.82 கோடி) 3-ம் இடம், திண்டுக்கல் (2.81 கோடி) 4-ம் இடம், தஞ்சாவூர் (2.49 கோடி) 5-ம் இடமும், மதுரை (2.45 கோடி) 6-ம் இடமும், கன்னியாகுமரி (2.42 கோடி) 7-ம் இடமும், திருச்சி (1.94 கோடி) 8-ம் இடமும், தூத்துக்குடி (1.93 கோடி) 9-ம் இடமும், கோவை (1.74 கோடி) 10-ம் இடத்தையும் பிடித்துள்ளன. உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் கடைசி 3 இடங்களை பெற்றுள்ளன.

 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் சென்னை மாவட்டம் (25.24 லட்சம் பேர்) முதலிடம் பிடித்துள்ளது. காஞ்சீபுரம் (17.15 லட்சம்) 2-ம் இடமும், தஞ்சாவூர் (3.56 லட்சம்) 3-ம் இடமும், மதுரை (2.82 லட்சம்) 4-ம் இடமும், திருச்சி (2.728 லட்சம்) 5-ம் இடத்தையும் பிடித்துள்ளன. அதற்கடுத்த இடங்களில் கன்னியாகுமரி (2.12 லட்சம்), திண்டுக்கல் (1.32 லட்சம்), நீலகிரி (1.29 லட்சம்), திருவண்ணாமலை (1.23 லட்சம்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.