கலெக்டர் முன்பு வேலை கிடைக்காத விரத்தியில் திருச்சி திருநங்கை தீக்குளிக்க முயற்சி !

கலெக்டர் முன்பு வேலை கிடைக்காத விரத்தியில் திருச்சி திருநங்கை தீக்குளிக்க முயற்சி !
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமை பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த போது, ஜேம்ஸ் மேரி என்ற பெண் தனது மாற்றுத்திறனாளி மகள் அனு ஜெயஸ்ரீயுடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். உடலில் மண்எண்ணெய் ஊற்றியபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் 18.11.2019 நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் மனு கொடுக்க வந்த ஒரு திருநங்கை தீக்குளிக்க முயன்றார். அவரது பெயர் அஜிதா (வயது25). திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த இவர் பட்டதாரி ஆவார். இவர் தனக்கு துப்புரவு பணி உள்பட ஏதாவது ஒரு அரசு வேலை வேண்டும் என கேட்டு பல முறை மனு கொடுத்து உள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.


இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் அவர் 18.11.2019 கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார். தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். தற்கொலைக்கு முயன்ற அஜிதாைவ போலீசார் பிடித்து சென்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
கடந்த திங்கட்கிழமை தாய்- மகள் தீக்குளிக்க முயன்றதை தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் இரு வாசல்களிலும் நேற்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. மனு கொடுக்க வந்தவர்கள், அவர்களது உடைமைகளை போலீசார் சோதனை செய்தே அனுப்பினர். ஆனாலும் 18.11.2019 மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜிதா தவிர இன்னொரு வாலிபர் மண்எண்ணெய் கேனுடன் வந்த போது அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர்.
