திருச்சி மாநகராட்சியின் மேயர் சீட் கேட்கும் மாஜி பெண் போலீஸ்.

மேயர் சீட் கேட்கும் மாஜி பெண் போலீஸ்.
விருப்ப ஓய்வு பெற்ற பெண் போலீஸ், தி.மு.க., சார்பில், திருச்சி மேயர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளார்.
திருச்சி மாநகர போலீசில், ஏட்டாக பணிபுரிந்தவர் செல்வ ராணி, 44. இவரது கணவர் ராமச்சந்திரன், தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.கவிசெல்வா என்ற பெயரில், செல்வராணி பல கவிதைகள் எழுதியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி இறந்தபோது, அவரை, ‘அப்பா’ என்றழைத்து இரங்கற்பா எழுதி, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து, இடமாறுதல் செய்யப்பட்டார்.

அதை ஏற்க மறுத்த செல்வராணி, விருப்ப ஓய்வு பெற்று, தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், திருச்சியில் செல்வராணி வீட்டுக்கு நேரில் சென்று, ஆறுதல் கூறினார். இந்நிலையில், திருச்சி மேயர் பதவிக்கு போட்டியிட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவிடம், செல்வராணி விருப்ப மனு அளித்துள்ளார்.

செல்வராணி ஆதரவாளர்கள் கூறுகையில், ‘ஸ்டாலினிடம் செல்வராணிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளது. தலைமையில் இருந்து சிக்னல் கிடைத்ததால், மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார். அவருக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
