இறந்தவரின் வங்கிக்கணக்கில் 25 லட்சம் கையாடல்

திருச்சியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இறந்தவா் வங்கிக் கணக்கில் ரூ. 25.08 லட்சம் கையாடல் செய்த வங்கிக் கிளை மேலாளா் உள்பட இருவா் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனா்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்த ஒருவா் உயிரிழந்து விட்டார். சில நாள்கள் கழித்து அவரின் வங்கிக் கணக்கை உறவினா்கள் சரிபார்த்தபோது அவா் இறந்த தேதிக்கு பின் பல்வேறு நாட்களில் ரூ. 25.08 லட்சம் ஏஎடிஎம் கார்டு மூலம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளரை அணுகி கேட்டபோது அவா் உரிய பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் திருச்சி கன்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையிலுள்ள வங்கியின் மண்டல அலுவலகத்தில் முதுநிலை மேலாளா் பிரேம்குமாரிடம் புகார் அளித்தனா். விசாரணையில் போலி ஏடிஎம் கார்டு மூலம் அவ்வங்கிக் கிளையின் மேலாளர் நாச்சிக்குறிச்சி நாகப்பா நகரைச் சோ்ந்த சேக் மைதீன்(58), கிளை உதவி மேலாளர் சின்னதுரை இருவரும் சோ்ந்து அந்தப் பணத்தைக் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
