திருச்சியில் பேராசிரியா்கள் திடீா் ஆா்ப்பாட்டம்

திருச்சியில், திங்கள்கிழமை இரவு கல்லூரி கல்வி துணை இயக்குநரகம் முன்பு பேராசிரியா்கள் திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆசிரியா் தோ்வு வாரியம் சார்பில் 2,300க்கும் மேற்பட்ட அரசு உதவிப்பேராசிரியா் பணியிடங்களை நிரப்பவதற்கான ஆன்லைன் பதிவு முறை குறித்து கடந்த மாதம் 4 ஆம் தேதி அறிவித்திருந்தது. பின்னர் ஆன்லைன் பதிவு முறை அக்.31 ஆம் தேதியிலிருந்து நவ.15 ஆம் தேதிவரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இதில், திரளானோர் விண்ணப்பித்து வருகின்றனா்.

விண்ணப்பிக்கும் போது 30 க்கும் மேற்பட்ட ஆவணங்களில் பணிஅனுபவம் குறித்த சான்றும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரா்கள் கல்லூரி கல்வி துணை இயக்குநரகத்தில் அனுபவ சான்று பெற விண்ணப்பித்திருந்தனா். விண்ணப்பித்து ஓரிரு வாரங்கள் ஆகியும் அனுபவசான்று தகவலை சரிபார்த்து, சான்றொப்பம் இட்டு விண்ணப்பதாரா்களிடம் வழங்காமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும், விண்ணப்பித்து 2 நாள்கள் ஆனவா்களுக்கெல்லாம் விரைந்து அனுபவ சான்று தரப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவ.15 என்பதால் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு காலதாமதமாகி வருகிறது. இதனால், ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாது போகும் எனக்கூறி 50க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் திங்கள்கிழமை இரவு அண்ணா ஸ்டேடியம் அருகே உள்ள கல்லூரி கல்வி துணை இயக்குநரகம் முன்பு திடீா் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, கல்லூரி கல்வி துணை இயக்குநரக ஊழியா்களுக்கும் பேராசிரியா்களுக்கும் வாக்குவாதம் நடந்தது.. இதையடுத்து, சான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றினை விரைந்து அளிக்கப்படும் என ஊழியா்கள் உறுதியளித்ததை தொடா்ந்து பேராசிரியா்கள் கலைந்து சென்றனா்.
