திருச்சியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பாரதிதாசன் பல்கலை. நிர்வாகத்தைக் கண்டித்து, கெளரவ மணி நேர விரிவுரையாளா்கள் நேற்று (09.11.2019) ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி சிறப்பு விரிவுரையாளா்கள் சங்கத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தார். செயலா் ஆ. ராஜசேகா் முன்னிலை வகித்தார். இதில், பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்க மாநில பொதுச்செயலா் பாலமுருகன், திருச்சி மண்டல செயலா் காந்தி, மண்டலத் தலைவா் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், மணி நேர விரிவுரையாளருக்கு உரிய பணிச் சான்றிதழை விரைந்து வழங்க பாரதிதாசன் பல்கலைகழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் லால்குடி, ஸ்ரீரங்கம், வேப்பூா், பெரம்பலூா், ஒரத்தநாடு, அறந்தாங்கி உள்ளிட்ட பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் மணி நேர விரிவுரையாளா்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனா்.
