சமூக வலைத்தளத்தில் அவதூறு தகவல்: போலீஸ் கமிஷனரிடம் 2 பெண்கள் புகார்

0
1

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி அனிதா(வயது 35), திருவாசி பகுதியை சேர்ந்த வேல்முருகனின் மனைவி மோனிஷா(33). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யும் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகின்றனர். வீடு, வீடாக சென்று அந்த பொருளை பற்றி எடுத்துக்கூறி விற்று வருகின்றனர். இந்த நிலையில் அனிதா, மோனிஷா ஆகிய 2 பேரின் புகைப்படமும், ஒரு ஆடியோவும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது. அந்த ஆடியோவும், புகைப்படமும் வைரலாக பரவியது. அதில் அனிதா, மோனிஷா ஆகிய 2 பேரும் ஒரு வீட்டின் படியில் அமர்ந்திருப்பது போல புகைப்படமும், ஆடியோவில் அந்த புகைப்படத்தில் உள்ள 2 பேரையும் சுட்டிக்காட்டி, 2 பேரும் மோசடியில் ஈடுபடுவதாகவும், பேசுவதற்காக செல்போன் கேட்பது போல நடித்து, அந்த போனில் இருந்து வேறொரு செல்போன் எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்த பின், அந்த செல்போனில் உள்ள தகவல்கள் திருடப்படுவதாகவும் ஆடியோவில் பதிவாகி இருந்தது. வைரலாக பரவிய இந்த ஆடியோவை கேட்ட அனிதா, மோனிஷாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

2

இதைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தை பார்த்தபோது, திருச்சி திருவானைக்காவல் பகுதியில் பொருட்களை விற்பனை செய்துவிட்டு ஒரு வீட்டின் படிக்கட்டில் 2 பேரும் அமர்ந்திருந்த போது மர்மநபர் ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அவதூறாக வெளியிட்டது தெரியவந்தது.
வாட்ஸ்-அப்பில் தங்களை பற்றி அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அனிதா, மோனிஷா ஆகியோர் நேற்று புகார் தெரிவித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

3

Leave A Reply

Your email address will not be published.